பலத்தோடு இருந்தால் மதிப்பார்கள்
நிலத்தோடு கிடந்தால் மிதிப்பார்கள்

ஆக்கம்: வியாசன்
சுற்றிச் சுழன்றேறி வருகின்றன
நரமாமிச உண்ணிகள்.
சம்பூரைத் தின்று சமித்து,
வாகரையை வளைத்து முடித்து,
குடாநாட்டின் குரல்வளையை நெரித்தபடி
முகமாலையின் முன்னரணேற முயல்கின்றன
உண்ணிகள்.
வன்னிதான் உண்ணிகளின் ‘நம்பர்வண்’ இலக்கு
பாதைகளை அடைத்துப் பட்டினி போடுவதால்
விடுதலை இதயங்களின் துடிப்பை நிறுத்தலாமென
உண்ணிகளை ஏவுவோர் உறுதியாக நம்புகின்றனர்.
கொட்டிக் குவிக்கும் ஆயுதங்களை மட்டுமல்ல
பட்டினியையும் சேர்த்தே பயன்படுத்தப்போகின்றனர்.
விடுதலையின் விகர்சிப்பை விழுத்துவதற்கு
பட்டினியையும் பயன்படுத்திய சிலர்
முன்னர் வெற்றியும் கண்டுள்ளனர்.
இதைக் கவனத்திலெடுக்காது கண்துயில்வோமெனில்
கையேந்தியபடி கரையொதுங்கவும் நேரலாம்.
ஒரு கையிற் துப்பாக்கியும்
மறு கையில் மண்வெட்டியையும்
வியட்னாமியர் ஏந்தியது விளையாட்டுக்கல்ல.
குண்டுவீச்சுக்குக் கீழும்
வியட்னாமில் குலைதள்ளின வாழைகள்
ஒருபோதும் வேலைநிறுத்தம் செய்யவில்லை வயல்கள்.
போருக்கு உழைத்த பொழுதுகள்போக
ஊணுக்கும் உழைத்தனர் அவர்கள்
இன்று விடுதலை வயலை உழுகின்றனர் செருக்கோடு.
வீழமாட்டோமெனும் நம்பிக்கை மட்டுமல்ல
ஆழமான அடித்தளமும் வேண்டும் விடுதலைக்கு.
தன்னைத்தானே தாங்கும் வலுவுள்ளவனே
எந்தப் புயலிலும் இடிந்துவிழமாட்டான்.
உடனே உழுது பயிரிடத்தொடங்கு,
உன்னால் முடிந்த உரமெறிந்துகொள்,
அறுவடை செய்,
அவதானமாகப் பேண்,
கத்தரியை வற்றலாக்கு,
கிழங்கை ஒடியலாக்கு,
கீரிமீனைக் கருவாடாக்கு,
கேக்கை நிறுத்து,
பேக்கரியில் பாண்மட்டும் போடு,
வீட்டுக்குப் பத்து மரவள்ளி நடு,
வேலியில் முல்லையும், முசுட்டையும் படரவிடு,
நெல்லை அட்டாளையில் அடுக்கு,
அன்றாடத் தேவைக்கு மட்டும் அரிசியாக்கு,
நாளை வந்தவனிடம் கையேந்துவதிலும் பார்க்க
இது இழிவானதல்ல.
வியாசனுக்கு மேற்கூரை விழுந்துவிட்டதென்று
என்னை விசித்திரமாகப் பாராதே.
பெரும்போர் மூளும் தருணத்தில்
பிள்ளைகள் கஞ்சியாவது குடிக்கவேண்டாமா?
போரைத் தாங்கும் புலிகளிடமே
இந்தப் பாரத்தையும் சுமத்திவிடாதே
எழுந்துபோ ஏதேனும் செய்.
வீட்டுக்கொருவரை விடுதலைச்சேனை கேட்பது
சும்மா விளையாடுவதற்கல்ல.
அள்ளிச் சென்று சாவுக்குக் கொடுக்கவுமல்ல.
இப்போது பெறும் பலத்திற்தான்
எதிர்காலமே இருக்கிறது.
உலகம் ஓடிவரும்
உனக்கு ஒத்தாசை செய்யுமென நம்பாதே
அவர்கள் பலத்தோடிருந்தால் மதிப்பார்கள்
நிலத்தோடு கிடந்தால் மிதிப்பார்கள்
இதுதான் உலகத்தின் புதிய ஒழுங்காற்றுகை.
ஒன்றை மட்டும் நெஞ்சில் எழுதிவை
வென்றால் நாங்கள் அரியணையிலிருப்போம்
தோற்றால் தொல்பொருளகத்திற் கிடப்போம்
மூசியெழுவதைத் தவிர வேறுவழியில்லை இப்போது.
கேட்டு யாசிப்பதல்ல விடுதலைக்கான பலம்
அது ஈழத்தமிழர் எல்லோரினதும் காலக்கடமை.
தினசரி தமிழர் வீடுகளிற் சாவு,
நாளாந்தம் காணவில்லையேயெனும் கதறல்,
பெண்களைப் பூச்சிகளாக நசுக்கும் பெருந்துயர்,
திசையளந்து வருகிறது திக்கற்றோர்குரல்
நீ மட்டும் தப்பியோட எத்தனிப்பது குற்றமில்லையா?
ஒற்றை வரலாறு கூட அற்றவராக இருந்தோம்
இந்நாள் வரையும்.
இனியும் வேண்டாம் இந்த இழிவு
இனியும் வேண்டாம் இந்த அழிவு.
ஒன்றில் புலியாக எழு
அன்றேல் சருகாக விழு
சோற்றுப் பிண்டமாகச் சும்மா தெருவிற் திரியாதே.
இந்த மண்ணிற் பிறந்ததற்காகவே
மரங்கள் காயப்படுகின்றன,
மாடுகள் மரணிக்கின்றன,
தெருக்கள் சிதைக்கப்படுகின்றன
மண்ணுக்குரிய மனிதன் மட்டும்
மறைந்து திரிகின்றான்.
போதும் போர்வையை மடித்துவை
விழிதிறந்து வெளியேவா.
உண்ணிகளுடன் சேர்ந்து பெருகுகின்றன
ஒட்டுண்ணிகள்.
பெற்றதாயையே ஏறிமிதிக்கின்றன பேய்கள்
எல்லாக் கூத்துக்களுக்கும் இந்தமண் அரங்காகிவிட்டது.
இன்றைய பொழுதை எடுக்காமலும்
நாளைய பொழுதைப் பிடிக்காமலும்
சனிபகவானுக்கு எள்ளெண்ணை எரிப்பதற்கு
இது திருநள்ளாறு அல்ல
தமிழீழம்.
இங்கே பிறந்ததுக்கும்
இருந்ததுக்கும்
நாளை இறப்பதற்கும் கூட ஒரு வரலாறு வேண்டும்.
எமது விடுதலை என்பது எமக்கானதல்ல
அது அடுத்த தலைமுறைக்கானது.
கையிலுள்ள ‘காட்ஸ்’சை வைத்து
‘கம்மாரிஸ்’ அடிப்போம்
நாளை நமதென்ற நம்பிக்கையில்.
ஆழக்கடலுக்கு அப்பாற்தான் அக்கரை கிடக்கிறது
நீந்தப் புறப்பட்டால் நீ கரையடைவாய்
இல்லையே இக்கரையிற் கிடந்தே
இல்லாமற் போவாய்.
பேசிப்பேசி பயனற்றதாகிக்
கழிந்துபோனது காலம்.
ஊதி ஊதி நெருப்புலை மூட்டியபடி
உள்ளான் எம்தலைவன்.
வருவாயெனும் நம்பிக்கையிற் காத்திருக்கிறது
வாசலின் வல்லமை
என்ன செய்யும் உத்தேசம் உனக்கு?
தீயாயெழுந்து திரிவோமெனிலோ
திசைகள் கைகட்டும் - அட
தெருநாயெனவே திரிவோமெனிலோ
எறும்பும் தலைகுட்டும்
சாவே வரினும் தளராதிருந்தால்
வாழ்வாய் அதுமாறும் - எம்
தாயகம் மீட்கும் போரிடை வீழ்ந்தால்
தலைமுறை எமையேந்தும்.

நன்றி: விடுதலைப் புலிகள், மாசி 2007

Please Click here to login / register to post your comments.