காலத்தின் தேவை அரசியல் வேலை

ஆக்கம்: டி.சிவராம் (தராக்கி)
தமிழ் சமூகத்தை அதனுள் இயல்பாகக் காணப்படும் முரண்பாடுகளை கூர்மை அடையச் செய்வதன் மூலம் அடக்கி ஆளலாம் என நவீன சிங்களப் பேரினவாதிகள் நம்புகின்றார்கள்.

தமிழ் மக்களை பட்டி தொட்டியெங்கும் இன்று அரசியல் தெளிவுபடுத்த வேண்டிய தேவை எம்முன் உள்ள மாபெரும் வரலாற்றுக் கடமையாகும்.

பிரித்தாளும் தந்திரோபாயங்களின் ஊடாக எம்மை வென்று விடலாம் என சிங்களப் பேரினவாதிகள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழீழச் சமூகம் என்ற மேற்பரப்பை நாம் சற்று சுரண்டிப்பார்த்தால் அதன் கீழ் பிரதேசவாதம், மதம்,சாதி, வட்டாரவழக்கு உரசல்கள், ஊர்களுக்கு இடையிலான அடிபிடிகள் எனப்பலவற்றைக் காணலாம். ஆனால் சிங்களப் பேரினவாதம் இவற்றையெல்லாம் கணக்கிலெடுக்காது தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக வலுவிழக்கச் செய்து தமிழர் தாயகம் அனைத்தும் சிங்கள பௌத்தத்தின் வரலாற்று உரிமைக்கு உட்பட்ட இடங்கள் என்ற கருத்தை நிலைநாட்ட அயராது உழைத்து வருகிறது.

1958ஆம் ஆண்டிலும் 1977ஆம் ஆண்டிலும் 1983ஆம் ஆண்டிலும் அவற்றைத் தொடர்ந்து வந்த போர் ஆண்டுகளிலும் சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளும் அவற்றின் படைகளும் தமிழ் மக்களை சாதி, சமூக, மத, பிரதேச மற்றும் வட்டார பேதமின்றி அழித்தொழிக்க முற்பட்டு வந்துள்ளன. போர்க்காலத்தில் எம்மை நோக்கி எப்போதும் நீண்ட சிங்களப் பேரினவாதத்தின் துப்பாக்கிகள் எம்மை யாழ்ப்பாணத்தான் என்றோ, திருகோணமலையான் என்றோ, வன்னியான் என்றோ, மட்டக்களப்பான் என்றோ வேற்றுமைப்படுத்தியது கிடையாது.

சிங்களப் பேரினவாதிகளின் கண்களில் நாம் அனைவருமே தமிழராகவே காணப்பட்டோம். விடுதலைப் புலிகளோடு நீண்டகாலம் போரிட்டதால் பெற்ற அனுபவங்களைக்கொண்டும், வெளிநாடுகள் மற்றும் ஏகாதிபத்தியங்கள் எவ்வாறு தாங்கள் அடிமைப்படுத்திய சமூகங்களை பிரித்து ஆண்டு வந்துள்ளன என்பதை அண்மையில் நுட்பமாக கற்கத் தொடங்கியதாலும் இன்று சிங்களப் பேரினவாதம் புதிய வடிவம் பெற்றுள்ளது. தமிழ் சமூகத்திலுள்ள சகல முரண்பாடுகளையும் ஆழமாகக் கற்றறிந்து அவற்றை கூர்மையடையச் செய்து தமிழ் சமூகத்தின் அரசியல் ஒருமைப்பாட்டை சிதைக்க வேண்டும் என்பதில் நவீன சிங்கள பௌத்தம் மிகத்தெளிவாகவே உள்ளது.

இன்று ஹெல உறுமயவின் போசகர்களாக இருக்கின்ற திலக் கருணாரட்ண (தலைவர்), சம்பிக்க ரணவக்க (தேசிய அமைப்பாளர்), உதய கமான்பில்ல (பொதுச் செயலாளர்) ஆகிய மூவரும் 16 வருடங்களுக்கு முன்னர் என்னோடும், நான் சார்ந்திருந்த இயக்கத்தோடும் நெருங்கி பழகியவர்களே. சிங்கள பௌத்தத்தின் வெற்றிக்காக அவர்கள் இன்று மிக நுட்பமாக செயற்பட்டு வருகின்றனர்.

போரில் வென்றெடுக்க முடியாத தமிழ் சமூகத்தை அதனுள் இயல்பாகக் காணப்படும் முரண்பாடுகளை கூர்மையடையச் செய்வதன் மூலம் அடக்கிஆளலாம் என இந்த நவீன சிங்களப் பேரினவாதிகள் நம்புகின்றார்கள். அதற்கென நமது சமூகத்தின் வெங்காயத்தனமான பிளவுகளையும் முரண்பாடுகளையும் அவர்கள் இன்று நிறையவே கற்றுவருகின்றார்கள். இந்தக் கற்றலின் வெளிப்பாடுதான் ஜாதிக ஹெல உறுமயவுக்கும் கருணாவிற்கும் ஏற்பட்ட நெருக்கமான தொடர்பாகும்.

இதனால்தான், இன்று ஜாதிக ஹெல உறுமய கட்சி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ{டனும் ஈ.பி.டி.பி.யுடனும் உறவை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு காலத்தில் தமிழரையே சாதியத்தின் பெயரால் மிருகத்தனமாக ஒடுக்கியபோது சிங்கள பௌத்த பேரினவாதம் ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாக எம்மிடையே புகுந்து எமது தேசிய ஒருமைப்பாட்டை சிதைத்து விடலாம் என பல வேலைத்திட்டங்களில் ஈடுபட்ட கதைகளை யாழ்ப்பாணத்திலுள்ள சொக்கதிடல் போன்ற ஒடுக்கப்பட்ட ஊர்களின் வரலாறுகளை நாம் கற்கும்போது தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

(1984ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா இராணுவம் எம்மை முற்றுகையிட்டபோது சொக்கதிடலில் ஓடி ஒளிய நேரிட்டது. அப்போது அங்கு நான் கேட்டறிந்த கதையை இன்றும் மறப்பது கடினமாகவே உள்ளது.)

கொழும்பிலுள்ள சிங்கள, பௌத்த அறிஞர்கள் சிலர் தமிழ் சமூகத்தை எந்தெந்த வகையில் பிரித்து ஆளலாம் என வெளிப்படையாகவே இன்று பேசுகின்ற ஒரு சூழல் தோன்றியுள்ளது.

எமது சமூகத்தில் காணப்படுகின்ற சகல வகையான முரண்பாடுகளையும் எவ்வாறு பயன்படுத்தி எமது தேசிய ஒருமைப்பாட்டை அழித்துவிடலாம் என்பதில் இன்று நவீன சிங்களப் பேரினவாதிகள் பெருநாட்டம் கொண்டுள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களாக கிழக்கில் காணப்படுகின்ற நிலைமைகள் சிங்களப் பேரினவாதிகளின் எண்ணத்துக்கு மேலும் வலுச் சேர்த்துள்ளன. கிழக்கு மாகாணம் தமிழர் தாயகத்தின் ஒரு இன்றியமையாத அங்கம் என நாம் ஒரு புறம் கூக்குரலிட்டுக்கொண்டிருக்கையில், மறுபுறம் எம்மிடையே சில துரோகிகள் எம் எதிரிகளோடு கைகோர்த்துக் குலாவித்திரிகின்றனர்.

போர்க்காலத்தில் வெல்ல முடியாததை மிக நுட்பமான பிரித்தாளும் தந்திரோபாயங்களின் ஊடாக எம்மை வென்று விடலாம் என சிங்களப் பேரினவாதிகள் எதிர்பார்க்கின்றனர். அவர்களோடு அண்மைக் காலத்தில் எனக்கு உரையாடக் கிடைத்த சந்தர்ப்பங்களிலெல்லாம் அவர்கள் எமது சமூகத்தை எந்தளவுக்கு நுட்பமாக புரிந்து செயல்பட விரும்புகிறார்கள் என்பதை நான் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் மிகத் தெளிவாக அறியக் கூடியதாயிற்று. இது கிழக்கைச் சேர்ந்த மக்களுக்கு ஒரு முக்கிய சவால் ஆகும்.

இடையே ஒரு மிக முக்கியமான விடயத்தைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

ஆரம்ப காலத்திலே தமிழ் மக்களிடையே பிராந்திய வேறுபாடுகள், ஊர் முரண்பாடுகள், சமய வேற்றுமைகள் போன்றவற்றை மேவிநின்ற ஒரு முற்போக்கான- சமதர்மநோக்கம் கொண்ட- தமிழ்த் தேசியக் கோட்பாட்டை மிகவும் முயற்சி செய்து கட்டியெழுப்ப தமிழரசுக்கட்சியும் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் மாணவர் பேரவை போன்ற பல அமைப்புகளும் இடையறாத போராட்டங்கள் மூலமாகவும் அரசியல் வகுப்புகளின் ஊடாகவும் ஊர் ஊராகவும் தெரிவு செய்யப்பட்ட இரகசிய குழுக்கள் ஊடாகவும் பரப்ப கடும் முயற்சி எடுத்தன. பல்வேறு வேலைத்திட்டங்களில் சளைக்காது ஈடுபட்டன.

இந்த காலகட்டத்தின் பின்னர் உருவாகிய பல்வேறு இயக்கங்கள் ஊர் ஊராக மக்களை - குறிப்பாக இளம் சமூகத்தை - அணிதிரட்டி அவர்களுக்கு தமிழ்த் தேசியத்தின் அரிவரியிலிருந்து கார்ல் மார்க்ஸின் மூலதனம் வரை ஒரு பரந்துபட்ட அரசியல் பார்வையை-தெளிவை-அத்தெளிவின் ஊடாக ஏற்படக்கூடிய போராட்டப் பற்றுறுதியை - உண்டாக்கின.

இதன் காரணமாகத்தான் புலிகள் தேடித் தேடி அழிக்க முற்பட்ட முன்னாள் மாற்றியக்கக்காரர்கள் பலர் இன்று எமது மக்களின் விடிவுப் போராட்டத்துக்கு தம்மால் இயன்றதை எங்கிருந்தாயினும் செய்ய வேண்டும் என ஏங்கி நிற்கின்றனர்.

இன்று விடுதலைப் புலிகள் தமிழ் மக்களிடம் வீடு வீடாகச் சென்று அரசியல் தெளிவையும் ஒரு பரந்துபட்ட பார்வையையும் ஏற்படுத்த உடனடியாக ஆவன செய்ய வேண்டும்.

மட்டக்களப்பில் அண்மையில் ஏற்பட்ட குழப்பங்கள், எந்தளவுக்கு அரசியல் அறிவீனம் என்பது மிக ஆழமாக புரையோடிப் போயிருந்துள்ளது என்பதை நமக்கு நன்றாகக் காட்டிற்று. எத்தனையோ ஆயிரம் போராளிகளைப் பறிகொடுத்து கட்டியெழுப்பப்பட்ட தமிழ்த்தேசிய உணர்வை கணப்பொழுதில் ஒரு சிலர் தங்களது சுயநலத்திற்காகத் தூக்கியெறிந்து கண்ணிமைக்கும் பொழுதில் பிரதேசவாதச் சேற்றுக்குள் உழல்கின்ற எருமைகளாக மாறியதன் அடிப்படைக் காரணம் அரசியல் அறிவீனமே அன்றி வேறில்லை.

தமிழ் மக்களை பட்டி தொட்டியெங்கும் இன்று அரசியல் தெளிவு படுத்த வேண்டிய தேவை எம்முன் உள்ள மாபெரும் வரலாற்றுக் கடமையாகும்.

ஒரு காலத்தில் ஊர் ஊராக காடுமேடு பள்ளம் எனப்பாராது அரசியல் வகுப்பெடுக்க தமிழீழத்தின் பல அறியா மூலைமுடுக்குகளிலெல்லாம் அலைந்து திரிந்த பல்வேறு இயக்கங்களினுடைய அரசியல் மற்றும் மக்கள் அமைப்பைச் சேர்ந்த போராளிகளின் வேலைகள் ஏதோ வகையில் பல்வேறு நன்மைகளை செய்துள்ளன.

வெற்றி பெற்ற விடுதலைப் போராட்டங்களின் கதைகளை, எமது போராட்டத்தின் தெளிவுகளை, தோல்வியடைந்த பல்வேறு ஒடுக்கப்பட்ட மக்கள் போராட்டங்களின் தவறுகளை எமது மக்களிடையே சலிப்பின்றி நாம் கொண்டு சென்று புரிய வைக்க வேண்டிய வரலாற்றுக் கடமை எம்முன் பரந்து கிடக்கிறது.

சர்வதேச நல்லெண்ணத்தை பெற்றுக் கொள்வதற்கு நாம் காட்டுகின்ற ஊக்கத்தைவிட பல நூறு மடங்கு ஆர்வத்துடன் நாம் எமது மக்களிடையே பரந்து சென்று பேச வேண்டிய காலம் இது. இதை மறந்த பந்தா பரமசிவன்கள் தமிழீழ விடுதலை வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீழ்வது தவிர்க்கப்பட முடியாதது.

ஊடகங்கள் மூலமாக மக்களை முழுமையாக சென்றடைந்து விடலாம், அவர்களுக்கு அரசியல் தெளிவை ஏற்படுத்துவதற்கு ஊடகங்களே போதும் என எண்ணுவது மகாதவறாகும். தகவல்போர் யுகத்தில் நாம் வாழ்பவர்கள் என்ற வகையில் ஊடகங்கள்- குறிப்பாக எமது போராட்டம் சார்ந்த ஊடகங்கள்- மிக நுட்பமாகச் செயற்பட வேண்டும் என்பதிலோ அதில் நாம் கட்டாயம் பெரு முதலீடு செய்ய வேண்டும் என்பதிலோ மறுபேச்சுக்கு இடமில்லை. ஆனால் மக்களிடம் சென்று அரசியல் கருத்தரங்குகளையும் உலக விடுதலைப் போராட்டங்கள் பற்றிய தெளிவு ஏற்படுத்தும் கூட்டங்களையும் நாம் செய்யும் வரை எமது ஊடகச் சாதனைகள் நீர் மேல் ஊற்றிய மண்ணெண்ணெய்யாகத்தான் இருக்கும்.

(இருவாரங்களுக்கு முன்னர் வீரகேசரி வார வெளியீட்டில் எனது ஆங்கில பத்தி ஒன்றைத் தழுவி எழுதப்பட்ட கட்டுரையில் சில பெரும் தவறுகள் நிகழ்ந்துள்ளன.

கேணல் ஜெயம் புலிகளுக்கு எதிராகத் தேசத்துரோகச் செயலில் ஈடுபட்டார் எனவும் அதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு கடும் தண்டனைக்குள்ளாக்கப்பட்டார் எனவும் இதோடு ஒப்பிடுகையில் கருணா 6 கோடி ரூபா பணத்தை கையாடியது ஒரு பெரும் குற்றமல்ல எனவும் ஒரு மிகத் தவறான கருத்து. வெளியாகியுள்ளது. இது மறைக்கவோ மன்னிக்கப்படவோ முடியாத ஒரு பெரும் பிழையாகும்.

மாத்தையாவினுடைய சதிக்கும் கேணல் ஜெயத்திற்கும் எந்தவித தொடர்புமில்லை எனத் திட்டவட்டமாகத் தெளிவாகியதாலேயே ஜெயத்துக்கு கேணல் பதவி வழங்கப்பட்டது என்பது எனது கூற்றில் தொக்கி நிற்கும் உண்மையாகும்.)

நன்றி: வீரகேசரி வார வெளியீடு (July 25, 2004)

Please Click here to login / register to post your comments.