1958 இன் கலவரங்கள்

ஆக்கம்: நம்முள் கவீரன்
நாட்டு மக்களுக்கு வானொலி மூலம் ஒலிபரப்பப்பட்ட பண்டாரநாயக்காவின் பேச்சுகள் மேலும் கலவரத்தை உக்கிரப்படுத்துவதாக அமைந்தன. முதலில் "ஷ்ரீ" அழிப்பு பற்றிப் பேசி புத்த பிக்குகளின் பலவந்தத்தை மறைத்த அவர், கொழும்பில் நிலைமை மோசமடைய, நாட்டில் வேகமாகப் பரவி வந்த கலவரங்களைத் தடுக்கப்போவதாக நினைத்துக்கொண்டு பின்வருமாறு கூறினார், "இன நெருக்கடியை ஏற்படுத்தும் ஒரு கவலைக்குரிய விடயம் நடந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்த சில நிகழ்வுகளில் சிலர் உயிர் இழந்துள்ளனர். அவர்களுள் டி.ஏ. செனவிரத்ன என்ற முன்னைய நுவரெலிய மாநகர முதல்வரும் ஒருவர். அங்கு நடந்த அந்த நிகழ்வினால் மற்றைய இடங்களிலும் சட்டவிரோதமான நடவடிக்கைகள் பரவியுள்ளன. இதன் அர்த்தம் என்ன? தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மட்டக்களப்பில் சிங்களவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அதனால் தான் கலவரங்கள் வெடித்துள்ளன என்று அப்பட்டமாக அவர் கூறியதும் கலவரங்கள் நடைபெறாத நாட்டின் மற்றைய இடங்களிலும் கலவரங்கள் வெடித்தன. இதேபோல்தான் 1983 இல் நடைபெற்ற கலவரங்களின் போது ஜனாதிபதி ஜேர்.ஆர். ஜெயவர்தன "சண்டை வேண்டும் என்றால் சண்டை; சமாதானம் வேண்டும் என்றால் சமாதானம்" என்று கூறி மறைமுகமாகத் தமிழர்களைச் சிங்களவர்கள் தாக்க வழி வகுத்தார்.

உண்மையில் டி.ஏ. செனவிரத்ன வேறு தனிப்பட்ட காரணங்களுக்காக அதேகால கட்டத்தில் அவரது பெருந்தோட்ட காவல்காரனுடன் இருந்த பிணக்கின் நிமித்தமே கொலை செய்யப்பட்டார் என்று பின்பு தெரிய வந்தது.

1958 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி பாணந்துறையில் இந்து ஆலய பிராமணக் குருக்கள் ஆலயத்துக்கு வெளியே கொண்டுவரப்பட்டு அவர் மீது பெற்றோல் ஊற்றி துடிக்கத் துடிக்க கொலை செய்யப்பட்டார். நாட்டு நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே மே 28 அன்று அப்பொழுது இலங்கையின் ஆளுநர் நாயகமாக இருந்த சேர் ஒலிவர் குணதிலக அதிகாரத்தைத் தாம் ஏற்று அவசரகாலச் சட்டத்தைக் கொண்டு வந்தார். நடந்ததைப் பார்த்தால் சிங்களவர் ஒருவருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படக்கூடாது, பாதிப்பு ஏற்படக்கூடாது, மற்றவர்களுக்கு எது நடந்தாலும் பரவாயில்லை என்ற நினைப்பே பண்டாரநாயக்க மனதில் மேலோங்கி இருந்ததாகக் கணிக்க வைக்கிறது. ஆகவே குற்றம் புரிந்தவர்கள், புரிந்து கொண்டிருப்பவர்கள் அவர் கண்களுக்குத் தெரியவில்லை. சிங்களவரும் மற்றையவர்களுமே அவர் கண்களுக்கு இரு துருவங்களாகத் தெரிந்தனர். அதாவது அவசரகால நிலைமையைப் பிரகடனப்படுத்தினால் இராணுவம் வெளியே வந்து சிங்கள மக்களுக்குத் தொந்தரவு கொடுத்து விடுவார்களே என்று அவர் பயந்திருக்க வேண்டும். தன்னை அரியணையேற்றிய சிங்கள வாக்காளர் தம்மில் குறை கண்டுபிடிக்கக் கூடாது என்பதே அவர் நோக்காக இருந்தது என்று கொள்ள இடமிருக்கிறது. இதுதான் ஜனநாயகம் என்ற அரசியல் கொள்கையில் இருக்கும் மிகப்பெரிய குறைபாடு, பெரும்பான்மை வாக்குகளைப் பெற அரசியல்வாதிகள் பலமுள்ள சில குழுக்களுடன் கூட்டுச் சேர்ந்து கொள்ளலாம். அவர்கள் வழி தாமும் செல்லலாம். அத்தருணத்தில் சிறுபான்மையினர் பாடு அதோ கதிதான்.

மே மாதம் 28 ஆம் திகதி அன்று நாட்டின் அரசியல் யாப்பின் அடிப்படையில் மட்டும் தலைவராகக் கருதப்பட்ட சேர் ஒலிவர் குணதிலக சட்ட ஒழுங்கை நிலைநாட்டத் தாமே பொறுப்பை ஏற்றார். அதாவது சகல பலம் பொருந்திய சிவம் மயங்கி நிற்க அம்பாள் அரசு வேட்டை ஆட எழுந்தது போல் அன்றைய அரசியல் யாப்பின் கீழ் சகல பலம் பொருந்திய பிரதமர் தவித்து நிற்க ஆளுநர் நாயகம் அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனம் செய்தார்.

ஊரடங்குச் சட்டம் பல இடங்களில் அமுல்படுத்தப்பட்டது. பத்திரிகைச் சுதந்திரம் பறிக்கப்பட்டது. நடந்த நிகழ்வுகள் பல இருட்டடிக்கப்பட்டன. அந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்கள் பலதைப் பற்றியும் கூறுவதானால் நாம் தேங்கி நிற்க நேரிடும். இலங்கை ஒப்சேவர் பத்திரிகையின் ஆசிரியர் தார்ஸி வித்தாச்சி எழுதிய ஆங்கில நூலான "58 இன் அவசரகாலம் இலங்கை இனக்கலவரம் பற்றிய கதை" என்ற நூலில் பல விடயங்கள் தரப்பட்டுள்ளன. தற்கால இலங்கைத் தமிழ் மக்கள் மனதில் முதன் முதலில் இலங்கையில் நடந்த இப்பேர்ப்பட்ட தமிழர்க்கெதிரான கொடூரமான கலவரம் பற்றிய, ஓரளவுக்குப் பக்கச்சார்பற்ற விதத்தில் எழுதப்பட்ட, மேற்படி நூல் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவரவேண்டும். முன்னமே இக் காரியம் நடைபெற்று விட்டதோ நான் அறியேன். 1915 ஆம் ஆண்டில் ஆங்கிலேய அரச படைகளின் கையில் அகப்பட்ட சிங்களவரைக் காப்பாற்ற சேர்.பொன் இராமநாதன் இருந்தார். 1958 இல் தமிழர்களைக் காப்பாற்ற எவருமில்லை. ஆனாலுஞ் சேர் ஒலிவர் குணதிலக காலங்கடந்தேனும் எடுத்த நடவடிக்கைகள் ஓரளவு நிலைமையைக் கட்டுக்கடக்கியது. பெருவாரி தமிழ் மக்களுக்குக் காயங்களும், உயிர்ச்சேதமும், உடைமைச் சேதங்களும் உண்டான பின்னரே காலங்கடந்து அவசரகால பிரகடனஞ் செய்யப்பட்டு கலவரங்கள் நிறுத்தப்பட்டன.1983 இல் (பின்னர்) நடந்தவற்றிற்கு ஒத்திகை பார்ப்பது போல் 1958 இல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த 1958 ஆம் ஆண்டுக் கலவரத்தின் எதிர் விளைவுதான் பல வருட காலம் தெற்கில் சிங்களவருடன் சுமுகமாக வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் வடக்கு நோக்கிப் பிரயாணஞ் செய்தமை. தென்புலத்தில் பல நூறு பல ஆயிரம் ஏக்கர் காணிகளுக்குத் தமிழ் நில உடைமையாளர்கள் அதுவரையில் இருந்து வந்தனர்.1958 இன் பின் படிப்படியாக அவர்கள் அந்நிலைகளை விட்டு வெளியேற நேர்ந்தது. அரசாங்கம் அவர்களுக்கு எந்தவித நட்டஈட்டையுங் கொடுத்ததாகத் தெரியவில்லை. சிங்களம் மட்டும் வந்த பின், கலவரங்கள் வெடித்த பின், தொடர்ந்து கொழும்பிலும், சுற்றுப் புறங்களிலும், நாட்டின் மற்றைய பிரதேசங்களிலுந் தமிழர்கள் தொடர்ந்து வாழ முடியுமா என்ற எண்ணம் தமிழர் மனதில் மேலோங்கியது.

சேர்.பொன்னம்பலம் இராமநாதன் , சேர் பொன்னம்பலம் அருணாசலம், அவர்களின் பின் ஜீ.ஜீ. போன்றோர் எப்படியாவது முழு இலங்கையிலுந் தமிழர்கள் சம உரிமையுடன் வாழ வழி வகுக்க வேண்டும் என்று கருதியே அரசியல் நடவடிக்கைகளில் இறங்கி வந்தனர். ஆனால் `சிங்களம் மட்டும்' வந்ததுந் தான் தமிழ்த் தலைவர்கள் சிந்தனை மாற்றமடையத் தொடங்கியது. 1949 இலேயே தீர்க்க தரிசனத்துடன் மொழிப் பிரச்சினை வரப்போவது பற்றி எஸ்.ஜே.வி.அவர்கள் கூறியிருந்தது வாசகர்களுக்கு நினைவு இருக்கலாம். ஆங்கிலம் பொது மொழியாகவும்,ஆட்சி மொழியாகவும் இருந்த வரையில் தமிழ்ப் பேசும் மக்களுக்கு சம உரிமை இருந்து. ஆங்கிலம் நீக்கித் தனி மொழிச் சட்டம் வந்ததும் சிங்கள மொழி பேசாதவர்கள் இரண்டாந்தரப் பிரஜைகள் ஆக்கப்பட்டனர். அந்த நிலையில் உள்நாட்டு இரு மொழி பேசுவோரும் ஆங்கிலம் பேசி. பறங்கியரும் மற்றையோரும் சமநிலையில் தொடர்ந்து சௌஜன்யத்துடன் நாடு முழுவதிலுந் தொடர்ந்து வாழ்வது என்றால் சிங்கப்பூர் போன்று மும்மொழிகளும் அரச மொழி அந்தஸ்தைப் பெற வேண்டும், ஆனால் உள்நாட்டு மொழிகள் இரண்டுக்கும் சம உரிமை கேட்ட இலங்கை சமசமாஜக் கட்சியினரைச் சிங்கள வாக்காளர்கள் உதாசீனம் செய்தனர். இனவாதச் சிந்தனைகள் மக்கள் மனதில் இரும்பாக உறையத் தொடங்கின.

1962 இல் ஃபீச்.எச்.ஃபார்மர் (B.H.Farmer) என்பவர் "இலங்கை - பிரிவுபட்ட ஒரு நாடு" என்ற ஒரு நூலை எழுதினார். அதற்கு சோல்பரி பிரவு முகவுரை எழுதினார். அதில் எமது ஆணைக்குழு பிழைவிட்டு விட்டது என்பதை வெளிப்படையாகவே சோல்பரி அவர்கள் ஏற்றுள்ளார். 1958 இன் இனக்கலவரம், 1959 ஆம் ஆண்டில் புத்த பிக்கு ஒருவரால் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பண்டாரநாயக்காவின் கொலை ஆகியவற்றைக் கண்ட பிறகே அவருக்கு ஞானம் பிறந்தது போலத் தெரிகிறது- பின்வருமாறு அந்நூலில் கூறுகிறார்.

"இலங்கையின் இந்த இரு இனங்கிடையே இருந்த பகை உணர்ச்சி பற்றி (எமது)ஆணைக்குழுவுக்கு அக்கறை குறைந்த ஒரு அறிவே அப்பொழுது இருந்து".

ஜீ.ஜீ.அவர்கள் இடித்து இடித்து உரைத்த பின்னரும் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் தள்ளி தமது ஆணையாளர் அறிக்கையில் தமது உள்ளக் கிடக்கையைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார். இலங்கை அரசாங்கமானது அதன் நன்மைக்கு மட்டுமல்லாமல் முழு நாட்டின் நன்மை கருதியும் சிறுபான்மையினரின் மன நிறைவை எய்துவதில் குறியாக இருக்கிறது. ஒருவேளை டி.எஸ்.கூறியவற்றை வைத்து ஆணையாளர்கள் இவ்வாறு தமது அறிக்கையில் கூறியிருக்கலாம். ஆனால், இன அடிப்படையிலான உள்ளூர் மக்களின் எண்ணங்கள் பற்றித் தாம் அப்பொழுது அறிந்திருக்கவில்லை என்பதை அவர் ஏற்பதாகத் தெரிகிறது. ஆகவே, ஜீ.ஜீ போன்றோர் அடித்து அடித்து அவர்களுக்குக் கூறியதை அவர்கள் செவிமடுக்கவில்லை என்பது இத்தால் புலனாகிறது. ஆனால், டி.எஸ்.ஸின் அரசாங்கம் சிறுபான்மையினரின் நலன் கருதியே அரசு செய்யும் என்று தாம் நம்பியிருந்ததாகவும் கூறுகிறார். இதனை நிரூபிப்பது போல் அடுத்த பந்தியில் பின்வருமாறு கூறியுள்ளார்.

"ஆனால், சுதந்திர இலங்கையின் முதல் பிரதம மந்திரி டி.எஸ்.சேனாநாயக்க உயிருடன் இருந்திருந்தால் 1958 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மோசமான நிகழ்வுகளும் இன்று தமிழர், சிங்களவரிடையே ஏற்பட்டிருக்கும் மனக் கசப்பும் ஏற்பட்டிரா என்றே கருதுகிறேன். இரு இனங்களுக்கிடையிலான சமய, மொழி, கலாசார வேற்றுமைகளை முன்வைத்து குறுகிய நோக்குடன் போலியான அரசியல் இலாபம் பெற விளைந்த அரசியல் வாதியை அவர் சாடி இருப்பார். ஏனென்றால் இலங்கையை ஒரு ஐக்கியப்பாடுடைய நாடாக்குதலே அவர் நோக்காக இருந்தது. 1945 நவம்பர் மாதத்தில் பிரித்தானிய அரசாங்கத்தின் திட்டக்

கருத்துகளை இந்நாடு ஏற்க வேண்டும் என்று கூறி உன்னத பேச்சொன்றை அவர் நிகழ்த்தும் போது இத்தீவின் நல்வாழ்வுக்கு தமிழர்கள் மிக அவசியம்" என்று குறிப்பிட்டார். தொடர்ந்து சேனாநாயக இறந்ததாலேயே தாம் காத்திராவண்ணம் புதிய திட்டங்கள் அரசியல் வானில் உருவாகின என்று அங்கலாய்த்தார், அது மட்டுமல்ல. தனக்கும் மற்றைய ஆணையாளர்களுக்கும் இப்புதிய திட்டங்கள் மிக்க வருத்தத்தை அளித்துள்ளன என்று கூறி தமது ஆணைக் குழு முன்பாக நிகழ்த்தப்பட்ட சில சிங்கள மக்கட் தலைவர்களின் இன வாரியான பேச்சுகள் (சேனநாயக இருந்துங் கூட) தம்மை அப்பொழுதே விழிப்படையச் செய்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் தமது முகவுரையின் கடைசிப் பந்தியில் கூறியவை, அவருக்கு சேனாநாயகவுடன் இருந்த நட்பு ஒரு புறம் இருக்க, அவர் தமிழர்களுக்கோ சிறுபான்மையினருக்கோ தீங்கு விளைந்தாலும் பரவாயில்லை என்ற ஒரு அக்கறையற்ற மன நோக்கைக் கொண்டு இருக்கவில்லை என்பது புலனாகிறது.

"இந்த நாட்டில் பின்னர் நடந்த நிகழ்வுகளை அவதானிக்கும் போது எமது ஆணைக்குழுவானது அரசியல் யாப்பில் மாற்ற முடியாதவாறு அடிப்படை உரிமைகளை உத்தரவாதப்படுத்த, இந்தியா,பாகிஸ்தான், மலேசியா, நைஜீரியா போன்ற பல நாடுகளில் செய்யப்பட்டவாறு நடவடிக்கைகளை நாம் எடுக்கவில்லையே என்ற ஆதங்கம் எம்மை வாட்டுகிறது" என்று கூறினார்.

இறுதியாக தமிழர் சிங்களவர் மத்தியிலான அந்நியோன்யமும் புரிந்துணர்வும் அரசியல் யாப்பு உத்தரவாதங்களில் மட்டும் தங்கிவிட முடியாது என்று கூறி அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்தினதும் அவ் வரசாங்கத்தை வெற்றி அடையச் செய்தவர்களினதும் உண்மையான நல்லெண்ணம், பொது நல்லறிவு, மனித நேயம் போன்றவற்றிலேயே அது தங்கியுள்ளது என்றார். அண்மையில் இலங்கை வந்த ஒரு இந்துப் பெண் ஆன்மீகவாதிகூட இரு தரப்பார் மனதிலும் அன்பு இருந்தால் தான் நாட்டுப் பிரச்சினை தீர்க்கப்படலாம் என்றார். பயம், வைர்யம், பொறாமை, வெறுப்பு, மனக்கசப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்படுத்தப்படும் தீர்வுகள் பலகாலம் நிலைக்கமாட்டா என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு இலங்கையின் முதல் அரசியல் யாப்பைத் தந்த சோல்பெரிப் பிரபு அங்கலாய்க்கும் வண்ணம் 1956 ஆம் ஆண்டின் பின்னைய நிகழ்வுகள் நடந்தேறின. தொடர்ந்தவற்றை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

நன்றி: தினக்குரல் March 11, 2007

Please Click here to login / register to post your comments.