ஸ்ரீலங்கா அரசின் கரங்களில் இருந்து தமிழர்களைக் காத்தல்

அதிவணக்கத்திற்குரிய 16வது பாப்பரசர் பெனடிக்ற், வத்திக்கான் - இத்தாலி.

அதிவணக்கத்திற்குரிய 16வது பாப்பரசர் அவர்களே,

ஸ்ரீலங்கா அரசின் கரங்களில் இருந்து தமிழர்களைக் காத்தல்

சுவிட்ஸர்லாந்தில் வாழுகின்ற புலம்பெயர் தமிழர்களாகிய நாம் அதி வணக்கத்திற்குரிய தாங்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியைச் சந்திக்க இருப்பதாக அறிகிறோம். மொழி, மத வேறுபாடுகளுக்கு அப்பால், உலகெங்கும் பரந்துவாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலராக தாங்கள் விளங்குவதை அறிந்துள்ள, அதனை ஏற்றுக்கொண்டுள்ள நாங்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பாவித்து ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அடிமைத்தளையில் இருந்து தமிழ் மக்களை விடுவிக்கவும், அரசாங்கத்தால் திட்டமிட்டமுறையில் நடாத்தப்படும் இனச் சுத்திகரிப்பில் இருந்து அவர்களைப் பாதுகாக்கவும் முன்வரவேண்டும் என்றும் தங்களை வேண்டிக் கொள்கின்றோம்.

முன்னொரு காலத்தில் சொர்க்க புரியாகக் கணிக்கப்பட்ட ஸ்ரீலங்கா மூன்று தசாப்தகால யுத்தத்தால் துண்டு துண்டாகச் சிதைந்து சின்னாபின்னமாகியுள்ளது. ஏறக்குறைய 500 வருடங்களுக்கு முன்னர் காலனித்துவவாதிகள் இந்தத் தீவிலே காலூன்றியபோது தமிழ் மக்கள் தமது இறைமையைப் பறிகொடுத்தார்கள். 1948ம் ஆண்டு, அப்போதைய பிரித்தானிய சாம்ராஜியம் இந்தத் தீவுக்குச் சுதந்திரத்தை வழங்கிய போது, மக்களின் விருப்புக்கு மாறாக தனித்தனி இறைமை கொண்டிருந்த தமிழ் சிங்கள தேசங்களை ஒன்றாக இணைத்தார்கள். சுதந்திரம் பெற்ற அன்றைய தினத்தில் இருந்து பெரும்பான்மைச் சிங்கள அரசாங்கத்தினால் தமிழர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளான நடாத்தப்படும் செயல் ஆரம்பமாகியது:

தமது நியாயபூர்வமான உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த தமிழர்களின் நடவடிக்கைகள், தொடர்ந்து வந்த சிங்கள மேலாதிக்க அரசாங்கங்களினால் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டபோது, ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் தாம் பறிகொடுத்த இறைமையை மீளப்பெறுவதற்காக தமிழர்கள் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இந்த மோதலில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இதுவரை 80’000 இற்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிகொடுத்துள்ளதுடன் பல மில்லியன் டாலர் பெறுமதியான சொத்துக்களையும் இழந்துள்ளார்கள். 2002ம் ஆண்டு பெப்ரவரி மாதம் சர்வதேச சமூகத்தின் அனுசரனையுடன் யுத்தநிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது தமது சகல துன்ப துயரங்களும் முடிவுக்கு வந்துவிடும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்த்தார்கள். எனினும், யதார்த்தம் அவர்களது எதிர்பார்ப்புகளுக்கு மாறானதாகவே இருந்தது.

தமிழ் மக்கள் பல்வேறு பிரதமர்கள், ஜனாதிபதிகளின் கீழ் கடும் துன்பங்களை அனுபவித்து வந்துள்ளார்கள். அவர்களுள் மிக மேர்சமானவராக இன்றைய ஜனாதிபதி விளங்குகின்றார். அவரது குறுகிய கால ஆட்சியினுள் மதகுருமார்கள், கல்விமான்கள், அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள், அப்பாவிச் சிறுவர்கள், பெண்கள் உட்பட 1’700 இற்கும் மேற்பட்ட தமிழ்ப் பொதுமக்கள் அரச படைகளாலும், அவர்களோடு சேர்ந்தியங்கும் ஒட்டுக் குழுக்களாலும் குரூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இராணுவ நடவடிக்கைகள் என்கின்ற போர்வையில் 300,000 இற்கும் அதிகமான பொதுமக்கள் தமது வீடுகளைவிட்டுத் துரத்தப்பட்டதுடன் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளார்கள். இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழும் மக்களுக்கு அரசாங்கம் நிவாரணங்களை வழங்குவதும் இல்லை, அவர்களுக்கு உதவிகள் வழங்க முன்வரும் அரசார்பற்ற நிறுவனங்களை அனுமதிப்பதும் இல்லை. மேலும,; யாழ் குடாநாட்டிற்கான ஒரேயொரு வினியோகப் பாதையான ஏ-9 வீதியை மூடியதனூடாக அங்கு வாழும் 400,000 தமிழ் மக்களுக்கு உணவு, மருந்து மற்றும் ஏனைய அடிப்படை வசதிகளை அரச படைகள் மறுத்து வருகின்றன.

ஸ்ரீலங்கா அரசாங்கமும் கையெழுத்திட்டுள்ள ஜெனீவாப் பிரகடனத்திற்கு முரணாக ஸ்ரீலங்கா ஆயுதப்படைகள் வீடுகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், வணக்கஸ்தலங்கள் என்பவற்றைத் தாக்கியுள்ளன. வண. பிதா ஜிம் பிரவுண் உட்பட நூற்றுக்கணக்கான தமிழர்கள் அரச படைகளாலும் ஒட்டுக்குழுக்களாலும் கடத்தப்பட்டுக் காணாமல் போயுள்ளார்கள். அரச படைகளுக்கு எல்லை இல்லையில்லாத, சட்டத்திற்குப் புறம்பான அதிகாரங்களை வழங்கும் மிகக்கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டம், மற்றும் அவசரகால ஒழுங்கு விதிகள் என்பனவற்றின் துணைகொண்டு அரசாங்கத்தால் இந்த அராஜகத்தைப் புரிய முடிகின்றது.

பல்வேறு ஐ.நா. தாபனங்கள் சர்வதேச மற்றும் உள்ளுர் மனித உரிமை நிறுவனங்கள், ஊடகங்கள,; இலங்கையிலுள்ள ஸ்கன்டிநேவியன் நாட்டவர்களைக்கொண்ட போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு ஆகியவை, தமிழர்களுக்கு எதிராகப் புரியப்படும் இந்த வன்செயல்களைப் பதிவு செய்துள்ளதுடன், இவற்றைக் கண்காணிப்பதற்காக சர்வதேச கண்காணிப்புக் குழுவை நியமிக்குமாறும் ஆலோசனை கூறியுள்ளன. ஆனால் ஸ்ரீலங்கா அரசு இதனை வன்மையாக மறுத்து வருகிறது.

இத்தகைய நிலையில் இந்தச் சந்தர்ப்பத்தைப் பாவித்து, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் கஷ்டங்களை, தமிழ் மக்களின் சார்பில் ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறுவதுடன் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு அவரைக் கேட்டுக்கொள்ளுமாறும் கோருகிறோம்.

1. மனித விரோத சட்டங்களான பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகால ஒழுங்கு விதிகள் என்பனவற்றை இல்லாமல் செய்வதன் ஊடாக, தீவு முழுவதும் தமிழர்களுக்கு எதிராகப் புரியப்படும் அரச பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்துதல்.

2. சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மதித்து தமிழ் மக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளான ஏ-9 வீதித்தடை, மீன்பிடித்தடை, பொருளாதாரத் தடை, தொண்டு நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடு, என்பனவற்றை நீக்குவதுடன், குடிமக்கள் பிராந்தியங்களில் நடத்தப்படும் குண்டு வீச்சு தாக்குதல்கள், உள் நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் மீதான தாக்குதல்கள், பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பாவித்தல் ஆகியவற்றை நிறுத்துமாறும் கோருதல்.

3. இவற்றை அவதானிப்பதற்காக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பாளர்களை எதுவித நிபந்தனைகளும் இன்றி ஸ்ரீலங்காவில் செயற்பட அனுமதித்தல்.

மிகப் பரந்த உலகின் ஒரு சிறு மூலையில் வாழும் மக்களாகிய நாங்கள் தமிழர்களை அழிவில் இருந்து காக்கும் முகமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் மனப்பூர்வமாக உரையாடுமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி

தங்கள் உண்மையுள்ள
தம்பிப்பிள்ளை நமசிவாயம்
செயலாளர்

பிரதி: சுவிஸக்கான வத்திக்கான் தூதுவர்

Please Click here to login / register to post your comments.