மக்கள் இடம்பெயர்க்கப்பட்டமை பாரிய மனிதவுரிமை மீறல்

ஆக்கம்: எம். குமார்
* மீளக்குடியேறும் மக்கள் அச்சத்துடனேயே செல்கின்றனர்

மட்டக்களப்பு மாவட்டத்தை அகதிகளின் அவலக் குரல் கேட்கும் மாவட்டமாக மாற்றியதன் மூலம் மக்களின் மனிதவுரிமைகள் பாரியளவில் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்த இலங்கை அங்கிலிக்கன் திருச்சபையின் கிழக்கு - ஊவா பிராந்தியத்துக்கான முகாமைக் குரு சந்திரன் கிறிஸ்பஸ், மீளக் குடியேறும் மக்கள் அச்சத்துடனேயே செல்கின்றார்கள் எனவும் தெரிவித்தார்.

கேள்வி: அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட உங்களது அங்கிலிக்கன் திருச்சபை கன்ரபெரி பேராயர் ரோவன் நிக்கலஸ் வில்லியம்ஸை நீங்கள் சந்தித்த போது கிழக்கில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மனிதவுரிமை மீறல் மற்றும் மக்களின் அவல நிலை குறித்து விளக்கியுள்ளீர்களா?

பதில்: ஆம். கிழக்குப் பிராந்தியத்திலிருந்து அனைத்து மதத் தலைவர்களும் குழுவாக எங்களது மாண்புமிகு பேராயரை சந்தித்து கலந்துரையாடினோம். கிழக்கில் தோன்றியுள்ள சிக்கல் நிலை தொடர்பாகவும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்து வாழும் மக்கள் நிலைவரம் குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளோம். இடம்பெயர்ந்த மக்களில் ஒரு குழுவினரை அவர் சந்தித்தும் உரையாடி இருக்கின்றார். அவர் வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொள்ளாவிட்டாலும் இடம்பெயர்ந்த மக்களில் ஒரு குழுவினரை சந்தித்ததனூடாக அவர்களது துன்ப, துயரங்களை கேட்டறிந்து இருக்கின்றார்.

அதேபோல வடக்கு, கிழக்கு மற்றும் இலங்கை முழுவதும் தொடரும் மனித உரிமை மீறல்கள் பற்றியும் அவர் அறிந்து இருக்கின்றார். நாட்டின் சமாதானத்தைப் பற்றியும், மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பது பற்றியும் அனைத்து அவருடைய அருளுரையிலும் வெளிப்படுத்தி இருந்தார்.

கேள்வி: உங்களது திருச்சபை ஊடாக பேராயரை கிழக்குக்கு அழைத்து வரவில்லை. அழைத்து வந்து இருந்தால் மக்களின் அவல நிலையை நேரடியாக அவதானித்து இருப்பாரல்லவா?

பதில்: ஏற்றுக் கொள்கின்றேன், ஆயர் வராதது எமக்கு பெரும் குறை. அவர் கிழக்குக்கு வந்திருப்பாராயின், மக்களுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்து இருக்கும். இம்முறை அவருடைய வருகையானது குறுகிய கால அறிவித்தலோடு இடம்பெற்ற ஒன்றாகும். நாங்கள் வடக்கு, கிழக்கிற்கு அழைத்து வர முயற்சி செய்தோம். இருப்பினும் அது துரதிர்ஷ்டவசமாக கைகூடவில்லை.

கேள்வி: பிரித்தானிய பாராளுமன்றத்தில் தமிழ் மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக எடுத்த தீர்மானம் தமிழ் மக்கள் மத்தியில் தென்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரித்தானியாவில் இருந்து கன்ரபெரி பேராயர் ரோவன் நிக்கலஸ் வில்லியம்ஸ் மேலும் நம்பிக்கையூட்டியுள்ளது. இவர் பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் கொடுப்பாரா? இதுபற்றி உங்களுக்கு ஏதும் உறுதிமொழி வழங்கினாரா?

பதில்: உண்மையிலேயே இவருடைய விஜயம் அரசியல் ரீதியானது அல்ல. ஆனால், இவருடைய வருகை இந்த வேளையில் மக்கள் மத்தியில் பலவிதமான ஊகங்களை ஏற்படுத்தி இருக்கலாம். அவர் பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் கொடுப்பாரா என்பது குறித்து என்னால் பதில் கூறமுடியாது. இருப்பினும் நாட்டில் தமிழ் மக்கள் படும் அவலம் அவருக்கு கவலையையும் வேதனையையும் கொடுத்துள்ளது.

கேள்வி: தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள நெருக்கடி நிலையினை அடுத்து இடம்பெற்றுள்ள உள்ளக இடம்பெயர்வும் உங்களது நிவாரணப் பணியும் எவ்வாறு உள்ளன?

பதில்: கிழக்குப் பிரதேசம் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் அகதிகளின் அவலக் குரல் கேட்கும் மாவட்டமாக மாறியுள்ளது. இது இந்த மக்களுக்கு இளைக்கப்படும் பாரிய மனித உரிமை மீறலாகும்.

கிழக்குப் பிரதேசத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் காலத்துக்கு காலம் ஏதாவது ஒரு துன்பியியல் நிகழ்வுகளுக்கு மக்கள் முகம் கொடுத்துக் கொண்டே வருகின்றார்கள்.

அண்மையில் படுவான்கரையில் இருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களை சந்தித்து அவர்களுக்கு உடனடியாக முகாம்கள் அமைத்து, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். இதனை இதர திருச்சபைகளுடன் இணைந்து தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் சார்பில் பராமரித்து வருகின்றோம்.

அந்த மக்கள் தங்களது சொந்த இடங்களுக்கு சென்று வழமை நிலைமைக்கு திரும்ப வேண்டும் என்பதுதான் எங்களது எதிர்பார்ப்பும் அவர்களது எதிர்பார்ப்பும். தற்போது மீள் குடியமர்த்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களது பாதுகாப்பினை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இது குறித்தே அவர்கள் மீள் குடியமர்த்தப்படும் போது அச்சத்துடன் செல்கின்றனர். அங்கு சென்று அவர்கள் வாழும்போது அவர்களது வாழும் உரிமை மதிக்கப்பட வேண்டும். அந்த மக்கள் எவ்வாறு முன்பு வாழ்ந்தார்களோ அதே நிலைமையினை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது அவசியம். இது விடயத்தில் அரசு அக்கறை செலுத்த வேண்டும்.

Please Click here to login / register to post your comments.