கல்வியில் தரப்படுத்தல் முறை

ஆக்கம்: நம்முள் கவீரன்
பதியுதீன் மகமூட்டுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதில் சிங்கள அரசியல் தலைவர்களுக்கு இரண்டு நன்மைகள் இருந்தன. ஒன்று தமிழர்கள் உயர் கல்விக்குப் பெருவாரியாகத் தெரிவு செய்யப்படுவதைத் தடுத்து மற்றைய மக்கள் அவர்களின் இடங்களைப் பெறச் செய்வது. மற்றையது ஒரு முஸ்லிம் அமைச்சர் ஊடாக இந்த நாடகத்தை நடாத்தி முஸ்லிம்களுக்கு நன்மை செய்வது போல் காட்டி தமிழர்- முஸ்லிம்கள் ஒற்றுமையைக் குலைப்பது. இரண்டிலும் அரசாங்கம் வெற்றி கண்டது. இலங்கைப் பல்கலைக்கழகத் தேர்வில் முக்கியமாக, விஞ்ஞான பீடங்களுக்கான தேர்வில் கூடியளவு தமிழ் மாணவ மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருவது ஒரு பிரச்சினையாக தேசிய அரசியல் மட்டத்தில் எடுத்துக்காட்டப்பட்டது. அதாவது கொழும்பு மாவட்ட மாணவ மாணவியருக்கும் யாழ். மாவட்ட மாணவ மாணவியருக்கும் கூடிய கல்வி வசதிகள் இருந்தன என்றும் பின்தங்கிய மற்றைய மாவட்ட மாணவர்களுக்கு அது கிடைக்கவில்லை என்றும் இதனால் கூடிய தமிழ் மாணவர்களுக்கே கல்வி வசதி கிடைத்து வருவதாகவும் அது மற்றவர்களுக்குக் கிடைக்காமல் போயிருப்பதாகவும் பெரிதாக அரசாங்கத் தரப்பில் எடுத்தியம்பப்பட்டது. ஆனால், உண்மையில் 1948- 1956 வரையிலான காலகட்டத்தில் ஆங்கில மொழியாட்சி இருந்து வந்தபோது, எந்த இன மக்கள் எந்தத் துறையில் போட்டி போட்டாலும் கொழும்பில் தமிழ் மாணவ மாணவிகளே மற்றவர்களை விட அவற்றில் சிறப்பாகச் செய்து வந்தனர். பொது மொழியான ஆங்கிலம் சுதந்திரம் கிடைத்த பின்னர் ஆட்சி மொழியாக இருந்தபோது தமிழர்கள் தகைமையின் நிமித்தமே தலை நிமிர்ந்து தரமாக வாழ்ந்து வந்தார்கள் என்பது இதிலிருந்து புலப்படுகிறது. ஆகவே, தமிழர்களுக்குக் கல்வி மீதிருந்த பற்றையும் திறமையையும் குறைக்கவே நடவடிக்கைகள் எடுத்து வரப்பட்டன என்று கொள்ளலாம். "சிங்களம் மட்டும்" கொண்டு வந்தால் தமிழர்களால் வேற்று மொழியில் அம்மொழி மாணவ மாணவியருடன் போட்டிபோட முடியாதிருக்கும் என்று பெரும்பான்மையினர் கணித்தனர். அதனால் "24 மணித்தியாலங்களில் சிங்களம்" என்று கூறி சட்டத்தையும் இயற்றினர்.

ஆனால், தமிழ் மாணவர்கள் தமிழ் மொழியிலேயே கற்க வேண்டும் என்ற கல்விக் கொள்கையை அரசாங்கம் ஏற்க வேண்டியிருந்தது. ஆனாலும், தமிழ் மொழியில் தமிழ் மாணவர்கள் கல்வி கற்று பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறினால் அவர்களுக்கு அரசாங்க அலுவலகங்களில் வேலை கிடைப்பது அரிதாகிவிடும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், வட மாகாணத் தமிழ் பேசும் மாணவ மாணவியர் அவர்களின் பாரம்பரிய அறிவியல் சிரத்தையின் பொருட்டு தொடர்ந்து உயர்கல்வியில் பிரகாசித்து வந்தனர். சட்டப்படி சிங்களத் தேர்ச்சியும் பெறத் தொடங்கினர். இதன் பொருட்டு முளையில் கிள்ளி எறியும் நடவடிக்கையாகவே தரப்படுத்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. வெளிமாவட்ட மாணவர்களுக்குக் கல்வி வசதிகள் குறைவென்று கூறி அதனால்தன் தரப்படுத்தல் கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டது. வெளிமாவட்ட மாணவ மாணவியர் கல்வியில் பின்தங்கிய நிலையில் இருந்திருந்தார்களேயானால் அம்மாவட்டக் கல்லூரிகளுக்குச் சிறந்த ஆசிரியர்களை அனுப்பி உபகரணங்களை வழங்கி அக்கல்லூரி மாணவ மாணவியரின் தரத்தை மேம்படுத்தியிருக்க வேண்டும் அல்லது புலமைப்பரிசில்களை அம்மாவட்ட மாணவ மாணவியருக்கு நல்கி சிறந்த கல்லூரிகளினூடு அவர்களைப் பல்கலைக்கழகம் உள்நுழைய வசதி செய்து கொடுத்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் கல்வித்தரம் இன்று குன்றியிருக்காது. நாடானது சிறந்த அறிவாளிகளையும் அதிகாரிகளையும் அலுவலர்களையும் பெற்றிருக்கும். தொழிற்றுறைகளில் திறமையான உண்மையான நிபுணர்கள் பிரகாசித்திருப்பார்கள்.

அதற்குப் பதிலாகத் தமிழ் மாணவ மாணவியரின் பல்கலைக்கழக அனுமதித் தொகையைக் குறைப்பதற்காகத் தரப்படுத்தல் எனப்படும் இந்த முறையை அறிமுகம் செய்தது ஷ்ரீமாவோ அரசு. இந்த முறை பற்றி சுருக்கமாகக் கூறுவதாகில் ஒரு மாவட்டத்தில் பெறப்பட்ட ஆகக் கூடிய புள்ளிகள் 75 ஆகவும் இன்னொரு மாவட்டத்தில் கிடைத்த ஆகக்கூடிய புள்ளிகள் 60 ஆகவும் இருந்தால் 75 யும் 60 யும் சமநிலைப்படுத்தி 60 புள்ளிகளுக்குக் கீழ் கிடைத்த புள்ளிகளையும் விகிதாசாரப்படி மேலேற்றுவதே இந்த முறை . எனவே 75 புள்ளிகள் பெற்ற ஒரு மாவட்ட மாணவருடன் 60 புள்ளிகள் பெற்ற இன்னொரு மாவட்ட மாணவர் சமநிலைப்படுத்தப்பட்டு அவருக்கும் 75 புள்ளிகள் கிடைத்தது போல் பாசாங்கு செய்து அவரைப் பல்கலைக்கழகத்திற்குத் தேர்ந்தெடுப்பதே இந்தத் தரப்படுத்தல் முறை .

இதனால் 60 க்கு மேல் 75 வரையில் புள்ளிகள் பெற்ற முக்கியமாக வடமாகாண மேல்மாகாணத் தமிழ் பேசும் மாணவ, மாணவியர் அனைவரும் பாதிக்கப்பட்டனர். பிற மாகாணங்களில் 50 புள்ளிகள் பெற்றவர் சுமார் 65- 70 புள்ளிகள் வரை பெற்றவர் போல் கணிக்கப்பட்டு பல்கலைக்கழகம் புக இந்த முறை உதவி செய்தது.

இதனால் பொதுவாகவே சகல துறைகளிலும் தரம் குறைந்தது. வட மாகாண' மேல் மாகாணத் தமிழ் மாணாக்கர்களின் உயர்கல்வி சார் உந்துசக்தி மழுங்க வைக்கப்பட்டது. "நான் எவ்வளவு தான் நன்றாகச் செய்தாலும் எங்கோ இருக்கும் ஒருவர் குறைந்த புள்ளிகள் பெற்று என்னை விரட்டி விட்டு பல்கலைக்கழக உள்நுழைவைப் பெறமுடிகிறதே" என்று மனம் வெந்தார்கள் தமிழ் மாணவ, மாணவிகள். இதனால் ,சிங்கள மாணவ, மாணவியரும் பாதிக்கப்பட்டார்கள் என்பதில் அர்த்தமில்லை. பொதுவாக அதிகப்படியாகத் தமிழ் மாணவ மாணவியரே பாதிக்கப்பட்டார்கள் என்பது தான் உண்மை. அத்துடன் மாற்று உயர் கல்விக்கூடங்களைத் தேடிப் பிடிக்க மற்றவர்களுக்கு இருந்த வசதிகள் வடமாகாண மாணவ மாணவியருக்கு இருக்கவில்லை.

1970 ஆம் ஆண்டு நவம்பர் மாதமளவில் பாடசாலை பகிஷ்கரிப்புகளுடன் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் ஆரம்பித்தன. தொடர்ந்து மட்டக்களப்பிலும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடைபெற்றன. அதுவரையில் கல்வியில் சிரத்தை காட்டி வந்த சாதுவாய் பயபக்தியுடன் நடந்து கொண்ட தமிழ் மாணவர்கள் சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்களை எதிர்க்குங் காலம் பிறந்தது.

இதேபோல் தெற்கிலும் அரசாங்க எதிர்ப்புச் சக்திகள் மாணவரிடையே எழுந்தன. ஜனதா விமுக்தி பெரமுன கடுமைமிக்க இடதுசாரிக் கொள்கைகளைப்பரப்பி கிளர்ச்சியில் ஈடுபட்டது. தொடர்ந்து வந்த சிங்கள அரசாங்கங்களே இவற்றின் காரண கர்த்தாக்கள்.

தரப்படுத்தல் முறை பற்றி சிங்களவரான பேராசிரியர் இ.கீ. டி சில்வா அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்.

"சிறுபான்மை இனத்தவருக்கு எதிராக ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள வேற்றுமைப்படுத்தும் பக்கச்சார்பான நடவடிக்கைகளினால் ஏற்பட்ட சேதம் கணிசமானது. .... ஆனால், பல்கலைக்கழக நுழைவு சம்பந்தமாக (அரசாங்கத்தால்) எடுக்கப்பட்ட தீர்மானங்கள் யாழ்ப்பாண இளைஞர்களை ஒன்றுபடுத்தவும் அவர்களின் நெருக்குதல்களால் தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைமைத்துவத்தை தனிநாடு கோரும் நிலைக்குத் தள்ளவும் உறுதுணையாக அமைந்தன." உண்மையில் தமிழ் மாணவ, மாணவியரின் பல்கலைக்கழக நுழைவுடன் ஷ்ரீமாவோ அரசு விளையாடத் தொடங்கியதே எழுந்து வந்த இளைஞர் மனவெறுப்புக்கு உரத்தையும் வெறியையும் ஊட்டியது என்று கூறினால் அது மிகையாகாது. "காந்தீய முறைகளைக் கடைப்பிடித்து, சத்தியாக்கிரகங்கள் செய்து எதனைக் கண்டுவிட்டீர்கள்? தொடர்ந்து சிங்கள அரசாங்கங்கள் தமிழரின் தனித்துவத்தை இல்லாததாக்கவே பாடுபடுகிறார்கள். ஆகவே, அநியாயமாக எங்கள் உரித்துகளைப் பறிக்கும் அவர்களை ஆயுதம் கொண்டு போராடியே வெற்றி கொள்ள வேண்டும்" என்ற முடிவுக்கு வரத் தொடங்கினர் இளைஞர்கள். பல இயக்கங்கள் முளைத்தன.

பண்டைய சோழக்கொடி புலிக்கொடி. அக்கொடியை நினைவுபடுத்துவதாகவும் சோழர் காலத்து மேம்பட்ட உயர்வை நினைவுபடுத்துவதாகவும் சிங்கக் கொடிக்கு எதிர்க் கொடியாகவும் புலிக்கொடி சின்னத்துடன் எழுந்தது தமிழர் புதிய புலிகள் இயக்கம். 1976 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதி அவ்வியக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றம் பெற்றது. சில இயக்கங்கள் காலக்கிரமத்தில் தடம்மாறின. சட்டத்துக்குட்பட்டோர் என்று இந்த நாட்டின் சட்டம் சுட்டிக்காட்டும் இயக்கங்கள் தமது சபதங்களையும் குறிக்கோள்களையும் மறந்து சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் என்றுதான் கூற வேண்டும். சட்டத்திற்குப் புறம்பானவர்கள் எனப்படுவோர் இலட்சியங்களை மறக்காது இன்றும் இயங்கி வருபவர்கள் போல்த் தெரிகிறது. இதிலிருந்து சட்டம் பற்றி ஒரு விடயம் புலப்படுகிறது அல்லவா? பெரும்பான்மையினத்தோர் தம் நலம் விரும்பி இயற்றுவதே சட்டம். அதற்கு ஒவ்வ சிறுபான்மையோர் நடந்து கொண்டால் அவர்கள் சட்டத்திற்குட்பட்டவர்கள். தவறின் சட்டத்திற்கு வெளிப்பட்டவர்கள். ஆகவே, சட்டமானது ஜனநாயக அரசொன்றின் கீழ் பெரும்பான்மையினரின் தன்னிச்சையின் பிரத்தியேக ஆயுதமாக மாறக்கூடிய நிலை ஏற்படுகிறது. அதன் அடிப்படையில் அரச பயங்கரவாதம் அசல் நாட்டுப்பற்றாக நாமம் மாற்றப்படுகிறது. இளைஞர்களின் குரல் ஓங்க முதிய அரசியல்த் தலைவர்கள் அவற்றைப் பொருட்படுத்த வேண்டிய காலம் வந்தது. அதுபற்றி அடுத்த கட்டுரையில் ஆராய்வோம்.

Please Click here to login / register to post your comments.