அன்னையின் வீடு

ஆக்கம்: வ.ஐ.ச.ஜெயபாலன்
இது ஓர் அதிஸ்டம் இல்லாத
போராளியின் கவிதை
மேலும் சரியாகச் சொல்வதெனில்
ஒரு போர்க் குணமுள்ள கவிஞனின்
மரண வாக்குமூலம் போன்ற
அதிஸ்டமில்லாத கவிதை இது.

அன்னைவீட்டுக் கூரை எரிகிறது
என் சகோதரர்களோ
பாகப் பிரிவினைச் சண்டையில்.
தண்ணீர் ஊற்றுவதானால்
அவன் பக்கத்துக் கூரையில் ஊற்றாதே என்று
ஒரேமாதிரிக் கத்துகிறார்கள் இருவரும்.
தீப்பெட்டியோடு நிற்கிற அயலவனோ
தண்ணீர்க் குடத்தை வீசிவிட்டு ஓடடா என்கிறான்
துப்பாக்கியை நீட்டியபடி.
என் துர் அதிஸ்டம் அதுவல்ல
அடுத்த பக்கத்தில் தீயை அணைத்தால்
சுடுவோம் என்கிற சகோதரர்கள்.
அவர்கள் கொல்ல மாட்டார்கள் என்றே
நம்ப விரும்புகிறேன்.

அன்னை விட்டில் இருந்து
உடுத்த டையுடன் துரத்தப்பட்டு
புத்தளச் சேரியில் அலைகிற
என் கடைக்குட்டித் தம்பிக்காக
அன்னையும் நானும் அழாத நாளில்லை.

என் சகோதரரே
கூட்டுக் குடும்பத்தில் ஒன்றாய் இருங்கள்
அல்லது பாகம் பிரித்துக் கொள்ளுங்கள்
எப்படியாவது தொலைந்து போங்கள்
மோதலில்லாது.
என்னை வசைப்பாடுங்கள்
நான் எதிர்பார்ததில்லையே
ஒரு துண்டு நிலத்தை செப்புச் சல்லியை
ஒரு வாக்கை
அல்லது உங்கள் பாராட்டுதலை.
என் பிள்ளைகளின் உணவை உண்டும்
என் மனைவியின் தண்ணிரை அருந்தியும்
பாடுகிறேன் நான்.

முதலில் தீயை அணைக்கக்
கூக்குரலானது என் கவிதையும் பாடலும்.
எனது கையில் தண்ணீர்க் குடம்.
எங்கிருந்தாவது ரம்பிக்க வேண்டும்
தீயை அ¨ணைக்க.
கண்ணிரைத் துடைத்து
என் கடைக் குட்டியை அழைத்துவரவேண்டும்.

மரண வாக்குமூம் போன்ற
அதிஸ்டமில்லாத கவிதை இதுதான்.

தீயை அணைத்து தூங்கப் போகமுன்
எனது கடைக்குடியை வரவேற்க
அவனது அபகரிக்கப் பட்ட அறையை
செப்பனிட்டபடியே விழித்திருக்க வேண்டும்.
எனக்கான துப்பக்கிக் குண்டே
அல்லது என்னுடைய நீண்ட இரவே
அதுவரை தாமதித்து வா.

Please Click here to login / register to post your comments.