சர்வகட்சி மாநாடு என்ற பெயரில் காலத்தை இழுத்தடிக்கும் கைங்கரியமே நடைபெறுகிறது

* இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான கொள்வனவுகள் மற்றும் மாற்றுச் சேவைகள் ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்.மாவட்ட எம்.பி.ஸ்ரீகாந்தா ஆற்றிய உரை

இந்த விவாதத்தில் அரசாங்க தரப்பிலிருந்து இதுவரையில் நிகழ்த்தப்பட்டிருக்கின்ற உரைகளை உன்னிப்பாகக் கவனிக்கின்றபொழுது, அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையிலான இந்த ஒப்பந்தத்தை, `பயங்கரவாதம்' என்று முத்திரை குத்தப்பட்டிருக்கின்ற இலங்கை தீவின் உள்நாட்டுப் பிரச்சினை தொடர்பாகத்தான் அல்லது இந்த உள்நாட்டுப் பிரச்சினை என்கிற தளத்தில் நின்றுகொண்டுதான் அரசாங்க தரப்பு அணுகிக் கொண்டிருக்கிறது என்பதனை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த ஒப்பந்தத்தினூடான நன்மைகள் என்ன, தீமைகள் என்ன என்கிற அடிப்படையில் அரச தரப்பினராலும் இதுவரையில் எதிர்க்கட்சி தரப்பிலே விவாதத்தில் பங்குபற்றியிருந்த உறுப்பினர்களாலும் `ஜாதிக விமுக்தி பெரமுன'வைச் சேர்ந்த கௌரவ உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, அல்லது ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, சொல்லப்பட்டிருந்த கருத்துகளைப் பொறுத்தமட்டிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய எங்களைப் பொறுத்தமட்டிலே எந்த விதத்திலும் நாங்கள் இந்த இருதரப்பு வாதங்களோடும் இணைந்துகொள்வதாக இல்லை. ஏனெனில், வெளிப்படையாகச் சொல்வதாக இருந்தால், இப்பொழுது நடந்துகொண்டிருப்பதெல்லாம் இலங்கையிலே தொடர்ந்து கொண்டிருக்கின்ற போரைப் பொறுத்தமட்டில் இந்த ஒப்பந்தம் எந்த அளவுக்கு உதவுகிறது என்பதை ஆராயுமளவுக்கே இந்த விவாதம் நடைபெற்றிருக்கிறது.

ஆகவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாங்கள் ஒரு விடயத்தை இந்தச் சந்தர்ப்பத்திலே தெட்டத்தெளிவாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம். அதாவது, வெளிநாடுகளுடனான ஒப்பந்தங்கள் இலங்கை அரசுக்குத் தேவைப்படுகின்றன. அந்த ஒப்பந்தங்களினூடாக உதவிகள் தேவைப்படுகின்றன. நிதி உதவிகள் மாத்திரமல்ல, ஆயுத உதவிகளும் தேவைப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால், வெளிநாடுகளிடமிருந்து எதையெல்லாம் பெற முடியுமோ, அதை ஒப்பந்தங்களினூடாகவேனுஞ் சரி, அல்லது ஒப்பந்தங்களுக்கு அப்பாலாயினுஞ் சரி, பெற்றுக்கொள்வதில் இலங்கை அரசைப் பொறுத்தமட்டிலே எந்தவித தயக்கமும் கிடையாது. ஆனால் ஏதாவது ஒரு வெளிநாடு இலங்கையில் இன்றைக்கு நிலவிக் கொண்டிருக்கின்ற நிலைமைகள் தொடர்பாகத் தன்னுடைய கருத்துகளை வெளிப்படையாக முன்வைக்கின்றபோது, குறிப்பாக, இந்த நாட்டிலே மனச்சாட்சி படைத்த எவராலும் மறுத்துரைக்கப்பட முடியாத அளவுக்கு அப்பட்டமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலே ஏதாவது ஒரு வெளிநாடு தன்னுடைய கருத்துகளை வெளிப்படையாகச் சொல்கின்ற சந்தர்ப்பத்தில், இங்கிருந்து இலங்கை அரசுத் தரப்பிலிருந்து - அதற்கு எதிரான குரல்கள் எழுவதை நாங்கள் பார்த்திருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால், வெளிநாட்டு உதவிகூட வேண்டாமென்று எந்தவித முன்யோசனையுமின்றிப் பிரகடனப்படுத்துகின்ற அளவுக்கு, வெளிநாடுகள் இந்த நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற உள்வீட்டு விடயங்கள் தொடர்பாக, வெளிப்படையாகச் சொல்வதாக இருந்தால், மனித உரிமை நிலைவரம் தொடர்பாகக் கருத்துகள் கூறுவதைச் சகித்துக்கொள்வதற்கு நீங்கள் தயாராக இல்லை.

அமெரிக்கா தனியொரு வல்லரசாக மாறி இருக்கின்ற இந்தச் சூழ்நிலையிலே, அதாவது, இரு துருவங்களான வல்லரசுகள் இரண்டைக் கொண்ட உலகமாக இருந்த இந்தப் பூமிப் பந்து, இன்று தனியொரு வல்லரசைக் கொண்டிருக்கின்ற உலகமாக மாறியிருக்கின்ற சூழ்நிலையிலே, அமெரிக்கா எங்கெங்கு எதையெதைச் செய்துகொண்டிருக்கின்றது என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஈராக் நாட்டைப் பொறுத்தமட்டிலே அமெரிக்க நாட்டினுடைய ஒவ்வொரு தவறான நடவடிக்கையையும் நாங்கள் கண்டித்திருக்கின்றோம். அந்த நாட்டினுடைய இறைமை தொடர்பாக அமெரிக்க ஐக்கிய நாடுகள் எடுத்த நடவடிக்கை அப்பட்டமான ஓர் ஆக்கிரமிப்பு என்பதிலே எங்களுக்குத் திட்டவட்டமான கருத்து இருக்கின்றது. அந்த ஆக்கிரமிப்பு ஈராக் நாட்டு மக்களுக்கு இதுவரையிலேயும் எந்தெந்த அவலங்களை கொடுத்திருக்கின்றது, இப்பொழுதும் கொடுத்துக் கொண்டிருக்கின்றது என்பதிலே நாங்கள் உணர்வுபூர்வமான கருத்துகளைக் கொண்டிருக்கின்றோம். மனித உரிமைகளை மதிப்பவர்கள் என்கிற வகையிலே எங்களுடைய கருத்துகள் உறுதியானவை.

அமெரிக்காவுக்கும் சரி, வேறு எந்த நாட்டிற்கும் சரி இந்த நாட்டிலே நிகழ்ந்து கொண்டிருக்கின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாகக் கருத்துக் கூறுகின்ற சுதந்திரம் உள்ளது என்பதை நாங்கள் மறந்துவிடக் கூடாது. `பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்கின்ற கோஷத்தின் பின்னாலே இந்த ஒப்பந்தம் தொடர்பான விவாதம் இழுபட்டுக் கொண்டிருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்திலே, நான் ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகின்றேன். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலே ஜனநாயகக் கட்சியினுடைய வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்ற செனட்டர் ஹிலாரி கிளின்ரன் சில மாதங்களுக்கு முன்னர் குறிப்பிட்டது போல, பூமி என்பது இன்றைக்கு ஒரு பூகோளக் கிராமமாக மாறியிருக்கின்றது என்கிற உண்மையை நாங்கள் மறந்துவிடக்கூடாது. இலங்கை என்கிற இந்தச் சின்னஞ்சிறிய தீவு வெளிநாடுகளுடைய தொடர்புகளில் இருந்து அல்லது வெளிநாடுகளில் இருந்து முற்றாகத் துண்டிக்கப்பட்ட ஒரு தனி நிலப்பரப்பு என்கிற அடிப்படையிலே இந்த உலகத்திலே ஒரு நிமிடம் கூட நின்று பிடிக்க முடியாது என்பதை நாங்கள் முதலிலே புரிந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்காவுடனான ஒப்பந்தமாக இருக்கட்டும் அல்லது 1987 ஆம் ஆண்டு ஆடி மாதம் 29 ஆம் திகதி செய்து கொள்ளப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தமாக இருக்கட்டும். எந்த ஒப்பந்தமாக இருந்தாலும் சரி அது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இந்த உள்நாட்டுப் பிரச்சினை தொடர்பாக, இன்னமும் இலங்கைத் தீவிலே தீர்க்கப்படாமல் மேலும் மேலும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கின்ற இனப் பிரச்சினையின் விளைவாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்ற யுத்தத்தின் பின்னணியை நாங்கள் ஆராய்கின்றபோது ஒரு விடயத்தை மறந்துவிடக்கூடாது. வெளிநாடுகளிடம் இருந்து எந்த அளவிற்கு கைநீட்டி உதவிகளை வாங்கத் தயாராக இருக்கின்றோமோ, அந்த அளவுக்காவது `வெளிநாடுகளுடைய கருத்துகளுக்கு மதிப்பளிப்பது ஒரு நிர்ப்பந்தமான நிலைமை" என்கின்ற யதார்த்தத்தை நிச்சயமாக சகலரும் உணர்ந்துகொள்ள வேண்டும். அமெரிக்க அரசினுடைய இணை அமைச்சர்களில் ஒருவரான றிச்சட் பௌச்சர் சமீபத்திலே இலங்கைக்கு வந்திருந்தபோது, யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கும், நான் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்திற்கும் சென்றிருந்தார். மனித உரிமை தொடர்பாக அவர் சில அழுத்தமான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

சமீப காலத்திலே இதே மாதிரி பிரிட்டிஷ் அரசு அமைச்சர் ஒருவர் உட்பட வேறுசில வெளிநாட்டு அரசியல் பிரமுகர்களும் மனித உரிமைகள் தொடர்பாக காத்திரமான கருத்துகளை மறுத்துரைக்க முடியாத உண்மைகளை வெளியிட்டிருந்தார்கள்.ஆனால், அதற்கெதிராக இங்கிருந்து எழுந்த கூச்சல்களெல்லாம் இவர்கள் யார் எங்கள் உள்நாட்டுப் பிரச்சினையிலே கருத்துக் கூறுவதற்கு? என்கிற அடிப்படையிலே தான் எழுந்திருந்தன.

நாங்கள் ஒன்றை மறந்து விடக்கூடாது. இந்திய அரசின் பாதுகாப்பு ஆலோசகராக இருக்கிற நாராயணன் இந்தப் பிராந்தியத்திலே நாங்கள் தான் பெரிய சக்தி என்று சமீபத்திலே கூறியிருக்கிறார் என்றால் அதற்குப் பின்னாலே என்ன கருத்து இருக்கிறது என்பதை தயவுசெய்து இந்த மாண்புமிகு சபையிலுள்ள ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டுமென்பதிலே நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். யதார்த்தத்தை யாரும் மறந்து விட முடியாது. எல்லாவற்றையும் இன்று இப்பயங்கரவாதம் என்கின்ற கூச்சலுக்குள்ளே அடக்கி விடலாம் என்ற கற்பனைக்குள் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது . இன்னமும் கூட ஒரு யதார்த்தபூர்வமான அணுகுமுறையை இந்தப் பயங்கரவாதம் என்று வர்ணிக்கப்படுகின்ற இந்த இனப்பிரச்சினை தொடர்பிலே கைக்கொள்வதற்கு இந்த நாட்டிலே ஆளும் கட்சி தயாராக இல்லை என்பதை நான் மிகுந்த மனவருத்தத்துடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

எனது நல்ல நண்பர்களைக் கொண்டிருக்கிற ஜாதிக விமுக்தி பெரமுன கூட அதற்குத் தயாராக இல்லை. இது ஒரு யதார்த்தம் இந்த யாதார்த்தத்தின் பின்னனியிலே நின்றுகொண்டு தாங்கள் இந்த விவாதத்திலே கலந்துகொண்டுள்ள இவ்வேளையிலே, இந்தப் பயங்கரவாதம் என்கிற கூச்சலுக்குப் பின்னாலே சகல பிரச்சினைகளையும் மூடி மறைத்துவிடலாம் என எவரும் கணக்குப் போட்டுவிடக்கூடாது. கருதிவிடக்கூடாது. கனவு காணக் கூடாது. ஏனென்றால் உலகத்தினுடைய கண்கள் இப்பொழுது இலங்கையின் பக்கம் திரும்பியிருக்கின்றன. இன்றைக்குக் கூட ஐரோப்பிய யூனியனுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலைமையிலேயே இலங்கை நின்று கொண்டிருக்கின்றது என்ற யதார்த்தத்தை நாங்கள் மறந்துவிடக்கூடாது.

ஆகவே தான், 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி செய்து கொள்ளப்பட்ட இந்திய- இலங்கை ஒப்பந்தத்துக்கு மாறாக அதனை மீறி நாங்கள் அமெரிக்காவுடன் எந்தவிதமான ஒப்பந்தத்தையும் செய்து கொள்ள முடியாது என இன்று காலையில் நடைபெற்ற விவாதத்தின்போது அரச தரப்பிலே உரையாற்றிய எனது நல்ல நண்பர் அரசாங்கக்கட்சியின் முன் வரிசையை அலங்கரித்துக் கொண்டிருக்கின்ற அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா குறிப்பிட்டிருந்தார்.

நீங்கள் இன்று கேக்கைச் சாப்பிட விரும்புகிறீர்கள்.

ஆனால், கேக் வெட்டக்கூடாது எனவும் விரும்புகிறீர்கள் . இங்கு காலியாகியிருக்கின்ற அரச தரப்பு ஆசனங்களைப் பார்த்து ஒரு விடயத்தைக் கூற விரும்புகிறேன். அதாவது பயங்கரவாதத்துக்கு எதிராக யுத்தம் நடத்துவதாகக் கூறிக்கொண்டு தொடர்ந்தும் நீங்கள் உலகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. இந்த இலங்கைத் தீவு இன்றைக்கு ஒரு திருப்புமுனையில் நின்று கொண்டிருக்கிறது. போர்முனையிலே இளம் உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன. அரச படைகளின் தரப்பிலே சிங்கள இளைஞர்களும் தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பிலே தமிழ் இளைஞர்களும் தினமும் செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் குளிரூட்டப்பட்ட இந்த மகா மண்டபத்திலே நின்று கொண்டு இந்தப் பிரச்சினையைப் பற்றியும் வேறு பல்வேறுபட்ட பிரச்சினைகளைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிற ஒவ்வொரு விநாடியும் கூட வடக்கு போர்க்களத்திலே இந்த இலங்கைத் தீவின் இளம் சந்ததியின் இரத்தத் துளிகள் சிந்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை இரத்தத் துளிகள் என்று கூறுவதை விட இரத்த வெள்ளமே ஓடிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை நாங்கள் மறந்து விடக்கூடாது. ஆகவே, இனிமேலாவது நீங்கள் பொறுப்பு வாய்ந்தவர்களாக இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் பதில் சொல்ல வேண்டியவர்களாகச் சிந்தித்து செயற்பட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம்.

பிராந்திய வல்லரசு என்ற முறையிலே இந்தியாவால் எதையும் செய்ய முடியுமென்பதை நாங்கள் மறந்து விடக்கூடாது. வெறுமனே நாராயணன் என்பவர் ஒரு சாதாரண அரசாங்க அதிகாரி என்று யாராவது நினைத்தால் அவர்கள் மண்ணுக்குள்ளே தலையைப் புதைத்து வைத்துக் கொண்டு உலகம் இருண்டு விட்டது எனக் கனவு காணுகிற தீக்கோழியைத்தான் எங்களுக்கு நினைவுபடுத்துகிறார்கள்.

நாராயணன் சாதாரணமானவர் அல்லர். அவர் இந்திய அரசினுடைய பாதுகாப்பு ஆலோசகர். அவர் என்ன சொல்லியிருக்கின்றார்? நீங்கள் சீனாவிடம் போக முடியாது. பாகிஸ்தானிடம் போக முடியாது. எங்களிடம் தான் வரவேண்டும் என்று கூறியிருக்கின்றார். அதே நேரத்தில் இலங்கைக்கு தாக்குதல் ஆயுதங்களை நாங்கள் வழங்க மாட்டோம் என்றும் அவர் கூறியிருக்கின்றார். இதிலிருந்து ஒரு விடயத்தை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த யுத்தம் மேலும் பரிணாம வளர்ச்சி பெற்று அதனுடைய சுவாலைகள் இலங்கைத் தீவுக்கு அப்பால் பரவுவதை இந்தியா ஒரு போதும் அனுமதிக்கமாட்டாது என்பதையும் இந்தப் பிரச்சினை அரசியல் தீர்வு இல்லாமல் யுத்தம் என்கிற அடிப்படையிலே தொடர்ந்து கொண்டு இருக்குமாக இருந்தால் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்கின்ற ரீதியிலே இந்தத் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்பது வெறும் கானல் நீராகத் தொடர்ந்து கொண்டு இருக்குமாக இருந்தால் நிச்சயமாக பிராந்திய வல்லரசான இந்தியாவும் சரி, அல்லது செனட்டர் ஹிலாரி கிளின்டன் குறிப்பிட்டது போல இன்றைக்கு பூகோளக் கிராமமாக மாறிவிட்ட உலகமும் சரி, நீண்ட நாட்களுக்குக் கைகட்டிப் பார்த்திருக்கமாட்டாது என்பதையும் இப்பொழுதாவது புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த நாடு தன்னுடைய வரலாற்றின் திருப்புமுனையிலே நின்று கொண்டிருக்கின்றது. இந்த யுத்தம் இதே ரீதியிலே முன்னெடுக்கப்படுமாக இருந்தால் நான் என்னுடைய வார்த்தைகளினுடைய அர்த்தத்தைப் புரிந்து கொண்டுதான் பேசுகின்றேன். அடுத்துவரும் வாரங்களிலும் பாரிய அழிவை இந்த இலங்கைத் தீவினுடைய மக்கள் நாங்கள் எல்லோருமே அனுபவிக்கப் போகின்றோம். நான் வேறு படுத்திப் பேச விரும்பவில்லை. மரணமென்று ஒன்று நிகழ்கின்ற போது அது சிங்கள சகோதரர்களுக்கும் ஒன்றுதான், தமிழ் சகோதரர்களுக்கும் ஒன்றுதான், முஸ்லிம் சகோதரர்களுக்கும் ஒன்றுதான். இன்னமும் இளைய சந்ததியை யுத்தகளத்திலே மோதவிட்டு அந்த இரத்த துளிகளிலே இரத்த வெள்ளத்திலே பதவி மோக அரசியலை நடத்திக் கொண்டிருந்தால் இந்த நாட்டை கடவுளும் காப்பாற்ற முடியாது. இன்னமும் காலம் கடந்துவிடவில்லை அதாவது தேர்தல் சீர்திருத்தத்திற்காக ஒன்றுபடுங்கள் என்று அரசாங்கக் கட்சி பிரதான எதிர்க் கட்சிக்கு நேசக்கரம் நீட்டிக் கொண்டிருக்கின்றது. ஜாதிக விமுக்தி பெரமுன வுக்கு நேசக்கரம் நீட்டுகின்றது எங்களுக்கும் நேசக்கரம் நீட்டுகின்றது.

இப்பொழுதும் கூட ஓர் அரசியல் தீர்வைக் காண்பதற்கான காலம் கடந்துவிடவில்லை. தேர்தல் சீர்திருத்தத்திற்காக எதிர்க்கட்சிகளுடைய ஆதரவைக் கோருகின்ற ஆளுங்கட்சி இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தைப் பொறுத்தமட்டிலே சகல கட்சிகளையும் இணைத்து இனப்பிரச்சினை தொடர்பாக நீதியான அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றை வடிவமைக்க வேண்டும் என்கின்ற அவசியமும் அவசரமும் நிறைந்த அந்த்த தேசியக் கடமை தொடர்பிலே இதுவரையில் எந்தவோர் உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெறுமனே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கோஷங்கள் எழுப்புவதிலோ வசை பாடுவதிலோ எதையும் சாதிக்க முடியாது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய எங்களைப் பொறுத்தமட்டிலே தென்னிலங்கை தரப்பிலிருந்து ஆளுங்கட்சியையும் பிரதான எதிர்க்கட்சியாகிய ஐக்கிய தேசிய கட்சியையுமாவது உள்ளடக்கி முடியுமானால் ஜே.வி.பி.யையும் உள்ளடக்கி தமிழ் மக்களுடைய தமிழ் தேசிய இனத்தினுடைய அரசியல் வரைவு அரசியல் அபிலாஷைகளை திருப்திபடுத்தக்கூடிய நீதியான ஒரு அரசியல் வரைவு அரசியல் தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படுமாகவிருந்தால் பேச்சுவார்த்தை மேசைக்கு வாருங்கள் என்று நாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பகிரங்க வேண்டுகோள் விடுக்க முடியும். எங்களால் இயன்ற அளவுக்கு அரசியல் ரீதியாக அவர்களை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவருவதற்கு சாத்தியமான அனைத்தையும் செய்ய முடியும் ஆனால் இன்றைக்கு என்ன நடக்கின்றது? சர்வகட்சி மகாநாடு என்ற பேரிலே காலத்தை இழுத்தடித்துக் கொண்டு பிரதான ஆளுங்கட்சியான ஷ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெறுமனே மாவட்டங்களை பற்றி பேசிக்கொண்டிருக்கையிலே வடக்கிலே யுத்தமொன்று மிகவும் கோரமாக முன்னெடுக்கப்படுகின்ற சூழ்நிலையிலே தொடர்ந்து வெறுமனே பயங்கரவாதத்தைப்பற்றி பேசிக்கொண்டிருப்பதிலே எவ்வித அர்த்தமுமில்லை நாங்கள் பிரச்சினையை பிரச்சினையாக பார்க்க வேண்டும் இது ஒரு தேசியப் பிரச்சினை இந்த தேசியப் பிரச்சினையை இலங்கைத் தீவு தனியாக தீர்க்க முடியாது. அதற்கு வெளிநாடுகளுடைய உதவி தேவை. அனுசரணை தேவை, ஆலோசனை தேவை. பல்வேறு நாடுகளிலே இனப்பிரச்சினை எப்படி எப்படியெல்லாம் தீர்க்கப்பட்டிருக்கின்றது என்கின்ற அனுபவப் பாடங்கள் தேவை. இதனை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வோர் அரசியல் கட்சியும் மக்களுக்காகத்தான் செயல்படுகின்றன என்பது உண்மையென்றால் அரசியலில் இருப்பவர்களெல்லாம் மக்களுக்காகத்தான் செயற்படுகின்றார்களென்றால்,நான் நம்புகிறேன். இந்த மாண்புமிகு சபையின் ஒவ்வோர் உறுப்பினரையும் கூட இந்த விடயத்திலே நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறைகூவி அழைக்க முடியுமென்று.

மூன்று தினங்களுக்கு முன்னர் தலைநகர் கொழும்பிலே உள்ள கோட்டை புகையிரத நிலையத்திலே வைத்து செஞ்சிலுவைச் சங்கத்தின் இரண்டு பணியாளர்கள் ஒரு கொலைக் கும்பலினாலே கடத்தப்பட்டு 100 கிலோ மீற்றர்களுக்கப்பால் இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள கிரிஎல்ல பகுதியிலே சடலங்களாக மீட்கப்பட்டுள்ள சூழ்நிலையிலே, `அரசாங்கத்துக்கு அவமதிப்பு ஏற்படுத்துவதற்காகத்தான் இப்படியான கொலைகள் புரியப்படுகின்றன' என்கின்ற வாதம் இன்று முன்வைக்கப்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்திலே ஒரு விடயத்தை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இனியாவது அரசியலிலே உண்மையைப் பேசவேண்டும். தொடர்ந்துகொண்டிருக்கின்ற மனித உரிமை மீறல்கள் இந்த நாட்டிலே இதுவரையிலும் சரி, இப்பொழுதும் சரி அரச ஆதரவு பெற்ற, அரச போஷிப்பு பெற்ற, அரச இயந்திரத்தினுடைய பாதுகாப்பான சிறகுகளுக்குக் கீழே செயற்பட்டுக் கொண்டிருக்கிற கொலைக் கும்பல்களினால்தான் செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்கின்ற உண்மையையாவது புரிந்துகொள்ள வேண்டும். இதைத்தான் பிரிட்டிஷ் மந்திரி கௌலிங் அவர்கள் இங்கு வந்தபொழுது சொல்லியிருந்தார். அமெரிக்கத் துணை அமைச்சர் றிச்சர்ட் பௌச்சரும் அதைத்தான் சொல்லியிருந்தார். வேறு பல வெளிநாடுகளைச் சேர்ந்த அரசியல் இராஜதந்திரிகளும் அதைத்தான் சொல்லியிருந்தார்கள். அவற்றையெல்லாம் நீங்கள் அக்கறைப்படுவதாக இல்லை. உங்கள் அக்கறையெல்லாம் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இந்த ஒப்பந்தம் எந்த அளவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை அரசுக்கு உதவி செய்யப்போகிறது என்பது தொடர்பில்தான் இருக்கிறது. இது அரசியல் பொறுப்புணர்ச்சி அல்ல. இன்றைக்கு அமெரிக்காவுடன் இலங்கை செய்து கொண்டிருக்கிற ஒப்பந்தத்தையிட்டு நிச்சயமாக தமிழீழ விடுதலைப் புலிகள் கிஞ்சித்தேனும் கவலைப்படுவார்ளென்று நான் நினைக்கவில்லை. அதேநேரத்தில், நாங்களும் சரி இந்த ஒப்பந்தத்தைப்பற்றி அதிகமாக அலட்டிக் கொள்வதாக இல்லை. ஏனெனில் ஒரு யதார்த்தம் இருக்கிறது. அதாவது, உலகம் இன்றைக்கு க்ணடிணீணிடூச்ணூ ஙிணிணூடூஞீ ஒரு துருவ உலகமாக மாறியிருக்கிறது. நமது நாடு சின்னஞ்சிறியது. ரஷ்ய அதிபர் புட்டினைப் போல `எங்களுடைய ஏவுகணைகளை நாங்கள் மேற்கு நோக்கித் திருப்பிவைப்போம், என்கின்ற இராணுவ பலம் இன்றைக்கல்ல, 200-300 வருடங்கள் போனாலும் எங்களால் நினைத்துப் பார்க்க முடியாததொன்று.

இந்த யுத்தத் தீயில் எங்கள் வளங்கள் அனைத்துமே பொசுங்கிக் கொண்டிருக்கின்றன. வெளிநாட்டு உதவிகள் யுத்தத்துக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன. தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் இன்றைக்கு அளவுக்கதிகமான அசுர வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன என்றால் , இலங்கை பெறவேண்டிய அந்த வளர்ச்சி அவர்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது என்றுதான் அர்த்தம். எண்பதுகளிலிருந்து எங்களை நாங்களே அழித்துக்கொண்டிருக்கின்றோம். எங்களைப்பொறுத்தமட்டிலே, யார் இந்தப் பதவியில் இருக்கிறார் என்பதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எந்தவொரு தனிப்பட்ட பிரமுகர்கரையும் நான் விமர்சிக்க விரும்பவில்லை. அவர் இவருடைய உறவினர், ஆகவேதான் அவர் அந்தப் பதவியில் இருக்கக்கூடாது என்று நாங்கள் ஒருபொழுதும் சொல்லமாட்டோம். அப்படிச் சொல்ல வேண்டிய அவசியமும் கிடையாது. எங்களுக்கு அதைப்பற்றி எந்தவிதமான கவலையும் கிடையாது. குடும்ப ஆதிக்கம் என்று பேசுகிறார்களே , அதைப்பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை. ஏனென்றால், இலங்கைத் தீவின் அரசியலிலே சுதந்திரமடைந்த நாள் முதல் எந்தக் கட்சி ஆட்சி நடத்தினாலும் குடும்ப ஆதிக்கம் என்பது இருந்துதான் வந்திருக்கிறது என்பதை எனக்கு எதிர்வரிசையில் இப்பொழுது இருக்கின்ற என்னுடைய நல்ல நண்பர் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் ஏற்றுக்கொள்வார். இலங்கை அரசியலைத் தெரிந்தவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆகவே, அதைப்பற்றிக்கூட நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் கவலைப்படுவதெல்லாம் முழு இலங்கைத் தீவின் மக்களுடைய எதிர்காலமும் நாசமாக்கப்படுகிறதே. ஓர் இளைய சந்ததியே யுத்தத்தில் பலியாகிக் கொண்டிருக்கிறதே. இந்த யுத்தத்துக்கு முடிவுகட்ட வேண்டும் என்கிற எந்தவித பொறுப்புணர்ச்சியும் இல்லாமல், கேவலம் சில்லறைப் பிரச்சினைகளை வைத்து இந்த நாட்டினுடைய பிரதான அரசியல் கட்சிகள் எல்லாம் பதவிவெறி அரசியல் நடத்திக்கொண்டிருக்கின்றனவே என்பதைப் பற்றித்தான், நாங்கள் ஒருபொழுதும் ஆட்சிக்குவர முடியாது. நாங்கள் இந்த நாட்டிலே ஒரு சிறுபான்மைத் தேசிய இனத்தின் பிரதிநிதிகள் நாங்கள் ஆட்சிப்பீடத்தை பிடிக்க முடியாது. என்றைக்கும் நாங்கள் எதிர்க்கட்சியாகத்தான் இருப்போம். இலங்கை ஒரேநாடாக இருக்குமாக இருந்தால் நாங்கள் என்றைக்கும் நிரந்தரமான எதிர்க்கட்சியாகத்தான் இருப்போம். ஆனால் ஒன்றை நாங்கள் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம், இந்த ஜனநாயகம் என்கின்ற கோஷத்துக்குப் பின்னால்,

இந்தப் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற பெயரால் தொடர்ந்தும் உலகத்தின் கண்களிலே மண்ணைத் தூவிக் கொண்டிருக்க முடியாது. நாங்களாக இந்தப் பிரச்சினையைத் தீர்க்கப் போகிறோமா? நாங்களாக ஓர் அரசியல் தீர்வைக் கொண்டுவரப்போகிறோமா? அல்லது விரைவிலே வலுமிகுந்த பலம்மிகுந்த வெளிநாடுகள் ஒன்றாகச் சேர்ந்து `இதுதான் தீர்வு' என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளும் நிலைமைக்கு நாங்கள் எங்களைத் தயாராக்கிக் கொள்ளப்போகிறோமா? அல்லது அதைக்கூட கேட்க விரும்பாமல் தொடர்ந்தும் மோதி, மோதி ஈற்றிலே இலங்கை இரண்டு துண்டாக அல்ல பல்வேறு துண்டுகளாக உடைகின்ற அந்தப் பயங்கர நிலைமைக்கு எங்களை ஆளாக்கப் போகிறோமா? என்பதில் நாங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்று நான் நினைக்கின்றேன். இன்னமும் காலம் கடந்துவிடவில்லை "சொர்க்கத் தீவிலே நரகத் தாண்டவம்" என்று நான் ஒரு வசனத்தை - நான் நினைக்கிறேன். அறுபதுகளில் கேள்விப்பட்டிருந்தேன். 1958 ஆம் ஆண்டுக் கலவரத்தின்பொழுது இங்கிருந்து சென்னைக்குப் பறந்து சென்று அரசாங்கத் தணிக்கை காரணமாக சென்னையிலிருந்து வெளிநாடுகளுக்கு இலங்கை தொடர்பான ஒரு கட்டுரையை அனுப்பிவைத்த வெளிநாட்டுப் பத்திரிகையாளர் தன்னுடைய கட்டுரைக்குக் கொடுத்திருந்த தலைப்பு "சொர்க்கத் தீவில் நரகத் தாண்டவம்" என்பதுதான். இன்றைக்கு இலங்கைத் தீவிலே அதுதான் நடந்துகொண்டிருக்கின்றது. இந்த நரகத் தாண்டவத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே, தாங்கள் சார்ந்திருக்கின்ற ஹெல உறுமய கட்சிகூட அதனுடைய ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தனது அரசியல் நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்யும் என்ற நம்பிக்கையோடு என்னுடைய பேச்சினை முடித்துக்கொள்கின்றேன்.

Please Click here to login / register to post your comments.