புகலிடத்து வாழ்நிலையில் தமிழ்மொழி கல்வியூட்டல

ஆக்கம்: சிவதாஸ் சிவபாலசிங்கம்
புலம்பெயர்ந்து விட்ட ஈழத்தமிழர் வாழிடங்களிலே நோர்வேயில் தமிழ்க் கல்விப் போதனையின் வயது இரண்டு தசாப்தங்கள் எனலாம்.

தமிழர்களது அடையாளங்கள், பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் என உருவாக்கப்பட்ட புலத்துத்தமிழர் தளங்களில் தமிழ்க் கல்விக்கூடங்கள் முக்கியமானவையாக காத்திரமான பணியை ஆற்றுபவையாக விளங்குகின்றன. நோர்வேயில், தேசிய மட்டத்தில் ஆங்காங்கு பெரிய அளவில் ஒன்றிணைக்கப்பட்டும், சிறிய அளவில் குழுப் போதனைகளாகவும் இப்பணி முன்னெடுக்கப்படுகிறது. எது எவ்வாறாக இருந்தாலும் ஏனைய பல ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிடுகையில் நோர்வேயில் தமிழ் மாணவர்களது தாய்மொழித்தரம் குறிப்பிட்டுக் கூறக்கூடியதாகவே உள்ளது.

இருந்தாலும், எம் பிள்ளைகளுக்கான தாய்மொழிப் போதனையின் அத்தனை பரிமாணங்களிலும் உயர் நிலைகளைத் தொட்டு விட்டோமா? என்றால் அது இல்லை என்றே கொள்ளப்படவேண்டும். பிள்ளைகளின் ஈடுபாடு, பெற்றோரின் ஒத்துழைப்பு, ஆசிரியர்களின் போதனை முறைமை, கல்விநிறுவனங்களின் செயற்திட்டம் என்று பல பக்கங்களின் ஒருங்கிணைந்த வெற்றியே அந்த உயர்நிலையை நோக்கி நகர்த்தும். இவற்றில் ஒன்று வெற்றியடையாவிட்டாலும் நாம் விரும்பும் தரத்தை பெற்றுவிட முடியாது போகலாம். ஒன்றோடு ஒன்று தவிர்க்க முடியாது தொடர்புபட்டவையாகவே மேற்சொன்ன காரணிகள் அமைகின்றன.

1. பிள்ளைகளின் ஈடுபாடு.

எமது பிள்ளைகளுக்கான தமிழ்மொழி கற்பதற்கான தூண்டுதலும், உளவிருப்பும் சிறுவயதிலிருந்தே வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இதற்கான முதல் முக்கிய அடிப்படைக்காரணி பெற்றோர் முழுக்க முழுக்க ஆரம்பத்தில் தம் பிள்ளைகளோடு தமிழிலேயே உரையாடுதல். பிள்ளையின் கேட்டல், பேசுதல் திறன்கள் தாய்மொழியில் அதிகரிக்க அடுத்த நிலையான கற்றலுக்கு பிள்ளை உள விருப்போடு உந்தப்படும். குறிப்பிட்ட கற்கத் தொடங்கும் பராயத்திலேயே பிள்ளை ஒரு திரண்ட சொற்களஞ்சியத்தை தன்னகத்தே பதியம் வைத்திருக்கும். அதற்காக வழமையான வீட்டுச் சூழ்நிலை சொல்லாடல்களிலேயே புதிய தமிழ்ச் சொற்களை வலிந்து புகுத்த வேண்டுமென்பதில்லை. கற்கும் சூழலிலேயே அவற்றை பிள்ளை மெல்ல மெல்ல உள்வாங்கிக் கொள்ளும்.

மழலையர்களின் ஆரம்பதமிழ் கற்றல் வகுப்புகளுக்கான நகர்நிலை, அதிமுக்கிய அவதானிப்பை பெறவேண்டும். அவர்களின் ஈடுபாடு குன்றிவிடாது அனைத்துத் தளங்களும் கவனிக்கப்படவேண்டும். பிள்ளைகளின் ஈடுபாடு என்பது சுய ஆளுமை, கற்பித்தல் முறைமை, கற்பித்தல் சாதனங்கள், வகுப்பறைச்சூழல், இணைந்து செல்லும் நண்பர்கள் போன்ற இன்னோரன்ன காரணிகளால் தூண்டப்படும். இவற்றைவிட பிள்ளை தொடர்ந்து தமிழ் கற்க ஈடுபாடு காட்டுவதற்கு அதிமுக்கிய காரணியாய் இருப்பது ஆரம்ப நிலையில் அமையும் ஆசிரியர். ஆடல், பாடல், நடிப்பு, கதைகூறல், சுவாரசியமான உரையாடல், வர்ணம் தீட்டல், கைவினை என்று அனைத்து தளங்களிலும் ஆளுமையுள்ள ஆசிரியர், தமிழ் கற்கும் ஆர்வத்துக்கு தூண்டுகோலாகிறார். தவிரவும் பிள்ளைகள் தமிழ் கற்பதற்கு பொருத்தமான நேரம், கற்கும் வகுப்பின் மொத்த நேர அளவு என்பவையும் ஈடுபாட்டை தீர்மானிக்கவே செய்யும். மேல் மொழிந்தவை ஆரம்பநிலை மாணவர்களுக்கே மிகப் பொருந்தும். தொடரும் தமிழ் வகுப்புகளில் மேலும் சில காரணிகள் தமிழ் கல்வி ஈடுபாட்டில் மாணவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

2. பெற்றோரின் ஒத்துழைப்பு

பெற்றோர்களின் பூரண ஒத்துழைப்பு இல்லையானால் பிள்ளையிடம் சீரான தாய்மொழிக் கல்விவளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. பாடசாலை நேரம் தவிர்த்து (நோர்வேஜிய பாடசாலை) முழுமையான தமிழ்ச்சூழல் வீட்டிலேயே அமைகிறது. தாய்மொழிக் கல்வியில் தேர்ந்த ஒரு பிள்ளையாலேயே பிறமொழிகளிலும் விரைந்து பாண்டித்தியம் பெறமுடியும் என்ற உளவியல் உண்மையை முதலில் பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். இந்த மேலைத்தேய நாடுகளின் கல்வித்திட்டத்தில் உள்ள பெற்றோர் - ஆசிரியர் ஒத்துழைப்பு என்ற விடயத்தை எமது பெற்றோரும் சரியாக உள்வாங்கி ஒத்துழைப்பு வழங்கவேண்டும். வழமையான பாடசாலை வகுப்பாசிரியருக்கு வழங்கும் ஒத்துழைப்பை பலர் தமிழாசிரியருக்கு வழங்குவதில்லை. வார இறுதி நாளில் இரு மணித்தியாலங்கள் மட்டும் நடைபெறும் தமிழ் வகுப்பால் மட்டும் ஒரு பிள்ளையின் தமிழ் கல்வியை சீராக முன்னோக்கி நகர்த்த முடியாது.

தமிழ்ப்பாடசாலைகளுக்கு பிள்ளைகளை சிற்றுந்துகளில் கொணர்ந்து இறக்குவதோடும் ஏற்றுவதோடும் மட்டும் பெற்றோரின் கடமை நிறைவடைவதில்லை. பிள்ளைகளை தமிழ் கற்க அனுப்புகிறோம் என்பதோடு மட்டும் பலர் திருப்திப்பட்டுக்கொள்கிறார்கள். இன்று என்ன கற்றார்கள்? எவற்றை எழுதினார்கள்? என்று பிள்ளைகளோடு உரையாட வேண்டும். முடிந்தால் அவற்றை அவர்களோடு இருந்து பார்வையிட்டு ஆகா என்று நாலு வார்த்தை பாராட்டவேண்டும் தட்டிக் கொடுக்க வேண்டும். அதிகம் வேண்டாம் தினமும் சில நிமிடங்களாவது வீட்டுப் பாடங்களுக்கு அவர்களோடு இருந்து ஒத்துழைப்பு வழங்கினால் பிள்ளைகள் உற்சாகமடைவார்கள். மறுபுறத்தில் தமிழாசிரியரோடு பிள்ளையின் நிலைபற்றி அடிக்கடி தொடர்பை பேணுவதும் நன்று. வகுப்பு நிறைவடைந்ததும் அன்றைய வகுப்பு பற்றி, வீட்டுப்பாடம் பற்றி ஆசிரியரோடு அளவளாவிச் செல்வதும் வீட்டில் பிள்ளைக்கு துணைபுரிய ஏதுவாக அமையும். ஆர்வமேலீட்டால் ஆசிரியர் வகுப்பில் கற்பிக்காத அலகுகளை பிழையாக கற்பிப்பதும், வேறு வழிமுறைகளில் கற்பிப்பதும் பிள்ளைகளை குழப்பி ஆர்வம் குன்றச் செய்து விடலாம். ஆகவே தான் ஆசிரியரைப் பின்பற்றுவது சிறந்த வழிமுறையாக அமையும். முடிந்தவரை தமிழாசிரியர் ஏற்பாடு செய்யும் பெற்றோர் சந்திப்புக்களுக்கும், வகுப்பறைச் சந்திப்புக்களுக்கும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.

தமிழ்ப் பாடசாலைகளில் அல்லது வெளியே தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்களைப் பேணும் நிகழ்வுகளில் பிள்ளைகளை கலந்து கொள்ள வைப்பதும் பிள்ளையின் தமிழ்மொழி மீதான பற்றைத் தூண்டலாம். தரமான தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தேர்ந்து பார்வையிட வைப்பதும், வர்ண ஓவியங்கள் கொண்ட சிறுகதைப் புத்தகங்களை தேடி வாசிக்க வைப்பதும், ஆக்கங்களை எழுதுவதற்கான தூண்டுதல்களை அளிப்பதும் பெற்றோர் கவனம் செலுத்தக்கூடிய அம்சங்கள் எனலாம். தாயகத்தில், வேறு புகலிட நாடுகளில் உள்ள உறவுகளுக்கு கடிதங்கள் எழுத தூண்டியும் தம் பிள்ளைகளின் தமிழறிவு விருத்திக்கு பெற்றோர் ஒத்துழைக்கலாம்.

3. ஆசிரியர்களின் போதனை முறைமை

தமிழ் ஆசிரியர், அதுவும் புலம் பெயர் தமிழ் ஆசிரியர் பன்முக ஆளுமை கொண்டவராக இருத்தல் வேண்டும். புலம் பெயர்ந்த சூழல் பற்றிய அறிவும், அச் சூழலில் கற்பி;த்தல் அனுபவமும், தமிழ்மொழிப் புலமையும் - போன்ற காரணிகளே இவ் ஆசிரியர்களுக்கு வெற்றியைத் தரும். யாருக்கு கற்பிக்கப் போகிறேன்? எந்தச் சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு கற்பிக்கப் போகிறேன்? எதை? எவ்வாறு கற்பிக்கப் போகின்றேன் என்பதில் ஆசிரியர் முதலில் தெளிவாய் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு தமிழ்மொழி மீது விருப்பத்தையும் ஆர்வத்தையும் உண்டாக்க வேண்டிய பாரிய பொறுப்பு இவர்களிடம் உள்ளது.

வாழிடத்து மொழி கற்பிக்கும் முறைமைக்கும் தாய்மொழி கற்பிக்கும் முறைமைக்கும் பெருமளவில் வேறுபாடு ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதனால் தான் இங்குள்ள கல்வி முறைமையை, பாடத்திட்டமிடலை ஓரளவுக்கெனினும் புரிந்துகொள்ள வேண்டும். சில ஆசிரியர்கள் இன்று அரசுசார் கல்வித் துறைகளில் பணியாற்றுகிறார்கள். சிலர் தமது பிள்ளைகளை சில ஆண்டுகள் பாடசாலைக்கு அனுப்பியதால் கல்வி முறைகளை அறிந்திருக்கிறார்கள். எனவே இந்த அனுபவங்கள் தமிழ்க்கல்வி போதனையிலும் கைகொடுக்கும். மற்றும் தமிழாசிரியருக்கு வாழிடத்து மொழியில் ஓரளவாவது பரிச்சயமிருப்பது அவசியம். பிள்ளைகளுக்கு மிகத் தேவையான பொழுதில் அம் மொழியில் சில விடயங்களை விளங்கவைக்க வேண்டிய தேவை ஏற்படலாம்.

வகுப்பிற்கு செல்வதற்கு முன்னர், அன்று என்ன கற்பிக்கப் போகிறேன் என்ற பாடத்திட்டமிடல் ஆசிரியருக்கு முக்கியமானது. அத்தோடு பாடநூல்களுக்கான ஆசிரியர் வழிகாட்டிகளும் தேவையான விளக்கத்துடன் அமைய வேண்டும். அப்போது தான் பல பிரிவுகள் உள்ள ஒரு ஆண்டுக்கான வகுப்புகளை சீராக பல ஆசிரியர்களால் ஒரே அமைப்பில் நகர்த்த முடியும். ஆசிரியர்களுக்கிடையேயான கலந்துரையாடல்கள், பயிற்சி வகுப்புகள் மேலும் பயன் தரும். இவற்றுக்கு மேலாக தமிழாசிரியரின் தேடல், புதிய உத்திகள் என்பவையே வெற்றிக்கு வழி சமைக்கும். இந் நாடுகளில் வாழிடத்து மொழிப் போதனைக்கு பயன்படுத்தப்படும் நல்ல உத்திகளைக் கண்டறிந்து எம் தாய்மொழிப் போதனைக்கு ஏற்றவாறு அவற்றை மாற்றும் திறனை நாம் வளர்க்க வேண்டும். புதிய நவீன முறைமைகளை, குறிப்பாக கணினி, மேந்தலைஎறியி (ழஎநசாநயன) என்பவற்றின் பாவனையூடாக கற்பித்தலை இலகுபடுத்த வேண்டும். கற்பித்தல் உதவு உபகரணங்களை ஆக்கவோ, தேடவோ முயற்சிக்க வேண்டும். மொத்தத்தில் புலத்தில் தமிழ்ப்போதனை என்பது சிரமமான பணி என்றாலும், சவால்களும் வெற்றிக்கான படிதானே!

06.05.2005 இல் தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையினால் அமைத்துலக ரீதியில் நடத்தப்பட்ட தமிழ்மொழி பொதுப் பரீட்சை. பிரான்சில் நாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்ட இப் பரீட்சையல் 52 தமிழ்ச்சோலைப் பள்ளிகளிலிருந்தும், 4 தனியார் பள்ளிகளிலிருந்தும் மற்றும் தனியார் விண்ணப்பம் மூலமாகவும் 2085 மாணவர்கள் எட்டு நிலையங்கலிருந்து தோற்றுவித்தனர். LA PLACE என்னுமிடத்தில் அமைந்த ஒரு நிலையத்தில் 1965 மாணவர்கள் ஒன்றாக பங்குகொண்டிருக்கும் காட்சியையே இங்கு காண்கிறீர்கள்.

4. கல்வி நிறுவனங்களின் செயற்திட்டம்

இன்று ஒழுங்கமைக்கப்பட்ட, நிறுவன மயப்படுத்தப்பட்டு விட்ட பல தமிழ்க்கல்வி நிறுவனங்கள் தோற்றம் பெற்றுவிட்டன. புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் வளரும் தலைமுறையினருக்கான தமிழ்மொழிக் கல்வியை கற்பிப்பதோடு மட்டும் அல்லாமல் கற்பித்தலில், கற்றலில் உள்ள இடர்பாடுகளையும் அவற்றை களைவதற்கான வழிவகைகளை கண்டறிதலும் கூட இந் நிறுவனங்களின் பணியாகிறது. தனி நபராக அல்லாது, இணைந்து பலரின் ஆலோசனை மத்தியில் தீர்வுகள் காணப்படும் போது அது காத்திரமாய் நிலைக்கிறது.

பாடத்திட்டங்கள், தேர்வுகள், பாடப்புத்தகங்கள், கையேடுகள் என்பன தேசிய மட்டத்தில், சர்வதேச மட்டத்தில் கல்வி நிறுவனங்களால் பொதுமைப்படுத்தப்படும் போது அது பல சிக்கல்களுக்கு தீர்வுகளைத் தரலாம். நமது கல்வித்திட்டத்தின் நோக்கமானது தமிழ்த் தேசிய ஒருங்கிணைவை கட்டியமைப்பதாகவே இருக்க வேண்டும். அது தமிழீழ தேசியத்தையும் சர்வதேச தமிழ்த் தேசியத்தையும் கருத்திலெடுக்கவேண்டும். கல்வி நிறுவனங்கள் வாழிடத்து கல்வி, மற்றும் துறைசார் அமைப்புகளோடு தொடர்புகளை பேணிக்கொள்வதும் ஏனைய இனங்களுக்கான எம் போன்ற கல்வி பண்பாட்டு அமைப்புகளோடு இணைந்து சில வேலைத்திட்டங்களில் செயற்படுவதும் எம்மை மேலும் வலுப்படுத்தும்.

புலம் பெயர் தமிழ்க் கல்வி நிறுவனங்களுக்கு அடுத்த தலைமுறையை வழிநடத்த வேண்டிய பாரிய பொறுப்பு இருக்கிறது. ஆசிரியர்களை தேர்வு செய்தல், அவர்களுக்கான தொடர் பயிற்சி வகுப்புக்கள், கற்பித்தல் பற்றியதான ஆய்வுப் பட்டறைகள், மதிப்பீடு என்பவற்றில் அதிக அக்கறை செலுத்த வேண்டியவர்களாகிறார்கள். வெறுமனே மொழிப்பயிற்சி மட்டுமன்றி கற்பிக்க கற்கும் பயிற்சி வகுப்புகளும் துறைசார் வல்லுனர்களால் ஒழுங்கு செய்யப்பட வேண்டும். நிறுவனமாக பலம் பெறும்போது தமிழ் கல்விக்கு உதவும் இலகு தமிழ் கற்கை நூல்களையும், கற்பித்தல் உதவு உபகரணங்களையும் ஆக்குவதற்கு வாய்ப்புக்கள் இருக்கும். கலை நிகழ்வுகள், மாணவர் உளநிலையை பாதிக்காத வகையில் கல்விப் போட்டிகள் என்பவற்றையும் ஒழுங்கு செய்யலாம். எதிர்காலத்தில் தாயகத்திற்கு கூட பயன்தரு வகையில் துறைசார் கல்வித் தெரிவிற்கும் பெற்றோருக்கு கூட தகவல் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட வேண்டும்.

மேற் குறித்து எழுதியவை அனுபவங்களினூடாக எழுந்த சில முன்மொழிவுகள் மட்டுமே. இந்தக் களம் மேலும் விரிந்து ஆய்ந்து எழுதுவதற்கு உட்பட்டது. மாணவர் - பெற்றோர் - ஆசிரியர் - கல்விநிறுவனம் என்ற நான்கு தரப்பினரின் புரிந்துணர்வுடனான கூட்டுச் செயற்பாடே புலத்தில் எம் அடுத்த சந்ததியையும் புலத்து தமிழராய் நிமிரவைக்கும்.

-- சிவதாஸ் சிவபாலசிங்கம்
் (கல்விப்பணி மேலாளர்)

நன்றி: எரிமலை, ஜூன் 2006

Please Click here to login / register to post your comments.