சிலைகள் புதைக்கப்பட்டு புனித பூமி என்ற பெயரில்முஸ்லிம்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டு வருகின்றன

கிழக்கு மாகாணம் தொடர்ந்தும் பிரிந்து செயற்படுமானால் தமிழ், முஸ்லிம் சமூகம் அடிமையாக்கப்பட்டு சிறுபான்மையாக்கப்படுவதுடன் மிக விரைவில் கிழக்கு மாகாணம் சிங்கள இராச்சியமாக மாறும் என்பதில் ஐயமில்லை என அம்பாறை மாவட்ட முஸ்லிம் புத்திஜீவிகள் கருத்து தெரிவித்தனர்.

இலங்கையின் இனப்பிரச்சினையில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட தரப்பு என்ற நிலையிலிருந்து பங்காளர் என்ற நிலைக்கு மாறுகின்ற தன்மை தொடர்பாக முஸ்லிம்களுக்கு பேச்சுவார்த்தையில் மூன்றாம் தரப்பு கிடைக்கின்ற போது முன் வைக்கப்படவுள்ள முஸ்லிம்களின் பிரச்சினை சம்பந்தமான மாவட்ட மட்ட ஆலோசனை செயலமர்வு அட்டாளைச்சேனை லொய்ஸ் ஹோட்டலில் சனிக்கிழமை முஸ்லிம் சமாதான செயலகத்தினால் செயலகத்தின் செயலாளர் நாயகம் எம். ஐ. எம். முஹிதீன் தலைமையில் நடைபெற்ற போது கருத்துத் தெரிவிக்கையிலேயே புத்திஜீவிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இங்கு இவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கிழக்கு பிரிந்து செயற்படுவதனால் சிங்களப் பேராதிக்கம் மேலோங்கிக் காணப்படும். இப்பிராந்தியத்தில் தமிழ், முஸ்லிம் மக்களை விகிதாசாரத்தில் குறைக்கும் நோக்குடன் திட்டமிட்ட குடியேற்றங்கள் சிங்கள மக்களால் நடைபெற்று வருகின்றன.

பொத்துவில் பிரதேசம் மிக விரைவில் சிங்கள இராச்சியமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளன. அட்டாளைச்சேனை பிரதேசத்துக்குட்பட்ட அஸ்ரப் நகர் கிராமம், குடிலில் கிராமங்களில் திட்டமிடப்பட்டு சிலைகளை புதைத்து வைத்து விட்டு புனித பூமி என்ற போர்வையில் முஸ்லிம் மக்களின் குடியிருப்புக் காணிகள் விவசாயக் காணிகள் சுவீகரிக்கப்பட்டு வருகின்றன. இது விடயம் முஸ்லிம் தலைவர்கள் மௌனமாக இருப்பது விசனத்துக்குரியது.

அம்பாறை மாவட்டம் என்றால் சர்வதேச மட்டத்துக்குத் தெரியும், இது முஸ்லிம்களின் மாவட்டம் என இம்மாவட்டத்தினையும் சிங்கள மாவட்டமாக மாற்றியமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன. இவை இடைநிறுத்தப்பட வேண்டும். மர்ஹும் எம். எச். எம். அஷ்ரப்பினால் தென்கிழக்கு அலகு கோரி தீர்வு முன்வைக்கப்பட்ட போது திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் மக்கள் எதிர்த்தனர். எனவேதõன் இணைந்த வடகிழக்குக்குள் முஸ்லிம்களுக்கு தீர்வு வேண்டும் எனவும் கருத்து முன் வைக்கப்பட்டன. முஸ்லிம் மாகாணம், தமிழ் மாகாணம் என பிரிந்து செயற்பட்டால் முஸ்லிம் மாகாணத்துக்கும் தமிழ் மாகாணத்துக்கும் பிரச்சினை வராதா? வந்தே தீரும்.

இதேவேளை இங்கு முஸ்லிம் மக்களின் முக்கிய விடயங்கள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டன. வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கான அதிகார பகிர்வு, பாதுகாப்பும் ஆபத்தான தன்மையும், காணி சொத்து உரிமை, மீள்குடியேற்றம், மீள திரும்புவதற்கான உரிமை, சமாதான நடவடிக்கைகளில் முஸ்லிம்களின் தனிப் பிரதிநிதித்துவம், மனித உரிமை, ஜனநாயகம் நல்லாட்சி போன்ற விடயங்கள் பற்றி விரிவாக்கமும் மும்முரமாகவும் ஆலோசிக்கப்பட்டன. வரலாற்று முக்கியமான மாவட்ட மட்ட ஆலோசனைச் செயலமர்வில் முஸ்லிம் சமாதான செயலகத்தின் பணிப்பாளர் எம். எச். எம். சல்மான், உறுப்பினர் சட்டத்தரணி அபுல்கலாம் உட்பட முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Please Click here to login / register to post your comments.