முனை மழுங்கடிக்கப்பட்ட ஒரு பேனா!

ஆக்கம்: சோதியா
சிவராம்!
சிங்கள இனவாதமும்,
சில எச்சிற் பேய்களுமாய்
சிதைத்துப் போட்ட
இன்னுமோர் இரத்த சாட்சி!
அந்தச் சுடுகுழலின்
அனல்வாய் அமைதியாகிப் போனது.
பத்திரிகை வயற்பரப்பில்
உண்மை முனைகொண்டு உழுதபேனா
உடைத்தெறியப்பட்டிருக்கிறது.
ஊடக உரிமை,
மனிதம் மரித்துப்போன மாநகரின்
சாலை மருங்கில் சாய்க்கப்பட்டிருந்தது.

பேனாக்கள்
பேச எழுந்தபோதெல்லாம்
முனை முறிக்கப்படுகிறது.
விடுதலைக்கான சமூகம்
வீரியம் பெறும்போதெல்லாம்
வேள்விப் பொருளாய் போவது
புதினத்தாள்களும் புத்திஜீவிகளும்தான்.
பறித்தெடுக்கப்படும் எழுதுகோல்கள்தான்
அடக்குமுறை சவப்பெட்டியில்
ஆணிகளாய் அறையப்படுகிறது.

நேற்றும் இன்றும்
வீழ்த்தப்பட்ட ஆட்டிற்காய்
கண்டன அறிக்கைகளுடன் ஓநாய்கள்!
வழமைபோலவே, விசாரணைக்குழுக்கள்
விரைந்து நியமிக்கப்பட்டதாம்.
நேற்று, நிமலராஜனுக்காயும்
நியமிக்கப்பட்டது விசாரணைக்குழு.
நடேசன் சரிக்கப்பட்டபோதும்
நாலுபேர் வந்தனர் போயினர்
அட.. . . . .போங்கடா. . . . .
நீங்களும் உங்கள் குழுக்களும்!

நன்றி: எரிமலை, மே 2006

Please Click here to login / register to post your comments.