பங்களாதேஷ் - இலங்கை!

ஆக்கம்: சோலை
நமது அண்டை நாடான பங்களா தேஷில், ஒரு பொம்மை அரசை முன்னிறுத்தி, ராணுவம் தான் ஆட்சி செய்கிறது. அந்த ராணுவம், ஆட்சி அதிகார ருசி கண்டது. எனவே, எந்த ஜனநாயக அரசும் நீடித்து நிலைத்திருப்பதை அந்த ராணுவம் அனுமதித்ததில்லை.

பாகிஸ்தானின் ஓர் அங்கமாக கிழக்குப் பாகிஸ்தான் இருந்தது. மொழியால், கலாசாரத்தால் மேற்குப் பாகிஸ்தானோடு எந்த வகையிலும் அதனால் இணங்கிப் போக முடியவில்லை. வங்க மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட கிழக்குப் பாகிஸ்தான் மக்களால் உருது மொழியின் ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுவே பங்களாதேஷ் என்ற நாடு உருவானதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது.

இன்று இலங்கையில் ஈழம் என்ன நிலையில் இருக்கிறதோ, அதே நிலையில்தான் அன்றைய கிழக்குப் பாகிஸ்தான் இருந்தது. எனவே, அவாமி லீக் தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் பாகிஸ்தானின் ஆதிக்கத்தையும், ராணுவ ஆட்சியையும் எதிர்த்துப் போராடிய மக்கள், தங்கள் தேசத்திற்கு ரத்தத்தால் எல்லைக் கோடுகள் போட்டனர்.

அந்தப் புதிய பூமியை பாகிஸ்தான் விரும்பவில்லை. அமெரிக்காவும் விரும்பவில்லை. விடுதலைப் போராட்டம் நடைபெற்ற காலத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்காவின் ஏழாவது கப்பற்படை நகர்ந்தது. போராடிய மக்களுக்காக சோவியத் யூனியனின் கப்பற்படை விரைந்தது. ஆனால், வெகுவிரைவில் கிழக்குப் பாகிஸ்தான் பங்களாதேஷாகி ஜனநாயக அரசு அமைந்தது. அதன் தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான்தான்.

சிறிது காலத்திலேயே அவருடைய அரசைக் கவிழ்க்க வங்கதேச ராணுவம் தயாரானது. அதன் சூத்திரக் கயிறு வாஷிங்டனில் கட்டப்பட்டிருந்தது. இதனை நமது பிரதமர் இந்திராகாந்தி அறிந்தார். உலக சமாதான இயக்கத் தலைவராயிருந்த ரொமேஷ் சந்திராவை அனுப்பினார். அனுப்பப்படும் ஹெலிகாப்டரில் ஷேக் முஜிபுர் ரஹ்மானும் அவரது குடும்பத்தினரும் இந்திய எல்லைக்குள் வந்துவிட வேண்டும் என்று தகவல் அனுப்பினார்.

ரொமேஷ் சந்திரா தலைநகர் டாக்காவில் இறங்கியபோது, மாபெரும் மக்கள் பேரணி நடந்தது. அதில் ஷேக் முஜிபுர் ரஹ்மான் உரையாற்றினார்.

‘ரொமேஷ், இவ்வளவு பெரிய மக்கள் கடல் எனக்குப் பின்னே நிற்கும்போது எவர் என்ன செய்ய முடியும்’?’ என்று அவர் கேட்டார்.

ஆனால், அடுத்த இரண்டு தினங்களிலேயே அந்த தேசத் தலைவர் முஜிபுர் ரஹ்மான் மட்டுமல்ல; அவரது குடும்பமே சுட்டுக் கொல்லப்பட்டது அப்போது அவருடைய புதல்வி ஷேக் ஹசீனா வெளிநாட்டில் இருந்தார். அதனால், அவர் மட்டும் உயிர் தப்பினார். நாடு திரும்பிய அவர் அவாமி லீக்கின் தலைவரானார். ஆட்சி அதிபரானார்.

மீண்டும் ஜியா_வுர்_ரஹ் மான் என்ற தளபதி ஆட்சி அதிபரானார். அரசியல் மாற்றங்களால் அவர் சிறை சென்றார். அதன் பின்னர் அவருடைய மனைவி கலிதா ஜியா வங்கதேச தேசியக் கட்சியைத் தொடங்கினார்.

அதன் பின்னர் ஆட்சி அதிகாரங்கள் மாறி மாறி வந்தன. அவாமி லீக்கின் ஷேக் ஹசீனா அதிபரானார். அடுத்து கலிதா ஜியா அதிபரானார். 1996_ம் ஆண்டு ஷேக் ஹசீனா தலைமையில் ஆட்சி அமைந்தது. ஐந்தாண்டுகள் அந்த ஆட்சி நீடித்தது. ஆனால், அவரை நிம்மதியாக ஆள கலிதா ஜியா அனுமதிக்கவில்லை. மதவாத சக்திகள், இந்திய எதிர்ப்புச் சக்திகள், வலதுசாரி சக்திகள் ஆகிய அனைத்து சக்திகளையும் அணிதிரட்டி கலிதா ஜியா ஆட்சி அமைத்தார்.

எரிமலையின் முகட்டில்தான் அந்த ஆட்சி அமைந்தது. சரித்திரச் சக்கரத்தைப் பின்னோக்கிச் சுழற்ற முயன்ற சக்திகளுக்கு எதிராக, மக்கள் வீதிகளுக்கு வந்து போராடினார்கள். ராணுவத்தின் பிரதிநிதியாகத்தான் கலிதா ஜியா ஆட்சி புரிந்தார். மக்கள் எழுச்சியை அவரால் எதிர்கொள்ள முடியவில்லை. எனவே, ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டது. ஓர் இடைக்கால அரசை அமைத்தது. அந்த அரசின் பெயரால் இன்றைக்கு வங்க தேசத்தை ராணுவம்தான் ஆட்சி செய்கிறது.

அரசியலைத் தூய்மைப் படுத்தி, அதில் ஜனநாயக படகுப் போக்குவரத்தை நடத்தப் போவதாக அறிவித்தது. வெளிநாட்டிலிருந்த ஷேக் ஹசீனா தாயகம் திரும்ப தடை விதித்தது. உலகம் கடும் கண்டனம் தெரிவித்தது. அதன் பின்னர் தாயகம் திரும்பிய ஹசீனா இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்டார். அவர் மீது சாட்டப்பட்ட எந்தக் குற்றச்சாட்டும் மெய்ப்பிக்கப்படவில்லை.

கலிதாஜியாவும் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் இதுவரை, கைது செய்யப்படவில்லை.

ஷேக் ஹசீனா கைது செய்யப்பட்டதை எதிர்த்து அமெரிக்கா, பிரிட்டன் உட்பட எண்ணற்ற நாடுகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. ‘‘அண்டை நாட்டில் நடைபெறும் இத்தகைய சம்பவங்களை இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது’’ என்று நமது வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி எச்சரித்தார். நியாயமான அவசியமான எச்சரிக்கைதான். ஏனெனில், அண்டை வீடு பற்றி எரியும் போது நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

இந்திய எதிர்ப்பு உணர்வுதான் பங்களாதேஷ் ராணுவத்தின் உயிர்மூச்சு. கலிதாஜியாவின் அரசியல் அடித்தளமே இந்திய விரோதச் செயல்பாடுகள்தான்.

ஊழல் ஒழிப்பு _ அரசியல் சீர்திருத்தம் என்ற பெயரால், தேசத்தின் புதல்வி ஷேக் ஹசீனாவை சிறையில் வைத்து விட்டு, அவாமி லீக்கையே அழிக்க பங்களாதேஷ் ராணுவம் முயல்கிறது. ஜனநாயக உரிமைகளையும் அரசியல் உரிமைகளையும் அழிக்கத் துடிக்கிறது. அதன் கல்லறை மீது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கிறது. இதனை இந்தியாவின் அனைத்து அரசியல் இயக்கங்களும் கண்டிக்கின்றன. பங்களாதேஷ் மக்களுக்கு ஆதரவாக இந்திய அரசு குரல் கொடுக்கிறது. அதனை வரவேற்கிறோம். பாராட்டுகிறோம்.

இன்றைக்கு பங்களாதேஷில் என்ன நிலையோ அதே நிலைதான் இலங்கையின் ஈழப் பரப்பில் நிலவுகிறது. பங்களாதேஷில் ராணுவ ஆட்சி, ஈழத்திலும் ராணுவ ஆட்சி. ஈழத்து மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கே அனுமதியில்லை.

பங்களாதேஷில் ராணுவம் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதைக் கண்டிக்கிறோம். ஆனால், ஈழத்தில் அதே கொடுமைகளை சிங்கள ராணுவம் செயல்படுத்துகிறது. அதனைக் கண்டிக்க மனம் வரவில்லையே, என்ன காரணம்?

ஈழப் போராளிகளை ஒழித்தால்தான் இலங்கையில் அமைதி திரும்பும் என்று, படை பட்டாளத்திற்கு நடுவே நின்று சிங்கள அதிபர் ராஜபட்சே பிரகடனம் செய்கிறார். அதற்காக ஈழத்தையே ராணுவ மயமாக்குகிறார்.

இன்னொரு பக்கம் ஈழப் போராளிகளுடன் பேச்சு நடத்தத் தயார் என்று வெளிநாடுகளின் முன்னே வேடம் போடுகிறார்.

எப்போது பேச்சு வார்த்தை என்றால், ‘ஈழத்தை விடுதலை செய்த பின்னர்’ என்கிறார்.

ஈழப் போராளிகளுடன் பேசுக என்று இந்தியா சற்று அழுத்தம் கொடுத்தாலே போதும். நரம்புத் தளர்ச்சியால் நடுங்கும் சிங்கள அரசு சிந்திக்கத் தொடங்கும்.

எனவே, பங்களாதேஷ் மக்களுக்குக் குரல் கொடுப்பது போல் ஈழ மக்களின் வாழ்வுரிமைக்காகவும் நாம் குரல் கொடுக்க வேண்டும்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர், Aug 09, 2007

Please Click here to login / register to post your comments.