கிழக்கு மாகாணத்தின் இன்றைய நிலையில் தமிழ் - முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்படவேண்டும்

ஆக்கம்: நிலா

கிழக்கு மாகாணத்தை இராணுவப் பலத்தின் மூலமாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பதன் மூலமாக அரசாங்கம் தனது படைபலம் உயர்ந்ததாக இருக்கின்றது என்று வெளிப்படுத்தி நிற்கின்றது. கிழக்கை அரசாங்கம் கைப்பற்றியுள்ள போதிலும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை முழுமையாக ஒழித்து விட்டதாக இப்போதைக்கு கூறமுடியாது.

கிழக்கை தொடர்ந்தும் அரசாங்கம் வைத்துக்கொள்ள வேண்டுமாயின் குறைந்தபட்சம் இன்னும் 30 ஆயிரம் படையினர் தேவைப்படுமென்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த எண்ணிக்கையை நிறைவு செய்து கொள்வதற்கான வேலைத் திட்டத்தை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து கிழக்கை அரசாங்கம் மீட்டெடுத்துள்ளதன் மூலமாக அங்குவாழும் மக்களின் சுபீட்சத்திற்கு வழி பிறந்துள்ளதாக பிரசாரம் மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறு தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, “கிழக்கின் உதயம்” எனும் திட்டத்தின் மூலமாக கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யவிருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது.

ஆனால், தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்கு மாகாணம் சிங்கள மொழி பேசும் மக்களினை பெரும்பான்மையாகக் கொண்ட மாகாணமாக மாறிப்போய்விடுமா என்று சிறுபான்மையினரும், அவர்களின் அரசியல் கட்சிகளும் சிந்தித்துக்கொண்டிருக்கின்றன.

ஏனெனில், தற்போது தமிழர் பெரும்பான்மையாக வாழ்ந்த மூதூர் கிழக்கில் சம்பூர், சேனையூர், கட்டைப்பறிச்சான், சீனன் வெளி ஆகிய இடங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

சேருவில பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட சீனன் வெளியில் பெரியதோர் புத்தர் சிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் குஞ்சாமாப்பா மலையின் உச்சியில் இருந்த சிறியதோர் இந்துக்கோயிலை உடைத்துவிட்டு, அந்த இடத்தில் பெரிய அளவிலான பௌத்த விகாரையொன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றார்கள்.

    கிழக்கை அரசாங்கம் கைப்பற்றியுள்ள போதிலும், அங்கு தேர்தல் நடத்தக் கூடிய சூழ்நிலை இருக்கின்றதா என்று ஆராய வேண்டியுள்ளது. தேர்தல் நடத்துவதற்கு முன்பாக யுத்தம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டு அகதிமுகாம்களில் தங்கியுள்ள மக்களின் நிரந்தரக் குடியிருப்புக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நிரந்தரக் குடியிருப்புக்களை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆமை வேகத்திலேயே இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன

அப்பிரதேசத்தில் வாழ்ந்தவர்கள் அரசாங்கம் “அதியுயர் பாதுகாப்பு” வலயமாக பிரகடனப்படுத்திய பகுதிகளில் விகாரைகள் அமைக்கப்பட்டு வருவதன் பின்னணியில் வேறு திட்டங்கள் இருக்கக்கூடுமென்று கருதுகின்றார்கள்.

திருமலை மாவட்டத்தில் தமிழர்களின் பிரதேசங்களில் இவ்வாறு நடைபெறுகின்ற அதேவேளையில், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களுக்குரிய காணிகளில் சிங்களவர்கள் அத்துமீறிக் குடியேறுவதாகவும், சிலைகளைப் புதைத்துவிட்டு புனித பூமி என்று பறிமுதல் செய்யவும் பகிரங்கமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இதனைக் கருத்தில் கொள்ளாது சிறுபான்மையினத்தை சேர்ந்த சில அரசியல்வாதிகள் தனிப்பட்ட அரசியல் இலாபம் கருதி பேரினவாதத்தின் செல்லப்பிள்ளைகளாய் இருப்பதற்கு ஆசைப்படுகின்றார்கள்.

கிழக்கின் மீட்பு மக்களுக்கு கிடைத்த பாரியதொரு பரிசாக பறை சாற்றுகின்றார்கள். மண்ணும், கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய ஆதிக்கமும் பறிபோகக் கூடியதொரு தோற்றப்பாடு இப்போதே நிதர்சனமாகிக் கொண்டிருக்கின்ற நிலையில் கவலைகள் எதுவும் கொள்ளாது பிரசாரப்பணியில் ஈடுபட்டுள்ளார்கள். சமூகத்தின் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையற்றவர்களாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

கிழக்கு மாகாணத்தின் இந்த போக்கில் தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்படல் வேண்டும். அண்மையில் ஏறாவூர் றகுமானியாபுரம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக்கலந்து கொண்ட உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் அங்கு உரையாற்றும் போது தெரிவித்த கருத்து சிந்தனைக்குரியது.

தமிழ் முஸ்லிம் மக்கள் தமக்கிடையிலான கடந்தகால கசப்புணர்வுகளை மறந்து பரஸ்பரம் மன்னிக்கும் மனப்பான்மையுடன் செயற்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. திருமலை, அம்பாறை மாவட்டங்களில் கடந்த காலங்களில் திட்டமிட்ட அடிப்படையில் குடியேற்றங்களை மேற்கொண்டதனைப் போன்று தற்போது மட்டக்களப்பு மாவட்டமும் குடியேற்ற ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. இராணுவ உத்திகளால் மட்டும் கிழக்கு மாகாணத்தைக் காப்பாற்ற முடியாது. இலக்குகளை அடைவதற்கான உசாத்துணையாகவே ஆயுதங்களைப் பயன்படுத்த முடியும்.

இதனைக்கருத்தில் கொண்டு எதிர்கால நடவடிக்கைகளை திட்டமிடல் வேண்டும்.

“வடக்கு கிழக்கு மாகாணம் என்பது தமிழ், முஸ்லிம் ஆகிய இரண்டு சமூகங்களினதும் தேசிய தாயகம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இரண்டு அரசியல் சக்திகளும் செயற்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

இதேவேளை, கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது, கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யவும், கிழக்கு மாகாண சபைக்கு மக்கள் பிரதிநிதிகளை கொண்டு வரவும் அரசாங்கம் அவசரப்படுவதன் பின்னணியானது வெளிநாடுகளிலிருந்தும் நிதி உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே.

கிழக்கை அரசாங்கம் கைப்பற்றியுள்ள போதிலும், அங்கு தேர்தல் நடத்தக்கூடிய சூழ்நிலை இருக்கின்றதா என்று ஆராய வேண்டியுள்ளது. தேர்தல் நடத்துவதற்கு முன்பாக யுத்தம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டு அகதிமுகாம்களில் தங்கியுள்ள மக்களின் நிரந்தரக் குடியிருப்புக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நிரந்தரக் குடியிருப்புக்களை ஏற்படுத்து வதற்கான நடவடிக்கைகள் ஆமை வேகத்திலேயே இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

மேலும், கிழக்கில் பல இடங்களில், மனிதப்படுகொலைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனை யார் செய்கின்றார்கள் என்று அடையாளம் காணப்படவில்லை. தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர் ஆயுதங்களுடன் நடமாடும் குழுவினரிடமிருந்து ஆயுதங்கள் களையப்பட வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு பாதுகாப்பை ஓரளவிற்கு உறுதிப்படுத்த முடியும். மக்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.

குறிப்பிட்டதொரு நிலப்பிரதேசம் யாரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்பது சாதாரண மக்களுக்கு பெரிய விடயமல்ல. அவர்களைப் பொறுத்தமட்டில் பாதுகாப்பும், நிம்மதியான வாழ்க்கையுமே அவசியமாகும். இந்த நிலைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதனை ஏற்படுத்துமாறு அரசாங்கத்தை கிழக்கு மாகாணத்திலுள்ள அமைச்சர்கள் வலியுறுத்த வேண்டும். பாதுகாப்பை உறுதிப்படுத்தாத நிலையில் கிழக்கில் தேர்தல் என்பது ஆபத்தாகவே இருக்கும். கிழக்கு மாகாண சபைக்காக அரசாங்கம் தேர்தலை நடத்துமாயின் அங்கு இரத்தக் களரி ஏற்படும் என்று விடுதலைப் புலிகளின் பேச்சாளர் இளந்திரையன் எச்சரிக்கை விடுத்திருப்பதனை சாதாரண விடயமாக கருத முடியாது.

இப்படியாக கிழக்கின் நிலைமைகள் இருக்கின்ற சூழ்நிலையில் பொருட்களின் விலைகள் நாளாந்தம் உயர்ந்து கொண்டே செல்லுகின்றன. குழந்தைகளுக்கான பால் மாவின் விலையின் அதிகரிப்பால் பெற்றோர்கள் மிகுந்த கவலைக்குள்ளாகி வருகின்றார்கள். விலை ஏற்றம் சாதாரண வருமானத்தையும், நிரந்தர வருமானத்தையும் பெறுகின்றவர்களின் நாளாந்த வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது. காலையில் தூக்கத்திலிருந்து எழும் ஒவ்வொருவரும் இன்று எந்தப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டிருக்குமோ என்ற வினாவுடனேயே ஒவ்வொரு நாளிலும் விழிக்கின்றனர். அரசாங்கத்தின் விலையேற்றத்தை பயன்படுத்தி வியாபாரிகள் பதுக்கல், கொள்ளை இலாபம் ஈட்டுதல் என்பனவற்றில் ஈடுபடுகின்றார்கள். கிழக்கு மாகாணத்தின் அநேகமான இடங்களில் வியாபார நிலையங்களில் விலைப்பட்டியல்களோ கட்டுப்பாட்டு விலைகளோ அமுலில் இல்லை. இவைகளை சரி செய்ய வேண்டும். இதற்காக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

கிழக்கின் இன்றைய சூழ்நிலையில் திருமலை, மாவட்டத்தில் மூதூரில் 10 ஆயிரத் திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 2500 மேற்பட்டவர்கள் மீனவக் குடும்பங்களாவர். இவர்ளுக்கு இயந்திரப்படகு மூலமாக மீன்பிடிப்பதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. சாதாரண தோணிகள் மூலமாக சுமார் 02 கிலோமீற்றர் வரையில் மீன்பிடிப்பதற்கு மாத்திரம் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுவும் காலை 7 மணி முதல் மாலை 5 மணியுடன் முடிவடைய வேண்டும். இதனால் மீனவக் குடும்பங்கள் போதிய வருமானமின்றி கஷ்டப்படுகின்றன. இன்றைய விலையேற்றத்தில் வருமானம் சௌபாக்கியத்திற்கான வழிகளை திறந்து விடும்.

அரசாங்கத்தினால் அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சம்பூர் பகுதியில் வசித்துவந்த மக்களை இறால்குழி எனும் இடத்தில் குடியேற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக மூதூர் பிரதேச செயலகத்திற்கு காணிச் சீர்திருத்த ஆணைக்குழு இறால் குழியில் 105 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளதாகவும், இக்காணியை செப்பனிடும் வேலைகள் நடைபெற்று வருவதாவும் மூதூர் பிரதேச செயலாளர் எம்.சீ.எம். ஷெரிப் தெரிவித்திருக்கின்றார்.

எனவே, அரசாங்கம் கிழக்கில் இயல்பு வாழ்க்கைகளையும், பாதுகாப்பையும், உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவற்றில் பூரண திருப்தி என்ற உறுதி செய்ததன் பின்னரே தேர்தலைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

Please Click here to login / register to post your comments.