கிழக்கு மக்களின் அவலநிலை !

திருமலையில் எமக்கு மட்டும் ஏன் தடை?

கடந்த வருடம்வரை மூதூர் பிரதேசத்திலிருந்து நான் கைந்து லொறிகள் கொழும்புக்கு மீன் ஏற்றிச்செல்லும். இப்போது மூதூர் மக்களுக்குக்கூட பிற இடங்களிலிருந்து தான் மீனை கொண்டுவர வேண்டியுள்ளது என்று அங்கலாய்க்கிறார்கள் மூதூர் மீனவர்கள்.

சுனாமி அனர்த்தத்தில் அனைத்தையும் இழந்த மூதூர் மீனவர்கள், தொண்டு நிறுவனங்கள் வழங்கிய நிவாரண உதவிகளுடன் தான் தொழிலுக்குத் திரும்ப முடிந்தது.

ஆனால் யுத்தத்தின் அகோரம் இவர்களை மோசமாகத் தாக்கியிருக்கிறது.

கடந்த வருட ஆகஸ்ட் மாதத்தின்பின் பாதுகாப்பு காரணங்களைக்காட்டி படையினர் விதித்துள்ள கட்டுப்பாடுகளால் ஏராளமான மீனவர்கள் நிர்க்கதியாகவுள்ளனர் என்கிறார் மூதூர் மேற்கு பிரதேச மீனவர் சங்கத்தின் செயலாளர் அஹ்ஸர்.

மூதூர் மீனவர் நிலைகுறித்து அவர் மேலும் கூறுகையில், “மூதூரில் 25 மீனவர் சங்கங்கள் உள்ளன. இவற்றில் 18 சங்கங்கள் முஸ்லிம் பிரதேசமீனவர் சங்கங்கள். 7 சங்கங்கள் தமிழ் பிரதேசத்திற்குரியவை. தக்வா நகர் வட்டம், கபீர் நகர் ஆகிய பிரதேச மீனவ சங்கங்களை நாம் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம்.

இப்பகுதியில் 10,720 குடும்பங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 2,750 குடும்பங்கள் மீனவ குடும்பங்களாகும். 250 இயந்திரப் படகுகள், 550 தோணிகள் முதலியன இப்பகுதியில் உள்ளன. ஆனால் இப்போது மூதூர் பிரதேசத்தில் இயந்திரப் படகுகளில் மீன்பிடிக்க அனுமதியில்லை. தோணிகளுக்கு மட்டும்தான் அனுமதி வழங்கப்படுகிறது. அதுவும் 2 கிலோமீற்றர் தூரம் வரைதான் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

தோணிகளில் சென்று மீன்பிடிக்கவும், காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மீன்பிடிக்க அனுமதி வழங்கினார்கள். கடற்படை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியபின் அண்மைக்காலமாக அதிகாலை 4 மணியிலிருந்து 5 மணிவரை அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் இது போதுமானதல்ல.

இரவு நேரத்தில்தான் கடலில் அதிக மீன்பிடிக்க முடியும்.

திருகோணமலை கடற்படை அதிகாரிகளுடன் நாம் பேச்சு நடத்தியபோது 3 முக்கிய விடயங்களை சுட்டிக்காட்டினோம்.

    1) 250 இயந்திரப் படகுகளுக்கும் கடலில் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரினோம்.

    2) படகுகளும் தோணிகளும் இரவிலும் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டுமெனக் கோரினோம்.

    3) திருகோணமலையின் ஏனைய பகுதிகளிலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்படகுகள் கடலுக்குச் சென்றுவர அனுமதிக்கப்படும் போது மூதூரிலிருந்து மாத்திரம் சென்றுவர ஏன் அனுமதிக்க முடியாதது எனக் கேள்வி எழுப்பினோம்.

ஆனால் இவற்றுக்கு கொழும்பிலிருந்தே அனுமதி கிடைக்க வேண்டும் என திருமலை கடற்படை அதிகாரிகள் பதிலளித்தனர். திருகோணமலையிலிருந்து ஆழ்கடலுக்குச் செல்லும் படகுகள் மூதூர் கடற்பரப்பிற் கூடாகவே செல்கின்றன.

இவ்வாறிருக்கையில் அதே கடற்பரப்பிற்கூடாக மூதூர் கடற்கரையிலிருந்து மாத்திரம் ஏன் படகுகள் செல்ல முடியாது என்பதுதான் எமக்குப் புரியவில்லை. மற்றொரு விடயம் என்னவென்றால் தோப்பூர் பகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்தபோது நாம் சம்பூர் கடற்பரப்பிலும் மீன்பிடித்தோம். இயந்திரப் படகுகளிலும் மீன்பிடித்தோம். இரவிலும் மீன்பிடித்தோம்.

கடந்த வருடம் அப்பகுதியை அரச படையினர் கைப்பற்றினர். அதன் பின்னர்தான் இத்தகைய தடை அமுல்படுத்தப்படுகிறது. புலிகள் அங்கிருந்த போது மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்ட எமக்கு அப்பகுதியை படையினர் கைப்பற்றியபின் மீன்பிடிக்க முடியாமலிருப்பது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது.

சுனாமிக்கு முன்னர் இப்பகுதியில் தினமும் சுமார் 5 லட்ச ரூபா பெறுமதியான மீன்கள் பிடிக்கப்பட்டன. இப்போது சில ஆயிரம் ரூபா பெறுமதியான மீன்களே பிடிக்கப்படுகின்றன. படகுகளில் சென்று மீன்பிடிக்க அனுமதியில்லாததால் ஏராளமானோர் தொழிலை இழந்துள்ளனர். இப்பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கும் நடவடிக்கைகளும் பூர்த்தியடையவில்லை” என்றார்.


“சம்பூருக்கு அழைத்துச் செல்வதாகக்கூறி கிளிவெட்டியில் எம்மை இறக்கினார்கள்”

சம்பூர் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த சுமார் 800 குடும்பங்கள் மூதூர் கிளிவெட்டியிலுள்ள இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முற்றுமுழுதாக தகரத்தால் அமைக்கப்பட்ட கொட்டகைகளில் இவர்கள் தங்கியுள்ளனர்.

தாம் இடம்பெயர்ந்து மட்டக்களப்பில் தங்கியிருந்தபோது சொந்த ஊருக்கு அழைத்துச்செல்வதாகக் கூறி அழைத்து வரப்பட்டு கிளிவெட்டியில் தங்க வைக்கப்பட்டதாகவும் இம்மக்களில் சிலர் குற்றஞ் சுமத்துகின்றனர்.

“மட்டக்களப்பில் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் தங்கியிருந்தோம். ஒருநாள் எமது சொந்த இடங்களுக்கு பஸ்களில் அழைத்துச் செல்லப் போவதாகக் கூறினர். சுமார் 40 பஸ்கள் வந்திருந்தன. எமக்கு அப்போது சந்தேகம் ஏற்பட்டது.

ஆனால் படையினர் “உங்கள் ஊருக்குத்தான் பஸ் போகிறது. பஸ்களில் போர்ட் போடப்பட்டிருக்கிறது. சந்தேகமென்றால் பாருங்கள்” எனக் கூறினர்.

பஸ்லில் சம்பூர் என்று பெயர்ப் பலகை போடப்பட்டிருந்தது. அப்போதும் ஏற மறுத்தவர்களை மிரட்டி ஏற்றினர். இறுதியில் இங்கு கொண்டுவந்து இறக்கி விட்டு வேறெங்கும் போகக்கூடாது என எச்சரித்தனர்” என்கிறார் முகாமில் தங்கியுள்ள பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர்.

“இந்த முகாமில் ஒருவருக்கு வாராந்தம் 1400 கிராம் அரிசி, 140 கிராம் சீனி போன்ற ஒருசில பொருட்கள் வழங்கப் படுகின்றன. சமையலுக்குத் தேவையான பல பொருட்களை நாம்தான் தேடிக்கொள்ள வேண்டும்.

எம்மால் மண்ணெண்ணெய் வாங்க முடியாது. சமையலுக்கு விறகு தேடுவதும் கடினம். இவ்வளவு நாள் பச்சை மரங்களை வெட்டிக்காயவைத்து பயன்படுத்தினோம். இப்போது அவையும் முடிந்து விட்டன.

இங்குள்ளவர்களுக்கு தொழில் இல்லாததால் எவ்வித வருமானமும் இல்லை. பிள்ளைகளுக்கு போதிய சத்துணவும் வழங்க முடியவில்லை.

வெயிலில் தகரக்கொட்டகைளுக்குள் இருப்பது மிகவும் கடினம். மழை பெய்தால் ஒழுகுகிறது.

தண்ணீர் தட்டுப்பாடு அதிகம்.

குளிப்பதற்கு தண்ணீர் இல்லை. தூர இடங்களுக்குச் சென்றுதான் குளிக்க வேண்டும். அப்படி சென்று யாரிடமும் பிடிபட்டால் நாம் பொறுப்பல்ல என பாதுகாப்பு அதி காரிகள் கூறுகின்றனர்.

இங்கு தங்கியிருக்க எமக்கு அச்சமாகவுள்ளது. எம்மை எமது சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு” என இம்மக்கள் கூறுகின்றனர்.

Please Click here to login / register to post your comments.