தமிழ்ச் சிறார்களை இனப் படுகொலையில் இருந்து காப்பாற்றுங்கள்

ஆக்கம்: தமிழர் பேரவை சுவிஸ்
பேர்ண், 14 ஆகஸ்ட் 2007

Ms. Ann M. Veneman ஆன் எம். வெனமான், நிறைவேற்றுப் பணிப்பாளர், யுனிசெப் நியு யோர்க் U.S.A.

அம்மணி,

தமிழ்ச் சிறார்களை இனப் படுகொலையில் இருந்து காப்பாற்றுங்கள்

வட இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள செஞ்சோலை அநாதை விடுதியில் தங்கியிருந்து முதலுதவிப் பயிற்சி பெற்ற பாடசாலைச் சிறுமியர் மீது சிறி லங்கா விமானப்படை நடாத்திய குண்டுத் தாக்குதல் நடைபெற்று ஒரு வருடம் பூர்த்தியாகி விட்டது. இத்தாக்குதலில் 61 மாணவியர் அதே இடத்திலும் நால்வர் பின்னரும் மரணமடைந்ததுடன் 120 க்கும் மேற்பட்டோர் காயமும் அடைந்தனர். சிறி லங்கா இச்சம்பவத்தை இட்டு வருந்தாததுடன் மட்டுமன்றி மாறாக தாக்கதலுக்கு உரிமை கோரியதுடன் கிபீர் விமானங்களின் விமானிகள் இலக்குகள் மீது துல்லியமாகத் தாக்குதல் நடாத்தியிருந்ததாகவும் பெருமையுடன் அறிவித்திருந்தது. அத்துடன் தாக்குதல் நடாத்தப்பட்ட இடம் தொடர்பாக விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டடிருந்ததுடன், அது விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாம் எனவும் தெரிவித்திருந்தது.

இருப்பினும், சம்பவ இடத்துக்கு நேரில் விஜயம் செய்த போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு மற்றும் யுனிசெப் அதிகாரிகள் சிறி லங்கா அரசின் கூற்றை நிராகரித்ததுடன் செஞ்சோலை வளாகத்திலோ அன்றி அயலிலோ இராணுவ இலக்குகள் எதுவும் இல்லை எனத் திட்டவட்டமாக மறுத்திருந்தனர். உண்மையில், யுனிசெப் நிறுவனம் கடந்த காலங்களில் இந்த வளாகத்தில் பல்வேறு பயிற்சிப் பட்டறைகளை நடாத்தியிருந்தமை குறிப்படத்தக்கது. இந்தத் துயரச் சம்பவத்தை அடுத்து யுனிசெப் ‘சிறிலங்கா மோதலில் பாதிப்புக்கு இலக்காகும் சிறார்கள்’ எனும் தலைப்பில் விடுத்திருந்த அறிக்கை பின்வருமாறு கூறுகிறது:

“இந்தச் சிறார்கள் வன்முறைக்குப் பலியான அப்பாவிகள். பிள்ளைகளின் வசிப்பிடங்கள், பாடசாலைகள் மற்றும் விளையாட்டிடங்கள் எனபவற்றைச் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களின் அடிப்படையில் பாதுகாக்குமாறு சகல தரப்பினரையும் நாம் கேட்டுக் கொள்கிறோம்.”

“ நாட்டின் வடக்கே உள்ள வளாகத்தில் குண்டு வீசப்பட்டுள்ளதில் 40 பாடசாலைச் சிறுமிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலரின் நிலை மோசமாக உள்ளது. அண்மையில் உள்ள முல்லைத்தீவு மற்றம் கிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகளில் பயிலும் மாணவியர் இங்கு தங்கியிருந்து 2 நாள் முதலுதவிப் பயிற்சி நெறியில் கலந்து கொண்டிருந்தார்கள்.”

யுனிசெப் மட்டுமன்றி வேறுபல சர்வதேச மனிதாபிமான நிறுவனங்களும் சிறி லங்காவின் அரச பயங்கரவாதத்தைக் கண்டித்திருந்தன. இருப்பினும், அட்டூழியங்களும் இன அழிப்பு நடவடிக்கைகளும் தடையின்றித் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

உலகைப் பொறுத்தவரை சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னணியில் நிற்பது யுனிசெப் நிறுவனமே. அதனுடைய மகுட வாசகம் கூட ‘ஒவ்வொரு குழந்தைக்கும் சுகாதாரம், கல்வி, சமத்துவம், பாதுகாப்பு” என்பதே.

சுவிசில் உள்ள 27 தமிழ் புலம்பெயர் அமைப்புக்களின் கூட்டு நிறுவனமான சுவிஸ் தமிழர் பேரவை பின்வரும் வினாக்களை யுனிசெப் முன்பாகவும் சர்வதேச சமூகத்தின் முன்பாகவும் முன்வைக்கின்றது.

 • செஞ்சோலைத் துயரம் நடைபெற்று ஒரு வருடம் முடிந்து விட்டது. இவ்விடயத்தில் குற்றவாளி யாரென முழு உலகிற்குமே தெரியும். இந்நிலையில், குற்றவாளியான சிறி லங்கா அரசாங்கத்தைத் தண்டிக்க யுனிசெப் நிறுவனமோ சர்வதேச சமூகமோ இதுவரை எத்தகைய நடவடிக்கைகைளை எடுத்துள்ளன என அறிய விரும்புகின்றோம்.

 • சிறி லங்கா தொடர்பில் யுனிசெப் விடுத்த அறிக்கையில், சிறார்கள் மோதலில் அதிகம் பாதிப்புக்குள்ளாவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது- சிறி லங்கா அரசினாலும் ஒட்டுக் குழுக்கள் அடங்கலாக அதன் ஆயுதப் படைகளாலும் சிறார்களின் உரிமைகள் கடந்த காலங்களில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டதுடன் நிகழ் காலத்திலும் பாதிக்கப்பட்டும் வருகின்றன. இந்நிலையில், இத்தகைய நிலையைத் தடுக்க எவ்வகையான நடவடிக்கைகைள் எடுக்கப்பட்;டுள்ளன என்பதை அறிய ஆவலாய் உள்ளோம்.

 • யுனிசெப் ஒவ்வொரு குழந்தைக்கும் சுகாதாரம், கல்வி, சமத்துவம், பாதுகாப்பு என்பவற்றுக்காகப் பாடுபடுகின்றது. சர்வதேசப் புகழ் பெற்ற இந்நிறுவனத்தின் இலக்கு வெறும் வார்த்தைகளில் அல்லாது செயலில் இருக்குமாயின் சிறி லங்காவின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் இருந்து தமிழ்ச் சிறார்களைப் பாதுகாக்க இதுவரை எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை அறிய விரும்புகின்றோம்.

 • இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத்தினாலும், ஒட்டுக் குழுக்கள் உட்பட ஆயுதப் படைகளாலும் நிகழ்த்தப்படும் மோசமான மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்கவென ஐ.நா. சபையின் நிரந்தரப் பிரதிநிதி ஒருவரை அனுப்பி வைக்குமாறு சர்வதேச மனிதாபிமான நிறுவனங்கள் பல கோரி வருகின்றன. கள நிலவரத்தை நன்கு அறிந்ததும், கடந்க காலங்களில் தமிழ்ச் சிறார்களை சிறி லங்கா அரசு மோசமாக நடாத்துவது தொடர்பில் பல்வேறு கண்டன அறிக்கைகளை விடுத்திருந்ததுமான யுனிசெப் நிறுவனத்தின் நிலைப்பாடு இது தொடர்பில் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகின்றோம்.

  உண்மையில் வேறும் பல கேள்விகள் எம்மிடையே உள்ளன. இருந்த போதிலும், நாங்கள் ஒன்றை மட்டும் வலியுறுத்த விரும்புகின்றோம். அதாவது, சிறி லங்கா அரசிடமிருந்து தமிழ்ச் சிறார்களை உண்மையிலேயே பாதுகாக்க யுனிசெப் நினைத்தால், அது ஏனைய சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களுடனும் ஜனநாயக நாடுகளுடனும் கைகோர்த்து தீர்மானகரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வெற்று வார்த்தைகள் பிரச்சiனைகளைத் தீர்ப்பதில்லை. காத்திரமான நடவடிக்கைகைளால் மாத்திரமே அதனைச் செய்ய முடியும்.

  இலங்கைத் தீவிலும் ஏனைய நாடுகளிலும் வாழும் சமாதானத்தை நேசிக்கும் தமிழ் மக்கள் சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களுக்கும் ஜனநாயக நாடுகளுக்கும் தமது பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வைக் காணும் நோக்குடனேயே விண்ணப்பங்களைத் தொடர்ச்சியாகச் சமர்ப்பித்து வருகிறார்கள். அனைத்துத் தமிழ் மக்களும் தீவிரவாதத்தை நாடுவதா இல்லையா என்பது சர்வதேச சமூகத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது.

  படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவியரை மிகவும் கவலையுடன் மீண்டும் ஒருமுறை நினைத்துக் கொண்டு சரியான திசையில் பொருத்தமாக நடவடிக்கைளை; எடுக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் மடலை நிறைவு செய்கிறோம்.

  நன்றி.

  தம்பிப்பிள்ளை நமசிவாயம்

  Ref:Nr/CH/MV/UN140807

  Tamil Forum Switzerland is a confederation of twenty seven Tamil Organizations in Switzerland
  Laupenstrasse 37, Postfach 6707, 3001 Bern,
  Switzerland
  Phone: +41-313821905,
  Fax: +41-313821903,
  www.forumtamil.org,
  Email: office@forumtamil.org

  Please Click here to login / register to post your comments.