யாழ்.பத்திரிகை மேல் ஜே.ஆர்.படையெடுப்பு

ஆக்கம்: நம்முள் கவீரன்
வடகிழக்கு தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சினைகளை தமிழ்ப் பிரதேசங்களின் அவல நிலையினை, அல்லல்களை, அச்சங்களைப் பிரதிபலிக்கும் பத்திரிகைகள் ஆங்கிலத்தில் அல்லது சிங்களத்தில் வெளிவராததால்த்தான் பெரும்பான்மைச் சிங்களவர் மத்தியில் தமிழர்கள் பற்றி அரசாங்கங்கள் கூறும் அப்பட்டமான பொய்கள் கூட உண்மையென நம்பப்படுகின்றன. ஒரு முறை மல்லாகம் நீதிமன்றத்தில் பிரபாகரனுக்கு எதிராக இருந்த வழக்கேடு ஒன்று காணாமல் போய்விட்டதாகச் சட்டத்துறைத் தலைமையதிபதி திணைக்கள அரச சட்டத்தரணியால் பத்திரிகைக்குச் செய்தி கொடுக்கப்பட்டு சிங்கள, ஆங்கில நாளிதழ்களில் வடமாகாண நீதிபதிகளும் பிரபாகரனுக்கு உடந்தை என்ற தொனியில் அவை பிரசுரிக்கப்பட்டிருந்தன. உடனே உண்மையை அறிய விசாரணைகள் மாவட்ட நீதிபதியால் முடுக்கிவிடப்பட்டபோது அதே அரச சட்டத்தரணியினால் அவ் வழக்கேடு சில வருடங்களுக்கு முன் அவரின் திணைக்களத்திற்கு வருவிக்கப்பட்டு அப்பொழுதுவரை அது திருப்பி அனுப்பப்படவில்லை என்பது தெரியவந்தது. போதிய விசாரணைகள் இல்லாமல் அலசி ஆராயாமல் இப்பேர்ப்பட்ட செய்திகளைப் பத்திரிகைகளில் வெளியிடுவது எவ்வளவு பாரதூரமான குற்றம் என்பதை நீதிபதி அப்போதைய சட்டத்துறைத் தலைமையதிபதி மாரப்பனவுக்குத் தெரியப்படுத்திய பொழுது அது ஒரு தவறு அதைப் பெரிதுபடுத்த முடியாது என்று கூறி மழுப்பிவிட்டார்.

இவ்வாறு தான் தமிழ் மக்கள் மீதும் தமிழ் அலுவலர்கள் மீதும் தான்தோன்றித்தனமாய் பழிசுமத்திவிட்டு அவற்றைப் பிரபல்யப்படுத்திவிட்டு வாளாதிருப்பது ஒரு கலையாக பெரும்பான்மை மக்கள் சிலரிடையே பரிணமித்திருக்கிறது. பயங்கரவாதி முத்திரையை தமிழ் மக்களிடையே எங்கும் எவர் மீதுஞ் சுமத்தக்கூடிய ஒரு நிலையை இப்படியான பெரும்பான்மை மக்களும் அவர்களின் எடுபிடிகளும் ஏற்படுத்தி வந்துள்ளார்கள். இதனால், பொய்கள் உண்மைபோல் தெரிகின்றன. உண்மைகள் பொய்கள் ஆக்கப்படுகின்றன. நிரபராதி குற்றவாளியாகக் காணப்படுகின்றான். குற்றவாளிகள் குறையற்றவர்கள் ஆக்கப்படுகின்றனர். இவற்றையெல்லாம் அப்பாவிப் பொதுச் சிங்கள மக்கள் உண்மையென்று உள் வாங்குகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் உண்மையை எழுத விளையும் பத்திரிகைகள் பயங்கரவாதப் பக்கச் சார்பானவர்கள் என்று பச்சை குத்தப்படுகின்றார்கள். பொறுப்புவாய்ந்த சர்வதேச அலுவலர்கள் கூட இப்பேர்ப்பட்ட மாசுபடுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றார்கள். அதுவும் ஒரு தமிழ்ப் பேசும் மந்திரி இப்படியான ஒரு காரியத்தில் அண்மையில் இறங்கியது விந்தையாக இருக்கின்றது. வேறு நபர்கள் அதே மந்திரியைப் பயங்கரவாதி என்று முத்திரை குத்த இன்னும் எவ்வளவு காலம் ஆகுமோ தெரியாது.

ஜே.ஆர். காலத்தில் உண்மையைக் கூற விளைந்த, யாழ். மண்ணில் வெளியிடப்பட்ட ஆங்கிலப் பத்திரிகையொன்று அன்று அவரால் மூடப்பட்டது. சனிக்கிழமை மறு ஆய்வு அல்லது Saturday Review என்ற ஆங்கில வாரப் பத்திரிகையை நடத்தி வந்தவர் எஸ்.சிவநாயகம் அவர்கள். அது வெளியான சுமார் ஒன்றரை வருடங்களில் உள்நாட்டு,வெளிநாட்டுத் தமிழர்கள் பலரால் பெரிதும் உவந்து வாசிக்கப்பட்டு வந்தது. ஜே.ஆர். அரசாங்கத்தின் அடாவடித்தனம், அச்சுறுத்தல்கள், ஆர்ப்பாட்டங்கள், அநியாயமான செய்கைகள் யாவும் அப்பத்திரிகையால் விமர்சிக்கப்பட்டன. இதனால், பத்திரிகைக் காரியாலயம் சீல் வைக்கப்பட்டு பத்திரிகை தடைசெய்யப்பட்டது. எப்பொழுதுமே பத்திரிகைகளின் விமர்சனங்களை நேருக்கு நேராகச் சந்தித்து அவற்றில் தவறுகள் இருந்தால் அவை எடுத்துக் காட்டப்பட வேண்டும். அதைவிட்டு விட்டுப் பத்திரிகைகளைத் தடை செய்வது, பத்திரிகையாளர்களை மிரட்டுவது அல்லது கொலை செய்வது, பத்திரிகைக்கான பல விடயங்கள் கடதாசியையோ மையையோ கிடைக்காமல் பண்ணுவது எல்லாம் பத்திரிகைச் செய்திகளினால் பாதிக்கப்பட்டவர்களின் பதிலளிக்க முடியாத பரிதாபமான நிலையைத்தான் வெளிக்கொண்டு வருகின்றன. தாறுமாறான செயல்களில் ஈடுபடுவது, அதைச் சுட்டிக்காட்டினால் தரமற்ற செயல்களில் இறங்குவது. இது தான் ஜே.ஆரின் அரசியல் தர்மம். தர்மிஷ்ட அரசாங்கத்தின் அங்க அடையாளங்கள்.

1983 செப்ரெம்பர் மாதத்தில் பொலிஸ் தலைமையக நாலாம் மாடிக்கு வருமாறு சிவநாயகம் அவர்களுக்கு கட்டளை விடுக்கப்பட்டது. 54 வயது நிரம்பியிருந்த சிவநாயகம் அவர்களுக்குச் செல்வதா இல்லையா என்ற கேள்வி எழுந்தது. `நாங்கள் உங்களைப் பயங்கரவாதத் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கின்றோம். ஏன் என்றால் எங்கள் அரசாங்கத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே' என்ற ஜே.ஆர்.கோட்பாட்டைப் பொலிஸார் அவர் முன் வைத்தனர் என்றால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் எந்தவித விசாரணையுமின்றி சுமார் 18 மாதங்கள் `உள்ளே' இருக்க நேரிடும். எவ்வளவுதான் உண்மையை விரும்பி, மக்கள் நன்மையை விரும்பி சாத்வீக விதத்தில் பத்திரிகையாளன் ஒருவன் கருத்துக்களைத் தெரிவித்தாலும் அவனை அடிபிடியில் ஈடுபடுத்தி அல்லற்படுத்துவதே அன்றைய அரசின் குறிக்கோளாக இருந்தது. இன்றைய அரசாங்கங் கூட அமரர் ஜே.ஆரையே பின்பற்றப் பார்க்கின்றனர் என்று தெரிகின்றது. அந்த விதத்தில் அரசியலில் நடக்கக் கூடாததற்கு நடைமுறை எடுத்துக்காட்டாக விளங்கியவர் ஜே.ஆர்.

நடக்கப்போவதை நன்றாக உணர்ந்த சிவநாயகம் அவர்கள் தலைமறைவாகித் தனியாய் தாய்நாடாம் இந்தியா சென்றார். பின்னர் தமக்கு நடந்தவற்றையும் இலங்கையில் அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் பற்றியும் குறிப்பிட்டு சிவநாயகம் அவர்கள் `பத்திரிகையாளர் ஒருவரின் சுருக்க வாழ்க்கைக் குறிப்பு- இலங்கை-சரித்திரத்தின் சாட்சி' என்ற தமது ஆங்கில நூலினை பிரித்தானியாவில் 2005 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.

காலஞ்செல்லச் செல்ல ஜே.ஆரின் தமிழ் எதிர்ப்புச் சுபாவம் வெளிவரத் தொடங்கியது. அவரைப் போன்ற முதிர்ந்த ஒரு அரசியல் வாதி சகல அரசியல் அதிகாரங்களையுந் தன்வசம் வைத்திருந்த நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி பாராளுமன்றத்தில் 5/6 பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றிருந்த ஒரு கட்சியின் தலைவர் ஏன் ஏட்டிக்குப் போட்டியாகத் தமிழர்களையும் அவர்கள் சார்பில் வன்முறையில் இறங்கிய இளைஞர்களையும் ஒழித்துக்கட்ட விளைந்தாரோ தெரியவில்லை. அறிவு பூர்வமாகப் பார்த்தால் அவர் பெருந் தன்மையுடனும் மனிதாபிமானத்துடனும் நடந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு அவர் நடந்து கொள்ளவில்லை. முரட்டுத் துஷ்டராக மாறிவந்தார்.

வெளிநாட்டில் சென்று போருக்கான ஆயுதங்கள் கொள்வனவு செய்ய நடவடிக்கைகள் எடுத்தார். இந்தியா அனுப்பிய ஜி.பார்த்தசாரதி என்ற சிறப்புத் தூதுவரைத் தமிழர்களுக்குச் சார்பானவர் என்று திருப்பி அனுப்பினார். இன்றும் அதேநிலைதான். ஆனால், இந்தியர்கள் பற்றியல்ல. 1984 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்தபோது தமிழர்களுக்கு போதிய அளவு அதிகாரப் பரவல் அளிக்க வேண்டும் என்று இந்திராகாந்தி கேட்டுக்கொண்டதற்கு அவர் கொடுத்த பதில் அவராலேயே பத்திரிகைகளுக்கு கொடுக்கப்பட்டு பின்வருமாறு வெளியிடப்பட்டிருந்தது.

(`இந்தியப்) பிரதமருக்கு என் கருத்தைத் தெரிவித்து இது சம்பந்தமான அரசியல் தீர்வானது இலங்கையில் சம்பந்தப்பட்ட அந்நாட்டின் இரு தரப்பாரினாலும் எடுக்க வேண்டிய உள்நாட்டு விவகாரமே என்பதை அவருக்கெடுத்துரைத்தேன். அவரும் அதை ஏற்றுக்கொண்டார்'. இவ்வளவிற்குந் தமிழ்ப் பிரதேசங்கள் தமிழ்ப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து பாராளுமன்றம் அனுப்பியதில் தமிழர் ஒருவரே எதிர்க்கட்சித் தலைவரானார். எந்தத் தருணத்திலும் வடக்குக் கிழக்குத் தமிழ் வாக்காளர்கள் (ஓரிருவரை அவர்களின் சொந்தச் செல்வாக்கின் நிமித்தம் தேர்ந்தெடுத்ததைத் தவிர) பெரும்பான்மை இனத்தோர் பெருவாரியாக அடங்கிய கட்சிகளை தேர்ந்தெடுக்கவில்லை. வேண்டுமென்றே தேசியக் கட்சிகள் என்ற குறிப்பிடுவதை தவிர்த்துக்கொள்கின்றேன்.

அப்படியிருக்க வடக்கு கிழக்கு மக்களின் ஜனநாயக எதிர்பார்ப்புக்கு இடைஞ்சலாகவே ஜே.ஆர்.நடந்து கொண்டார். தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன்தான் அவர் பேச்சுக்கள் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அவர் பாராளுமன்றப் பிரதிநிதிகளை ஒதுக்கிவைத்து விட்டு பயங்கரவாத வேட்டையில் இறங்கினார். அவர் காலம் இன்னும் நீண்டுகொண்டே போகின்றது.

Please Click here to login / register to post your comments.