நெடுமாறன் என்னும் ஓர் அரசியல் சமிக்ஞை

ஆக்கம்: பீஷ்மர்
ராஜபக்‌ஷ அரசாங்கம் பற்றி ஐ.தே.க. கூறிவந்தமை எத்தனை ஆழமானவை என்பதை கடந்த வாரத்து தென் இலங்கை அரசியல் காட்டுகிறது.

ஊழலின் உச்ச எடுத்துக்காட்டுகளாக விமான கொள்வனவில் ஏற்பட்டிருந்த விடயங்களும் அதற்கும் மேலாக ஏறத்தாழ 50/60 கோடி மதிப்புள்ள அஸ்டன் மாட்டின் கார் ஒரு முக்கியஸ்தரின் முதல்வருக்கென வரவழைக்கப்பட்டிருப்பதும் சிங்கள மக்களே சிரித்துக் கொண்டு பேசும் விடயமாகிவிட்டது.

ஆனால், இதனூடே ஐரோப்பிய நாடுகள் மனித உரிமைகள் பிரச்சினைகள் காரணமாக நிதி உதவிகளை நிறுத்தும் நிலைக்கு வந்துவிட்டதைக் கண்டு படபடத்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளிநாட்டு அமைச்சர் எழுதியுள்ள கடிதம் அத்திவாரங்களே அசையத்தொடங்கிவிட்டன என்பதைக் காட்டுகிறது.

சிலாவத்துறை, முல்லைத்தீவுப் பகுதிகளில் படையினர் ஈட்டியுள்ள முன்னெடுப்புகள் என்று ஒரு பிரசார பெருமழை தொடங்கிவிட்டதென்றாலும் "அஸ்டன் மாட்டின்" கதைக்கிடையே அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரியவில்லை.

உண்மையில் தமிழர் பிரச்சினையைப் பொறுத்த வகையில் அரசாங்கத்தின் கை நன்கு ஓங்கியேயுள்ளது. கிழக்கு மாகாணம் மூன்று அலகுகளாக கொள்ளப்பட்டு அதற்குள்ளே கிழக்கின் எழுச்சி என்ற ஒரு நிகழ்ச்சித்திட்டமும் பேசப்படுகிறது என்றாலும் இவற்றின் பலாபலன்கள் சாதாரண மக்களை சென்றடையுமா என்பது பிரச்சினையாகவேயுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சாதாரண தமிழ் மக்களின் உண்மையான நிலைப்பாடு யாது என்பது பற்றிய கேள்விக்கே இடமில்லாமல் மத்திய தர வர்க்கத் தமிழர்களின் யாழ் - மட்டக்களப்பு விரோத உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கும் தன்மையும் காணப்படுகிறது. உண்மையில் கடந்த சில மாதங்களாக இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினையை புவியியல் நிலைப்படுத்தி, வடகிழக்கு பிரச்சினை என்று சொல்லும் தேவையே இப்பொழுது இல்லாது போய்விட்டது.

வடக்கிலோ, கிழக்கிலோ நடந்தது போன்ற அரசியல் ஒலிகளும் ஆராச்சி மணிச் சத்தங்களும் இல்லை. அங்கு மிக மிக மௌனமாகவே சில காரியங்கள் செய்யப்படுகின்றன. அதுவும் செம்மையாகவே செய்யப்படுகின்றன.

ஓமந்தைக்கு அப்பால் உள்ள பகுதிக்கு நிலவழியாக செல்லும் A- 9 பாதையை இராணுவத் தேவைகள் காரணமாக மூடியாயிற்று. இப்பொழுது யாழ்ப்பாணத்திற்கான உணவு வகைகள் கடல் மார்க்கமாகவே கொண்டு செல்லப்படுகின்றன. காரைநகர், காங்கேசன்துறை, பருத்தித்துறை ஆகிய இடங்களில் துறைமுகப்பகுதிகள் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் வருவதனால் கப்பல் மூலமாக கொண்டு செல்லப்படுவது பெரும் பிரச்சினையே அரசுக்கு இல்லை கொண்டு செல்கிறோம் என்று சொல்லிவிட்டால் மாத்திரமே போதும். சிங்கள மக்கள் மாத்திரம் அல்ல தமிழர்கள் பலரும் கூட (தத்தம் கட்சி நியாயங்களுக்காக) ஏற்றுக் கொள்ளத் தயார்.

உண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்தும் பெரிய குரல் எதுவும் கிளம்பியதாகத் தெரியவில்லை. ஆசிரியர் சங்கங்களோ, வைத்திய சங்கங்களோ, பிற தொழிற்சங்கங்களோ எதுவுமே அறிக்கை எதையுமே விட்டதாக தெரியவில்லை.

ஏறத்தாழ 25 வருடங்கள் காலமாக ஒன்றின்மேல் ஒன்றாக, ஒன்றுமாறி ஒன்றாக அசம்பாவிதங்களுக்கும் அமைதியினங்களுக்கும் பழக்கப்பட்டுப்போன யாழ் .சமூகம் கல்வி நடவடிக்கைகளைத் தவிர்ந்த மற்றைய விடயங்களில் அழக்கூட மறந்துவிட்ட ஒரு சமுதாயமாகவே இருக்கிறது.

இயற்கையில் " வெற்றிடம் என ஒன்றில்லை" என்பது உலகப் பொதுவிதி . யாழ்ப்பாண மக்களும் தங்கள் உணவுப் பிரச்சினைக்கு தங்களை தாக்கும் முறைமை பற்றி கூறுவதற்கே திராணி அற்றுப்போய்விட்டார்கள். வெளியே பயம், உள்ளுக்குள் குத்துவெட்டு, இயந்திரமயமான வாழ்க்கையே நிலவிற்று, நிலவுகிறது. இந்தப் பின்புலத்திலேதான் நெடுமாறன் என்ற தமிழகத்தின் அரசியல் பலம் பெரிதற்ற ஒரு நிகழ்ச்சி இந்தோனேசிய மொழியால் கூறினால் ஒரு சிறு நில அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தவிடயம் பற்றி சிங்கள ஊடகங்கள் முன் கூட்டி எதனையும் பெரிதாக கூறவில்லை. ஒரு நமுட்டு சிரிப்போடுதான் இதைச் செய்தார்களோ என்று சொல்ல முடியாமல் உள்ளது. ஆனால் வந்தால்விடமாட்டோம் என்று கடற்படை அதிகாரிகள் கூறியதாக கொட்டை எழுத்தில் செய்திகள் வந்தன. நெடுமாறன் படகேறி யாழ்ப்பாணம் வரப்போவதில்லை என்பது நெடுமாறனுக்கே தெரியும். கன்னியாகுமரி மீனவர்கள் படகு கூட கொடுக்கவில்லையாம். இந்திய கடற்படை இவ்வாறு செய்யும் என்பது எல்லோருக்குமே தெரிந்த விடயம். ஆனால் திருப்பி அனுப்பப்பட்ட நெடுமாறன் கன்னியாகுமரி, நாகபட்டினம் கடற்கரையோரங்களில் செய்ய முடியாததை சென்னை கோயம்பேட்டிலிருந்து செய்யத்தொடங்கியுள்ளார்கள். இந்த உண்ணாவிரதம் கூட அதிகநாள் நீடிக்கப்போவதில்லை. ஆனால், தமிழ்நாட்டின் அடிநிலை மக்கள் உணர்வில் இலங்கை தமிழர்களின் அருந்தலுக்கான ஒரு உணர்வு உண்டு என்பது தெரிந்துவிட்டது.

முதலிலே கவனிக்காமல் இருந்த கலைஞர் இப்பொழுது உண்ணாவிரதத்தைவிடுமாறு கேட்டுள்ளார். ஜெயலலிதாவுடன் உறவு இருந்தாலும் வைகோ இந்த உணர்வு அனுதாபத்திலிருந்து தன்னைவிடுவித்துக் கொள்ள முடியவில்லை. ராமதாஸ், திருமாவளவன் ஆகிய எல்லோருமே சிரத்தை காட்டுகின்றனர். "இதுவெறும் அரசியல் யுக்தி விளையாட்டு" அல்ல. வியாழன் அன்று வெளிவந்த தினமணி ஆசிரியர் தலையங்கம் இந்த முழு விடயத்தையும் அதற்குரிய பின்புலத்தில் தமிழர் நிலைப்பட்ட ஒரு தர்மப் பிரச்சினையாக, அனைத்து இந்தியா நிலைப்பட்ட ஓர் அனுதாபப் பிரச்சினையாக பார்த்துள்ளது.

மன்னாரிலிருந்து தமிழக கடற்கரைக்கு செல்லும் அகதிகளின் கண்ணீர் வீண்போகவில்லை. ஆனால், இது ஏதோ கொடியேற்றத்துடன் தொடங்கி தேர், தீர்த்தத்துடன் முடியப் போகிற ஓர் மகோற்சவம் அல்ல. டில்லி, டில்லியுமல்ல டில்லியின் நிர்வாகப் பிரிவின் சவுத்பிளோக் (அந்த தென்பகுதிக் கட்டிடங்களிலேயே இந்தியாவின் வெளி விவகார அலுவல்கள் நடைபெறுகின்றன) சற்று உஷாராக இருக்க வேண்டிய தேவை வந்துவிட்டது போலவே தெரிகிறது.

கலைஞரின் சொற் சாதுரியத்தினால் தமிழரை மயக்கும் திறன் தொடர்ந்து இருக்கப்போவதில்லை. இது கலைஞருக்கே தெரியும்.

மீண்டும் மீண்டும் சொல்லவேண்டியுள்ளது. இது ஒரு சிறிய நில அதிர்ச்சிதான். இதனால் புதுடில்லியில் பெரிய மாற்றங்கள் ஏற்படப்போவதில்லை. தமிழகத்தில் ஓர் அனுதாப அலை வீசும். இப்பொழுது உண்மையான கேள்வி என்னவென்றால் இந்த அனுதாப அலையை இலங்கைத் தமிழர் எவ்வாறு பயன்படுத்தப் போகிறார்கள். ஒவ்வொருவரும் ரசித்து வாசித்து திருப்திப்படுவதற்கு மேலே ஒரு நிகழ்ச்சித் திட்டம் உண்டா அல்லது நிகழ்ச்சி திட்டம் பற்றி நாம் சிந்தித்தது உண்டா. தமிழகத்தின் இடதுசாரிக் கட்சிகள் கூட விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்றே கூறுகின்றன.

வரலாறு பற்றி ஒரு மிக பிரசித்தமான மேற்கோள் உண்டு. நாம் வரலாற்றிலிருந்து படித்துக் கொள்வது என்னவென்றால், நாம் வரலாற்றிலிருந்து எதையுமே படிப்பதில்லை என்பதுதான்.

இதனை வெறும் சொற் சாதுரியமாக கொண்டுவிடக் கூடாது. ஏனெனில் கடந்த வாரம் கொழும்பில் ஒரு மிக முக்கியமான நிகழ்ச்சி நடந்தேறியுள்ளது. ராஜபக்‌ஷ அரசாங்கத்திற்கு தன் எதிர்ப்பைக் காட்டும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா இந்தியா செல்லவுள்ளார் என்றும் அதற்கான ஒழுங்குகள் பற்றி பேசுவதற்கு இலங்கையில் உள்ள இந்திய தூதுவர் அவருடைய வீட்டுக்கு சென்று ஒரு மணிநேரம் உரையாடினார் என்று கூறப்படுகிறது. புதுடில்லியிலும் புதிய காற்றுக்கள் வீசத்தொடங்கியுள்ளனவா.

Please Click here to login / register to post your comments.