இரவல் புத்தியுடன் ஒத்துழைத்த தமிழ் புத்திஜீவிகள்

ஆக்கம்: த.மனோகரன்
கடந்து வந்த பாதையில் நிகழ்ந்த நிகழ்வுகளே வரலாறாக அமைகின்றன. வரலாற்றுச் சம்பவங்களை மீள நோக்குவது வரலாற்றுப் பாடமாக அமைகின்றது. நிகழ்ந்த நிறை குறைகளைச் சீர்தூக்கிப் பார்த்து விட்ட குறைகள், தவறுகள் எவையென ஆராய்ந்து எதிர்காலத்தில் அவ்வாறான நிகழ்வுகள் இடம் பெறாது செயற்படுவதற்கு வரலாறு படிப்பினையாக அமைகின்றது. சமுதாயத்தின் ஏற்ற இறக்கங்களுக்கு வரலாற்றுச் சம்பவங்களே ஏதுக்களாகின்றன.

இவ்வாறான நிலையில் 1970 முதல் 1977 வரையான காலகட்டத்தில் இலங்கைத்தமிழ்ச் சமுதாயத்தின் பின்னடைவுக்கு பாரம்பரிய இந்தியத் தொடர்புகளைத் தடுப்பதற்கு வழிவகுப்பதற்காகத் தீட்டப்பட்ட திட்டத்திற்கு தமிழர் தரப்பு உடந்தையாயிருந்த வரலாற்று நிகழ்வுகளை மீள ஆய்வு செய்வது காலத்தின் தேவையாகும்.

உலகில் எங்குவாழ்ந்தாலும் தமிழினம் என்பது ஒரேஇனம். அதேபோல் இந்துசமயத்தைப் பின்பற்றுவோர் யாவரும் இந்துக்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதுவே யதார்த்தம், ஆனால், இலங்கையில் குறிப்பிட்ட அந்தக் காலகட்டத்தில் நடந்தது என்ன? உலகில் பரந்து பட்டு வாழும் இந்துக்களின் ஒரு அங்கமாக இலங்கை வாழ் இந்துத்தமிழர்கள் கொள்ளப்பட்டார்கள். இது இலங்கை இந்துக்களுக்குப் பலமாக இருந்தது. இதை உடைத்தெறியத் திட்டமிட்டவர்களின் வலையில் சிக்கி ஒத்தூதி, ஒத்துழைத்தனர் நம்மவர்கள் சிலர் ஆம் காலங்காலமாக உலக அரங்கில் இந்துக்களாக கணிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை இந்துக்களென்று குறிப்பிடுவதைத் தவிர்த்து சைவர்கள் என்று குறிப்பிட வேண்டும் மென்று அன்றைய காலகட்டத்தில் கல்வியமைச்சின் செயலாளராக இருந்த கலாநிதி பிரேமதாச உடுகமவின் வேண்டுகோளைச் சிரம்மேல் ஏற்று அதற்காக வழிவகுத்தனர் நமது சில புத்திஜீவிகள்.

இந்தியத் தொடர்பற்ற தனித்துவ சமயமாக இலங்கையில் சைவசமயத்தை நிலைநாட்ட வேண்டும் மென்று ஆலோசனை வழங்கிய உடுகமவின் நோக்கத்திற்கமைய 1974 ஆம் ஆண்டு முதல் பாடசாலைகளில் இந்து சமயத்திற்குப் பதிலாகச் வைச சமயம் என்ற பாடத்தைத் தாங்கள் அறிமுகப்படுத்தியதாக காலஞ்சென்ற பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் ஆறுமுகம் சதாசிவம் சாதித்த பெருமையுடன் கூறியுள்ளார்.

நீதிமன்றங்களிலோ ஏனைய இடங்களிலோ உறுதியுரை எடுக்கும் போதும், ஏனைய ஆவணங்களில் குறிப்பிடும்போதும் சைவர் என்று எவரும் குறிப்பிடுவதில்லை. இந்து என்றே இன்றும் குறிப்பிடுகின்றனர். தமிழ்ப் பிள்ளைகளுக்கு இந்துசமயம் என்றால் தமக்குத் தொடர்பற்ற அந்நிய சமயம் என்ற கருத்தை வலியுறுத்தி மனதில் பதியச் செய்ய மேற்கொள்ளப்பட்ட திட்டமே சமயபாடப் பெயர் மாற்றம் 1 ஆம் ஆண்டு முதல் 11 ஆம் ஆண்டு வரை தமிழ் மாணவர்கள் தமிழ் மொழியில் இந்து சமயபாடத்தைப் படிப்பதற்கோ, பரீட்சைக்குத் தோற்றுவதற்கோ தடை யேற்படுத்தப் பட்டுள்ள அதேவேளை சிங்கள, ஆங்கில மொழிகள் மூலம் இந்து சமயத்தைக்கற்கவும், பரீட்சைக்குத் தோற்றவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ் மொழி மூலம் மட்டும் இந்து சமயம் என்ற பாடத்திற்கு ஏன் தடை விதிக்கப்பட்டுள்ளது? பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம், போன்ற ஏனைய சமயங்களை மும்மொழிகளிலும் பயில உரிமையுள்ள போது சைவசமயம் தமிழ் மொழியில் மட்டும் கற்கக்கூடியதாகவும் இந்துசமயம் தமிழ் மொழியில் கற்க முடியாததாகவும் விதிக்கப்பட்டுள்ள நோக்கத்தின் பின்னணி என்ன?

இவ்வாறான செயற்பாடுகளுக்குத் திட்டமிட்டவர்களின் நோக்கம் என்ன? இதனால் நீண்ட கால சமுதாய நோக்கில் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன என்பது பற்றி எவரும் சிந்திப்பதாயில்லை. ஒரு சமுதாயத்தின் சமயத் தொடர்புகளுக்கும், உணர்வுகளுக்கும், இணைப்புக்கும் வைக்கப்பட்ட ஆப்பு இது என்பதைப் புரிந்து கொள்ளாத புத்திஜீவிகள் நம்மத்தியிலே நடமாடும் அவலத்தை எவரிடம் சொல்வது?

அதேபோன்று அதே குறிப்பிட்டகாலகட்டத்தில் முற்போக்குப் பேசி ஆட்சியாளருடன் இணைந்து கொண்டு இந்தியாவிலிருந்து தமிழ்த் திரைப்படங்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், ஏனைய அறிவு நூல்கள் இலங்கைக்கு வருவதோ அவற்றை பார்ப்பதோ, வாசிப்பதோ பிற்போக்கானது என்று கூறித் தடை செய்ய முன்னின்றுழைத்த நமது இலங்கைத் தமிழ்ப் புத்திஜீவிகள் இலங்கைத் தமிழருக்கும் தாயகத்தமிழருக்கும் இடையிலுள்ள உறவைத் துண்டிக்கத் துணை போயினரன்றி வேறென்ன சாதனை புரிந்தனர்?

அம்பாந்தோட்டையிலோ, துந்துவையிலோ உள்ள ஒரு முஸ்லிமின் வீட்டில் தமிழ் மொழி இன்றும் பயன்படுத்தப்படுகின்ற தென்றால் அதற்கு ஏதுவாக அமைந்துள்ள காரணி இந்தியதமிழ்த்திரைப்படங்களும், சஞ்சிகைகளும் என்பதை எவராலும் மறுக்க முடயாது.

மண்வாசனை, என்று கூறிக் கொண்டு இந்திய தமிழ் ஆக்கங்களுக்குத் தடை விதிக்க உந்துதல் அளித்த நமது நாட்டு புத்திஜீவிகள் பண்டைய தமிழ் இலக்கியங்கள், அறநூல்கள் போன்ற வற்றை மட்டுமல்ல திருவள்ளுவர், இளங்கோவடிகள், பாரதியார் போன்றவர்களையும் அவர்களின் ஆக்கங்களையும் கைவிடவேண்டுமென்ற அதி மேதாவிகளாக மாறாமலிருந்தது விந்தையே.

உலக மயமாக்கலின் போது உலகம் நெருங்கி வந்துள்ளது. பல்வேறு நாட்டினரின், கலாசாரங்கள் கலக்கின்றன. அப்படியுள்ளபோது இலங்கைத் தமிழர்கள் மட்டும் வெளியுலக தமிழர்களிடமிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என்ற சிந்தனை செயற்பாடுகளின் பின்னணியைப் புரிந்து கொள்ள முடியாவிட்டால் புத்திஜீவிகளென்று வலம் வருவதால் என்ன பயன்?

வெலியுலக இந்துக்களின், தமிழர்களின் தொடர்பை இலங்கை இந்துத் தமிழர்கள் துண்டிக்க வேண்டும் என்ற நோக்கிற்கோ, செயற்பாட்டிற்கோ இந் நாட்டின் இந்து மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளோ, தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல், தொழிற்சங்க, சமூக அமைப்புகளோ உடந்தையாக இருக்க வில்லை என்பதுடன் எதிர்த்தும் குரல் கொடுத்தனர்.

முற்போக்கு என்று கூறிக் கொண்டு தாமே தமிழர் மத்தியிலுள்ள புத்திஜீவிகள், பேரறிஞர்கள் என்று காட்டிக் கொண்ட ஒரு சில தமிழர்களே இலங்கைத் தமிழர்களை உலகத்தமிழர்களிடமிருந்து அந்நியப்படுத்தும் கைங்கரியத்துக்கு ஒத்தூதி, செயற்பட்ட கறைபடிந்த வரலாற்று நிகழ்வுகள் இலங்கைத் தமிழர் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன.

யார், எதை, எதற்காகச் செய்யத் தூண்டுகின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் எடுப்பார் கைப்பிள்ளைகளாகச் செயற்படுவோர் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் தாமே வழிகாட்டிகள் என்பதைத் தவிர்த்துக் கொண்டால் அவலங்கள் பல அகலும்.

Please Click here to login / register to post your comments.