அதிபரின் சகோதரர்களே ஆள் கட்த்துகிறார்கள்! கொழும்பு எம்.பி. மனோ கணேசன் அதிரடி பேட்டி!

ஆக்கம்: ஷானு
இந்திய வம்சாவளித் தமிழர், நாற்பத்தேழு வயது இளைஞர்... எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணியில் உள்ள ‘மேலக மக்கள் முன்னணி’ கட்சியின் தலைவர்... சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இலங்கையின் தலைநகரான கொழும்பு மாவட்ட மக்களின் எம்.பி. மனோ கணேசன். இவரது நெருங்கிய நண்பரும் சிவில் மானிட்டரிங் கமிட்டியின் உறுப்பினருமான நடராஜா ரவிராஜ், கடந்த வருடம் படுகொலை செய்யப்பட்டார். அதே அளவு கொலை அச்சுறுத்தல் இவருக்கும் உண்டு என்றாலுங்கூட, இலங்கை ராணுவத்தின்_ போலீஸின் பாதுகாப்பில் இருந்துகொண்டே இலங்கை அரசையும் இலங்கை அதிபரையும் மனோ கணேசன் மிகக் கடுமையாக விமர்சிக்கிறார்.

சமீபத்தில் திருச்சியில் நடந்த அவரது உறவினர் வீட்டுத் திருமணத்துக்கு வந்திருந்தவரை சந்தித்துப் பேசினோம்.

இலங்கையில் இப்போது நிலவும் சூழ்நிலை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

‘‘மனித உரிமைகள் மதிக்கப்படாத ஒரு காட்டாட்சிதான் அங்கே நடக்கிறது. ஆனால், இலங்கையில் நடக்கும் விஷயங்கள் இப்போது உலக அரங்கைப் போய் அடைந்து விட்டது. அடுத்த வருடம் அக்டோபர் மாதம் ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையாளர் திருமதி லூயிஸ் ஹாபர் இலங்கைக்கு வருகிறார். மிகவும் தைரியமான, நேர்மையான பெண்மணி அவர். இதெல்லாம் எங்களின் பிரசாரம் மூலமாகக் கிடைத்த வெற்றிகள்தான். இதன் காரணமாக இலங்கை அரசு மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. உலக அரங்கில் மனித உரிமை மிகப் பெரிய பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது.’’

உங்கள் கருத்துக்களை தைரியமாக வெளியிட முடிகிறதா? உங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளதாகச் சொல்லப்படுகிறதே...?

‘‘எனக்கும் மிகுந்த அச்சுறுத்தல்கள் இருக்கின்றன. மக்கள் கண்காணிப்புக் குழு(சிவில் மானிட்டரிங் கமிஷன்)வின் ஒருங்கிணைப்பாளர் நான். இந்த அமைப்புத்தான் இன்று இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை உலக அரங்குக்குக் கொண்டு செல்கிறது. அதில் முக்கியப் பொறுப்பில் இருந்த ரவிராஜைக் கொன்று விட்டார்கள். என்னைக் கொல்ல முடியவில்லை. கடந்த வருடம் நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி அவரைக் கொன்ற பிறகு, எனக்கு பாதுகாப்பு இல்லையென்பதால், நான் இந்தியாவில் வந்து இரண்டு மாதங்கள் தலைமறைவாக இருந்தேன். அதன் பிறகு இந்திய அரசு, அமெரிக்க அரசு, ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் நிர்ப்பந்தம் காரணமாக இலங்கை அரசு ஓரளவு பாதுகாப்பு வழங்கியிருக்கிறது. ஆனால் அது நம்பத்தகுந்தது அல்ல. அரசாங்கத்தின் உயர் பாதுகாப்பு வளையத்தில் நடந்த அந்தக் கொலைக்கும் அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும். எனவே, நான் அரசையும் ராணுவத்தையும் போலீஸையும் கடுமையாகக் கேள்விகள் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். இலங்கை வரலாற்றிலேயே தமிழர்கள் மீது எந்தக் காலத்திலும் இந்தளவுக்கான கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதில்லை என்பதுதான் உண்மை.’’

சர்வதேச அரங்கில் மனித உரிமைகளாகச் சொல்லப்படுகிற விஷயங்கள் இலங்கையில் மதிக்கப்படுவதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

‘‘தமிழர்கள் கடத்தப்படுகிறார்கள். கடத்தப்பட்ட பலர் படுகொலை செய்யப்பட்டு வீதியோரமாக வீசியெறியப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் தமிழ் வியாபாரிகள், தனவந்தர்கள் கடத்திச் செல்லப்பட்டு அடைத்து வைக்கப்பட்டு, ஒரு பெருந்தொகையைக் கப்பமாகப் பெற்றுக் கொள்ளப்பட்ட பிறகு அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். கடத்தப்படுதல், காணாமல் போதல் என்பது இலங்கையில் சாதாரணமாக நடக்கிறது. இது சம்பந்தமான முழு விவரங்களையும் இலங்கையில் உள்ள இந்திய தூதர் அலோக் பிரசாத்திடம் வழங்கியிருக்கின்றேன். எனவே, இந்திய அரசோ தமிழக அரசோ, தங்களுக்கு எதுவும் தெரியாது என்று சொல்ல முடியாது.’’

இதுகுறித்து இந்திய அரசின் நடவடிக்கை எப்படி இருக்கிறது?

‘‘இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரச்னை என்பது மிகப் பெரிய அரசியல் பிரச்னை. இங்கே நான் குறிப்பிடுவது மனித உரிமைப் பிரச்னை மட்டும்தான். அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் நாடுகள் போன்ற ஏனைய சர்வதேச சமூகத்துடன் இணைந்து கொண்டு, இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக எனக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. ஆனாலும் இந்திய வம்சாவளியினர் பிரச்னையில் இன்னும் அதிகமாக இந்தியா தலையிட வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். அதற்கான தார்மீகக் கடமை அவர்களுக்கு உண்டு. இலங்கைப் பிரச்னை என்பது அங்குள்ள தமிழர்களின் பிரச்னை என்றாலும், தென்னிலங்கையில் உள்ள தமிழர்கள் இங்கிருந்து பிழைப்புக்காகப் போனவர்கள். எனக்கு இதோ மண்ணச்சநல்லூர் பக்கத்தில் உள்ள தத்தமங்கலம்தான் சொந்த ஊர். எனது மனைவி இந்தியாவில் பிறந்த எனது உறவுப் பெண்தான். இதைப் போலத்தான் தென்னிலங்கையில் வசிக்கும் ஒவ்வொரு தமிழனுக்கும் இந்தியாவில் சொந்த ஊரும் உறவுகளும் இருக்கின்றன.’’

இலங்கையில் யார் ஆள் கடத்துகிறார்கள்? அந்தப் பணம் யாருக்குப் போகிறது?

‘‘இலங்கையின் பாதுகாப்புச் செயலாளராக இருக்கும் கோத்தபாய ராஜபக்ஷ, இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷயின் சகோதரர். இன்னொரு சகோதரர் ஜனாதிபதியின் ஆலோசகர். இப்படி அதிகாரத்தில் இருக்கும் இலங்கை அதிபரின் சகோதரர்களுக்கும் இந்தக் கடத்தலுக்கும் தொடர்பு உண்டு என்று இலங்கை முழுவதுமே ஒரு பரவலான பேச்சு இருக்கிறது. இது ஏற்கெனவே பேசப்பட்ட விஷயம். இவர் (கோத்தபாய ராஜபக்ஷ) ஒரு முறை பகிரங்கமாக போலீஸ் மாஅதிபர்(போலீஸ் ஐ.ஜி.யைத்தான் இப்படிக் குறிப்பிடுகிறார்), ராணுவத் தளபதிகள், ஜனாதிபதி பங்கேற்ற கூட்டத்தில் பேசும் போது, ‘சிங்கள தீவிரவாத கட்சியான ஜே.வி.பி. (ஜனதா விமுக்தி பெரமுன) அங்கத்தினர்களை நாங்கள் கடத்தவில்லை. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தினர்கள் கடத்தப்படவில்லை. பிறகு ஏன் கூச்சல் போடுகிறீர்கள்?’ என்று கேட்டார். அப்போதே இது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அதற்கு தமிழர்களைத்தானே நாங்கள் கடத்துகிறோம். என்பதுதான் அர்த்தம். அதனால் இலங்கை அரசாங்கத்துக்கு இதில் தொடர்பு இருக்கிறது என்பது நிரூபணமாகிவிட்ட உண்மை. இலங்கையில் அதிலும் குறிப்பாக, கொழும்பில் பல்வேறு காவல்சாவடிகள், சோதனைச்சாவடிகள், வீதிச் சோதனைச் சாவடிகள் உள்ளன. ஓர் அணுவும் அரசாங்கத்தை அறியாமல் அங்கிங்கு அசைய முடியாது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் நூற்றைம்பது கடத்தல் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. வெள்ளை வேனில் வரும் தங்களை அடையாளம் காட்டாத நபர்கள், பட்டப்பகலிலேயே தமிழர்களின் இல்லங்களுக்குச் சென்று, வணிக நிலையங்களுக்குச் சென்று அவர்களை கடத்திச் செல்கிறார்கள். எந்த ஒரு கடத்தல் வாகனமும் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவோ, கடத்திய நபர்கள் பிடிபட்டதாகவோ, கடத்தப்பட்ட நபர்கள் விடுவிக்கப்பட்டதாகவோ தகவல் இல்லை. ஆகவே, கடத்தல்காரர்களுக்கும் காவல்சோதனைச் சாவடியில் இருக்கும் அதிகாரிகளுக்கும் ஒரு புரிந்துணர்வு இருப்பது வெட்டவெளிச்சமாகிறது. இலங்கை பாதுகாப்புச் செயலாளராக இருக்கும் அதிபரின் தம்பியான கோத்தபாய ராஜபக்ஷ தனது நம்பிக்கைக்குரிய குறிப்பிட்ட சில ராணுவ வீரர்களை வைத்தே இந்தக் கடத்தல் வேலைகளைச் செய்கிறார். அவர்கள் செக்போஸ்ட்டுகளில் காட்டும் ஒரு ரகசிய அடையாள அட்டையைக் கண்டால் எந்தப் பாதுகாப்பு அதிகாரியும் அந்த வாகனத்தைச் சோதனை போடுவதில்லை என்பது இலங்கையின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தெரிந்த ரகசியமாகப் போய் விட்டது.’’

இந்தக் கடத்தல் சம்பவங்கள் குறித்து இலங்கை அரசின் நிலைப்பாடு என்ன?

‘‘அரசு ஆரம்பத்தில் ‘இப்படி எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை’ என்று சொன்னது. நாங்கள் பட்டியல் வெளியிட்டு காணாமல் போனவர்களின் ஐடி கார்ட் எண், புகார் கொடுக்கப்பட்ட காவல்நிலைய பதிவு எண், காணாமல் போனவர்களின் புகைப்படம் போன்றவற்றை வெளியிட்டதும் ‘ஆமாம் கடத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இலங்கை அரசுக்குக் கெட்டபெயர் ஏற்படுத்துவதற்காக யாரோ இப்படிச் செய்கிறார்கள்’ என்று சொன்னார்கள். கடும் சோதனைகளுக்குட்படுத்தப்படும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில்தான் நடக்கிறது என்று சொன்னதும் ‘கடத்தப்பட்டது உண்மைதான், அதில் பலர் வீடு திரும்பிவிட்டார்கள். ஏனையோர் வெளிநாடு சென்று விட்டார்கள்’ என்று சொன்னது. ‘வீடு திரும்பி விட்டார்கள் என்றால் அவர்களின் பெயர்களை வெளியிடுங்கள்’ என்று சொன்னோம். அதற்குப் பதில் இல்லை. மேலும், அங்கே யாரை வேண்டுமானாலும் விசாரணைக்குக் கூட்டிப் போகலாம். அதன் பிறகு சுட்டுக் கொல்லலாம் என்ற நிலையே இருக்கிறது. அதனால் அரசு இதற்கெல்லாம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.’’

சர்வதேச சமூகம் இதைப் புரிந்துகொண்டிருக்கிறதா? குரல் கொடுத்துள்ளதா?

‘‘நிச்சயமாக... அதற்கான செயல்பாடுகளை நாங்கள் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறோம். அது மட்டுமல்ல; ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையர், எதிர்வரும் அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி இலங்கை வருவதற்கும் நாங்கள் கொடுத்த அழுத்தம் தான் காரணம்.’’

உங்கள் குரலுக்கு அதிபர் ஏதாவது பதில் சொன்னாரா?

‘‘மக்கள் கண்காணிப்புக் குழுவின் சார்பாக மனித உரிமைகளை மதிக்கும் எம்.பி.க்களுடன் பல முறை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்திருக்கிறேன். மற்றும் உயர் அதிகாரிகளையும் சந்தித்து எங்கள் முறையீடுகளைச் சொல்லியிருக்கிறோம். இவை எதற்கும் சரியான பதிலோ, நடவடிக்கையோ இல்லாத காரணத்தால் வேறுவழியில்லாமல் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.’’

என்ன மாதிரியான போராட்டங்களை நடத்தினீர்கள்?

‘‘கொழும்பு நகரின் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், கூட்டங்கள் நடத்தியிருக்கிறோம். கடத்தப்பட்டவர்களின் குடும்பங்களை அழைத்து கடந்த ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதியும் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதியும் கொழும்பில் இரண்டு மாநாடுகள் நடத்தியிருக்கிறோம். இதன் மூலம் இந்தப் பிரச்னையை உலக அரங்கில் கொண்டு போக முடிந்தது.’’

இலங்கையின் பொருளாதார நிலை எப்படி இருக்கிறது?

‘‘விலைவாசி உயர்ந்து கொண்டிருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இலங்கை அரசு கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகி தனது அரசு ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறது. இந்தியாவில் 108 கோடி மக்கள் தொகை இருந்தும் முப்பது அமைச்சர்கள்தான் இருக்கிறார்கள். ஆனால், இரண்டு கோடி மக்கள் தொகை கொண்ட இலங்கையில் 108 அமைச்சர்கள் இருக்கிறார்கள். அந்தளவுக்கு பட்டம், பதவி வாய்ப்புகளுக்காக அலைகிறார்கள். ஒவ்வொரு அமைச்சருக்கும் சம்பளம், அவரது உதவியாளர்கள், வாகனங்கள், வீடுகள், காரியாலயங்கள், இதற்கான செலவுகள் என்னவாகிறது? இதனால் பட்ஜெட்டின் பெரும்தொகை இதற்கே ஒதுக்கப்படுகிறது. இதைப்பற்றி யாரும் கவலைப்படவில்லை. இன்றைய நிலையில் இலங்கை அரசாங்கம் என்பது மூழ்கிக் கொண்டிருக்கும் ஒரு கப்பல். அதில் முடிந்தவரை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் செல்லத்தான் எல்லோரும் முயன்று கொண்டிருக்கிறார்கள். ராஜபக்ஷவின் குடும்பம் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டும்தான் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர். அடுத்தவர், கோத்தபாய ராஜபக்ஷ இலங்கை பாதுகாப்புச் செயலாளர். அடுத்தவர், பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியின் ஆலோசகர். அடுத்தவர், சமல் ராஜபக்ஷ துறைமுக, விமானநிலைய அமைச்சர். 108 பேர் அமைச்சர்கள் இருந்தாலுங்கூட இந்த நாலு பேர் கையில்தான் எழுபத்தைந்து சதவிகித அதிகாரங்கள் இருக்கின்றன. இந்தக் கோமாளிக் கூட்டத்துக்குள்ளேதான் இந்திய வம்சாவளி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஆறுமுகம் தொண்டைமானும், மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெரியசாமி சந்திரசேகரும் அமைச்சர்களாக இருக்கிறார்கள். நாங்கள்தான் அரசில் இடம்பெறாமல் வடகிழக்கிலும் தென்னிலங்கையிலும் தமிழ் மக்களுக்காக இலங்கை அரசை எதிர்த்துக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.’’

இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்கான சூழ்நிலை ஏதாவது இருக்கிறதா?

‘‘நிச்சயமாக. நாங்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டுதான் இருக்கிறோம். இப்போதைய அமைச்சரவையில் இருந்து இரண்டு அமைச்சர்கள் எங்கள் அணிக்கு வருவதற்குச் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். இன்னும் நான்கு மாதங்களுக்குள் பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும். இனவாத அரசியல்வாதி இலங்கையின் ஜனாதிபதியாக வந்தால்தான் தங்கள் இலக்கை நோக்கிச் செல்ல முடியும். ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்துக்கு வந்தால் சமாதானம் வந்துவிடும். அப்படி சமாதானம் வந்துவிட்டால் தமிழ் மக்கள் அமைதியாகி விடுவார்கள்; தனி ஈழம் என்ற பேச்சு மறைந்து போகும் என்று விடுதலைப்புலிகள் நினைக்கிறார்கள். அதனால்தான் வெற்றி பெறும் வாய்ப்பில் இருந்த ரணில் விக்கிரமசிங்கவைத் தோற்கடிக்கும் விதமாக தேர்தலைப் புறக்கணித்தார்கள்.’’

இந்திய அரசு என்னதான் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

‘‘தனிநாடு வாங்கிக் கொடுக்கும்படி நாங்கள் இந்திய அரசைக் கேட்க முடியாது. ஆனால், தனிமனித உரிமைகள் மீறப்படும்போது குறிப்பாக இந்திய வம்சாவளித் தமிழர்கள் பாதிக்கப்படும்போது, இந்தியா அதை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும். இலங்கையில் தனிநாடு உருவானால் இந்தியாவில் தமிழகமும் தனிநாடாகப் போய்விடும் என்று இந்திய அரசு நினைக்கிறது. அது உண்மையல்ல. அப்படிச் சொல்வது தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களை அவமதிக்கும் செயல்.’’

படங்கள் : சுதாகர் - ஷானு

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர், Sept 20, 2007

Please Click here to login / register to post your comments.