எழுத்திற்குள் வராத ஈழத்து நாடகக் கலைஞர்கள்.

ஆக்கம்: கி.செ.துரை
எழுபதுகளில் இருந்து எண்பதுகளின் நடுப்பகுதிவரை ஈழத்து நாடக உலகில் முத்திரை பதித்த சில கலைஞர்கள் பற்றிய தகவல்களை இக்கட்டுரை உள்ளடக்குகிறது. இப்படியே போனால் பதிவு செய்யப்படாமல் விடப்பட்ட இந்தக் கலைஞர்களின் வரலாறு காற்றோடு காற்றாகப் போய்விடும் என்றே எண்ணத் தோன்றுகிறது. பதிவுக்குள் வராத வணக்கத்திற்குரிய அந்தக் கலைஞர்களைப் பற்றிப் பேசுகிறது இக் கட்டுரை. எழுத்திற்குள் வராத ஈழத்து நாடகக் கலைஞர்கள் தலையங்கத்தில் இரண்டு வாரங்களாக ஐ.பி.சி வானொலியில் உரையாடலை நடாத்தியபோது மக்கள் காட்டிய ஆர்வமும், மன நிறைவும் இக்கட்டுரையை எழுத்தில் கொண்டுவரும் ஆவலைத் தூண்டுகிறது.

இன்று தமிழில் உள்ள இலக்கிய வரலாறு அழகான ஒழுங்கில் அடக்கப்பட்டதே அல்லாது, கிடைத்த அனைத்தையும் அப்படியே தொகுத்துத் தரப்பட்டதல்ல. ஏழைகளின் இலக்கியம், ஒடுக்கப்பட்டோரின் அவலக்குரல்கள் போன்றன அந்தத் தொகுப்பில் இருந்து நீக்கப்பட்டன என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுவார்கள். தமிழ் இலக்கிய வரலாற்றின் தொகுப்பில் இடம்பெறாத பல ஒடுக்கப்பட்டோர் இலக்கியங்கள் இப்போது மெல்ல வெளிவரத் தொடங்கியுள்ளன.

சிங்கள இனம் தனது பழைய வரலாற்றை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒழுங்குபட தொகுத்து வைத்திருக்கிறது. மகாநாமன் என்ற புத்தபிக்கு மகாவம்ச ம் என்ற நூலையும், தர்மகீர்த்தி என்பவர் சூளவம்சம் என்ற நூலையும் சிங்கள இனத்தின் வரலாறாக தொடர்ந்து தொகுத்து வைத்துள்ளார்கள். சூழவம்சம் மூன்று பாகங்கள் வரை உள்ளது. இவர்களைப் போல வரன்முறையான தொகுப்பை ஈழத் தமிழினம் செய்யவில்லை. இலங்கைத் தீவில் உள்ள தமிழரின் வரலாற்றை எழுதி வைத்ததுகூட சிங்களப் புத்தபிக்குகளேயல்லாமல் தமிழரல்ல. அந்த வரலாற்று ஏடுகள் முழுவதுமே தமிழரை தோல்வியடைந்த இனமாகவும், தாழ்மைப்பட்ட இனமாகவும் கற்பிதம் பண்ணி எழுதியுள்ளனர்.

நமது வரலாற்றை மகாவம்சம் போல தொகுப்பாக நமது மூதாதையர் எழுதவில்லை என்று நாம் இங்கிருந்து ஒரேயடியாகக் குற்றம் கூறிவிட முடியாது. யாழ். நூல்நிலையம் எரிக்கப்பட்டது போல தமிழினத்தின் மீது நடாத்தப்பட்ட பல்வேறு ஆக்கிரமிப்புப் போர்களின்போது அவை அழிக்கப்பட்டிருக்க இடமிருக்கிறது. போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர்கள் காலத்தில் நிலவிய 400 வருடங்கள் கொண்ட நீண்ட கொடிய குடியேற்ற ஆட்சி அதை அழித்திருக்கலாம். அதை அழிப்பதற்கு ஏற்றவாறு தகவல்களை தமிழரே கொடுத்தும் இருக்கலாம். எவ்வாறாயினும் வரலாற்றைப் பதிவு செய்ய தயங்கும் தமிழரின் போக்கு சமுதாய நலனுக்கு நன்மைதராது என்பதை அறிய மேற்கண்ட சம்பவங்களை முதலில் உணர வேண்டியது அவசியம்.

ஈழத்து நாடக முயற்சிகளை பதிவு செய்யும் பணியில் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை முதலில் ஆர்வமெடுத்து மட்டக்களப்பு நாட்டார் வழக்கு கூத்துக்கள் சிலதை சமுதாயத்தில் அறிமுகம் செய்தார். அவரே சங்கிலி போன்ற நாடகங்களை படிப்பதற்காக எழுதியுள்ளார். பேராசிரியர் க.சிவத்தம்பி, சு.வித்தியானந்தன் போன்றோர் பல நாட்டுக்கூத்துக்களை வெளிக்கொணர்ந்து ஈழத்தின் நாடகச் செல்வங்கள் பற்றிய தகவல்களை நமக்கு தந்திருக்கிறார். இவர்களுடைய நூல்கள் மிகப்பழைய காலத்து தகவல்களை காப்பாற்றித் தந்துள்ளன. அதன் பின்னர் ஈழத்து நாடகம் பற்றி மூதறிஞர் சொக்கன் எழுதிய விரிவான நூல் வெளிவந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து பல்கலைக்கழக ஆய்வுகளுக்கான பல நாடகநூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் இந்தக் கட்டுரையில் பேசப்படுகின்ற 70 களில் நாடக உலகில் பிரகாசித்த மேடைக்கலைஞர்களை இதுவரை யாரும் சிலாகித்து பேசியதாகவோ இவர்களுடைய முயற்சிகளைப் பதிந்ததாகவோ கூற முடியவில்லை.

ஈழத்தின் நாடக வரலாற்றில் 70 களின் காலம் பொற்காலமாகும். ஈழத்தின் சகல கிராமங்களிலும் நாடகப் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்த காலமாகும். ஒவ்வொரு நாடகப் போட்டியிலும் சுமார் 50 முதல் 60 வரையான நாடகங்கள் முதல் சுற்றுக்கு வரும். அவற்றில் சில நாடகங்களை பிரதி பார்த்து தெரிவு செய்வார்கள். அதன் பின்னர் இரண்டாவது சுற்று ஒப்பனை இல்லாமல் நடித்துக் காட்ட வேண்டும். அதில் தேர்வு பெற்ற ஏழு அல்லது எட்டு நாடகங்கள் இறுதிப் போட்டிக்கு வரும். இரவு ஒன்பது மணியில் இருந்து அதிகாலை சூரியன் வானில் தெரியும்வரை இந்த நாடகங்களுக்கான போட்டிகள் நடைபெறும். போட்டியின் முடிவில் சிறந்த முதல் மூன்று நாடகங்களுக்கு தங்கப்பதக்கங்கள் பரிசாக வழங்கப்படும். பல போட்டிகளில் சிறந்த நடிகர் தேர்வும் இடம் பெறும்.

இந்தப் போட்டிகள் ஒரு இடத்தில் மட்டும் நடைபெறாது ஒரே நாளில் குடாநாட்டின் பல பகுதிகளில் நடைபெறும். ஒன்பது மணிக்கு நெல்லியடியில் போட்டியிடும் நாடகம் பன்னிரண்டு மணிக்கு அச்சுவேலியிலும் அதிகாலை மூன்று மணிக்கு மாவட்டபுரத்திலும் போட்டியிடும். இப்படி நாடகப் போட்டிக்காக கலைஞர்கள் தினசரி புதிது புதிதாகத் தயாராவதும் அதைப்பற்றியே பேசுவதுமாக சமுதாயம் முழுவதையும் தமது நடிப்பாலும், நாடகங்களாலும் ஈர்த்து வைத்திருந்தார்கள். நூல்வடிவில் சிறப்பாக பேசப்பட்ட எத்தனையோ நாடகங்கள் வந்த சுவடு தெரியாமல் மறைந்து போக, எழுதாத ஓவியங்களாக மக்கள் மனதில் வாழ்ந்துவருபவை இந்த நாடகங்கள்தான்.

இவை முன்னைய காத்தவராயன் கூத்து, அரிச்சந்திரா, வள்ளிதிருமணம் போல முழு நீள நாடகங்களாக இருக்கவில்லை. ஒரு மணிநேரம் கொண்ட குறு நாடகங்களாகவே இருந்தன. இவற்றில் சமூக நாடகம், சரித்திர நாடகம், இதிகாச நாடகம் என்று மூன்று முக்கிய பிரிவுகள் இருந்தன. சில சமயங்களில் அம்பிகாபதி, மயானகாண்டம் போன்றன இசை வடிவில் அரங்கேறுவதும் உண்டு. தமிழர் பகுதிகளில் ஒழுங்கைக்கு ஒரு விளையாட்டுக் கழகம் இருப்பதுபோல ஓர் ஊருக்கு பல நாடக மன்றங்கள் இருக்கும். பகலெல்லாம் நெற்றி வியர்வை சிந்தப் பாடுபட்ட மக்கள் இரவெல்லாம் கலைவளர்த்த காட்சிகள் நடைபெற்ற காலம் அது.

இந்த நாடகங்கள் ஈழத் தமிழினத்திற்கு செய்த சேவைபோல வேறு எந்தக் கலைப்படைப்பும் செய்திருக்கும் என்று கூற முடியாது. சாதாரண கிராமத்தின் ஏழை பேதை முதல் படித்தவர்கள் வரை அனைவரையும் திரும்பிப் பார்க்கவும் பேசவும் வைத்தவை இந்த நாடகங்கள்தான். சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களை இவை உள்ளடக்கியிருந்தன, சமுதாயத்தில் நிலவும் சாதி, சீதனம், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி நின்றன. அரச நாடகங்கள் தமிழர் வீரம், ஆண்ட தமிழினத்தின் பெருமை போன்றவற்றை எடுத்துரைத்தன. சிங்கள அரசின் ஒடுக்கு முறைக்கு எதிராக போர் முழக்கமிட்டு தமிழனின் வெற்றியோடு நாடகங்கள் சுபமாக முடிவடையும். சிங்கள வரலாற்று நூல்களை எடுத்துப் பார்த்தீர்களானால் அங்கே எந்தவொரு போரிலும் தமிழருக்கு இறுதி வெற்றி கிடைத்ததாக செய்தி இருக்காது. ஆனால் இந்த அரச நாடகங்களைப் பார்த்தீர்களானால் எல்லா நாடகங்களுமே தமிழருக்கு இறுதி வெற்றி தரும் நாடகங்களாகவே நிறைவடைந்ததைக் காண்பீர்கள்.

சங்கிலியன் நாடகம் அதிகமாக எல்லா நாடகமன்றங்களாலும் தயாரிக்கப்பட்ட நாடகமாக இருந்தது. வீரபாண்டிய கட்டபொம்மன் போல தமிழர் பெருமையை அது பேசியது. அதுபோல பண்டார வன்னியன் கதை பல நாடக மன்றங்களால் தயாரிக்கப்பட்டது. எல்லாளன் துட்டகைமுனு போரின் புதிய பார்வையும் தமிழரின் எழுச்சியும், பாராக்கிரமபாகுவை தமிழர் வெற்றிகொண்ட, சிங்கள வரலாற்றில் இடம் பெறாத கதைகளும் நாடகங்களாக வடிவமைக்கப்பட்டன. இவற்றையெல்லாம் பார்க்கும் மக்கள் தமது பாடசாலைப் புத்தகங்களில் உள்ளது போல தாம் தோல்வியடைந்த இனமல்ல என்று எண்ணத் தலைப்பட்டார்கள். தமிழனுக்கான ஒரு தாய்நாடும், தன்மானமும் மறு கட்டமைவு பெற வேண்டும் என்ற செய்தியை இந்த நாடகங்கள் சமுதாயத்தில் வலியுறுத்தின. இவை வீசிய கருத்துக்கள் சாதாரணமானவையல்ல, ஒவ்வொரு கிராமத்திலும் விடுதலை வீரர்கள் உருவாவதற்குரிய விதைகள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இதற்கு நிறைய ஆதாரங்கள் உண்டு. இந்த நாடகக் காலத்தில் கலைஞர்களாக நின்ற பெரும்பாலோர்; இன்றைய தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஏதோ ஒரு வகையில் தோள் கொடுக்கும் கலைஞர்களாகவே இருக்கிறார்கள். சிங்கள அரசுக்கு எதிரான வீதி நாடகங்கள், தெருக்கூத்துக்கள், மக்களை போராட்டத்திற்குள் இணைக்கும் நாடகங்களை எல்லாம் உயிரைத் துச்சமென மதித்து நடாத்திக் கொண்டிருப்பவர்கள் வேறு யாருமல்ல இந்த நாடகப் போட்டிக் காலத்து கலைஞர்கள்தான். இவர்களில் பலர் போரினால் மடிந்துள்ளனர். நாடகத்தையே வாழ்வாக்கி ஏழ்மையால் இறந்தும் உள்ளனர். தமிழர் தன்மானத்தின் வடிவமாக நிமிர்ந்து நின்று சமுதாயத்திற்கு புது நம்பிக்கையூட்டினர்.

சமுதாயத்தின் கொடுமைகளை தமது நாடகங்களில் வைத்துத் தீ மூட்டிய இக்கலைஞர்களில் பலர் அதுபோலவே வாழ்ந்தும் காட்டினார்கள். கரவெட்டியில் ஒரு கலைஞர் தனது காதலியுடன் ஆலயத்தின் மூலஸ்தானத்திற்குள் சென்று அவளுடைய கரத்தோடு தனது கரத்தையும் இணைத்துக் கட்டி மூலஸ்தானத்தில் உள்ள இறைவன் காலடியில் உயிர் நீத்து சமூகத்திடம் நீதி கேட்டார். கடவுளின் பேரிலும், சமயத்தின் பேரிலும் நடைபெறும் இந்தத் தீண்டாமையையும், சாதி ஏற்றத்தாழ்வுகளையும் மூலஸ்தானத்தில் வைத்து உயிர்ப்பூவால் சந்தித்தார். இவர் எமது நாடகமன்றத்தில் நடித்தவர். சாதிக் கொடுமைகளையும், ஒடுக்கு முறைகளையும் உயிருக்கு பயந்து ஏற்று வாழ முடியாது. இன்றுள்ள சாதிமட்டத்தை இப்பிறவியில் ஏற்றுக் கொள்ளுங்கள், மறுபிறவியில் உயர் ஜாதியாக பிறக்கலாம் என்ற பித்தலாட்டத்தை உடைத்தெறியுங்கள் என்று நாங்கள் போட்டுவந்த நாடகத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தவர். அவர் இறந்த பின்னர் என்ன நடந்தது? அவருடைய சடலத்தையும், அவருடைய மனைவியின் சடலத்தையும் வேறு வேறு சுடலைகளில் எரித்தது குடாநாட்டின் சாதிக் கொடுமை. தனது உயிரினால் சமுதாயத்தை தோலுரித்துக் காட்டிய அந்தக் கலைஞனுக்கு ஈழத்து பல்கலைக்கழக நாடகக்காரரின் பதிவுகளில் ஓர் எழுத்தில் கூட பதிவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம்.

ஆனால் அவனுக்கு நடந்த கொடுமை இன்று ஈழத்தில் எவனுக்கும் நடக்க முடியாதபடி ஈழப் போராட்டம் நிலைபேறு பெற்று நிற்கிறது. சாதி முறைமைக்கு எதிரான எண்ணம் விரைவாக வளர, சாதி ஒடுக்குமுறை கண்டிப்பாக களையப்பட வேண்டும் என்பது நிறைவான செயற்பாட்டு சட்டமாக வளர இவனைப் போன்ற கலைஞர்களே காரணம்.

மகாத்மா காந்தி காலத்தில் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் சுதந்திரத்தின் பின்னர் ஏழைகளாகவும், ஏதிலிகளாகவும் விரட்டியடிக்கப்பட்டனர். சுதந்திரத்தின் அரியாசனத்தில் மற்றவர்கள் குந்திக்கொண்டனர். அதன் பின் சுதந்திர வீரர்கள் ஏழ்மையால் மடிந்த கதைகள் இந்தியாவில் நிறைய உண்டு. அது போன்ற நிலை நமது நாட்டிலும் ஏற்பட அனுமதிக்கலாகாது. சமுதாய நலனை நாடகமாக்கி, தனது சொந்தப் பணத்திலேயே இலவசமாக மேடையேற்றி, நாளாவட்டத்தில் வறுமையால் இறந்த ஈழத்துக் கலைஞர்கள் ஏராளம். கண்கள் இழந்து, வறுமையால் வாடி கவனிக்க ஒரு சமுதாய ஏற்பாடின்றி இறந்த கலைஞர்களின் பட்டியல் நீண்டு செல்கிறது. இவர்களை எழுத்தில் பதிந்து அங்கீகாரம் கொடுத்து, அடுத்த தலைமுறை பெருமையுடன் நோக்க வழி செய்ய வேண்டியது அவசியம். இது ஒருவர் செய்யும் பணியல்ல, ஒவ்வொரு ஊர் ஊராக தேடித் தொகுக்கப்பட வேண்டிய விடயம்.

பறவை சுதந்திரமாக வானத்தில் பறப்பதே நலம், அதுவே சுதந்திரமென்றும் நாம் எண்ணுகிறோம். தான் வாழும் மரத்தைப் பற்றி தெரியாமல் எந்தப்பறவையும் சுதந்திரவானில் பறப்பதில்லை. வானத்தில் இருந்து மரங்களை உருவாக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்ட ஒவ்வொரு பறவையும் தான் வாழும் மரத்தை மறக்காமல் மனதில் பதிந்து வைத்துள்ளது. சுதந்திரப் பறவைகள் மட்டுமல்ல சுதந்திர மனிதனும் இதை உணர வேண்டும். நமது சுதந்திரம் உட்கார வேண்டிய மரங்களே இந்தக் கலைஞர்கள். இதை எவரும் மறந்து நடக்கக் கூடாது.

நமக்கு வசதியாக ஒரு கலைக் கொள்கையை உருவாக்கி, இதுதான் உயர் கலையென ஒரு வரையறையைப் போட்டு, நமது பெயரை மட்டுமே பதிவு செய்யும் பல்கலைக்கழக பதிவு முறைகளிலும், ஆய்வுகளிலும் இனியாவது மாற்றம் வரவேண்டும். அதேவேளை எந்த மாற்றமும் தானாக வருவதில்லை. நாமே அதை மாற்றவும் வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். இந்த ஈழத்துக் கலைஞர்களை அங்கீகரித்து நமது அறிஞர்கள் எழுதினால் எழுதட்டும், இல்லையேல் நாமே எழுதுவோம். இதுவே மடிந்த பிறகும் எழுதப்படாது போன ஈழத்துக் கலைஞர்களுக்கு நாம் செய்யும் கடனாகும்.

Please Click here to login / register to post your comments.