மகிந்த அரசு தனது புதைகுழியினை தானே தோண்டுகின்றதா?

ஆக்கம்: புரட்சி (தாயகம்)
'திறமையான படைத்துறைத் தளபதி வெற்றி நிச்சியமாகக் கிடைக்கும் என்று தெரிந்தால் மட்டுமே எதிரிகளின் மீது தாக்குதல்களைத் தொடுப்பான். அவ்வாறான சூழ்நிலையை உருவாக்குவதே அவனது முக்கியமான பணியாக இருக்கும். ஒருதரப்பின் படையானது பரவலாகப் பரப்பப்படும்போது, பிரதேசங்களை எல்லா இடங்களிலும் பாதுகாக்க வேண்டியிருக்கும். இதன் காரணமாக எல்லா இடங்களிலும் எதிரி பலவீனமாக இருப்பான். எனவே சிறிய ஒரு படையே தேர்ந்தெடுக்கப்பட்ட எதிரிகளின் இலக்குக்களை அழிக்கப் போதுமானதாக இருக்கும்." - சீனப் போரியல் மேதை சன் சூ (8:39-42)

19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த பிரெஸ்ய படைத்துறை தளபதியான லெப்-ஜெனரல் கொல்மார் பெரிர்கெர் வொன் டேர் கோல்ற்ஸ் தனது 'போரினை நடத்தும் முறை' என்ற புத்தகத்தில் கால் வொன் குளோஸ்விற்சின் 'போரானது அரசியலை முன்னெடுப்பதற்கான இன்னொரு வழி' என்ற கோட்பாட்டினை அடிப்படையாகக்கொண்டு 'போரானது அரசியலுக்கான பணியினை போருக்கு முன்னரும் பின்னரும் செய்கின்றது' என்று தெரிவித்துள்ளார்.

அதாவது தெளிவான கொள்கையை ஒரு தரப்பு கடைப்பிடித்தால் மாத்திரமே போரில் வெற்றி பெறுவது சாத்தியம் என்று வாதிடும் இவர் போரானது அரசியலின் இன்னொரு வடிவமே என்பதால் இறுதி இலக்கு என்ன என்பது தொடர்பாகத் தெளிவில்லாமலோ அல்லது அரசியல் இலக்கில் இருந்து விலகியோ போர் முன்னெடுக்கப்படக்கூடாது என்று மேலும் கூறுகின்றார்.

அதாவது சரியான மூலோபாயத்தினை சரியான நேரத்தில் எதிரிக்கு எதிராக சரியான இடத்தில் இயலக் கூடிய அதிகளவு பலத்தின் துணையுடன் பயன்படுத்துவதன் மூலம் போரில் நாம் இலகுவாக வெற்றி கொள்ளலாம் என்பதே இதன் கருத்தாகும்.

தற்போதைய புதிய நூற்றாண்டிலே போரிலே வெற்றிகொள்வது என்பது எதிரியினை முற்றுமுழுதாகத் தோற்கடிப்பது அல்லது முற்றுமுழுதாக அழிப்பது என்றே பல படைத்துறை வல்லுனர்களாலும் கருதப்படுகின்றது. அதாவது எதிரிகளை இயலக்கூடியளவிற்கு முற்று முழுதாக அழிக்க முயற்சிப்பதன் மூலம் உளவியல் ரீதியாகவும் பௌதீக ரீதியாகவும் போரினைத் தொடர்ந்து நடத்தும் வல்லமையை இல்லாமல் செய்வதனையே நவீன காலப்போரியல் தந்திரோபாயமாகக் கருதப்படுகின்றது.

இதற்காக படைவளங்கள் அனைத்தும் ஒன்று குவிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருத்தல் வேண்டும். அத்துடன் போரினை தொடர்ச்சியாகவும் களைப்பின்றியும், தீர்க்கமான வெற்றியினைப் பெறும் வரைக்கும் மேற்கொள்ளல் வேண்டும். அதாவது எதிரிகளின் போரிடும் ஆற்றல் முற்றாக முடக்கப்படும் வரைக்கும் போரினை வெற்றிகரமாக நடத்தவேண்டும்.

போரினை நடத்துவதற்கு தேவையான படைகளை உருவாக்குவது மற்றும் அதனை நடவடிக்கைகளுக்காக் குவிப்பது, போரில் வெற்றி பெறுவதற்கான முதல் படியாகக் கருதப்படுகின்றது. மிக விரைவாகப் போரிற்கு தேவையான படைகளை திரட்டும் தரப்பே சமர்க்களங்களிலே எதிரிக்கு திகைப்பையும் வியப்பையும் ஏற்படுத்தும் திறனைக் கொண்டிருப்பதோடு பல அனுகூலங்களையும் போரில் பெறக்கூடியதாக இருக்கும்.

அத்துடன் துல்லியமான திட்டமிடல்களை இப்படைகள் நன்றாக ஒருங்கமைக்கப்பட்ட முறையில் விரைவாக மேற்கொள்ளவும் வேண்டும். இதன் மூலம் சிறிய ஆனால் நன்கு தயாரிக்கப்பட்ட, குறிப்பிட்ட இலக்கின் மீது முழு கவனத்தையும் செலுத்துகின்ற படையானது ஒப்பீட்டளவில் பெரிய எதிரிகளின் படைகளை சமர்க்களங்களிலே தோற்கடிக்கும். இதன் மூலம் தீர்க்கமான வெற்றிகளை எதிரிகளுக்கு எதிராக பெறமுடியும்.

தீர்க்கமான வெற்றிகள் என்று இங்கு குறிப்பிடப்படுவது சமர்க்களங்களிலே எதிரிகளின் போரிடும் ஆற்றல் மற்றும் உளவுரன் என்பனவற்றை அழித்து அவர்களால் எதிர்காலத்தில் போரிட முடியாத நிலையை ஏற்படுத்துவதாகும். இதனை சன் சூ "இலையுதிர் கால இலைகளை மரத்தில் இருந்து பிடுங்கும் ஒருவரை பலசாலி என்று ஒருவரும் கொண்டாட மாட்டார்கள். சூரியனையோ சந்திரனையோ பார்க்கும் ஒருவரை சிறந்த பார்வையை உடையவர் என்று அழைப்பதில்லை. அவ்வாறே இடி முழக்கத்தினைக் கேட்பவரை கூர்மையான காதுகளை கொண்டவர் என்று சிலாகிப்பதில்லை. அதேபோன்று போர் முனைகளிலே சிறந்த தீர்க்கமான வெற்றிகள் பெறக்கூடிய சமர்களைச் செய்யாதவர்கள் சிறந்த மூலோபாய வல்லுனர்களாகக் கருதப்படமாட்டார்கள்." என்று ஒப்பிட்டுள்ளார்.

அதாவது போரிலே இலக்கினை விரைவாக அடைவதே வெற்றியாகும். நீண்டகாலமாக இழுபட்டுச் செல்லும் சமர்கள் தீங்கானவை. ஏனெனில் சமர்கள் நீண்டகாலத்திற்கு நீடிக்குமானால் போரில் ஈடுபடும் தரப்பு களைப்பு அடைவதுடன் சண்டையினைத் தொடர்ந்து மேற்கொள்ளும் ஆர்வத்தினையும் இழந்துவிடும். நீண்ட காலமாக இழுபட்டுச் செல்லும் போரின் காரணமாக உலகிலே எந்த ஒரு நாடும் எவ்வகையான நன்மையையும் அடைந்தது கிடையாது.

போரியல் அரங்கிலே படையினர் பல்வேறு பிராந்தியங்களிலே பரப்பப்பட்டு ஐதாக்கப்படுவதன் விளைவுகளை விளங்கிக்கொள்வதற்கு பிரெஸ்ய நாட்டு தளபதியாக விளங்கிய மகா பெடரிக் பிரெஸ்ய நாட்டினை பல்வேறு நாட்டு படைகள் பலமுனைகளில் முற்றுகையிட்டபோது தனது ஜெனரல்களுக்கு கூறியது நல்ல உதாரணமாகும்.

அதாவது "மூலோபாய ரீதியிலோ அல்லது தந்திரோபாய ரீதியிலோ முக்கியமற்ற பகுதிகளில் தேவையில்லாமல் கவனம் செலுத்தவேண்டாம். படைகளையும் எல்லா முனைகளிலும் பரப்ப வேண்டாம். முக்கியமான இடங்களில் மட்டும் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். சதுரங்க விளையாட்டிலே அரசனைப் பாதுகாப்பதற்காக காய்களை நகர்த்துவது போன்றே படைகளையும் நகர்த்தவேண்டும்" என்பதுதான்.

அதாவது கவர்ச்சிகரமானதும் இலகுவானதும் ஆனால் தற்காலிகமானதுமான சிறிய வெற்றிகளுக்காக இறுதி இலக்கின் மீது குவித்துவைத்திருக்கும் கவனத்தை ஒருபோதும் திசைதிருப்பக் கூடாது என்பதே இதன் விளக்கமாகும்.

இப்பொழுது சிறிலங்கா அரசானது தனது படைத்துறை நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்கின்றது என்பதைப் பார்த்தோமானால் தந்திரோபாய ரீதியில் முக்கியமற்ற பகுதிகளை அல்லது முக்கியத்துவம் குறைந்த பகுதிகளை கைப்பற்றுவதையே படைத்துறை சாதனையாக தென்னிலங்கைக்கும் உலகிற்கும் காட்டிவருகின்றது.

தெளிவான மூலோபாயம் இல்லாது அரசியல் நலன்களுக்காகவும் சிங்கள மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் விலைவாசி உயர்வுகளையும் மறைப்பதற்கான வழியாக, படை நடவடிக்கைகளையும் தமிழ் மக்களின் தாயகப் பிரதேசங்களை வன்கவர் செய்தையும் கருதுகின்றது.

இதன் மோசமான அரசியல், பொருளாதார விளைவுகள் தற்போது தென்னிலங்கையிலே தெளிவாகத் தெரியத்தொடங்கிவிட்டன. சிறிலங்கா அரசின் திறைசேரி வெகுவேகமாக வற்றிக்கொண்டு செல்வதுடன் தற்போதைய பாதுகாப்புச் செலவீனத்தின் அதிகரிப்பிற்கு ஈடுகொடுக்க முடியாமல் வெளிநாட்டு தனியார் நிதிநிறுவனங்களிடம் அதிகளவு வட்டி வீதத்தில் கடன்களை வேண்டுவதற்கான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசு மேற்கொண்டுள்ளது. இதுதவிர அண்மையில் வரி மூலம் மக்களிடம் மேலும் நிதிகளை பெறுவதற்காக பாராளுமன்றத்திலே புதிய வரிச் சட்டங்களை அறிமுகப்படுத்தியும் உள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு யூலை மாதம் போரினை மகிந்த ராஜபக்ச அரசு தொடக்கியதில் இருந்து பாதுகாப்புச் செலவீனம் 45 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் மாகாண முதலமைச்சர்கள் தமக்கான நிதி ஒதுக்கீடு 60 வீதத்தினால் கடந்த ய+லை மாதத்தில் இருந்து குறைக்கப்பட்டு விட்டதாக முறையிடுகின்றார்கள். அத்துடன் மக்களின் நலன்களுக்கான அரசின் முதலீட்டின் மொத்ததொகையில் இருந்து 65 பில்லியன் ரூபாய்கள் குறைக்கப்பட்டு விட்டதாக அதாவது 25 வீதத்தால் குறைக்கப்பட்டு விட்டதாக ஆழநெல சுநிழசவ என்ற வர்த்தக சஞ்சிகை கடந்த ஓகஸ்ட் மாத வெளியீட்டில் குறிப்பிட்டுள்ளது.

பார்கிலே கப்பிற்றல் (Barclays Capital), கொங்கொங் மற்றும் சங்காய் வங்கி (HSBC), ஜேபி ஸ்ரான்லி கப்பிற்றல் (JP Stanley Morgan) ஆகிய நிதி நிறுவனங்களிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வேண்டும் மகிந்த அரசின் நடவடிக்கை பல்வேறு சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. அதாவது இந்த தொகையானது பொருளாதார அபிவிருத்திக்காக இல்லாது போர் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுமானால் சிறிலங்காவின் பொருளாதாரத்தில் மேலும் பலத்த தாக்கங்களை இந்நடவடிக்கை ஏற்படுத்தும் என்று பொருளியல் வல்லுனர்கள் எச்சரிக்கின்றார்கள்.

இது தவிர குழந்தைகளுக்கான பால்மாவின் விலை அண்ணளவாக 30 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிவாயுவின் விலையும் செல் நிறுவனத்தினால் 20 வீதமாக, அதாவது இந்த வருடத்திலேயே மூன்று தடவைகளுக்கும் அதிகமாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாயின் மதிப்போ நாளுக்கு நாள் மோசமாக வீழ்ச்சியடைந்துகொண்டு செல்கின்றது. மத்திய வங்கி என்ன கதைகளை அளந்தாலும் பணவீக்கமோ 17 வீதத்திற்கும் அதிகமாக எப்பொழுதும் அதிகரித்து காணப்படுகின்றது.

இவற்றினை பற்றி செய்தியாளர்கள் மகிந்த அரசின் நுகர்வோர் அமைச்சர் பந்துல குணவர்த்தனவினைக் கேள்விகேட்டபோது 'அரசின் பாதுகாப்புச் செலவீனத்திற்கான தொகை 140 பில்லியன் ரூபாய்களாகும். நாம் அதிகளவு ஆயுத தளபாடங்களை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளது. நாங்கள் புலிகளுடன் கெற்றபோலினால் சண்டை பிடிக்கவில்லை. எமக்கு பெருந்தொகையான நிதி தேவைப்படுகின்றது' என்று தெரிவித்தார். விலைவாசிகளை கட்டுபடுத்துவோம் என்று அரசு முன்னர் தெரிவித்த கூற்றுக்களுக்கு என்ன பதில் என்று ஊடகவியலாளர்கள் கேள்விகேட்டபோது அது அரசியல் பம்மாத்து என்று தெரிவித்துள்ளார்.

அதாவது சிறிலங்கா அரசானது அரசியல், பொருளாதார ரீதியில் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் நிற்பதுடன் பல்வேறு சவால்களை பல முனைகளில் எதிர்கொள்ளவேண்டியும் உள்ளது. இந்த நிலையிலே தொடர்ந்து படைத்துறை வெற்றிகளை காட்டித்தான் மகிந்த அரசு தனது பதவியினை தென்னிலங்கையிலே தக்கவைக்க முடியும். ஒரு இராணுவத்தோல்வியோ அல்லது படைநடவடிக்கைகளில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டாலோ மகிந்த அரசானது பதவி கவிழுவது நிச்சியமாகும்.

நன்றி: தமிழ் நாதம்

Please Click here to login / register to post your comments.