தமிழ்மொழிக்கு சம அந்தஸ்து; வெறும் அரசியல் கோரிக்கையா?

ஆக்கம்: கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன்
கடந்த வாரம் கொழும்பில் ஒரு நூல் அறிமுக விழா இடம்பெற்றது. சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஆங்கில நூல் ஒன்றை தமிழிலும் சிங்களத்திலும் மொழிபெயர்த்து வெளியிடுகின்ற பணியை இலங்கையில் இயங்கி வருகின்ற அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று ஆற்றியிருந்தது. மொழிகளுக்கு சம அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கைளில் ஒன்றாக அமைந்திருந்தது. உண்மையில் இரு மொழிகளுக்கும் சம அந்தஸ்து என்கின்ற அரசியல் கோரிக்கையே 1956 இன் பின் இனப்பிரச்சினையை தூண்டுகின்ற ஒரு காரணியாய் இருந்து வந்துள்ளது என்பது மட்டுமன்றி ஆயுதப் போராட்டத்தின் மூலைக் கற்களில் ஒன்றாகவும் இருந்து வந்துள்ளது.

தமிழ்க் குழுக்களின் சம அந்தஸ்திற்கான போராட்டம் தொடங்கி அறுபது ஆண்டுகளின் பின்னரும், வன்முறை எமது இருப்பின் அடிப்படையை ஆட்டம் காணச் செய்து முப்பது ஆண்டுகளின் பின்னரும் நிலைமை பார தூரமாக மாற்றமடைந்துள்ளது எனக் கூற முடியாது. தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் சட்டமும் அரசியலமைப்பின் சம அந்தஸ்து ஏற்பாடுகளும், உதாரணமாக, கொழும்பின் புதிய போக்குவரத்து விதிகள் தொடர்பான அறிவித்தல்களை கூட தமிழில் பெற்றுத் தர இயலவில்லை. எனவே, இன்றும் கூட சம அந்தஸ்து என்பதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிக அக்கறை உள்ளது எனக் கூற முடியாது.

உள்ளூரில் இந்த கூறுணர்வு குறைவாகக் காணப்பட்டாலும் அது சர்வதேச யதார்த்தம் எனக் கூற முடியாது. குறிப்பாக நாட்டினுள் இயங்கி வருகின்ற சர்வதேச நிறுவனங்கள் இங்குள்ள இனக் குழுக்களை சமமாக நடத்துகின்ற கொள்கையைக் கடைப்பிடித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக இரு மொழிகளுக்கும் சம அந்தஸ்து என்பதை கொள்கை அளவில் மட்டுமன்றி செயற்பாட்டிலும் காட்டி வருகின்றன. இப்போக்கின் வெளிப்பாடே கடந்த வாரம் இடம்பெற்ற ஆங்கில நூலின் தமிழ், சிங்கள மொழிபெயர்ப்பு ஆகும்.

இரு மொழிகளிலும் நூல் வெளியிடப்பட்டமையினால் நூல்கள் பற்றியும் மொழி பெயர்ப்பு பற்றியும் உரையாற்றுவதற்காக தமிழ் ஆய்வாளர்கள் இருவரும். சிங்கள ஆய்வாளர்கள் இருவரும் அழைக்கப்பட்டிருந்தனர். அதேபோன்று தமிழ் ஆய்வாளர்கள் இருவரும் தமிழிலும், சிங்கள ஆய்வாளர்கள் சிங்களத்திலும் உரையாற்றும்படி அழைக்கப்பட்டிருந்தனர்.

அதேசமயம், எல்லா உரைகளும் சமாந்தரமாக ஆங்கிலம் உட்பட ஏனைய இரண்டு மொழிகளிலும் மொழி பெயர்ப்பு செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் யாவும் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன. சிங்களத்தில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்த முன்னணி சிங்கள ஆய்வாளர்கள் இருவரும் தமது பணியை செவ்வனே செய்து முடித்தனர்.

தமிழில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்த ஆய்வாளர்களில் ஒருவர் தமிழ் மொழியில் பாண்டித்தியம் பெற்றவர் மட்டுமன்றி மொழிப்பற்றும் மிகுந்தவர் ஆகும். இரு மொழிக் குழுக்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்ற தொனியில் அவர் பல சமயங்களில் எழுதியும் பேசியும் வந்துள்ளார். அவர் பேசத் தொடங்கினார் தமிழில். என்ன ஆச்சரியம் தயது செய்து எனக்கு ஆங்கிலத்தில் உரையாற்ற அனுமதியுங்கள் என்பதை மட்டுமே அவரால் தமிழில் சொல் முடிந்தது. மிகுதி உரை ஆங்கிலத்தில் முறையாக செய்து முடிக்கப்பட்டது. இங்குதான் தமிழ் மொழிக்கும் சம அந்தஸ்து என்ற கோரிக்கைக்கும் தமிழர்களின் பொதுவான மனோபாவத்துக்கும் இடையிலான முரண்பட்ட உறவு வெளிப்படுகின்றது. அதன் காரணமாகவே இவ்விடயம் பற்றி, அதாவது சம அந்தஸ்துக் கோரிக்கைக்கும் மனோபாவத்திற்கும் இடையிலான தொடர்பு பற்றி சில விடயங்களை இப்பகுதியில் முன்வைக்கத் தீர்மானிக்கப்பட்டது.

மேலே கூறப்பட்ட உதாரணம் ஒரு விதிவிலக்கு அல்ல, இன்று அது பொதுவான ஒரு மனோபாவமாகவே மாறிவிட்டுள்ளது. இங்கு எமது நண்பர் தமிழ் மொழியில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தும் கூட, ஆங்கிலத்தில் உரையாற்றியமைக்குப் பல காரணிகள் இருந்திருக்கலாம். ஒன்று, இப்போது பொதுவாகவே பொது மேடைகளில் தமிழில் உரையாற்றுவதற்கான ஒரு தயக்கம் காணப்படுகின்றது. இது பல ஆண்டுகாலமாக நசுக்கப்பட்டமையின் காரணமாக ஏற்பட்ட தாழ்வுச் சிக்கலின் வெளிப்பாடாக இருந்திருக்கலாம். அல்லது எம்மை அறியாமலே எம்முள் தோற்றம் பெற்றுள்ள காலனித்துவ மனப்பான்மையின் வெளிப்பாடாக இருந்திருக்கலாம். இதன் பரிமாணம் என்னவெனில், தான் கூறுகின்ற கருத்தை புரிந்துக்கொள்வதில் `பெரும்பான்மையினர்' கஷ்டப்பட்டு விடக்கூடாது என்கின்ற கரிசனை ஆகும். இன்னொரு வகையில் கூறுவதாயின் பெரும்பான்மையினரைத் திருப்திப்படுத்தவதற்கான முயற்சி இதுவாகும்.

இன்றைய பொதுவான போக்கு என்னவெனில், பெரும்பாலான விடயங்கள் சிங்களத்தில் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் தமிழில் மொழிபெயர்க்கப்படுவதாகும். மேற்கூறப்பட்ட ஓரிரண்டு நிகழ்ச்சிகளிலேயே அல்லது சந்தர்ப்பங்களிலேயே தமிழில் கூறப்பட்டு சிங்களத்தில் மொழிபெயர்க்கப்படுகின்ற சாத்தியம் ஏற்படுகின்றது. இந்த உணர்வு அதாவது எப்பொழுதும் மொழிபெயர்த்துக் கூறப்படுகின்ற அனுபவம் எத்தகையது என்பதை பெரும்பான்மையினர் உணர்ந்து கொள்ள வேண்டிய அல்லது உணர்த்த வேண்டிய ஒரு தேவை உள்ளது. ஏனெனில், அரசில் இருந்து ஊற்றெடுக்கின்ற பாகுபாடான திட்டங்கள் சிலவாயினும் புரிந்துணர்வின்மையின் காரணமாக ஏற்படுபவை என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இன்று இலங்கையில் இன ரீதியான பிரச்சினை ஒன்று இல்லை என்று கூறுபவர்கள் பலர் அவ்விதமான நம்பிக்கையை உண்மையில் கொண்டுள்ளவர்களாகும். உண்மையில் அவ்விதமான பிரச்சினை ஒன்று உள்ளது என்பதை இத்தகையவர்களுக்கு புரிய வைக்க வேண்டிய அவசியம் ஒன்று உள்ளது. அவர்களது சுமையை குறைப்பதன் மூலம் இது அடையப்பட முடியாது.

தமிழில் பேச அழைக்கப்படுபவர்கள் ஆங்கிலத்தில் பேசுகின்ற போது, அடுத்த நிகழ்வில் தமிழுக்கு ஒரு பகுதி ஒதுக்கத் தேவையில்லை என்ற அபிப்பிராயம் தோன்றுமாயின் அது தீர்மானம் மேற்கொள்பவரின் தவறாக இருக்க முடியாது. அத்தகைய சந்தர்ப்பங்களில் தமிழுக்கு சம அந்தஸ்து வழங்கப்படவில்லை என்று எம்மவர்கள் கூச்சல் எழுப்பாமல் இருக்க மாட்டார்கள் என்பது நிச்சயமானது. அது இருக்கின்ற பிரச்சினையை தீவிரப்படுத்த உதவுமே அன்றி வேறில்லை.

மேற்கூறிய உதாரணத்தில் இருந்து தோற்றம் பெறுகின்ற முக்கியமான ஒரு கேள்வி என்னவெனில், நம்மவர்கள், சம அந்தஸ்து என்பதை உண்மையில் கோருகின்றார்களா அல்லது அது அரசியல் ரீதியாகக் கவர்ச்சிகரமானது அல்லது இலாபகரமானது என்பதனால் அதனை வலியுறுத்தி வருகிறார்களா என்பதாகும். சமத்துவக் கோரிக்கை என்பது அரசியல் ரீதியாக இலாபகரமானது என்பதன் காரணமாக முன்வைக்கப்படுமாக இருப்பின் இத்தகைய போக்கும் மனோபாவமும் கண்டிக்கத்தக்கவை அல்ல.

மாறாக இப்போக்கு தாழ்வுணர்ச்சியின் காரணமாகவோ அன்றி காலனிகத்துவ மனோபாவம் காரணமாகவோ ஏற்பட்டிருக்குமாயின் வருந்தத்தக்கது என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்காவில் நீக்ரோக்கள் அடிமைகளாக இருந்த காலத்தில் அவர்கள் கறுப்பர்கள் என அழைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட போது நான் கறுப்பன் , அதனால், "நான் பெருமைப்படுகிறேன்" என்ற நிலைப்பாட்டை அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். அது அவர்களது சுய கௌரவத்தையும் மன வலுவையும் உறுதி செய்து கொள்ள உதவியிருந்தது. அத்தகைய ஒரு நிலை இங்கு காணப்படுகின்றது என்று கூற முடியாது. இங்கு நாம் தாழ்வுணர்ச்சியின் காரணமாக வேறு மொழிகளில் தஞ்சமடைகின்ற ஒரு போக்கே காணப்படுகின்றது. இது ஆங்கிலத்தின் அவசியத்தைக் குறைத்துக் கூறுவதற்கான ஒரு முயற்சி அல்ல. ஆங்கில புலமையும் தேர்ச்சியும் மிக அவசியமானவை. இன்று ஆங்கிலம் இன்றி வளர முடியாது என்ற யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியதவசியம். ஆயினும், பிரச்சினை தமிழுக்கு மாற்றீடாக ஆங்கிலத்தை பயன்படுத்த விளைகின்ற போதே ஏற்படுகின்றது.

இங்கு நாம் கூற முற்படுவது யாதெனில், எமது மனோபாவமும் செயற்பாடுகளும் அடிப்படையான விடயங்கள் தொடர்பில் தவறான சமிக்ஞைகளை அனுப்பிவிடக் கூடும். மேற்கூறிய உதாரணம் சிங்களமும் ஆங்கிலமும் போதுமானவை என்ற அபிப்பிராயத்தை தோற்றுவித்துவிடக்கூடும். உண்மையில் சிங்களமும், ஆங்கிலமும் மட்டும் போதுமானவையா அல்லது தமிழுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பது முக்கியமானது. தமிழுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமாக இருப்பின் அது தொடர்பில் எம்மவர்களுக்கு நிச்சயமான ஒரு பொறுப்பு காணப்படுகின்றது.

தமிழுக்கு சம அந்தஸ்து வழங்கப்படாத போது கூச்சல் போடுவோம். ஆனால், அது வழங்கப்படுகின்ற போது பயன்படுத்திக்கொள்ள மாட்டோம் என்பது ஆக்கபூர்வமான ஒரு நிலைப்பாடாக இருக்க மாட்டாது. பொதுவாக இனப்பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதிலும் குறிப்பாக சம அந்தஸ்தை அடைந்து கொள்வதிலும் சிறுபான்மையினருக்கும் ஒரு பொறுப்புக் காணப்படுகின்றது. அவற்றை அடைந்து கொள்வதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட வேண்டிய கடமையும் காணப்படுகின்றது. வெறுமனே குற்றம் சாட்டுவது மட்டும் போதுமானதாக இருக்கப் போவதில்லை. நாம் எதுவும் செய்யப் போவதில்லை. பெரும்பான்மையினர் அது எதுவாக இருப்பினும் வழங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதுமே கூட ஒருவகையில் காலனித்துவ மனோபாவமே.

Please Click here to login / register to post your comments.