சிங்களப் படைகள் ஆரம்பித்துள்ள வன்னி மீதான பெரும் போர்

வன்னி நிலப்பரப்பு மீது பெருமெடுப்பில் சமரொன்றைத் தொடுத்து அதை ஆக்கிரமிக்கவேண்டும் என்பது மகிந்த அரசின் கனவாக உள்ளது. இந்தச் சமருக்கு ஜே.வி.பி மற்றும் கெலஉறுமய போன்ற அதிதீவிர இனவாதக் கட்சிகள் மட்டுமல்ல ஐக்கிய தேசியக் கட்சியும் ஆதரவளிப்பதாகப் பகிரங்கமாக அறிவித்துள்ளது.

இப்போது வன்னி ஆக்கிரமிப்பு சிங்களக் கட்சிகளின் பொதுக்கனவாகிவிட்டது. சிங்கள மக்களும் அத்தகையதொரு ஆக்கிரமிப்புப் போருக்கு ஆதரவளித்துள்ளனர். சமாதான விரும்பிகளாகக் காட்டிக்கொண்ட சிங்களப் புத்திஜீவிகளும் வன்னி மீதான படையெடுப்பிற்கு ஆதரவு தெரிவித்து சிங்கள ஊடகங்களில் கருத்துரைகள் எழுதி வருகின்றனர்.

வன்னி மீதான படையெடுப்பு முயற்சிகளுக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் சில நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன பெருமெடுபபில் மனித அவலம் நிகழும் என்ற எதிர்பார்ப்பில் அத்தகைய படையெடுப்பை அவை எதிர்க்கின்றன.

ஆயினும், மகிந்த அரசு வன்னிமீதான சமரை நடாத்த விரும்புகின்றது. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச வன்னி மீதான படையெடுப்புப் பற்றி அடிக்கடி கருத்து வெளியிட்டு வருகின்றார்.

இதே கருத்தைச் சிங்களத்தின் சனாதிபதியும் - பாதுகாப்பு அமைச்சரும் - முப்படைத் தளபதியுமாகப் பொறுப்பு வகிக்கும் மகிந்த ராஜபக்சவும் வெளியிடடுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தைக் கைப்பற்றியே தீருவோம் என்று அவர் அண்மையில் பகிரங்கமாகக் கருத்துவெளியிட்டுள்ளார்.

கருத்துக்கள் - சூழுரைகளுக்கு அப்பால் இப்போது சிங்கள அரசு வன்னிமீது தனது படையெடுப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தொடங்கிவிட்டது.

மன்னார் களமுனையில் - முகமாலைச் சமரரங்கில் சிங்களப் படைகள் களங்களைத் திறந்துள்ளன.

மாந்தை மேற்கு உதவி அரச அதிபர் பிரிவில் மக்கள் இப்போது வசிக்கமுடியாத அளவிற்குக் கடுமையான எறிகணை மற்றும் வான் தாக்குதல்களைச் சிங்களம் அங்கே நடாத்திவருகின்றது. பல்லாயிரம் மக்கள் இடம்பெயர்ந்து அல்லற்படுகின்றனர்.

முகமாலைச் சமரரங்கிலும் கடந்த இரண்டு மூன்று நாட்களாகப் பெருந்தாக்குதலைப் படையினர் தொடுத்துள்ளனர். கிளாலி - நாகர்கோவில் களமுனைகளில் சிங்களப் படைகள் முன்னேற்ற முயற்சிகளையும் செய்து பார்க்கின்றன. இந்த முன்னேற்ற முயற்சிகள் எல்லாவற்றையும் புலி வீரர்கள் முறியடித்துப் படையினரை முடக்கிவருகின்றனர்.

வன்னி வாழ் மக்கள் மீது சாவையும் - இடப்பெயர்வு அவலங்களையும் சுமத்தி, கிழக்கு மாகாணச் சமர்களைப்போல, நிலம் ஆக்கிரமிக்க சிங்களப்படைகள் ஆசைப்படுகின்றன.

வன்னியைச் சிங்களப்படைகள் ஆக்கிரமித்தால் பெரும் இனப்படுகொலை நடக்கும் என்பது சர்வதேச மனித உரிமை வாதிகளின் கருத்தாகவுள்ளது. அதேவேளை, வன்னி மக்களை ஒரு பெரும் போருக்குப் புலிகள் இயக்கம் தயார்ப்படுத்தி வைத்திருப்பதால் சிங்களப்படைகளின் ஆக்கிரமிப்பு ஆசைநிறைவேற வாய்ப்பில்லை என்றும் இராணுவ ஆய்வாளர்கள் கருத்துக்கூறிவருகின்றனர்.

ஒட்டுமொத்தத்தில் ஒரு பெரும் போர் வன்னி மண்ணில் நிகழப்போகின்றது என்று சர்வதேச சமூகம் எதிர்பார்க்கின்றது.

எதிரி ஆசைப்படுவது போல வன்னிச் சமர் சிங்களப் படைகளுக்கு இலகுவானதாக இருக்கப்போவதில்லை. வன்னி மண்ணின் ஒவ்வொரு குடும்பமும் சமரில் நேரடியாகப் பங்கேற்கும் அளவிற்கு விடுதலைப்போராட்டம் விரிவடைந்துள்ளது.

புலிகள் இயக்கத்தின் ஆட்பலமும் பெருகியுள்ளது. எதிரி தொடுத்த சிறுசிறு தாக்குதல்களையெல்லாம் முறியடித்த புலிவீரர்கள் உற்சாகத்துடனும் - ஓர்மத்துடனும் களமுனையில் காத்திருக்கின்றனர்.

வன்னி வாழ் மக்களும் இத்தகையதொரு உறுதியுடனும் ஓர்மத்துடனும் செயற்படவேண்டிய வரலாற்றுக் கட்டம் அண்மித்துக்கொண்டிருக்கின்றது.

“ஜெயசிக்குறு” சமரை மக்களின் முழு ஆதரவுடன் புலிகள் இயக்கம் முறியடித்து வெற்றிவாகை சூடியது இன்று பெருமைமிகு வரலாறாக எம் முன் உள்ளது.

மீண்டும் அத்தகையதொரு இராணுவ சாதனை படைத்து இனமானம் காக்க மக்களை வரலாறு அழைக்கின்றது.

மக்களின் விடுதலைப்பற்றும் - வன்னியின் புவியியற் சூழலும் சிங்களப் படைகளை அச்சமூட்டிக்கொண்டே இருக்கின்றன. அதனால் தான் கடந்த ஒருவருடகாலமாக வன்னி மீதான பெரும் சமரை எதிரி ஒத்திவைத்துக்கொண்டே வந்தான்.

சிங்களப் படைகளின் ஆக்கிரமிப்பிற்குள் உள்ள இடங்களில் வாழும் தமிழர்களின் வாழ்க்கை இன்று அவலம் நிறைந்ததாகவே உள்ளது. கொலைகளும் - காணாமல்போதல்களும் - சித்திரவதைகளும் அங்கே நாளாந்த நிகழ்வுகளாக உள்ளன.

மனித உரிமைக் கழகங்களிடம் தஞ்சம் கோரும் தமிழரின் தொகை அங்கே பெருகிவருகின்றது.

இத்தகையதொரு அவலத்தை மக்கள் மீதும் கட்டவிழ்த்துவிட ஆசைப்படும் சிங்களப்படைகளின் எண்ணத்தை முறியடிக்கவேண்டிய பணி இன்று எம்முன் உள்ளது.

வன்னியில் புலிகள் புரியப்போகும் எதிர்ச்சமர் வன்னியைக் காக்கும் தற்காப்புப்போர் என்ற நிலைக்கும் அப்பால், வன்னியிலிருந்து நிலம் மீட்கும் போராக முழுப்பரிமாணம் பெறுவதற்கு மக்களின் ஒத்துழைப்பும் - பங்களிப்பும் மிக அவசியமானதாகும்.

Please Click here to login / register to post your comments.