பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மேசையில் ஒன்றும் இல்லையே!

ஆக்கம்: வ.திருநாவுக்கரசு
 • போர் ஒரு மாயையின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுவதாகக் கூறுகிறார் பிரதம நீதியரசர்

  ஐ.நா.வின் 62 ஆவது வருட மாநாட்டில் நேற்றைய ஆரம்ப நாளிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உரையாற்றியுள்ளார். வரலாற்றில் முதல் நாளிலேயே இலங்கை தலைவர் ஒருவர் உரையாற்றியது இது தான் முதல் தடவை என்ற வகையில் அது ஒரு பெரும் பேறாகக் கொள்ளப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம், மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகள் அடங்கலான பல விடயங்கள் மேற்படி மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளன. இக்கட்டுரை அச்சுக்குப் போகும் வரை ஜனாதிபதி ராஜபக்ஷ ஆற்றிய உரையின் விபரங்கள் வெளியாகவில்லை.

  எவ்வாறாயினும் பொதுவாக நாட்டின் அரசியல், பொருளாதார விடயங்கள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பான விடயங்கள் தான் அவரது உரையின் உள்ளடக்கமாயிருக்கலாம். இம்மாதம் முற்பகுதியில் 6 ஆவது ஆண்டு நினைவு கூரப்பட்டதாகிய 9/11 சம்பவத்தையும் அவர் தொட்டுப் பேசக்கூடும். ஏனென்றால் அதனையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் முடுக்கி விட்டதாகிய பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்பது பயங்கரவாதத்தின் மூல காரணத்திற்குப் பரிகாரம் தேடாமல் கண்மூடித்தனமாக இராணுவ அடக்குமுறையினை மேற்கொள்ளும் நாட்டுத் தலைவர்கட்கு மிக வாய்ப்பான சுலோகமாய் அமைகிறது. இன்றைய நிலையில் இலங்கையைப் பொறுத்தவரை யுத்தம் தொடரப்படுவது ஏற்புடையதல்ல என சர்வதேச சமூகத்தினால் சற்று அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

  அது மட்டுமல்லாமல் , உள்நாட்டிலும் குறிப்பாக நீதித்துறையிலிருந்தும் அதற்கு ஒப்பான கருத்துகள் மற்றும் கரிசனைகள் வெளிக்காட்டியிருப்பதைக் காண முடிகிறது.

  விடுதலைப் புலிகளை 100% தோற்கடிப்போம்

  விடுதலைப் புலிகளை 100% தோற்கடிக்கப்படும் வரை யுத்தம் தொடர்ந்து நடத்தப்படுமென அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ திருகோணமலை கடற்படைத்தளத்தில் இடம்பெற்ற கொண்டாட்டத்தின் போது ஜனாதிபதி ராஜபக்ஷ முன்னிலையில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்தார். அதன்பின் ஒறுகொடவத்தையில் இடம்பெற்ற வைபவமொன்றின் போது அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஏ.பிளேக் உரையாற்றுகையில்;

  சில இராணுவ வெற்றிகளை ஈட்டிய அடிப்படையில் இலங்கை அரசாங்கம் இராணுவத்தீர்வை நோக்கி நகரக்கூடாது. பயங்கரவாதத் தாக்குதல்களிலிருந்து நாட்டைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாயினும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் அபிலாஷைகளைத் திருப்திப்படுத்தும் நோக்கிலான அரசியல் தீர்வையே நோக்கி நகர வேண்டும்.

  சமஷ்டி மற்றும் ஒற்றையாட்சி போன்ற சர்ச்சைக்குரிய சொற்பதங்களைத் தவிர்த்துக் கொள்ளலாம். தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலம் உண்டு என்று நம்பிக்கையூட்டும் விதத்தில் அரசாங்கம் செயற்பட வேண்டிய காலம் வந்துவிட்டது. மேலும், மக்கள் பிரதிநிதிகளோடு அரசாங்கம் கலந்துரையாடிக் கருமமாற்றத் தவறினால் துணைப்படைகளைக் கட்டுப்படுத்தத் தவறினால் பிரச்சினைக்கான தீர்வு காண்பது கடினமாகிவிடும் என்றெல்லாம் கூறியுள்ளார்.

  அமெரிக்கா ஒரு சமஷ்டி முறைமை கொண்ட நாடு என்பதை யாரும் அறிவர். என்றாவது தூதுவர் பிளேக் கூறிவைத்திருக்கலாம்.

  பிரதம நீதியரசர் வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் அடுத்து பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா இருவேறு வைபவங்களில் முன்வைத்த கருத்துகளும் கரிசனைகளும் குறிப்பாக ஆளும் தரப்பினரால் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியவையாகும். முதலாவதாக அண்மையில் அனுராதபுரத்தில் மேல் முறையீட்டு நீதிமன்ற திறப்பு விழாவின் போது எந்தவொரு பிரஜைக்கும் அநீதி விளைவிக்காமல் நெகிழ்வுத் தன்மையான அதிகாரப் பரவலாக்கம் ( devolution) மூலம் இலங்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் எனக் கூறியுள்ளார். அங்கே அவர் மேலும் கூறியதாவது;

  இந்த யுத்தம் ஒரு மாயையின் அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசாங்கம் மேற்கூறிய முறையில் அதிகாரப் பரவலாக்கத்தைச் செய்யலாம். நீதித்துறை இதனைச் செய்யலாமென்றால் ஏனைய வகைகளும் இதனை இலகுவாகச் செய்யலாம். சமஷ்டி (Federal) எனும் சொற்பதத்தினால் நாம் அமிழ்ந்து போகத் தேவையில்லை.

  எவ்விதமான அரசியலமைப்பின் கீழேயும் அதிகாரப் பரவலாக்கம் செய்யமுடியும். நாம் ஒருவரையொருவர் கொல்லத் தேவையில்லை. நாமாகவே நமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து நன்னோக்குடன் புதியதொரு அதிகாரப் பரவலாக்க முறைமையினை நாம் உருவாக்க வேண்டும். இவ்வாறு பிரதம நீதியரசர் அழுத்திக் கூறும் பொழுது அதிகாரப்பரவலாக்கம் என்பதற்கப்பால் அதிகாரப் பகிர்வு ( power- sharing) எனும் எண்ணத்தைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் போல் தெரிகிறது. மேலும் சமஷ்டி எனப்படுவது பிரிவினை அல்லது தனிநாடு என தென்னிலங்கையில் விசமத்தனமாக காலங்காலமாக அர்த்தம் கற்பித்து

  வந்துள்ளமையால், அது பிரிவினைவாதம் அல்ல என அவர் விளக்கியிருந்தால், அறியாமையில் அமிழ்ந்திருப்பவர்கட்கும் தெளிவு ஏற்படச் செய்திருக்கும்.

  இரண்டாவதாக சென்றவாரம் புதுக்கடைப்பகுதியில் காதி சபையொன்றினை அங்குரார்ப்பணம் செய்தபோது, பிரதம நீதியரசர் கூறியதாவது; "இறுதி வெற்றியினை யுத்தத்தினால் எட்ட முடியாது. அது தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுப்பதன் மூலம் அடைய வேண்டியதொன்றாகும். துப்பாக்கி ரவைகள், பீரங்கி மற்றும் பல்குழல் றொக்கற்றுகள் மூலம் தாக்குதல்கள் நடத்தி யுத்தத்தில் வெற்றியீட்ட முடியுமென்றாலும், மக்கள் மங்களை வெல்ல முடியாது. தமிழ் மக்களுக்கு எமது ஆதரவு உண்டு என அவர்கட்கு நம்பகத்தன்மை ஏற்படுத்த வேண்டும். அல்லாவிட்டால் இந்த பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது. மக்களுக்குத் தேவை சாந்தி சமாதானத்தைத் தரவல்ல அரசாங்கம். யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணிகளிடமிருந்து கப்பம் கோரப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் கற்பனை பண்ணிப்பார்க்க முடியாதளவு அவலங்களை அனுபவிக்கின்றனர். அதற்கப்பால் கப்பங்களும் கோரப்படுகின்றன. நாம் மக்கள் மீது யுத்தத்தை திணித்துக் கொண்டிருக்கிறோம். தமிழ், முஸ்லிம் மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென பொதுமக்களின் அபிப்பிராயம் வளர்க்கப்பட வேண்டும்". இவ்வாறு பிரதம நீதியரசர் கூறியுள்ளார்.

  கோதாபயவின் மாற்று அறிவித்தல்

  இதனிடையில், விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைக்கு இணங்கினால் பாரிய இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது. சென்ற வருடம் அக்டோபரில் இடைநிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கு அவர்கள் முன்வரலாம் என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். அதாவது, அவர் திருகோணமலையில் ஆற்றிய உரையில் முழங்கியதற்கு மாறாக, மென்மையான போக்கினைக் கடைப்பிடிக்க தாம் தயார் என்ற அர்த்தப்படவே பிந்திய நிலைப்பாட்டினை முன்வைத்துள்ளதாக கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மேசையில், ஒன்றுமேயில்லை. எனவே, ஐ.நா.வில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்கொள்ளக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காகவே பாதுகாப்புச் செயலாளர் பேச்சுவார்த்தைக்குத் தயாரென அறிவித்துள்ளார் போலும்.

  குடும்ப ஆதிக்கம்

  குடும்ப ஆதிக்க அரசியலானது இந்த நாட்டுக்கு அன்று தொட்டு ஊறு விளைவித்து வந்துள்ளது. தனக்குப்பின் தனயன் டட்லி எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் முதலாவது பிரதமர் டி.எஸ். சேனநாயக்க செயற்பட்டு, அன்றைய ஐ.தே.க. அரசாங்கத்தில் சிரேஷ்ட அமைச்சராகவும், சபை முதல்வராகவும், விளங்கியவராகிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டார். அதாவது, டட்லி சேனநாயக்காவை அடுத்த பிரதமராக்குவதற்கே அத்திட்டம் அரங்கேற்றப்பட்டது. அதன் காரணமாகவே பண்டாரநாயக்க ஐ.தே.க.வை விட்டுவிலகி ஷ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை உருவாக்கினார். கூடவே, பிரதமர் பதவியை விரைந்து எட்டுவதற்காக, "24 மணித்தியாலத்தில் சிங்களம்" எனும் தீச்சுவாலை போன்ற சுலோகத்தினை முன்வைத்தவர். பிரதமர் பதவியும் கைக்கெட்டி "சிங்களம் மட்டும்" சட்டமும் நிறைவேற்றப்பட்டு விட்டது. பின்பு பண்டாரநாயக்க குடும்ப ஆதிக்கம் நிலைகொண்டுவிட்டது. நாடும் பின்னடைந்துவிட்டது.

  இன்றைய நிலைமை என்னவென்றால் ராஜபக்ஷ குடும்ப ஆதிக்கம் முன்னெப்போதையும் விட அப்பட்டமானதாகிவிட்டது என்பதாகும். இவற்றின் காரணமாக நாட்டு நலனுக்கு பங்கம் விளைவிக்கப்படுகிறது என்பதே எமது கவலையாகும். மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் உறவினர் உள்வாங்கப்படுதல் பளிச்சென்று தெரியும் விடயமாகிவிட்டதென சென்றவார இறுதி ஆங்கில இதழொன்றின் ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

  காலஞ்சென்ற அமைச்சர் அன்வர் இஸ்மாயில் மறைந்த கையோடு, ஜனாதிபதியின் சகோதரரும் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ அன்வரின் இடத்திற்குப் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அன்வர் இஸ்மாயில் தேசிய முஸ்லிம் காங்கிரஸ் (தே.மு.கா.) தேசிய பட்டியல் மூலம் நியமிக்கப்பட்டிருந்தவராகையால், அவருக்குப் பதிலாக சம்மாந்துறையைச் சேர்ந்த முஸ்லிம் பிரதிநிதி ஒருவரை நியமிக்குமாறு வேண்டி தே.மு.கா. தலைவர் அமைச்சர் ஏ.எல்.எம். அத்தாவுல்லா படாதபாடுபட்டார். ஜனாதிபதி அதனை கிஞ்சித்தும் பொருட்படுத்தவில்லை. தொப்பிகல அல்லது குடும்பிமலை வெற்றிவிழா கொண்டாட்டத்தின் போது அத்தாவுல்லா ஜனாதிபதிக்கு விருது வழங்கி மாலையும் சூட்டியவர். அவ்வாறான புகழாரங்களால் எதுவித பயனும் இல்லை. முஸ்லிம் தலைமைகள் சின்னாபின்னப்பட்டு பட்டம் பதவிகளில் ஒட்டிக் கொண்டிருப்பது சிங்கள பேரினவாதத்திற்கு பேருதவியாயிருக்கிறது. புத்தளத்தில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் பிரதியமைச்சர் கே.ஏ. பாயிஸ் இருவருக்குமிடையில் ஏற்பட்ட தகராறும், அதனைத் தொடர்ந்து நிலவிய பதற்ற நிலைமையும் சந்திசிரிக்கும் விடயமாகியுள்ளது.

  COPE தொடர்பான சமாச்சாரங்கள்

  பொது நிறுவனங்களுக்கான பாராளுமன்ற குழுவின் (COPE) தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ 46 பொது நிறுவனங்களின் கீழ் ஊழல்கள் நிறைந்திருப்பதாகவும், அதன் காரணமாக அரசாங்கத்துக்கும் ஏறத்தாழ 200 பில்லியன் ரூபா இழக்கப்பட்டுள்ளதாகவும், அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கலான பல கனவான்கள் அவ் ஊழல்களில் சிக்கியிருப்பதாகத் தெரிகிறது. அதனையிட்டு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு தடைகள் தாமதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஊழல்கள், தொடர்பான மேற்படி அறிக்கைகள் மீது ஐ.தே.க. விலிருந்து தாவிய சில அமைச்சர்கள் ஆத்திரமடைந்து, ஜனாதிபதியிடம் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக புகார் செய்துள்ளனர். அதனையடுத்து, ஜனாதிபதியும் விஜேதாச மீது கோபம் கொண்டவராகக் காணப்பட்டார். இன்று இலஞ்ச ஊழல் விடயங்கள் மலைபோல் குவிந்துள்ள நிலையில் அதற்கெதிராகவே யுத்தம் தொடுக்க வேண்டும். ஆனால், இது தொடர்பாக அரசாங்கத்தின் மெத்தனப் போக்குத்தான் புரியாத புதிராயிருக்கிறது.

  Please Click here to login / register to post your comments.