சேதுக் கால்வாய் தமிழரின் வளர்ச்சிக்கு வாய்க்கால்

ஆக்கம்: மறவன்புலவு க. சச்சிதானந்தன்
இலங்கைத் தீவைச் சுற்றிய நெடிய, கால நீட்டமான கப்பல் தடத்துக்கு மாற்றுத் தடம் இந்தியக் கரையோரமாக உள்ளதா என்ற தேடல் கடந்த 200 ஆண்டு வரலாறுடையது. ஆங்கிலேயர் காலத்தில் 9, விடுதலைக்குப் பின் 7 ஆக, 16 வல்லுநர் குழுக்கள் தந்துவந்த பரிந்துரைகளின் திரண்ட தெளிவே இன்றைய சேதுக் கால்வாய்த் திட்டம்.

வங்காள விரிகுடாவுக்கும் அரபிக் கடலுக்கும் இடையிட்ட கடல் தரையானது, 1000 மீ. ஆழத்திலிருந்து செங்குத்தாக உயர்கிறது. தமிழத்துக்கும் இலங்கைக்கும் இடையே 916 மீ. சராசரி ஆழமுள்ள, 10,000 சதுர கிமீ. பரப்புள்ள மேடையாகிப் பாக்கு நீரிணையைத் தாங்கி நிற்கிறது. பாக்கு நீரிணையின் அயல்கடல் நீரோட்டங்கள், அதன் வட தென் விளிம்புகளை நீள் திடல்களாக்கின. கப்பல் பயணத்துக்கு அத்திடல்கள் இடையூறாயின. 30 கிமீ.க்கும் கூடுதலாக நீளும் அவ்விரு திடல் தொடர்களில் 300 மீ. அகலத்துக்கு 12 மீ ஆழத்துக்குத் தூர் வாருவதால் அமைவதே சேதுக் கால்வாய். திடல் தொடர்களுள்ள விளிம்புகளைக் கடந்து பாக்கு நீரிணையுள் புகின், கப்பல் பயணத்துக்குரிய ஆழம் உண்டு.

300 மீ. அகலக் கால்வாய் ஆதலால் சம காலத்தில் இருவழிப் பயணம் சாத்தியமாகிறது. 12 மீ. ஆழமுள்ளதால் உலகின் பயண, சரக்கு மற்றும் பன்முகச் சேவைக் கப்பல்களுள் 84% கப்பல்கள் இக்கால்வாய் வழி பயணிக்கலாம். 11 மீ. அமிழ் அளவுக்கும் 40,000 தொன் தாங்கு எடைக்கும் கூடுதலான அளவுகளுள்ள கப்பல்களின் எண்ணிக்கை 16% மட்டுமே.

  • பனாமாக் கால்வாயின் ஆழம் 12 மீ.; அகலம் 32 மீ.; நீளம் 82 கிமீ.; பயண நேரம் 8 - 10 மணி.
  • சூயஸ் கால்வாயின் ஆழம் 21 மீ.; அகலம் 70 மீ.; நீளம் 163 கிமீ.; பயண நேரம் 11 - 16 மணி.
  • சேதுக் கால்வாயின் ஆழம் 12 மீ.; அகலம் 300 மீ.; நீளம் 168 கிமீ.; பயண நேரம் 10 - 11 மணி.

சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்குக் கடல்வழி இலங்கையைச் சுற்றி வர 1400 கிமீ. தூரமும் 65 மணி நேரமுமாகும்; சேதுக் கால்வாய் வழியாகப் பயணிக்கின் 753 கிமீ. தூரமும் 35 மணி நேரமுமாகும்.

ஆண்டுக்கு 4,000 கப்பல்கள் சேதுக் கால்வாயைப் பயன்படுத்தத் தொடங்கும். அடுத்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரு மடங்காகலாம். வாடை மற்றும் தென்றலின் கடுங்காற்று வீசும் நாள்களைத் தவிர, ஆண்டுக்கு 330 நாள்களுக்குக் கப்பல்கள் கால்வாயில் பயணிக்கலாம்.

இன்றைய இந்தியாவில் 12 பெருந் துறைமுகங்கள். கிழக்குக் கரைக்கும் மேற்குக் கரைக்கும் இடையேயும், கிழக்கிலிருந்து செங்கடல் வழியாக ஐரோப்பாவிற்கும் மேற்கிலிருந்து மலாக்கா நீரிணை வழியாகத் தூர கிழக்கிற்கும் பயணிக்கும் கப்பல்களுக்குச் சேதுக் கால்வாயூடான பயணமானது, தூர, கால, எரிபொருள், மனித ஆற்றல் செலவுகளில் 35% - 50% சேமிப்பைத் தரும்.

மொத்த உள்ளூர் உற்பத்தியின் வளர்ச்சி, 1980களில் 5.7% ஆக இருந்தது, 6.5% ஆக, எட்டாம், ஒன்பதாம் ஐந்தாண்டுத் திட்ட காலங்களில் சராசரியாக உயர்ந்து வருகிறது. வேகமாக வளரும் பொருளாதாரக் கட்டமைப்புள்ள நாடாக இந்தியா மாறி வருகையில் ஒவ்வொரு செயல் அலகிலும் செலவினங்கள் குறைந்து, உற்பத்தி பெருகி, எரிபொருளை விரயமாக்காது, மனித ஆற்றலை முழுமையாக முடுக்கிவிட வேண்டிய கட்டாயத்தால், சேதுக் கால்வாயில் கப்பல் பயணம் தரும் 35% - 50% சேமிப்பு, இவ்வளர்ச்சிக்கு உறுதுணையாகும்.

திருப்பூர்ப் பின்னலாடைத் தொழில் கடந்த 10 - 15 ஆண்டுகளில் முடுக்கிய வேகத்தில் வளர்ந்து, உற்பத்திப் பொருள்களில் பெரும் பகுதி தூத்துக்குடி மற்றும் கொச்சித் துறைமுகங்களில் இருந்து ஏற்றுமதியாகி, செங்கடல் - சூயஸ் கால்வாய் வழியாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்கச் சந்தைகளை அடைகிறது. 1854இல் சூயஸ் கால்வாய்க்குக் கால்கோள் இட்டோ ர், திருப்பூரை நேரடிப் பயனாளியாகச் சுட்டியிருக்க மாட்டார்கள். ஆனாலும் சூயஸ் கால்வாய் வெட்டியதன் நோக்கமான மேலை நாட்டவரின் மேலாட்சி மறைந்து, வளரும் ஆசிய நாடுகளின் ஏற்றுமதிக்குச் சூயஸ் கால்வாயின் பங்களிப்பு சொல்லொணா ஆக்கம் தருகிறதே!

தில்லிக்கு அருகே குர்கோவான் சாலை அமைக்கத் திட்டமிட்ட பொழுது வீண்செலவு எனக் கூறியோர், இன்று அந்தச் சாலை திறந்தபின், நெரிசலாகப் பயணிக்கும் வாகனத் தொகையால் வியப்படைவர். திட்டமிடுக, அமைக்க, திறந்து விடுக, பயனாளிகள் நாமிருக்கிறோம் எனப் புதிது புதிதாய்ப் பூவிதழ் விரியத் தேன் தேடும் வண்டுகளாக நுகர்வோரும் பயனாளிகளும் புதிது புதிதாகக் குவிவது இயற்கை. சேதுக் கால்வாயைத் திறந்தபின், திட்டமிட்ட பயனாளிகள் மட்டுமன்றி, எதிர்நோக்காத் திட்டமிடாப் பயனாளிகள் மிகுந்து மொய்க்கக் காத்திருக்கின்றனர் என்பதே மெய்நிலை.

கால்வாயை அமைப்பதாலும் கப்பல்கள் பயணிப்பதாலும் சுற்றுச் சூழலுக்கு, மீனவருக்கு, கனிம வளங்களுக்கு, பாதுகாப்புக்கு, புனித நம்பிக்கைகளுக்கு அச்சுறுத்தலும் கேடும் ஊறும் வருமெனக் கூறுவதுடன் பொருளாதார மேம்பாடும் இல்லை என்ற வாதங்கள் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அணிகலன்கள். அவ்வாறு எழும் ஐயங்களும் மாற்றுக் கருத்துரைகளும் திட்டமிடுவோரின் வழிகாட்டிகளாம்.

பவளப் பாறைகள் அகழ்வுத் தடத்தில் உள்ளன. பவளப் பாறைகளைச் சுற்றி அரிய உயிரினங்கள் உள்ளன எனக் கூறுவது பொருத்தமல்ல. வடக்கே கோடித் திடல் தொடரிலிருந்து தெற்கே சேதுத் திடல் தொடர் வரை நீளும் 168 கிமீ. தடத்தில் பவளங்கள் பாறைகளாக நிலைகொள்ளவில்லை, அகழ்வதால் அரிய உயிரினங்கள் அழிய வாய்ப்பில்லை. கால்வாய்த் தடத்திலிருந்து 20 கிமீ. அப்பால் தொடங்கும் மன்னார் வளைகுடாக் கடல்வனக் காப்பு வலையத்தில் பவளப் பாறைகளும் அரிய உயிரினங்களும் உள்ளன.

சாலைகளில் வாகனங்கள் கக்கும் கரிய வாயு அளவுக்கு உலகத் தரக் கட்டுப்பாடு இருப்பது போலக் கப்பல்களுக்கும் கடுமையான உலகத் தரக் கட்டுப்பாடுகள் உள்ளதால், எரிபொருள் கப்பல்களின் அதீத பெருக்கத்தின் பின்னரும் நெடுங்கடல் மாசின்றித் தொடர்கிறது.

சேதுக் கால்வயை ஒட்டிய தமிழக மாவட்டங்களின் 3,00,000 மீனவர்களுள் பலர், சேதுக் கால்வாய்வழி அரபிக் கடலுக்கும் வங்காள விரிகுடாவுக்கும் சென்று, நீண்ட காலம் கடலில் தங்கி மீன்பிடிக்கும் பெரிய மீன்பிடிக் கப்பல்களை ஏற்கும் புதிய வளமான மீன்துறைகளும், கப்பல் திருத்தகங்களும் இந்த 5 மாவட்டங்களை ஒட்டி அமையவுள்ளன. 10,000 சதுர கிமீ. பரப்பளவுக்குள் முடங்கி, எல்லை தாண்டியதாக இலங்கைக் கடற்படையின் கொடுமைகளுக்கு ஆளாகும் இந்த மீனவருக்கு சேதுக் காய்வாயுடன் வரும் மீனவ வளர்ச்சித் திட்டங்கள் புதிய மீன்பிடிப் பரப்பெல்லைகளைத் தரவுள்ளன. அங்குள்ள 225 மீனவ ஊர்களை ஒட்டிய உள்கட்டமைப்பு வசதிகளும் பெருகவுள்ளன.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் புகழ்பூத்த கடலியலாளருமான இராமச்சந்திரன், கடலியல் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி, இயற்கைப் பேரிடர் மேலாண்மைத் துறைப் பேராசிரியர் இராம்மோகன், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி நிலவியல் பேராசிரியர் இராமாநுஜம் போன்ற அறிஞர் பலர், சேதுத் திடல் தொடர் இயற்கை நிகழ்வே எனத் தீர்த்துள்ளனர். இந்தியக் காப்பிய மரபுகளை அறியாதவர்களா இவர்கள்?

நெய்வேலிக்குச் சாலை அமைத்தால் நிலக்கரியை எடுக்க முடியாது எனக் கூறுவோரே, சேதுக் கால்வாய் அமைத்தால் அங்கு இருப்பதாகக் கூறும் தோரியம் போன்ற கனிம வளங்கள் அழிந்துவிடும் என்போர்! பாக்கு நீரிணையில் 10,000 சதுர கிமீ. பரப்பளவு, மன்னார் வளைகுடாவில் 20,000 சதுர கிமீ. பரப்பளவு, மொத்தமாகத் தூர்வாருவதோ ஒரு கன கிமீ.க்கும் குறைவான, 80 மில்லியன் கன மீ. மணல் மட்டுமே! தூர்வாரிய மணலையும் அயலிலே ஆழமான கடலுள் கொட்டுவர்.

பாம்பன் தீவு மீனவரும், அங்கு குவியும் வழிபாட்டாளரை நம்பி வாழ்வோரும், பாம்பன் தீவின் நிலப்பகுதிக்கு அப்பால் கிழக்கே, வழித்தடத்தை அமைக்குமாறு நெடுங்காலமாகக் கோரி வருகின்றனர். சுற்றுச் சூழலாரும் கடல்வனக் காப்பு எல்லைத் தீவான செங்கால் தீவுக்குக் கிழக்கே 30 கிமீ.க்கு அப்பால் வழித்தடத்தை அமைக்க வலியுறுத்துகின்றனர்.

மீனவர், வணிகர், தொழில் முனைவோர் யாவரும் தமிழரின் 150 ஆண்டு காலக் கனவு நனவாகும் நாளை எதிர்நோக்கிக்காத்து உளர்.

Please Click here to login / register to post your comments.