சேதுத் திடல்கள்

ஆக்கம்: மறவன்புலவு க. சச்சிதானந்தன்

சேற்றுக் கரைசலாக, கலக்கல் நீராக, வளைந்து வளைந்து பாய்ந்து, கடலை நோக்கி ஓடுகிறது ஆறு. ஓடும் வழியில் வளைவுகளில் மணல் திட்டுகள் உருவாகின்றன. வெளிவளைவுகளில் நீர் ஓடும். உள் வளைவுகளில் மணல் சேரும், திடலாகும்.

கடலுடன் ஆறு கலக்கும் முகத்துவாரத்திலும் சேற்றுக் கலக்கல் நீரின் மணல் குவிந்து திடல்களாகும், தீவுகளுமாகும், அக்கரைசலைக் கொணர்ந்த ஆற்று நீரோ கடலுடன் கலந்துவிடும்.

வெள்ளப் பெருக்குக் காலத்தில் இந்த மணல் திடல்களையும் தன்னுடன் இழுத்துச் சென்று கடலுக்குள்ளே ஆற்று நீர் புகும். முகத்துவாரத் திடல்களும் கரைந்துவிடும். உள்வளைவுத் திடல்களும் கரைந்துபோகும்.

வைகாசி ஆனியில் பெய்யும் பெரு மழையால் பெருகி ஓடும் ஆறுகளே யமுனையும் கங்கையும் மகாநதியும் கோதாவரியும் கிருஷ்ணையும் காவிரியும் வைகையும் தாமிரபரணியும்.

தென்மேற்குப் பருவப் பெயர்ச்சிக் காற்றின் வேகம் தணிந்ததும், புரட்டாதியில் இந்த ஆறுகளில் வெள்ளப் பெருக்கு இராது. அக்காலத்தில் இவை பாயும் உள்வளைவுகளில் மணல் சேர்ந்து திடல்களாகும். சோழமண்டலக் கரையோரமெங்கும் வங்காள விரிகுடாவை ஒட்டிய முகத்துவாரங்களிலும் மணல் சேர்ந்து திடல்களாகும்.

பின்னர் கார்த்திகையில் தொடங்கும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காலத்தில் சோழமண்டலக் கரைநெடுகிலும் தை வரை புயலும் மழையும் வெள்ளமுமாய் இந்த நதிகளில் நீர் கரைபுரண்டு ஓட, மணல்திடல்களும் கரைந்து கடலோடு சேர்ந்துவிடும். வாடை ஓய்ந்ததும் ஆறுகளில் வெள்ளம் குறைய, மெல்லெனப் பாயும் ஆற்றுடன் வரும் சேறும் கரைசலும் கலக்கலும் வழியெங்கும் வளைவெங்கும் அங்கங்கே மணல் சேர்ந்து திடல்களாகும், ஆற்று முகத்துவாரங்களிலும் இவ்வாறே மணல் சேரும், திடல்கள் தோன்றும்.

இயல்பான நிகழ்வுகள், இயற்கையின் நிகழ்வுகள். நீரில் கலந்த மணலுக்குத் திடல்கள் சேர்விடங்கள். ஆழம் குறைந்த நீர்நிலைகளுக்கும் ஆழம் கூடிய கடலுக்கும் இடையே சேர்கின்ற திடல்கள், புவியின் தனித் தன்மைகள்.

சோழமண்டலக் கரையைக் கிழக்கெல்லையாகவும் அந்தமான் நக்காவரத் தீவுக் கூட்டத்தை மேற்கெல்லையாகவும் கங்கை, பிரமபுத்திரை, ஐராவதச் சமவெளிகளை வடக்கெல்லையாகவும் விரிந்த இந்துப் பெருங்கடலைத் தெற்கெல்லையாகவும் கொண்டது வங்காள விரிகுடா.

இந்தக் கடலில் பல இடங்களில் 3,000 மீட்டருக்கு மேல் ஆழமான பகுதிகள் உள்ளன.

எதிர் எதிராக வீசும் பருவப் பெயர்ச்சிக் காற்றுகளை ஒட்டி வங்காள விரிகுடாவின் நீரோட்டம் அமைகிறது.

மணிக்கூட்டுக் கம்பி ஓடும் அதே திசையில் இடம் வலமாக வங்காள விரிகுடாவில் ஓடுவது இடசை நீரோட்டம். தென்மேற்குப் பருவப் பெயர்ச்சிக் காலத்தில் வைகாசி தொடங்கி ஆடி வரை கடும் வேகத்துடன் நீடிப்பது இடசை நீரோட்டம்.

எதிர்த் திசையில் வலம் இடமாக ஓடுவது வலசை நீரோட்டம். வாடைக் காற்றுக் காலத்தில் கார்த்திகை தொடங்கித் தை வரை இந்த நீரோட்டம் கடும் வேகத்துடன் நீடிக்கும். சைபீரியப் பறவைகள், கலிங்கம் முதலாகக் கூடங்குளம் ஈறாக வலசை வருவதும் இந்த வலசை நீரோட்டக் காலத்திலேதாம்.

கூடுதலான ஆழமுள்ள கடலெங்கும் இந்த இரு எதிரெதிர் நீரோட்டங்களின் வேகங்கள் கடுமையாக இருக்கும். ஆழம் குறைந்த கரையோரமெங்கும் இந்த நீரோட்டங்களின் வேகங்கள் குறைவாக இருக்கும்.

வங்காள விரிகுடாவின் தெற்கெல்லையில் உள்ள ஆழமற்ற (ஆகக் கூடிய ஆழம் 16 மீ.) சிறுகடல் பாக்கு நீரிணை. நாகப்பட்டினம் முதலாக இராமநாதபுரம் ஈறாகத் தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களை மேற்கெல்லையாகவும் இலங்கைத் தீவின் வடபகுதியைக் கிழக்கெல்லையாகவும் கொண்ட பாக்கு நீரிணையின் தெற்கெல்லை 31 கிமீ. நீளமான சேதுத் திடல் தொடராகும்.

சேதுத் திடல் தொடருக்குத் தெற்கே இருப்பது மன்னார்க் குடாவும் அதன் நீட்டமான அரபிக் கடலுமாகும்.

மன்னார்க் குடாவின் ஆழங்கள் பல இடங்களில் 1,000 மீட்டருக்கும் கூடுதலாகும்.

பாக்கு நீரிணையையும் மன்னார்க் குடாவையும் தெற்கே சேதுத் திடல் தொடர் பிரிப்பது போல, பாக்கு நீரிணையையும் வங்காள விரிகுடாவையும் வடக்கே கோடிக்கரையிலிருந்து தென்கிழக்காக மாதகல் வரை நீளும் கோடித் திடல் தொடர் பிரிக்கின்றது.

நில எல்லைகளும் மணல் திடல் தொடர்களுமாகப் பாக்கு நீரிணையை 8 மீ. - 16 மீ. வரை சராசரி ஆழமும் 10,000 சதுர கிமீ. பரப்பளவுமுள்ள கடல்நீரேரியாக, நிலமேடை மேலுள்ள உவர்நீர்த் தொகுதியாக்கி உள்ளன.

ஆழம் குறைந்த இக்கடலின் வட மற்றும் தென் விளிம்புகளான இவ்விரு திடல் தொடர்கள், 1,000 மீட்டர் வரை சடுதியாக ஆழும் கடல்களைச் சந்திக்கின்றன.

அந்தச் சந்திப்பில் ஆறுகள் முத்துவாரத்தைச் சந்திக்கும் அதே புவித் தன்மை அமைகிறது. உள்வளைவில் குவியும் மணலில் புவித் தன்மை அங்கும் சூழ்கிறது.

வங்காள விரிகுடாவின் இடசை மற்றும் வலசை நீரோட்டங்கள் கடலோர மேற்பரப்பு நீரரோட்டங்களைப் பாக்கு நீரிணையின் வட விளிம்பிலும் தென் விளிம்பிலும் ஏற்படுத்துகின்றன. அதற்கிசைவான நீரோட்டங்கள் அதே காலங்களில் மன்னார்க் குடாவிலும் அதன் நீட்டமான அரபிக் கடலிலும் நிகழ்கின்றன. இந்த எதிரெதிர் நீரோட்டங்களால், ஆழமற்ற பகுதியிலிருந்து ஆழமான பகுதிக்கு பாக்கு நீரிணையின் வட விளிம்பிலும் தென் விளிம்பிலும் வளிந்தோடும் நீர், மணல் திட்டுகளை விட்டுச் செல்கின்றன.

இந்த நிகழ்வு இயற்கை நிகழ்வு. மணல் படிப்படியாகச் சேர்ந்து சேர்ந்து திடலாவதால், சேர்வது காலப்போக்கில் சேது ஆயிற்று. இந்தத் திடல்களை ஆள்வோரின் குலப்பெயர் சேர்வை. அவர்களே சேதுபதிகளாயினர்.

கடல் மட்டம் இப்பொழுது உள்ளதைவிட 120 மீட்டர் வரை குறைந்திருந்த முற்காலங்களிலும் அதற்மைவாக இந்தத் திடல்களின் மட்டமும் குறைந்திருந்ததாக நிலவியலாளர் கருதுவர். பல இலட்சம் ஆண்டுகளாக நீரோட்டத்தின் விளைவாகப் பாக்கு நீரிணையின் விளிம்புகளில் மணல் சேர்ந்து திடல்களாகும் நிகழ்வு இப்பொழுதும் தொடர்வதாகத் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி நிலவியல் துறைத் தலைவரும் பேராசிரியருமான முனைவர் என். இராமாநுஜம் தெரிவித்துள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழக இயற்கைப் பேரிடர் ஆய்வகப் பேராசிரியர் இராம்மோகன், சென்னைப் பல்கலைக்கழகக் கடலியல் பேராசிரியர் ஆர். கிருஷ்ணமூர்த்தி, அண்ணா பல்கலைக்கழகத்தில் கடலியல் பேராசிரியராக இருந்தவரும் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தருமான பேராசிரியர் எஸ். இராமச்சந்திரன் ஆகியோர் இந்தியக் காப்பிய மரபுகளையும் சிந்தனை மரபுகளையும் அறியாதவர்களல்லர்.

அத்தைகய அறிவியலாளரின் புலத்துறை முற்றிய, கற்றுத் துறைபோகிய கருத்துகளை நுணுகி வாசிப்போரும் நுணங்கிச் செவிமடுப்போரும் பாக்கு நீரிணையின் வட மற்றும் தென் திடல் தொடர்களான கோடித் திடல் தொடரும் சேதுத் திடல் தொடரும் இயற்கை நிகழ்வுகள் என்பதை ஏற்பர்.

Please Click here to login / register to post your comments.