வரலாற்றுக் குதிரையொன்றின் மீள் பயணம்

ஆக்கம்: சேனாதி
"எனது சிறகுகள் அகலமானவை, ஒடுக்க முடியாதவை" - தேசியத் தலைவர்.

புலிகளை ஒடுக்கி தமிழர் மீது எதேச்சாதிகாரமான தீர்வொன்றைத் திணிப்பது பற்றிய உரையாடல்கள் முன்னெப்போதையும் விட இப்போது தென்னிலங்கையில் சூடுபிடித்து நிற்கின்றன. தமிழருக்கு சமஷ்டியா பஞ்சாயத்தா போன்ற வாதங்கள், போர்த்திட்டங்களும் இராசதந்திர வியூகங்களும் பற்றிய கருத்துக்கள் என கொழும்புத் தலையாரிகள் வாய்வீசத் தொடங்கிவிட்டார்கள்.

சிலர் ஒரு படி அப்பாலும் போய் ராஜ் நாராயணன் மற்றும் சுப்ரமணியம் சுவாமி பாணியிலான அரசியல் கோமாளித்தனத்தில் சக்கைப்போடு போடுகிறார்கள். புலிகளை நிபந்தனையின்றிய பேச்சுக்கும் அழைக்கிறார்கள்.

ஊகமும் உள்ளீடும் உண்மையும் சேர்ந்த கலவை மதுபோன்ற இந்தச் சங்கதிகளைப் பருகிப் பருகி தென்னிலங்கைப் பாமரர்கள் திகட்டியிருக்க, தகவலுக்காக இந்தச் செய்திச் சேவைகளை மட்டுமே நம்பியிருப்போருக்கு தென்னிலங்கையின் எகத்தாளமான பேச்சும் போக்கும் சில விம்பங்களை ஏற்படுத்தி விடுகிறது.

அவ்விம்பங்களின் பின்னேயிருக்கும் சாரமும் சாயமும் பிரித்து நோக்கத்தக்கவை.

கேள்விச் செவி:

களமுனைகளில் புலிகளின் தரப்பில் இழப்புக்கள் அதிகரிக்கின்றன என்பது இதில் முதன்மையானது. தாயகச்; செய்திகளையும் சிறிலங்காச் செய்திகளையும் ஒப்பீடு செய்யும் பலரிடம் இந்தப் பார்வை நிலவுகிறது. கிழக்கில் புலிகளை ஒடுக்கிவிட்ட சிறிலங்காப் படைகள் வடக்கிலும் புலிகளை நசுக்க வருகின்றன என்பது அடுத்தது.

மூன்றாண்டுத் திட்டமொன்றில் புலிகளை ஒடுக்குவதற்கான உடன்பாடொன்றை இணைத்தலைமை நாடுகளும் சிறிலங்கா அரசாங்கமும் வைத்திருக்கின்றன என்பது மூன்றாவது. கடலிலும் தரையிலும் புலிகளின் ஆயுதக் களஞ்சியங்கள் முற்றாக அழிக்கப்பட்டன என்பது நான்காவது.

புலிகளின் பன்னாட்டு நடவடிக்கைகள் முடக்கப்படுகின்றன என்பது ஐந்தாவது.

இவ்வகையான பல சங்கதிகள் பல வாய்களிலும் செவிகளிலும் பட்டுவரும் போது, அவ்வந்த வாய்களினதும் செவிகளினதும் தகைமைக்கேற்ற எடுகோள், மேற்கோள் மற்றும் சேர்ப்புக்களுடன் பொலிவுள்ள விம்பங்களாகி விடுகின்றன. சில, கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தான் என்பது போல, உண்மைக்குப் புறம்பான தோற்றங்களை நிரூபித்தும் விடுகின்றன.

போரியலும் உயிரிழப்பும்:

போராடும் சமூகத்தின் போராட்ட வடிவத்தை அடக்குமுறையாளனே தீர்மானிக்கின்றான் என்னும் நெல்சன் மண்டேலாவின் கூற்றுப்படி, இந்தத்தீவில் இருக்கும் தமிழருக்கு விட்டு வைக்கப்பட்டிருக்கும் போராட்ட வடிவம் வன்முறை வடிவமே. இழப்புக்கள் தவிர்க்க முடியாதவை என எமது போராட்டத் தலைமையும் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வந்திருக்கிறது. சண்டையொன்றின் போது, அதுவும் இருதரப்பும் முப்பதாண்டுத் தேர்ச்சியுடன் நிகழ்த்தும் மோதல்களின்போது, இழப்புக்களை எதிர்பார்க்கவே வேண்டும்.

உயிரிழப்பின் போதான நெருங்கிய உறவுகளின் உணர்வுகள் மதிப்பிற்குரியவை. விளக்கங்களுக்கு அப்பாற்பட்டவை. அதே சமயம், மறுவளத்தில் போரியலின் வடுக்கள் பற்றிய சமூகக் கூட்டுப் பார்வையிலேயே தெளிவும் உறுதிப்பாடும் மிளிர வேண்டும்.

அடுத்து, எதிரிகள் கொல்லப்படுவதைப் போலவே அது பற்றிச் சொல்லப்படுவதும் போரின் ஒரு கட்டமே. இரண்டாம் உலகப் போரின்போது ஜேர்மனியத் தரப்பு சமர்க்கள நிலவரங்களை மிக மோசமாகத் திரித்தது. அந்தத் திரிப்புக்களின் அளவு, மூலோபாய வகுப்பாளர்களே அந்தத் தகவல்களின் அடிப்படையில் சிந்திக்கும் அளவிற்கு அமைந்திருக்கிறது.

விடுதலைப் புலிகளின் ஊடகங்களில் வீரச்சாவடைந்தோரின் பெயர் விபரங்கள் உள்ளிட்ட விலாவாரியான தகவல்கள் சொல்லப்படும் அளவிற்கு உலகின் எந்த அரச ஊடகத்திலும், போராட்ட இயக்க வெளியீடுகளிலும் சொல்லப்பட்டதாக இக்கட்டுரையின் ஆசிரியர் அறியவில்லை. இதற்கு மாறாக, சிறிலங்கா அரச ஊடகங்கள் ஜேர்மனிய கோயபல்சின் வழியில் செல்வதோடு நில்லாமல், வேறு ஊடகங்களிலும் அத்தகவல்கள் கசியாது மறிப்பதும் புலிகளின் இழப்புப்பற்றிய விம்பங்களை ஏற்படுத்துகிறது.

கடந்த 15 ஆம் திகதி யால விலங்குகள் தஞ்சநிலத்தில் சிறிலங்காப் படையினருக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலில் ஏழு சிறிலங்காப் படையினர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். அரச ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 16 ஆம் திகதி காலைச் செய்தியில் கூட அந்தத் தாக்குதலில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்ற செய்தியே ஒலிபரப்பாகியது. அதன்பின்னர், இறந்த சிப்பாய்களின் உடல்களை மீட்கும் பணியில் சென்ற உழுபொறி அமுக்கவெடியில் சிக்கியபின்பே உண்மையான தகவல்களை சிறிலங்கா அரசதரப்பு வெளியிடத் தொடங்கியது.

இதேபோல கடந்த ஜூன் மாத தொடக்கத்திலும் செப்ரெம்பரின் இறுதிப் பகுதியிலும் மன்னாரில் ஏற்பட்ட பெரிய இழப்புக்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டன. பொத்தி மூடமுடியாத நிலைகளில் மட்டுமே சிங்களப்படைகளின் இழப்புச் செய்திகள் வெளிவருகின்றன.

நடவடிக்கைகளின் ஒப்பீடு:

கிழக்கைக் கைப்பற்றிவிட்டு வடக்கில் தாக்குதல் நடத்துகிறார்கள் சிறிலங்காப் படையினர் என்று இரு களங்களும் சேர்த்துச் சொல்லப்படுவதும் ஒரு விம்பத்தை ஏற்படுத்துகிறது. அதாவது, கிழக்கில் வென்றுவிட்டோம், வடக்கை வெல்லப்போகிறோம் என்ற தொனி அதனுள் புதைத்து வைக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு வகையில் இந்த விம்பம் அபத்தமானது.

முதலில், வன்னியின் படைச் சமநிலையும் அதுசார்ந்த பதின்ம ஆண்டு வரலாறும் புறக்கணிக்க முடியாத காரணிகளாக இருப்பது இங்கே மறைக்கப்படுகிறது. இதற்கான சரியான ஒப்பீடு அமைவதாயின், ஜெயசிக்குறுவை நடத்திய சிங்களப்படை இப்போது மன்னார் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இப்போது போன்றே அப்போதும் புலிகள் கிழக்கில் தங்கள் ஆளணிகளைக் குறைத்திருந்தார்கள். இருதரப்பின் கவனக்குவிப்பும் வன்னிப் போர் முனையிலேயே இருந்தன.

அவ்வாறான ஒப்பீட்டை ஏற்றுக்கொள்ள சிங்களப் படைத்தரப்பு முன்வரப்போவதில்லை. ஏனென்றால், அந்த அடிப்படையிலான கணிப்புக்கள் புலிகளுக்குச் சார்;பாகவே அமைந்துவிடும். ஜெயசிக்குறுவை எதிர்கொண்டபோது இருந்ததை விட புலிகளின் தற்போதைய பலம், ஆட்தொகை மற்றும் வெடிபொருட் செலவாற்றலின் அடிப்படையில் அதிகமே. பொருளியல் மற்றும் தொழில்நுட்ப ஆற்றலிலும் வன்னிப் பெருநிலப்பரப்பு இப்போது முன்னேறியிருக்கிறது.

அடுத்தது, கிழக்கைக் கைப்பற்றி விட்டதான அரசாங்கத்தின் நிலைப்பாடு. ஒரு அடையாள வெற்றியை அடைந்து விட்டதாக அதன் பொருள் அமையுமானால் அது சரியானதே. ஆனால், கிழக்கின் களம் அம்பாறையைத் தாண்டி அம்பாந்தோட்டை வரை விரிந்திருப்பதே கிழக்கின் இன்றைய யதார்த்தம். இதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமானால் பாரியளவு நிதியோடு தொடர்புபட்ட அநேக திட்டங்கள் மண்ணைக் கவ்விவிடும். ஆகவே, கொள்கையளவில் அரசாங்கம் அதை ஏற்றுக்;கொள்ளாது. ஆனால், நடைமுறை அங்கீகாரமாக, கிழக்கில் பெரும்படையை முடக்கவேண்டிய நிலை அரசாங்கத்திற்கு வந்துவிட்டது.

மூன்றாண்டுத் திட்டம்:

இந்த உத்தேச மூன்றாண்டுத் திட்டத்தின்படி 2006 மே மாதத்திலிருந்து 2009 மே மாதம் வரையான மூன்று வருடங்களுக்குள் இலங்கை அரசாங்கம் புலிகளை அழிப்பதாகவும், அதன் பின் மேலும் இரண்டு வருடங்களில் எச்சசொச்சங்களையும் ~துடைத்து| விடுவதாகவும் சொல்லப்படுவதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த நடவடிக்கையின் வரைபடம் மிக எளிமையாகத் தரப்பட்டிருக்கிறது. திருமலையிலிருந்து திருக்கோவில் கரை வரை ஒரு நீலநிற நீள்வட்டமும், அவ்விதமே மன்னாரில் இருந்து பூநகரி வரை ஒன்றும் நாகர்கோவிலில் இருந்து கொக்கிளாய் வரை ஒன்றுமாக வட்டங்கள் வரையப்பட்டிருக்கின்றன.

சிறிலங்காத் தரப்பின் செய்திகளின்படி, கிழக்குக் கரைக்கு ஒரு சரி போட்டுவிட்டு மன்னார் கரையை ~நடைபெறுகிறது| என்று சிவப்பு மையால் எழுதினால், புலிகளின் ஆற்றலில் மூன்றில் ஒரு பகுதி முடிந்துவிட்டதென்று எவரையும் நம்ப வைக்கலாம்.

செய்திகளின் நம்பகத்தன்மையைத் தாண்டி, அவ்வாறான திட்டம் ஒன்றின் பின்புலம் என்னவாக இருக்க முடியும் எனப் பார்த்தோமானால், அது, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை யுத்தத்தால் ஒடுக்க முடியும் என்ற சிங்களத்தின் மூலோபாய நம்பிக்கையாகத்தான் இருக்க முடியும்.

இந்த நம்பிக்கையின் ஆதாரம், முன்னர் வன்னிப் பெருநிலப்பரப்பில் நிகழ்ந்த சமர்களாக இருக்க முடியாது. ஓயாத அலைகள் - 01 இல் தொடங்கி 12 வருடமாக நீடிக்கும் வன்னிச் சமர்க்கள வரலாற்றில் அந்த நம்பிக்கைக்குச் சாதகமாக எந்தச் சம்பவமும் இல்லை.

அவ்வாறானால், அந்த நம்பிக்கை கிழக்கில் பெற்ற வெற்றிகளின் அடிப்படையில் அமைந்திருத்தல் வேண்டும். அல்லது, அசாதாரணமான உதவிகளின் அடிப்படையில் உண்டானதாக இருத்தல் வேண்டும். ஏனென்றால், வல்லரசும் அனுபவசாலிகளுமான இந்திய நிபுணர்களே நிராகரிக்கும் மூலோபாயத்தை சிறிலங்கா அரசு பின்பற்றுவதாயின் அதற்குச் சாதாரண அறிவும் துணிவும் போதுமானதல்ல.

தற்போது சிறிலங்காவிற்கு இருக்கும் மனித உரிமை நெருக்கடிகளை விடக்குறைவான அழுத்தங்களையும் இப்போதிருப்பதை விட அதிக வெளிப்படையான உதவிகளையும் கொண்டு தேசிய வளங்களைத் திரட்டிச் சந்திரிகா செய்த நடவடிக்கைகள் தோற்றுவிட்ட வரலாறும், புலிகள் முன்பை விட பௌதீக வளங்களில் விருத்தியடைந்து, வான்படை போன்ற திகைப்புக் காரணிகளை வைத்திருப்பதும், கிழக்கில் தொடரும் தாக்குதல்களும் இந்த மூலோபாயத்தை இலகுவில் ஆட்டம் காணச் செய்துவிடக்கூடிய வலிய காரணிகளாக இருக்கின்றன.

இவ்வாறான மூலோபாயத்தை எவராவது ஊக்குவிப்பார்களாக இருந்தால், அது மகிந்தவின் தலையில் ஒட்டுமொத்தப் பழியைக் கட்டி இறக்கி விடுவதாகவே அமையும்.

புலிகளின் களஞ்சியங்கள்:

அவ்வப்போது வன்னிப் பெருநிலப்பரப்பில் சிறிலங்கா வான் படையினர் நடத்தும் தாக்குதல்களில் புலிகளின் ஆயுதக் களஞ்சியங்கள் அழிந்து விடுவதாகவே அரச தரப்பால் அறிவிக்கப்படுவதுண்டு.

வான் வழியாக வந்து ஆயிரக்கணக்கான மீற்றர்கள் உயரத்தில் இருந்து தாக்கி அழிக்கப்படும் ஆயுதங்களே அவ்வளவு என்றால், புலிகளின் ஆயுத பலம் எவ்வளவு என்ற சிறு பிள்ளைக் கேள்வியிலேயே அந்த ~ஆயுத ஒழிப்பின்| குட்டு வெளிப்பட்டு விடும். கடல் சம்பவங்களையும் இத்தகையதே.

போரிடும் தரப்பொன்றின் இழப்பாற்றல் என்பது, ஏற்பட்ட இழப்பானது செயல்வீச்சைப் பாதிக்கும் விகிதத்தால் கணிப்பிடப்படும். விடுதலைப் புலிகளின் இழப்பாற்றலும், மீட்சித் திறனும் கொழும்பு ஆய்வாளர்களாலேயே பல முறை அங்கீகரிக்கப்பட்டு விட்டன.

பன்னாட்டு முடக்கல் நடவடிக்கை:

தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது விடுதலைப் புலிகளுடனோ அல்லது ஈழத் தமிழருடனோ மட்டுப்பட்டுள்ள ஒன்றல்ல. அதன் வியாபகம் உலகத் தமிழ்ச் சமூகத்தினுள் ஆழ வேரோடி நிற்கிறது.

சிங்கள மேலாதிக்கக் கோட்பாட்டின் உலக வலிமை 14,737,000 என்றால் ஈழத் தாயகக் கோட்பாட்டின் உலக வலிமை 66,020,000. இதில் வம்சாவளிக் குடியுரிமை பெற்ற தமிழர் இந்தியா, பிஜி, பிரெஞ்சுக் குடியேற்றமான றியூனியன், மொறிசஸ், மலேசியா, சிங்கப்பூர், கனடா, சுவிற்சர்லாந்து, தென்னாபிரிக்கா, அமெரிக்கா ஆகிய இடங்களில் கணிசமாக வாழ்கின்றனர்.

இவர்களின் அன்றாட மற்றும் அரசியல் வாழ்வில் ஈழத் தாயகக் கோட்பாடு இறுகப்பிணைந்து நிற்கிறது. இவ்வாறு வேரோடிவிட்ட கருத்தியலை முடக்குவது சாத்தியமல்ல என்பதற்கான மிகக்கிட்டிய வரலாற்று எடுகோளாக இஸ்ரேல் திகழ்கிறது.

இஸ்ரேலின் எடுகோளை முறியடிக்கும் நவீன எடுகோள்கள் எதுவும் இதுவரை புலப்படவில்லை. பஞ்சாபின் காலிஸ்தான் தீவிரவாதமும், அயர்லாந்தின் வரலாற்று நீட்சியும் முடிவுக்குள்ளானதை ஈழப் போரரங்குடன் ஒப்பிட முடியாது. காலிஸ்தான் சுயசார்புபை மூல உத்தியாகக் கொள்ளவில்லை. அயர்லாந்தின் போராட்டம் எந்தவொரு கட்டத்திலும் வியட்நாமின் பரிமாணத்தை எட்டவில்லை.

இந்நிலையில் இரண்டொரு கைதுகளால் ஈழத் தாயகக் கோட்பாடு உலக அரங்கில் மங்கிவிடும் என்று இளநிலை மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகளில்கூட நிறுவமுடியாது.

முடங்கப்போவது யார்?

தொண்ணூறுகளின் பிற்பகுதியில் நடந்த வன்னிச் சமர்க்களங்கள் புதிய பல தரைத்தோற்ற இயல்புகளை வெளிப்படுத்தின. மூலோபாயவாதியின் மேசையில் விரித்திருக்கும் வரைபடத்திற்கும் நடைமுறைக் களத்திற்கும் இடையேயான இடைவெளி அச்சமர்க்களங்களில் வெளிச்சத்திற்கு வந்தது.

சிங்களப் படைகள் முன்னரங்குகளில் தாக்குதல்களை எதிர்பார்த்த போது தாண்டிக்குளம், பெரியமடு, ஓமந்தை ஆகிய இடங்களில் தாக்குதல்களைச் சந்தித்தனர். மாங்குளத்தை எட்டி குடாநாட்டிற்கான தூரத்தைக் குறைக்க நினைத்தபோது, அவர்களின் கிளிநொச்சி முன்னரண் பரந்தனைத் தாண்டிப் பின்னே சென்றது.

இன்னுமோர் கோணத்தில், ஜெசிக்குறுவில் இருந்து வோட்டர்செட் வரை புலிகளின் முறியடிப்புச் சமர்களில் படையினருக்கு ஏற்பட்ட இழப்பைவிட ஏ-9, ஏ-32 சாலைகளின் வழியாக புலிகள் படிப்படியாகப் பின்வாங்கியபோது கொல்லப்பட்ட படையினரின் தொகை அதிகமானது. இவையெல்லாம், ஒரு பெருஞ்சமரில் ஜெனரல்கள் பலப் பரீட்சையில் ஈடுபடுகிறார்களா அல்லது மூலோபாயத்தைக் குறிவைக்கிறார்களா என்ற ஆழ்ந்த படைத்துறைக் கேள்விக்கான விடைகளாக அமைகின்றன.

97 இல் ஆரம்பித்த வன்னிக் களத்திற்கும், 2007 இல் ஆரம்பிக்கும் வன்னிக் களத்திற்கும் இடையே அகப் புறச் சூழல்களில் பாரிய மாற்றங்கள் எதுவும் தென்படவில்லை. வரலாறு மீட்கப்படும் அவ்வளவே. நன்றி: தமிழ்நாதம் -

Please Click here to login / register to post your comments.