முடிந்தால் கிளிநொச்சிக்கு செல்லட்டும் - கலாநிதி விக்கிரமபாகு

ஆக்கம்: கலாநிதி விக்கிரமபாகு

சிங்கள,பௌத்த பேரினவாதம் கிளிநொச்சி மண்ணை மிதிக்கும் போது,வரலாற்றில் என்றும் கற்றிராத பாடத்தை அங்கே கற்றுக்கொள்ளும். தென்இலங்கை மக்களும் அன்று தான் உண்மை நிலையை புரிந்து கொள்வார்கள். பேரினவாதமும் அதன் ஊடகங்களும் கூறிவரும் பொய்களும் புரட்டுகளும் அத்துடன் முடிவுக்கு வந்துவிடும்.

ஜனாதிபதி மஹிந்த கிளிநொச்சியை தவிர நாட்டின் அனைத்து பகுதிகளும் தனது கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதாக இறுமாப்புடன் கூறிவருகின்றார். அது மட்டுமல்லாது இலங்கை கடற்படை வீரர்கள் இலங்கை கடல் எல்லையை தாண்டி சர்வதேச கடல் பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல்களை அழித்து வருகின்றனர். ஆனால் இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் விடுதலைப்புலிகளின் கப்பல்கள் யாவும் அழிக்கப்பட்ட பிரதேசம் திஸமஹராம பகுதியிலாகும்.

கிட்டத்தட்ட விடுதலைப்புலிகளின் 10 கப்பல்களை இலங்கை கடற்படையினர் அழித்துள்ளனர்.முதலில் இலங்கை கடல் எல்லைக்குள் வைத்து அழிந்தனர்.தற்போது சர்வதேச கடல் பகுதிக்கு சென்று விடுதலைப்புலிகளின் கப்பல்களை தேடி அழிக்கும் நடவடிக்கைகளை செய்கின்றனர். நடக்கும் நிகழ்வுகளை பார்க்கின்றபோது எதிரிகளே வந்து தம்மை அழிக்குமாறு இவர்கள் முன்னே வந்து நிற்பதுபோல் செயற்பாடுகள் இடம் பெறுகின்றன. இவற்றை நாம் நம்பவும் வேண்டுமாம்.

இன்று அரசாங்கம் நடத்தி வரும் யுத்தத்தினால் யாருக்கு என்ன இலாபம்? வடக்கு கிழக்கு பகுதி முழுவதையும் அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு 5 இலட்சம் இராணுவத்தினர் தேவைப்படுவார்கள். இவர்களுடன் படையினருக்கு உதவியாக பல நூற்றுக்கணக்கான பரா இராணுவக் குழுக்கள் வேண்டும்.

மேலும் ஆட்களை கடத்துவதற்குரிய கடத்தல்காரர்கள் வேண்டும் இவற்றையெல்லாம் நிறைவு செய்து கொண்டு வடக்கு கிழக்கு பகுதியை பிடித்தால் என்ன நேரும்? அங்கு வாழ்கின்ற தமிழ், முஸ்லீம் மக்கள் அகதி முகாம்களுக்கு செல்வார்கள் அவர்களுக்குரிய உணவு முதற்கொண்டு அனைத்தையும் செய்ய வேண்டும். இதனால் யாருக்கு லாபம்? ஆனால் இம்மக்களின் நிலங்களை அபகரித்து சர்வதேச கம்பனிகளுக்கு விற்பதன் மூலம்பெருமளவு நிதியினை பெற்றுக்கொள்ள முடியும் இதுதான் இன்று நடைபெறுகிறது.

இன்று தென் இலங்கையில் அரசுக்கு எதிரான நிலை மேம்படத்தொடங்கியுள்ளது. மலையகத்தில் வாழ்க்கை சுமை உயர்வால் எந்த நேரத்திலும் தோட்டத்தொழிலாளர் வீதியில் இறங்கலாம். ஏற்கனவே வடக்கு கிழக்கு மக்களின் உரிமை போராட்ட தீ சுவாலை வடக்கு கிழக்கு எங்கும் பாரிய அளவில் எரிந்து கொண்டு இருக்கிறது, எனவே அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் எதிர்ப்பு எந்த வேளையிலும் நாடு முழுக்க பரவுவதற்கு அதிக சந்தர்ப்பம் உண்டு. அது வடக்கு கிழக்கா, மலையகமா, தென்இலங்கையா, எங்கிருந்து ஆரம்பிக்கப்போகிறது என்பது தான் இன்றுள்ள நிலையகும்.

இன்று உணவுப்பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கொதிப்படைந்து காணப்படுகின்றனர். யுத்தத்தை தொடர வேண்டும் என்று கூறுபவர்கள் யுத்த முனைக்கு செல்வதில்லை தினமும் யுத்த முனையில் இறப்பவர்கள் ஏழைகளின் பிள்ளைகளே. உயிர்களையும் பலி கொடுத்து, உண்ணவும் உணவு இல்லாமல் மக்களால் எவ்வளவு காலம் இருக்க முடியும். ஏகாதிபத்தியத்துக்கு எதிராக உரத்து கோசமிடும் ஜே.வி.பி விடுதலைப்புலிகளை அழிக்குமாறு, அமெரிக்காவிடம் மண்டியிட்டு வேண்டுகோள் விடுக்கிறது.

Please Click here to login / register to post your comments.