தமிழர் தனியரசுக்கான நியாயங்களின் ஆரம்பம் எது?

ஆக்கம்: கி.செ.துரை
உலகமெல்லாம் பரந்து வர்ழும் தமிழருக்கு ஒரு தனிநாடு அவசியம் என்பதை வெளிநாட்டு மக்களுக்கு வலியுறுத்த நாம் எதையெல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்பதை இக்கட்டுரை நோக்குகிறது. முதலில் ஒரு சிறிய உதாரணத்தைப் பார்ப்போம். முன்னாள் இந்திய ஜனாதிபதியான ராதாகிருஷ்ணன் ஒரு தடவை இங்கிலாந்து சென்றிருந்தார். மாமிசம் புசிக்காத அவர் தன்னோடு ஒரு சமையல்காரரையும் அழைத்துச் சென்றிருந்தார். நாடு திரும்பியதும் அந்தச் சமையல்காரர் இங்கிலாந்தில் உள்ள வெள்ளைக்காரர் எல்லோரும் நல்ல அறிவாளிகள். ஏனென்றால் அவர்கள் எல்லோருமே நன்றாக ஆங்கிலம் பேசுகிறார்கள் என்று கூறினார்.

இந்த அப்பாவியான சமையல்காரர் போலத்தான் நம்மில் பலரும் ஆங்கிலம், டேனிஸ் , டொச் போன்ற மொழிகளைப் பேசினால் அதுவே பிரதான தகுதியாகி விடுகிறது என்று எண்ணுகிறார்கள். மொழி என்பது ஓர் வெளிப்பாட்டு ஊடகம், அதை ஒருவர் சரளமாகப் பேசும் திறன் பெற்றிருந்தாலும் பரந்த விடய ஞானமும், ஆழமும் இல்லாவிட்டால் அவருடைய மொழியறிவால் எதையும் அடைய முடியாது.

சமீபத்தில் ஓர் இளைஞர் டேனிஸ் பெண்மணி ஒருவருக்கு தமிழ் தேசியத்தின் நியாயப்பாடு பற்றி டேனிஸ் மொழியில் விளக்கிக் கொண்டிருந்தார். இலங்கையின் நெடிய வரலாற்றை கால வரன்முறைப்படி அறிந்திருந்த டேனிஸ் பெண்மணி பல கேள்விகளைக் கேட்டார். இளைஞன் கொடுத்த பதில் அவருக்கு திருப்தி தரவில்லை. பின் அந்த இளைஞனிடம் உமது தாய்மொழியூடாக உமது கலாச்சார அரசியல் வாழ்வை ஆழமாக அறிந்துவிட்டுத்தான் என்னுடன் பேசுகிறீரா என்று கேட்டார். இளைஞன் தன்னால் தாய்மொழி மட்டும் பேச முடியும் என்றான். தமிழர் தம் நெடிய வரலாற்றை, அதில் உள்ள நுண்பாக விடயங்கள் எதையும் தாய்மொழியூடாக அறியவில்லை என்று கூறி அங்கிருந்து விலகினான்.

பின்னர் அந்தப் பெண்மணியை பிறதொரு நாள் தற்செயலாக சந்தித்தபோது அவரைப்பற்றி வினவினேன். அவர் தமிழகத்தில் நீண்டகாலமாக தமிழ்மொழி ஆய்வாளராக கடமையாற்றும் டேனிஸ் பெண்மணி. தமிழர் தம் வரலாற்றை மிக ஆழமாக அறிந்தவர். தமிழீழ இனப்பிரச்சனையின் சகல நியாயப்பாடுகளையும் அறிந்தவர். நக்கீரர் காலத்து கடல் கோளில் இருந்து இன்றுவரை தமிழர் வாழ்வில் நடைபெற்ற துயரங்களை எல்லாம் தூய தமிழில் விலாவாரியாக பேசினார். உங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துரைக்க வரும்போது மொழியறிவு மட்டும் போதியதல்ல என்று சொன்னார். அன்று அந்த இளைஞனை ஆழம் பார்க்கவே தமிழில் பேசவில்லை என்பதையும் சுட்டிக் காட்டினார்.

இப்பொழுது ஈழத்தமிழருக்கான நியாய பூர்வமான உரிமைககளுக்கு எதிராக பல தடைகள் ஐரோப்பிய அரங்கில் வந்துள்ளன. இந்தத் தடைகளுக்கு என்ன காரணம் என்பதை நாம் முதலில் யோசித்துப் பார்க்க வேண்டும். சகல ஐரோப்பிய தலைவர்களுமே கூறுகின்ற காரணம் வெறுமனே இலங்கை சுதந்திரம் பெற்ற 60 வருடங்களுக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. தமிழினத்திற்கு ஒரு நாடு வேண்டும் என்பது வெறும் ஐம்பது வருட வரலாறா இல்லையே? இவர்கள் கூறும் கருத்துக்களை உடைத்தெறியும் நெடிய நியாயம் தமிழர் தரப்பில் இருக்கிறதே ஏன் அதைக் கருத்தில் கொள்ளவில்லை என்றும் வினவினார். ஆங்கில, டேனிஸ் மொழி அறிவு ஓர் உப காரணி, அதைவிட முக்கியம் தாய்மொழி அறிவு. அதுனூடாக ஆழ்புல நியாயங்களை அறிந்து வலியுறுத்தும் ஆளுமை இளைஞரிடையே இருப்பது அவசியம் என்றார். மேலும் அவருடன் உரையாடிய போது கிடைத்த தகவல்களை இனிப் பார்ப்போம்.

தமிழ் தேசியம் என்பது இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் ஆரம்பித்த கருதுகோளல்ல. அது உடம்பை உருவாக்கி வைத்திருக்கும் கோடான கோடி செல்கள் போல சிறு சிறு துணிக்கைகளாக ஒன்று சேர்ந்த விவகாரம். இப்போது அது உடம்பெடுத்து நடக்க ஆரம்பித்திருக்கிறது. அதனுடைய ஒவ்வொரு செல் துணிக்கையையும் இன்றைய தமிழ் இளைஞருக்கு நாம் அறியத்தர வேண்டும். இளைஞர் மட்டுமல்ல தமிழ் பெரியவர்களும் அதை சரிவரப் புரிந்து கொள்ள வேண்டும். அது குறித்த ஒட்டு மொத்த சமுதாயப் புரிதலே ஒரு பிரச்சனையின் மையத் தீர்;வாகும்.

ஆரியத்திற்கு எதிரான தமிழ்ப் போர் தமிழீழத்தில் மட்டுமல்ல தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் நடைபெற்றிருக்கிறது. திருஞானசம்பந்தர் நற்றமிழ்வல்ல ஞானசம்பந்தன் என்று தன்னுடைய ஒவ்வொரு பதிகங்களின் முடிவிலும் தவறாமல் பாடுவார். தமிழ் இந்து சமயத்தாலும், ஆரியத்தாலும் நிந்தனைப்படுத்தப் பட்டபோது நற்றமிழ் என்று தமிழை வலியுறுத்தி தமிழ் தேசியத்தின் குரலாக அவர் இருந்தார். சாதியில் குறைந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர் சம்மந்தருக்கு யாழ் வாசித்ததை அன்று பல பிராமணர்கள் எதிர்த்தனர். அத்தருணம் நெருப்பில் சாதியில்லை என்று கூறி ஆழ்க தீயதெல்லாம் என்று பாடினார். அந்த இடத்தில் சம்மந்தரின் தமிழ் விடுதலை சார் போர்க்குரல் இருக்கிறது.

மணிவாசகர் பாடலை எடுத்துப் பாருங்கள். தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்பார். சிவன் வடஇந்திய ஆரியனல்ல, தென்னகத்தில் பிறந்த நடனக்கலைஞன். அவன் தென்னாடுடைய தமிழன் என்பது அவருடைய குரலாக இருந்தது. அதிகாரத்தை கையில் வைத்திருந்தும் ஆரியப் பிராமணியத்திற்கு அடிமைகளாக இருந்த தமிழ் மன்னர்களை அப்பர் சுவாமிகள் வெறுத்தார். நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்று திட்டவட்டமாகக் கூறினார். தமிழ் தேசியத்தை மழுங்கடிக்கும் அதிகார வர்க்கத்திற்கு எதிரான விடுதலைக் குரலாக அந்தத் துறவி இருந்திருக்கிறார்.

ஈழத்தில் சுவாமி ஆறுமுகநாவலர் ஒரு தமிழ்சார் புரட்சியை நடாத்தினார். தூய தமிழில் நூல்களை அச்சடித்து, கிறீத்தவத்திற்கு எதிராகவும், காலணித்துவ மேலாதிக்கத்திற்கு எதிராகவும் போராடினார். சைவத்தையும், தமிழையும் ஆயுதமாக மாற்றி தன் காலத்திற்கு அமைய தமிழ் தேசியத்திற்கான குரலாகத் திகழ்ந்தார்.

சுவாழி விபுலாநந்தர் யாழ். நூலை எழுதியது எதற்காக. யாழ் என்பது இலங்கைத் தமிழரின் வரலாற்றுச் சின்னமாக இருக்கிறது. அந்த யாழ். என்ற கருவியைப்பற்றி விபுலாநந்தர் செய்த நூல் கடினமான ஆழ்புல ஆய்வு கொண்டது. இதுபோல மற்றெந்த இசைக்கருவிக்கும் இவ்வளவு ஆழமான ஆய்வும், விரிவான நூலும் தமிழில் இருக்கிறதென்று கூறுவது கடினம். துறவியாக இருந்த அவர் தனது நிலையில் நின்று தமிழ் வாழ்வின் சிறப்பிற்காகப் போராடியதற்கு யாழ். நூலே உதாரணமாகும்.

இலங்கைத் தீவின் ஆதி வரலாற்றை பொய்யும் புனை கதையுமாக சிங்கள வரலாற்று நூலான மகாவம்சம் எழுதியுள்ளது. ஆனால் அதே நூலை எழுதிய புத்த பிக்குவான மகாநாமன் உணர்ச்சி மேலீட்டினாலும், பிற்காலம்பற்றிய பார்வையின் கூர்மைக் குறைவாலும் பல தவறுகளை நிகழ்த்தியிருக்கிறார். மகாவம்சத்திற்கு பிறகு தர்மகீர்த்தி முதலானோர் எழுதிய சூளவம்சம் பாகம் 3 வரை இவ்வாறான உணர்ச்சித்; தவறுகள் இருக்கின்றன. அத்தனை தவறுகளையும் பிரித்தெடுத்துப் பார்த்தால் சிங்களவரை விட தமிழரே அந்த நாட்டை ஆள்வதற்குரியவர் என்ற உண்மையைக் கண்டு கொள்ளலாம். இவ்வளவு பெரிய வரலாற்று நூல்களை தமிழருக்கு எதிரான தொனியுடன் சிங்களவர் எழுத வேண்டிய தேவை என்ன? பாராக்கிரமபாகுவின் படைகள் தமிழகத்தில் தோல்வியடைந்த செய்தியை சொல்லாமலே சூளவம்சம் முடிவடைய காரணம் என்ன? அந்த நாட்டில் தமிழனுக்குள்ள முதல் பெரும் உரிமைக்கு அவைகளே சான்றாதாரமாகும்.

ஆகவேதான் தமிழரின் விடுதலை நியாயப்பாட்டை எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டுமென்று கேட்கிறேன்.

இத்துடன் மட்டும் நின்றுவிட முடியுமா ஐரோப்பிய குடியேற்ற வாதம் இழைத்த தவறுகளுக்கும், சதிகளுக்கும், வராலற்றால் மன்னிக்க முடியாத ஊழல்களுக்கும் பலியான உலகப் பெரும் இனமாக தமிழினம் இருக்கிறது. மொறீசியஸ் கரும்புத் தோட்டத்தில் இருந்து இலங்கை தேயிலைத் தோட்டங்கள் வழியாக சுமாத்திரா, யாவாவரை அடிமைகளாக்கப்பட்ட தமிழினத்தின் மீது நடாத்தப்பட்ட வரலாற்று வஞ்சத்திற்கு யார் பொறுப்பு என்பது ரொனி பிளேயருக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் உலகத்திற்கு தெரியாமல் இருக்க முடியாது.

சர்வதேச நீதிமன்றில் இந்த விவகாரத்தை வழக்காக எடுத்துச் செல்லவே இடமிருக்கிறது.

ஐரோப்பிய வரலாறு, வொன் பிஸ்மார்க், இத்தாலிய கபூர், மெற்றேணிச், 5ம் சாள்ஸ் விட்டதவறு, புரட்டஸ்தாந்து மதத்தின் தோற்றம் தொடங்கி இன்றைய நவீன ஐரோப்பிய ஒன்றியம் வரையான ஐரோப்பிய, உலக வரலாற்று, அரசியல் போக்குகளின் ஊசாட்டம் யாவும் தெரிந்திருக்க வேண்டும். இவற்றையெல்லாம் தொகுத்தால் நோர்வே, இந்தியா, சிறீலங்கா போன்ற நாடுகள் இரகசியமாக என்ன பேச முடியும் என்பதை கண்களை மூடிக்கொண்டே வரிக்குவரி கண்டு பிடித்துவிட முடியும். அதைத்தான் வாலிபன் கண்ணாடி மூலம் பார்த்து அறிவதை அனுபவசாலி செங்கல் ஊடாகப் பார்த்து அறிகிறான் என்று பிரான்சியர் கூறுவார்கள். இந்த செங்கல்லால் பார்க்கும் நிலையை வெறும் மொழியைப் பேசுவதால் மட்டும் தொட்டுவிட முடியாது. அதற்கு ஆழமான அறிவியல் போராட்டம் வேண்டும். ஈழத்தமிழினம் தன்னோடு அதையும் இணைக்க வேண்டும். அதற்கு வெளி நாடுகளில் உள்ள தமிழ் இளைஞர் தகுதியடையந்துள்ளதாகக் கூற முடியாது.

விடுதலைப் போராட்டத்தின் தார்மீக நிலைப்பாடுகளை மட்டும் பேசி நமது வாதத்தை முன் வைத்து வென்றுவிட முடியாது. போராட்டத்தின் மீது வைக்கப்பட்ட தவறான குற்றங்களை களைவதற்குரிய நியாயங்கள் வெகு தொலைவில் இருந்தே வளர்ந்து வந்துள்ளன. ஒரு நெடிய வரலாற்றை மிகவும் குறுகிய காலத்திற்குள் வைத்துப் பார்த்து மேலை நாடுகள் தீர்மானங்களை எடுக்க முடியாது. எனவேதான் வாதாடப் போகு முன் நாம் நம்மை ஆழமாகத் தயார் பண்ண வேண்டும். தந்தைசெல்வா, ஜி.ஜி.பொன்னம்பலம், அமிர்தலிங்கம், வன்னியசிங்கம் போன்றோர் உருவாக்கத்தவறிய காரியங்கள் ஒரு தொகை உள்ளன. ஒரு தனிநாட்டுக்குரிய சகல குழுக்களையும் அவர்கள் தம்மளவில் உருவாக்கியிருக்க வேண்டும். வெறுமனே ஆளையாள் திட்டி தேர்தல் வெற்றிக்காக தமீழப் பிரகடனம்வரை போனார்கள். இப்படியாக தமிழர் விட்ட தவறுகளையும் துலக்கமாக இளைஞர் அறிய வேண்டும்.

இவற்றை எல்லாம் நாம் அறிந்து என்ன பயன் ஐரோப்பிய தலைவர்கள் அறிவார்களா என்று நீங்கள் கேட்கலாம். ஆறு வருடங்களின் முன் இந்திய ஜனாதிபதியின் பெயரைக் கூறுங்கள் என்று கேட்டபோது இன்றைய அமெரிக்க அதிபர் ஜோர்ஜ்புஸ் திருதிருவென்று முழித்தது அனைவரும் அறிந்ததே. இப்படியான தலைவர்களால் இதையெல்லாம் அறிய முடியாது என்பது உண்மைதான். அவர்களைப் பார்த்து நாமும் ஆடு புல் மேய்ந்தது போல மேய்ந்து சென்றால் சரியென இங்குள்ள தமிழரும் நினைக்கலாம். அப்படி நினைத்தால் அதுவே நீங்கள் விடும் மாபெரும் தவறாக அமையும் என்றார் அப் பெண்மணி.

பொதுவாக அரசியல் தலைவர்கள் என்பவர்கள் வெறும் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகள் போலவே இருக்கிறார்கள். அவர்களுக்குப் பின்னால் ஒவ்வொரு விடயத்தையும் ஆராய்ந்து கூறுவதற்கு துறை போந்த அதிகாரிகளும், கல்விமான்களும் இருக்கிறார்கள். அவர்கள் சொல்லாமல் அரசியல்வாதிகள் எதுவுமே சொல்வதுமில்லை, செய்வதுமில்லை. ஒவ்வொரு நாட்டுக்கும் அவ்வவ் நாட்டுக்குரிய கற்கைப் பேராசிரியர்கள் பல்கலைக் கழகங்களில் இருக்கிறார்கள். இவர்கள் மொழி மட்டும் தெரிந்தவர்கள் அல்ல, மொழியோடு ஆழமான தேடலும் உடையவரர்கள். ஆழமான, சரியான காரணங்கள் இல்லாமல் இவர்கள் மனம் மாறுவதில்லை என்பதை நாம் உணர வேண்டும். நாம் என்ன கருத்தை எவரிடம் பேசினாலும் இறுதி முடிவு இவர்கள் கைகளில்தான் இருக்கிறது.

இதனை உறுதி செய்வதற்காக பிற்காலத்தில் மந்திரியாக வரக்கூடிய புகழ் பெற்ற டேனிஸ் நகர மேயர் ஒருவரைச் சந்தித்துப் பேசினோம். முக்கியமான விடயங்களை சொல்லி அவருடைய ஆதரவுக் கருத்தைக் கேட்டபோது, மாநாட்டு மண்டபத்தில் இருந்து வேகமாக எழுந்து வெளியே ஓடினார். சில நிமிடங்கள் கழித்து உரிய பதிலுடன் திரும்பி வந்தார். அரசியல் வானில் அவர் ஒரு இறப்பர் ஸ்டாம்பு என்பதற்கு அவர் ஓடிய ஓட்டம் நல்ல உதாரணமாக இருந்தது.

எனவேதான் வெறும் அன்னிய மொழி மட்டும் வெளிநாட்டு பிரச்சாரத்திற்கு போதிய கருவியல்ல. அன்னிய மொழியும் அதைவிட ஆழமாக தமிழ்; கலந்த அறிவும் அவசியம் என்றார். அதேவேளை நாட்டின் மீது ஆர்வமுள்ள அனைவரையும் அவர் பாராட்டினார். அத்தோடு தான் கூறிய கருத்துக்களையும் இணைத்தால் நமது பணிகள் மேலும் சிறப்பாக அமையும் என்றார் பெருந்தன்மையோடு.

Please Click here to login / register to post your comments.