தமிழ்ச்செல்வன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

சென்னை, நவ. 3: விடுதலைப் புலிகள் அரசியல் பிரிவுத் தலைவர் சுப. தமிழ்ச்செல்வன் மறைவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன், ஜனநாயக முன்னேற்றக் கழகத் தலைவர் எஸ். ஜெகத்ரட்சகன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து இவர்கள் தனித்தனியாக வெளியிட்டுள்ள அறிக்கை:

ஈழத் தமிழர்களின் உரிமைக்குரலை உலக அரங்கில் ஒலித்து வந்த சுப. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார் என்ற செய்தி, உலகத் தமிழர்கள் மட்டுமல்லாது அமைதியை விரும்பும் மனித சமுதாயத்துக்கே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை ராணுவத்தின் இந்த இனவெறித் தாக்குதலை மனித குலம் நிச்சயம் மன்னிக்காது. அதிலும் குறிப்பாக தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டது இலங்கை இனப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

நமது அண்டை நாட்டில் இத்தனை கொடுமைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. அங்கே கொடுமைகளுக்கு இலக்காகியிருக்கும் மக்களுடன் இனம், மொழி, கலாசாரம் ஆகியவற்றால் ஒன்றுபட்டுள்ள தமிழர்கள் வசிக்கும் இந்தியா இதனை இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

போர் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி, பேச்சுவார்த்தை மூலம் ஈழத் தமிழர்களின் நியாயமான அரசியல் உரிமைகளையும், மனித உரிமைகளையும் வழங்க வேண்டும் என இலங்கை அரசை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும்.

தாமதமின்றி இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக மக்கள் சார்பில் முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு உணர்த்த வேண்டும். இந்த விஷயத்தில் தமிழர்கள் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்க வேண்டும். இது தொடர்பாக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளதாக ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தா. பாண்டியன்: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவராக இருந்த தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்ட செய்தி அதிர்ச்சியையும், ஆழ்ந்த வேதனையையும் தருவதாக உள்ளது. இலங்கை அரசு ஆயுத பலத்தை கொண்டு, போர் நடத்தி இனப்பிரச்னைக்குத் தீர்வு காண முயற்சிப்பது, இலங்கை வாழ் தமிழ் மக்களை கொன்று அழிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது கண்டிக்கத்தக்கது. பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண இருதரப்பினரையும் இந்திய அரசு வற்புறுத்த வேண்டும்.

எஸ். ஜெகத்ரட்சகன்: சுப. தமிழ்ச்செல்வன் மறைவு தனிப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு மட்டும் இழப்பல்ல, மானமுள்ள அனைத்து தமிழர்களுக்கும் அதிர்ச்சியை அளிப்பதாகும்.

இதற்கு மேலும், இந்திய அரசு மௌவுனம் காட்டாமல் இலங்கையுடன் இருக்கிற எல்லா உறவுகளையும் உடனடியாக விலக்கிக் கொண்டு, ஐ.நா. மூலம் இந்த கொடுமைகளுக்கு முடிவு காண வேண்டும் என ஜெகத்ரட்சகன் வலியுறுத்தியுள்ளார்.

கி. வீரமணி: ஆன்டன் பாலசிங்கம் மறைந்த நிலையில், அந்த இடத்தை நிரப்பி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைசிறந்த பேச்சாளராகவும், சிந்தனையாளராகவும், அமைதிக்குழுவிடம் அடக்கத்தோடும், உறுதியோடும் தமது உரிமைகளை எடுத்து வைத்து பேச்சுவார்த்தைகளைத் திறம்பட நடத்திய தமிழ்ச்செல்வன் மறைவு ஒரு பேரிடி போன்ற செய்தி என தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் இரங்கல்

விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் மறைவு அதிர்ச்சி அளிப்பதாக தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறி க்கை: சில தினங்களுக்கு முன்னர்தான் விடுதலைப்புலிகள் மீதுள்ள தடையை அகற்றி தேர்தல்களில் அவர்கள் நேரடியாக போட்டியிட சட்டம் கொண்டு வரப்போவதாக இலங்கை அரசு அறிவித்தது. ஆனால், அதற்கு பின்னர் தமிழ்ச்செல்வன் மீது தாக்குதல் நடத்தி இருப்பது அந்த அரசு நம்பத்தகுந்த அரசு அல்ல என்பதை வெளிப்படுத்தியுள்ளது என விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

Please Click here to login / register to post your comments.