ஈழப் பிரச்சினைக்கு அமைதித் தீர்வு சாத்தியமில்லை: நெடுமாறன்

திருச்சி: தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதன் மூலம் இலங்கை அரசு அமைதியை விரும்பவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது. அமைதித் தீர்வுக்கான வாய்ப்புகள் மங்கி விட்டன என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

திருச்சியில் நேற்று தமிழக பெருவிழா நடைபெற்றது. மொழிவாரி அடிப்படையில் தமிழகம் பிரிக்கப்பட்டதை நினைவு கூறும் வகையிலும் தமிழகம் இழந்ததை நினைவுபடுத்தும் வகையிலும், இனியும் இழக்காமல் இருக்கும் வகையிலும் இந்தப் பெருவிழா நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பழ. நெடுமாறன் பேசுகையில், இலங்கை கடற்படை இதுவரை 800 இந்திய மீனவர்களைக் கொன்று குவித்துள்ளது. ஆசியாவிலேயே 2வது பெரிய கடற்படை என்று கூறப்படும் இந்திய கடற்படையால், ஒரு தமிழக மீனவரின் உயிரைக் கூட காப்பாற்ற முடியவில்லை.

இலங்கை கடற்படையினரின் பிடியிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள தமிழக மீனவர்களுக்கு சுய பாதுகாப்புக்காக ஆயுதங்கள தர வேண்டும். அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்க வேண்டும்.

தமிழகம் தனது உரிமைகளை பல விதங்களிலும் இழந்து வருகிறது. சேலம் கோட்டம் அமைப்பதற்குக் கூட சில தமிழக பகுதிகளை இழந்துதான் அதை பெற முடிந்திருக்கிறது.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்கள் கொல்லப்படும்போதெல்லாம் இந்திய அரசு மெளனம் சாதிக்கிறது. இது கண்டனத்துக்குரியது.

சுப.தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதன் மூலம், அமைதிப் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் மங்கி விட்டன. சமரச தீர்வுக்கு இலங்கை அரசு தயாராக இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது என்றார் நெடுமாறன்.

இதற்கிடையே, புதுக்கோட்டையில், அம்மாவட்ட தமிழ் ஈழ ஆதரவாளர்கள் மற்றும் இலங்கை தமிழர் ஆதரவாளர்கள் இணைந்து தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அமைதி ஊர்வலம் ஒன்றை நடத்தினர்.

Please Click here to login / register to post your comments.