அனைத்துலக மனிதஉரிமைகள் தினம் 2007 - சிறீலங்கா

அனைத்துலக மனிதஉரிமைகள் தினம் 2007 - சிறீலங்கா

இன்று மனிதஉரிமைகள தினம் அரைநூற்றாண்டுகளுக்கு முன்னர் போரின் அழிவுகள் தந்த படிப்பினைகளிலிருந்தும் மற்றும் மனிதநாகரீக வளர்ச்சியின் தேவைகளை கருத்தில் கொண்டு இயற்றப்பட்ட அனைத்துலக மனிதஉரிமைகள் சாதசனத்தினை கௌரவித்துப் பிரகடனப்படுத்த மனிதஉரிமைகள் நாள் இது.

மிகக் கொடுங்கோன்மையான சிங்கள பேரினவாத அரசினதும், படைகளினதும் ஆக்கிரமிப்பின் கீழ் திட்டமிடப்பட்ட இனஅழிப்பினை எதிர்கொண்டு போராடும் தமிழ் மக்களிற்கு இந்த நாளின் முக்கியத்துவம் அளவற்றது. சர்வதேச சமூகம் தான் ஏற்றுக்கொண்ட மனித விழுமியங்களையும், நாகரீகத்தினையும் கௌரவிக்கும் இன்றைய நாளில் எவ்வாறு சிறீலங்காவின் இனஅழிப்பினை தடுத்துநிறுத்தும் நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் எடுக்கப் போகின்றது என்கின்ற எதிர்பார்ப்பு புலத்துத் தமிழ் மக்களிடம் தீவிரமாக எழுந்துள்ளது.

இன்று சிறீலங்காவின் மனிதஉரிமைகள் மீறல்கள் தொடர்பான பகிரங்க கருத்துக்களை ஐநாவின் பல வல்லுனர்களும், ஆணையாளரும் வெளியிட்டுள்ளனர். சர்வதேச சமூகம் சிறீலங்காவின் மனிதஉரிமைகள் மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மதிக்கத தன்மை என்பன தொடர்பாகப் பேசிவருகின்றன. பல அனைத்துலக மனிதஉரிமைகள் அமைப்புக்கள் கடுமையாக இது தொடர்பாக பரப்புரை செய்து வருகின்றனர்.

ஆயினும், இந்த அனைத்து நடவடிக்கைகளையும் புறந்தள்ளி - எதுவித காத்திரமான தண்டனைகளையும் பெறாமல் சிறீலங்கா தனது போரையும், மனிதஉரிமைகள் மீறல்களையும் புரிந்து வருகின்றது. மனிதவிழுமியங்களை உபதேசிக்கும் பல மேற்குலக நாடுகள் சிறீலங்காவிற்கான இராணுவ வளங்களையும், பொருளாதார உதவிகளையும் இன்னமும் தடுத்து நிறுத்தவில்லை. இந்தியா, சீனா போன்ற ஆசிய வல்லரசுகள் சிறீலங்காவின் மனிதஉரிமைகள் மீறல்களை தடுத்துநிறுத்த போதிய தாக்கமுள்ள முயற்சிகளை எடுக்கவில்லை. அனைத்துக்கும் மேலாக, உயரிய எண்ணங்களுடன் புனரமைப்பு செய்யப்பட்ட ஐநா மனிதஉரிமைகள் கவுன்சிலில் சிறீலங்கா இன்னமும் அமர்ந்திருக்கின்றது.

இந்தப் பின்னணியில் இன்று கூடுகின்ற ஐநா மனிதஉரிமைகள் கவுன்சிலின் 6வது தொடரின் இரண்டாவது அமர்வானது சிறீலங்கா நிலை தொடர்பான விபரங்களை தனது நிகழ்ச்சிநிரலில் உள்ளடக்கி சிறீலங்காவின் இனஅழிப்புக்கூறுகளை உள்ளடக்கிய போரினை தடுத்து நிறுத்திட முன்வர வேண்டும். இலங்கை சென்று வந்த ஐநா மனிதஉரிமைகள் ஆணையாளர் லுயிஸ் ஆர்பர் அவர்களின் பயண அறிக்கை இந்தத்திசையில் உலக சமூகத்தினை வழிநடத்தும் என்ற உயரிய எதிர்பார்ப்பு அனைத்துலக தமிழ் சமூகத்திடமுண்டு.

மேலதிக தொடர்புகளிற்கு: ift@bluewin.ch

Please Click here to login / register to post your comments.