விடுதலைப் புலிகளின் மீதான தடை புதுப்பிக்கப்படவில்லை - திருமாவளவன்

சென்னை, டிச. 17 : - தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் மீதான தடையை அரசாங்கம் நீட்டிக்கவில்லை என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர், தொல். திருமாவளவன் டிசம்பர் 16 அன்று தெரிவித்தார்.

1991-ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின்பு, விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப் பட்டது. அந்தத் தடை, இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு அவ்வாறு செய்யப்படவில்லை. இருப்பினும் உள்துறை அமைச்சகப் பட்டியலில் அந்த அமைப்பு தடை செய்யப்பட்ட ஒன்றாகக் காட்டப்படுகிறது.

புலிகளின் மீதான தடையை நீட்டிக்கவேண்டும் எனும் நோக்கில், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தமிழ் நாட்டில் நடமாடுகிறார்கள் எனும் தவறான எண்ணத்தை, இந்திய உளவுத்துறையினர் உருவாக்குகிறார்கள் எனத் திருமாவளவன் குறை கூறினார்.

விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை மாநில அரசு கைது செய்யவேண்டும் என்ற மத்திய அமைச்சர் இளங்கோவனின் கூற்றை விமர்சித்த, திருமாவளவன், தமது கட்சிக்குப் புலிகளுடன் நேரடியான அல்லது மறைமுகமான உறவு எதுவும் இல்லையென்றும், தார்மீக ஆதரவு மட்டுமே தருவதாகவும் விளக்கம் அளித்தார். "பிரிட்டன், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் உள்ளவர்கள், இலங்கைத் தமிழரின் இன்னலை அறிந்து, புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்" எனச் சுட்டிக் காட்டினார் விடுதலைச் சிறுத்தைகளின் பொதுச்செயலாளர்.

Please Click here to login / register to post your comments.