மணிவிழாக்காணும் வடமராட்சி வலயக் கல்விப்பணிப்பாளர்

ஆக்கம்: பேராசிரியர் எம்.நடராஜசுந்தரம்
மாதம்பையில் ஆசானாகக் கல்விச்சேவையை ஆரம்பித்து அதிபராக, உதவிக்கல்விப் பணிப்பாளராக, பிரதிக் கல்விப் பணிப்பாளராக, வலயக்கல்விப் பணிப்பாளராகப் பல பதவிகளை அலங்கரித்து மணிவிழாக் காண்கிறார் வே.தி.செல்வரத்தினம்.

விஞ்ஞான பாடத்தைச் செயல்முறையுடன் கற்பிப்பதில் வல்லவராகவும் அதிபர் பதவியை அலங்கரித்து வழிகாட்டும் உதாரண புருஷனாகவும் மணி விழாநாயகன் திகழ்ந்தார். அன்னாரின் ஆற்றலறிந்து அவர் உதவிக்கல்விப் பணிப்பாளராக உயர்த்தப்பட்டார். 1994 ஆம் ஆண்டு மேலும் ஒருபடி உயர்ந்து கோட்டக்கல்வி அலுவலரானார். பருத்தித்துறைக் கோட்டப் பள்ளி மாணவர்களின் அடைவை மேம்படுத்துவதிலும் ஆசிரியர்களின் வினைத்திறனை விளைதிறனாக்கவும் மணிவிழா நாயகன் பாடுபட்டார். 1998 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் கல்வி நிருவாகக் கட்டமைப்பில் "வலயக் கல்விப் பணிமனைகள்" உருவாகின. வடமராட்சி வலயத்தில் நிருவாகத்திற்கான பிரதிக் கல்விப் பணிப்பாளராக இவர் நியமிக்கப்பட்டார். பதவிமாற்றங்கள் அவர் பணியில் மேலும் சிறப்படைய உதவின. இவ்வகையில் வலயக்கல்விப் பணிப்பாளரின் வலது கரமாகவும் வழிகாட்டும் மந்திரியாகவும் மணிவிழா நாயகன் திகழ்ந்தார். பாரதிகாட்டிய நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனாய் மனிவிழா நாயகன் பல்வேறு பாத்திரங்களைத் தாங்கி கல்விச் சேவையாற்றியுள்ளார்.

மணிவிழாநாயகன் வடமராட்சி வலயத்தின் வலயக்கல்விப்பணிப்பாளராகப் பதவியேற்று இம்மண்ணின் கல்விப் பாரம்பரியத்தை வளர்க்கப் பாடுபட்டு உழைத்தார். இவரது காலத்தில் டிசம்பர் 2004 இல் ஆழிப் பேரலைகளால் பல பள்ளிகள் அழிவடைந்தன. மாணவர்கள் பலர் காவு கொள்ளப்பட்டனர். உடலாலும் உள்ளத்தாலும் காயமடைந்த மாணவர்கள் பலர் உடுத்த உடையோடு ஓடிவந்த மாணவர் பலர் உருக்குலைந்த நிலையிலிருந்த மாணவர்களிற்கு மணிவிழா நாயகன் பல்வேறு வழிகளில் உதவினார்.

யாழ். மாவட்டத்தில் அதிக மாணவர்களையும், பிரபல பள்ளிக் கூடங்களையும் கொண்ட யாழ். வலயத்திற்கு செல்வரத்தினம் இடமாற்றம் பெற்று கடமையேற்றார். இம் மாவட்டத்தின் அச்சாணி யாழ். வலயமே. அத்துடன், மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் பதவியையும் ஏற்றுக் கொண்டார். இரு பதவிகளையும் ஏற்று கடமையாற்றியவேளை, நெருக்கடிகளையும் எதிர்கொள்ள நேரிட்டது. யாழ்.மாவட்டத்திற்கான பிரதான சாலை மூடப்பட்டது. நாட்டில் அசாதாரண சூழல் ஏற்பட்டது.

நெருக்கடிகள், மாணவர்கள், ஆசிரியர்களையும் நெருடின. கல்விக்கான உபகரணங்கள் பற்றாக்குறை, பாடநூல்கள், சீருடைகள் வருவதில் இடர்கள். இத்தகைய பல்வேறு நெருக்கடிகளையும் மணிவிழா நாயகன் எதிர்கொண்டு வெற்றி கண்டார்.

யாழ். மண்ணிலே வெற்றி கண்ட கல்விப் பணிப்பாளராக செல்வரத்தினம் பணியாற்றியுள்ளார். இடர் முகாமைத்துவத்தின் இலக்கணமாகவும் முகாமைத்துவத் சிந்தனைகளை உள்வாங்கிச் செயல் வடிவம் கொடுத்த முகாமையாளராகவும் இவர் இலங்கினார். நல்லாட்சி, வகை கூறல் பொறுப்பேற்றல், ஒளிவுமறைவின்றி செயற்படல் ஆகிய புதிய முகாமைச் சிந்தனைகளை உள்வாங்கி முகாமை செய்து முகாமைத்துவத்தின் இலக்கணமாகவும் இலக்கியமாகவும் மணிவிழாநாயகன் விளங்கினார். மூன்று தசாப்த காலங்கள் கல்விப்பணியாற்றிய மணிவிழாநாயகனின் பணி மேலும் ஒளி பெறுக.

Please Click here to login / register to post your comments.