இந்திய மாயையில் இருந்து தமிழ்மக்கள் விடுபட வேண்டும்!

ஆக்கம்: நக்கீரன்

இலங்கையின் இனநெருக்கடி பற்றி இந்தியாவின் அணுகுமுறை என்ன? அதன் கோட்பாடு என்ன? இந்தியா அதில் தலையிடுமா? இது போன்ற கேள்விகளே இப்போது தமிழ் மக்களது மண்டையைக் குடைந்து கொண்டிருக்கின்றன.

இந்தக் கேள்விகளுக்கு அண்மையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுணும் விடுத்துள்ள கூட்டறிக்கை பதிலாக அமைந்துள்ளது.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுணும் விடுத்துள்ள கூட்டறிக்கையில் “இலங்கையின் இனநெருக்கடிக்கு இராணுவ நடவடிக்கைகள் தீர்வாக அமையாது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து சமூகத்தினத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை இலங்கை அரசு முன்வைக்க வேண்டும்” எனச் சொல்லப்பட்டுள்ளது.

இப்படிச் சொல்லப்படுவது அல்லது வலியுறுத்தப்படுவது இது முதல் தடவையல்ல. இந்தியா கடந்த காலத்திலும் இந்தப் பாட்டைத்தான் பாடிக்கொண்டு வந்தது.

இரண்டு கிழமைகளுக்கு முன்னர் கூடப் புதுடெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களுடன் பேசும்போது இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி சுருதி பிசகாமல் அதே பாட்டைத்தான் பாடினார். “இலங்கை இனப் பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண்பதைவிட, அரசியல் தீர்வு காண்பதே அந்த நாட்டுக்கு நல்லது” என்றார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில், இலங்கை அரசுக்கு இந்தியா உதவுமா என்று செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது, “நமது அணுகுமுறை அடிப்படையானது. இலங்கை தனி இறையாண்மை கொண்ட, அண்டை நாடு என்ற முறையில் அந்த நாட்டுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறோம். அந்த நாட்டில் நடைபெறும் சிக்கல்களைக் கையாள்வதற்கான அனைத்து உரிமைகளும் அந்நாட்டு அரசுக்கு உண்டு. இராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண்பதைவிட, அரசியல் தீர்வு காண்பதே அந்த நாட்டுக்கு நல்லது’’ என்றார் பாதுகாப்பு அமைச்சர்.

இதனிடையே, இலங்கைச் சிக்கல் தொடர்பாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் கருத்துத் தெரிவித்திருக்கிறார். அது ஊன்றிப் படிக்க வேண்டிய கருத்தாகும்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு செவ்வியளித்த பிரணாப் முகர்ஜி, “இலங்கைப் படைகளுக்கும் விடுதலைப் புலி பயங்கரவாதிகளுக்கும் இடையிலான சண்டை அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. பயங்கரவாதத்தைப் பொறுத்தவரை, அதை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு. எந்த ஒரு நாடு பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்தாலும் அந்த நாட்டின் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு உரிமை உண்டு’’ என்று பிரணாப் முகர்ஜி திருவாய் மலர்ந்தார்.

“அதே நேரத்தில், தமிழ் சிறுபான்மையினரின் நியாயமான கோரிக்கைகளை, அந்த நாட்டின் அரசியல் யாப்புக்கு உட்பட்டு நிறைவேற்ற இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது’’ என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்தியா விரும்புகிறது. இந்தியா வேண்டவில்லை.

இந்த இரண்டு அமைச்சர்கள் தெரிவித்திருக்கும் கருத்தைச் சுருக்கிக் கூறலாம்.

  (1) ஸ்ரீலங்கா அண்டை நாடு. அதற்கு ஆயுதம் மற்றும் பொருளாதார உதவி செய்வது இந்தியாவின் கடமை.
  (2) ஸ்ரீலங்கா இறைமையுள்ள நாடு.
  ((3) இனநெருக்கடி ஸ்ரீலங்காவின் உள்நாட்டுச் சிக்கல்.
  ((4) இந்தியா அதில் தலையிடாது.
  ((5) வி.புலிகள் பயங்கரவாதிகள்.
  ((6) ஸ்ரீலங்கா பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுகிறது. அந்த உரிமை அந்த நாட்டுக்கு உண்டு.
  ((7) தமிழ் சிறுபான்மையினரின் நியாயமான கோரிக்கைகளை ஸ்ரீலங்காவின் அரசியல் சட்டத்துக்கு அமைய நிறைவேற்றி வைக்க வேண்டும்.

இப்போது இலங்கை அரசு நியமித்த அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு 20 ஆண்டுகளுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட 13 ஆவது திருத்தத்தை முழுதாக நடைமுறைப் படுத்துமாறு பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரை ஆட்சித் தலைவரின் ஆணைக்கு இணங்கச் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரையைப் பற்றிக் கருத்துத் தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் பின்வருமாறு கூறியருக்கிறார்.

'இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள அதிகாரப்பகிர்வு வழிமுறைகள் மற்றும் ஆட்சிமொழி வழிமுறைகள் தொடர்பாக, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு அளித்திருக்கும் இடைக்காலப் பரிந்துரைகள் தொடர்பாக இலங்கை அரசு இந்தியாவிடம் தெரியப்படுத்தியிருக்கிறது. இலங்கையில் உள்ள பிரச்சினைகளுக்கு இலங்கை மக்கள்தான் தீர்வு காண வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடாக இருந்து வருகிறது. அந்தத் தீர்வு, ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். இலங்கையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு இலங்கை அரசுடனும், அந்நாட்டு மக்களுடனும் இந்தியா தொடர்ந்து செயலாற்றும். அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் குழு அளித்திருக்கும் பரிந்துரைகள் அப்படிப்பட்ட தீர்வுக்கு பங்காற்றுவதாக இருக்கும் நிலையில், அது வரவேற்கத்தகுந்த முதல் நடவடிக்கை.”

வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் அவர்களது கருத்து இந்தியாவின் தலையீட்டால் 1987 இல் நிறைவேற்றப்பட்ட 13 ஆவது சட்ட திருத்தத்தை இருபது ஆண்டுகள் கழித்து அதனை முழுதாக நடை முறைப் படுத்தப் போவதாக ஸ்ரீலங்கா அரசு கூறியிருப்பது இநதி;யாவுக்கு அற்ப மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளதைக் காட்டுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீலங்கா ஒன்றுபட்ட அரசு தமிழ்மக்களது வேட்கையை நிறைவு செய்யும் வண்ணம் ஒரு தீர்வை முன்வைக்க வேண்டும் என்று இந்தியா கூறிவந்தது. இப்போது “ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக தீர்வு இருக்க வேண்டும்” என மாறிக் கூறுகிறது.

இந்த “ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்” என்ற பல்லவியைத்தான் அனைத்துலக சமூகமும் பாடிக் கொண்டிருக்கிறது.

ஸ்ரீலங்கா சிங்கள - பவுத்த நாடு. அதில் பவுத்தத்துக்கே முதலிடம். அதன் ஆட்சிமுறை ஒற்றையாட்சி. வட – கிழக்கு தமிழர்களது தாயகம் அல்ல. தமிழர்களுக்குத் தன்னாட்சி உரிமை இல்லை. தமிழர்கள் ஒரு தேசிய இனம் அல்ல. இவைதான் மகிந்த சிந்தனை தெரிவிக்கும் கோட்பாடு.

சிங்கள சமூகத்துக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் இடையே பாரிய இடைவெளி இருக்கிறது. இந்த அழகில் “ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக தீர்வு” எப்படிச் சாத்தியமாகும்? எந்தக் காலத்தில் சாத்தியமாகும்?

இந்தியா என்றதும் தமிழ்மக்கள் அது காந்தி, நேரு பிறந்த நாடு என்று நினைக்கிறார்கள். காசி - இராமேசுவரம் இரண்டுக்கும் யாத்திரை போவது பற்றி நினைக்கிறார்கள். ஆறு கோடி தமிழர்கள் வாழும் தமிழகத்தை நினைக்கிறார்கள். இந்தியாவை ஆள்பவர்கள் நம்மவர்கள் என்று நினைக்கிறார்கள். இவை யாவும் மாயை ஆகும்.

இந்தியாவை ஆள்பவர்கள் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், இராஜந்தான், பீகார் போன்ற இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கையில்தான் ஆட்சி அதிகாரம் இருக்கிறது.

இந்திய ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களைக் கூட ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் சிங்களவர்கள் தமிழர்களைத் தாழ்வாகப் பார்ப்பது போல இந்திக்காரர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களைத் தாழ்வாகப் பார்க்கிறார்கள்.

“மதறாசி” என்று விளிப்பது “தெமிலோ” என்று பழிப்பதற்குச் சமமாகும்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை எடுத்துக் கொண்டால் அது இப்போது உறையப் போடப்பட்டுள்ளது. என்ன காரணம்? இராமர் கட்டிய பாலத்தை இடிக்கக் கூடாது. இடிக்க விட மாட்டோம் என இந்துத்துவ சக்திகள் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.

இந்திய அரசியலில் கோமாளி என்ற பெயரெடுத்த ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் வேறு சிலரும் இராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாகப் பிரகடனம் செய்து பாதுகாக்குமாறு இந்திய அரசாங்கத்துக்கு உத்தரவிடக்கோரி கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தனர். அவற்றை விசாரணைக்கு எடுத்த உச்சநீதிமன்றம் இராமர் பாலம் பகுதியில் கட்டுமானப் பணிகளை இடைநிறுத்திவைத்து, பாலத்தை இடிக்காமல் அகழ்வுப் பணியைத் தொடரும் படி கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 31 ஆம் நாள் இடைக்கால ஆணையைப் பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் மத்திய அரசாங்கத்தின் தொல்பொருள் ஆய்வுத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இராமாயணத்தில் வரும் இராமர் மற்றும் கதாபாத்திரங்கள் உண்மையிலேயே இருந்ததற்கு வரலாற்று அடிப்படையிலோ அல்லது அறிவியல் அடிப்படையிலோ ஆதாரங்கள் எதுவுமில்லை என்றும் இராமாயணத்தில் வரும் நிகழ்ச்சிகள் நடந்ததற்கான ஆதாரங்களும் இல்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மத அடிப்படையில் உணர்வுகளை மக்கள் மத்தியில் தூண்டிவிட்டு அரசியல் இலாபமடைவதற்கு காத்துக் கொண்டிருக்கும் இனவாத, மதவாத சக்திகளுக்கு தொல்பொருள் ஆய்வுத்துறையின் இம்மனு அவல் போல அமைந்துவிட்டது. அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் மத நிந்தனை செய்துவிட்டதாகவும் இந்துக்களது நாகரிகப் பாரம்பரியம் அவமதிக்கப்பட்டு விட்டதாகவும் அச்சக்திகள் கண்டனக் குரலெழுப்பத் தொடங்கின. பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி வேண்டுகோள் விடுத்தார். பாரதிய ஜனதா கட்சியினரும் பல்வேறு இந்துமதவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து தொல்பொருள் ஆய்வுத்துறை தாக்கல் செய்தமனுவும் சேது சமுத்திரம் கப்பல் கால்வாய்த் திட்டம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வேறு ஒரு மனுவும் உச்சநீதிமன்றத்தில் திருப்பிப் பெறப்பட்டன. இராமர் பாலத்துக்கு சேதம் இல்லாமல் அகழ்வுப்பணியைத் தொடரும்படி ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கும் என்று நீதிபதிகள் அறிவித்தனர். சேது சமுத்திரத் திட்டத்துக்கு மாற்றுப்பாதையை கண்டறியத் தயார் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான தொல்பொருள் ஆய்வுத்துறையைச் சேர்ந்த இரு மூத்த அதிகாரிகள் இடை நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்வதை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. காரணம் நான்கு வட மாநிலங்களில் தேர்தல் வர இருக்கிறது. ஏற்கனவே குஜராத்திலும் சட்டிஸ்காரிலும் நடந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியுள்ளது.

சேது கால்வாய்த் திட்டம் 6 கோடி தமிழர்களது 150 ஆண்டு காலக் கனவு. அறிஞர் அண்ணாவின் கனவுத் திட்டம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அல்ல. தி.மு.க. மற்றும் பா.மு.க. பங்கு கொண்டுள்ள கூட்டாச்சி நடக்கிறது. மொத்தம் 13 தமிழ் அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் இருக்கிறார்கள். மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு சேது கால்வாய்த் திட்டத்துக்கு பொறுப்பாக இருக்கிறார். இருந்தும் சேது கால்வாய்த் திட்டம் கேள்விக் குறியாகியுள்ளது. ஆறு கோடி தமிழர்களது உணர்வுகளை மத்திய அரசு அலட்சியப்படுத்தும் போது இலங்கைத் தமிழர்பற்றிச் சொல்லவா வேண்டும்?

தமிழ்மக்கள் இந்திய மாயையில் இருந்து விடுபட வேண்டும்.

Please Click here to login / register to post your comments.