பனைவள அபிவிருத்தி பின்னடைவும் பனை அபிவிருத்திச் சபையும்

ஆக்கம்: செ.பத்மநாதன்
பனைவளம் கூடுதலாக உள்ள வடக்கு, கிழக்கில் பனையை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், பனைவள அபிவிருத்தியை மேற்கொள்ளும் முகமாகவும் 1978 ஆம் ஆண்டு பனை அபிவிருத்திச் சபை உருவாக்கப்பட்டது. வர்த்தமானி அறிவித்தலின் படி இச்சபை யாழ்ப்பாணத்தைத் தலைமையகமாக் கொண்டுள்ளது.

பனை அபிவிருத்திச் சபை உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து அமரர் கே.சி.நித்தியானந்தா, க.நடராசா, எம்.பாக்கியநாதன் ஆகியோர் தலைவர்களாகப் பணியாற்றிய காலப்பகுதி வரை துரித வளர்ச்சியும், நாடளாவிய ரீதியில் பனம்பொருள் உற்பத்திகளும் அபிவிருத்தி அடைந்தன.

பனம்பொருள் உற்பத்திப் பயிற்சித் திட்டங்கள், பயிற்சி நிலையங்கள், உற்பத்தி நிலையங்கள், நவீன உற்பத்திகள், பனைவள ஆராய்ச்சிகள் என்பன மேற்கொள்ளப்பட்டன. பனைவளம் நாடளாவிய ரீதியில் தேசிய வளங்களான தேயிலை, தென்னை, இறப்பர் ஆகியவற்றுடன் குறிப்பிடப்பட்டு வந்தது. பனம்பொருள் கைப்பணிப்பொருட்கள், உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்கள், சந்தைப்படுத்தும் வாய்ப்புக்கள் என்பன ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதுடன் உற்பத்தியாளர்களின் வருமானமும் அதிகரிக்கப்பட்டு ஊக்குவிப்பு உதவிகளும் வழங்கப்பட்டு வந்தன.

ஒரு பனையில் இருந்து நூற்றுக்கும் அதிகமான பயன்களைப் பல்வேறு வழிகளிலும் பெற முடிவதுடன் ஒரு பனையில் இருந்து வருடமொன்றுக்கு 15,000 ரூபா வருமானம் பெறமுடியுமென்று கணக்கிடப்பட்டுள்ளது. பனை அபிவிருத்திச் சபை இதற்கான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டும் அரசினால் பெறப்படும் நிதி ஒதுக்கீடுகளைப் பயன்படுத்தி பனைவள உற்பத்தி நிலையங்களையும், பயிற்சி நிலையங்களையும், ஆய்வுகூடங்களையும் நிறுவியது.

ஆனால், கடந்த பத்தாண்டு காலப்பகுதியில் பனை அபிவிருத்திச் சபையின் செயற்பாடுகளில் பாரிய வீழ்ச்சியும், ஸ்தம்பிதத் தன்மையும் காணப்பட்டுள்ளன. தற்போதைய பனை அபிவிருத்திச் சபைத் தலைமை இயங்க முடியாத நிலையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. அரசினால் வழங்கப்படும் நிதி ` சுயதேவை' களுக்காகவே பயன்படுத்தப்படும் தூரதிர்ஷடமான நிலையில் பனை அபிவிருத்திச் சபை இயங்கி வருகின்றது.

பல்வேறு ஊழல்கள், முறையீனங்களால் பனை அபிவிருத்திச் சபை திக்குமுக்காடிக் கொண்டிருக்கின்றது. நூறு வீதம் பனைவளத்தைக் கொண்டுள்ள வடக்குக் கிழக்குத் தமிழ்ப் பிரதேசங்களில் வாழும் பனைவள வருவாயை நம்பியிருக்கும் மக்களின் பொருளாதார அபிவிருத்தி மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட பனை அபிவிருத்திச் சபையின் பணிப்பாளர் சபையின் 11 உறுப்பினர்களில் 10 உறுப்பினர்கள் சிங்கள இனத்தவர்கள். தமிழ் மொழியே தெரியாதவர்கள். பனை அபிவிருத்திச் சபை உத்தியோகத்தர்களில் 99 வீதமானோர் தமிழர்கள். தமிழ் மக்களின் மூலவளமான பனை வளத்துடன் தொடர்பான பனை அபிவிருத்திச் சபையின் பணிப்பாளர்களாகச் சிங்கள உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சி அளிப்பதுடன் பனை அபிவிருத்திச் சபை உருவாக்கப்பட்ட நோக்கத்திற்கும் முரணானது

பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் பெயர் விபரம்:

திருமதி வி.டபிள்யூ ராஜபக்ச,திருமதி எம்.ஏ.நாலினி, எம்.எம்.அபேரத்தின, கே.குமாரநாயகம், எல்.விஜயரத்ன, எஸ்.களுஆராய்ச்சி, எல்.ஜீ.எச்.தயாரத்ன, எம்.சுது நிலமே, ஆர்.வர்ணகுலசூரிய, சி.எச்.கமகே

ஒரேயொரு தமிழ் உறுப்பினரான கே.குமாரநாயகம் என்பவர் சமுகமளிப்பதில்லை.

மேற்படி சிங்கள உறுப்பினர்கள் சபையின் தமிழ் அதிகாரிகள், ஊழியர்கள் மீது இனரீதியான வன்முறைகளில் ஈடுபட்டு வருவது பனை அபிவிருத்திச் சபையின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி உள்ளது.

பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவர் அமைச்சினதோ, பனை அபிவிருத்திச் சபையினதோ அங்கீகாரமில்லாமல் தனது பெயரில் 175,000 ரூபாவிற்கான காசோலையை எழுதித்தருமாறு கணக்காளாரை மிரட்டியும், தகாத வார்த்தைகளால் பேசியும் தாக்க முயன்றுள்ளார். இதனால், பீதியடைந்த கணக்காளர் காசோலையை எழுதி வழங்கியுள்ளார். இக் காசோலையில் கையொப்பமிடும் இரண்டாவது உத்தியோகத்தரையும் அவ்வாறே பயமுறுத்தி ஒப்பமிடச் செய்துள்ளார். ரூபா 175,000 காசோலைப் பணம் மோசடியாகப் பெறப்பட்டுள்ளது.

இப்பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் கடந்த நான்கு மாத காலப்பகுதியில் ரூபா 205,000 க்கான செலவினங்களை மேற்கொண்டுள்ளனர்.

ஊழயர் சேமலாபநிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றுக்கான பண ஒதுக்கீடுகளும் வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுச் சட்ட விரோதமான முறையில் செலவிடப்பட்டுள்ளது. இதனால், 7.5 மில்லியன் ரூபா ஊழியர் சேமலாபநிதி, ஊழியர் நம்பிக்கை நிதி செலுத்தப்படாது நிலுவையாக உள்ளது.

பனைவள அபிவிருத்திக்கான அரச நிதியைத் துஷ்பிரயோகம் செய்து வருவதனால் பனை அபிவிருத்திச் சபை உருவாக்கப்பட்ட நோக்கமும் எதிர்பார்ப்பும் தோல்வி கண்டுள்ளன. இதற்குத் தற்போதைய தலைவரும், பணிப்பாளர் சபையுமே பொறுப்பேற்க வேண்டும்.

சபையின் ஆளணிக்கு மேலாக ஊழியர்கள் இருந்தபோதிலும் புதிதாக சுமார் 20 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்களுக்கு அமைச்சின் அனுமதி பெறப்படவில்லை. இந்த ஊழியர்களுக்கான சம்பளப் பணம் திறைசேரி அபிவிருத்திக்காக வழங்கும் நிதியில் இருந்தே வழங்கப்படுகின்றது. இதனால், பனைவள அபிவிருத்தி நிதியில் இருந்து மாதந்தோறும் ரூபா 222,000 துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வருகின்றது.

2000 ஆம் ஆண்டு வெளிநாடு சென்ற பெண் ஊழியர் ஒருவர் 07 வருடங்களின் பின்னர் திரும்பி வந்துள்ளார். அரச பிரமாணத்தின்படி இரு வருடங்கள் மட்டுமே வெளிநாடு செல்ல விடுமுறை அனுமதிக்கப் படுகின்றது. ஆனால், 7 வருடங்களின் பின்னர் 1.6.2007 ஆம் திகதி நிரந்தர நியமனம் வழங்கி அவர் வெளிநாடு சென்ற 7 வருட காலத்துக்குச் சம்பளப் படியேற்றத்துடன் மாதாந்தச் சம்பளம் 13,700 ரூபா வழங்கப்படுகின்றது. இந்த நியமனம் முறையீனமானதும், அதிகார துஷ்பிரயோகமுமாகும். ஏற்கனவே பல ஊழியர்கள் வருடக்கணக்காக அமைய ஊழியர்களாக கடமையாற்றிக்கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்காது தானாகவே வேலையிலிருந்து நீங்கிய பெண் ஊழியருக்கு நிரந்த நியமனம் வழங்கப்பட்ட "மர்மம்" பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதேவேளை, அனுபவமும், ஆற்றலும் வாய்ந்த உயர் அதிகாரிகள் சேவை நீடிப்பு வழங்கப்படாது புறந் தள்ளப்பட்டனர். ஆனால், தலைவரின் உறவினர், வேண்டப்பட்ட அனுபவமற்ற கனிஷ்ட ஊழியர்களுக்கு மூன்றாவது தடவையாகவும் சேவை நீடிப்பு வழங்கித் தமது நிர்வாக முதிர்ச்சியின்மையைத் தலைமை நிரூபித்துள்ளது.

ஐ.நா.அபிவிருத்தித் திட்டத்தினாலும், வேறு அரச சார்பற்ற நிறுவனங்களினாலும் யாழ்ப்பாணம், திருகோணமலை, மன்னார், புத்தளம் அம்பாந்தோட்டை முதலிய மாவட்டங்களில் அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட நிதிகளும் உரிய அபிவிருத்தி வேலைகளுக்குச் செலவிடப்படாது துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளன.

மன்னார், வவுனியா, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள பனை அபிவிருத்திச் சபையில் உள்ள பனை அபிவிருத்திச் சபையின் பிராந்தியக் காரியாலயங்கள் கவனிப்பாரின்றி ஸ்தம்பித்து உள்ளன. இதனால் இம் மாவட்டங்களில் பனை அபிவிருத்தி குன்றியுள்ளது. பனம் கைப்பணிப் பொருள் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தி பொருட்களைச் சந்தைப்படுத்த முடியாது கஷ்டமும், நஷ்டமும் அடைந்து வருகின்றனர்.

நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரக்கூடிய பனந்தும்புத் தொழிற்சாலைகளின் இயந்திரங்கள் அநாதரவாகக் கிடக்கின்றன. இதனால் பல குடும்பங்கள் வேலை வாய்ப்பும், சுயவருமானமும் இழந்து அவல நிலையில் உள்ளனர்.

நாடுபூராவும் யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மன்னார், அனுராதபுரம், திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, புத்தளம், அம்பாந்தோட்டை மாவட்டங்களில் 11 மில்லியன் பனை மரங்கள் உள்ளன. இதேவேளை, பல்வேறு தேவைகளுக்கென 3.5 மில்லியன் பனை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.அழிக்கப்பட்ட பனை மரங்களுக்கு ஈடாகப் புதிய பனம் விதை நடுகைகள் துரிதப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

தற்போதுள்ள 11 மில்லியன் பனை மரங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். இப் பனை மரங்களை நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு விமோசனம் பெற்றுக்கொடுக்க வேண்டும். இதற்குத் தற்போதுள்ள பனை அபிவிருத்திச் சபைத் தலைவரோ, பணிப்பாளர் சபை உறுப்பினர்களோ பொருத்தமானவர்கள் அல்ல.

தகுதிவாய்ந்த புதிய சபை உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டு பனை அபிவிருத்திச் சபை புனரமைக்கப்பட வேண்டும். இது விடயமாக எமது சமூக அபிவிருத்திக் கழகம் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

தமிழ் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் பனை அபிவிருத்திச் சபையின் இறுதிப் பயணத்தை தடுத்து நிறுத்தி பனைவள அபிவிருத்தி மேம்பாட்டுக்குத் தமது பங்களிப்பைச் செலுத்த வேண்டும்.

கட்டுரையாளர் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி நலன்புரிச் சங்கத்தின் தலைவர்

Please Click here to login / register to post your comments.