புலிகளை ஆதரிப்போர் மீது நடவடிக்கை: சட்டம் கொண்டு வர தயார்-கருணாநிதி

சென்னை: விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரிப்பதை குற்றமாக கருதி நடவடிக்கை எடுக்கும் வகையில் வழக்கறிஞர் குழு ஒன்றை அமைத்து, ஆராய்ந்து சட்டம் கொண்டு வர அரசு தயாராக இருப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பேசி வருவது குறித்து காங்கிரஸ் மற்றும் அதிமுக சார்பில் பிரச்சனை கிளப்பப்பட்டது.

காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் எழுந்து விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் பற்றிய கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என்றார். ஆனால் சபாநாயகர் அதை தகவல் கோரல் என்று எடுத்துக் கொள்ளவதாகக் கூறி விவாதத்துக்கு அனுமதி தந்தார்.

இதையடுத்து நடந்த விவாதம் வருமாறு:

செங்கோட்டையன் (அதிமுக): இந்த பிரச்சினை குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று நேற்று அனுமதி கேட்டோம். ஆனால் அனுமதி தரவில்லை. திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் தீவிரவாதிகளான விடுதலைப் புலிகளை ஆதரித்தும், எங்கள் கட்சி தலைவரை கடுமையாக விமர்சித்தும் பேசியுள்ளார்.

விடுதலைப்புலிகளை ஆதரிப்பதில் என்ன தவறு என்றும் கேட்டுள்ளார். கருத்துரிமை என்ற பெயரில் இறையாண்மைக்கு எதிராக தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் அவரது இயக்கத்தை தடை செய்ய மத்திய அரசுக்கு மாநில அரசு உடனடியாக பரிந்துரை செய்ய வேண்டும். விடுதலைப் புலிகளை ஆதரித்ததாக கைது செய்யப்படுபவர்கள் உடனுக்குடன் நீதிமன்ற காவலில் இருந்து வெளியே வந்து விடுகிறார்கள்.

முதல்வர் கருணாநிதி: விடுதலைப் புலிகளை ஆதரிப்பது சரியல்ல என்று சில கட்சிக்காரர்கள் சொல்வது நியாயம் தான். ஆனால், அதற்காக அரசை வம்புக்கு இழுப்பது சரியல்ல. விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு அரசு வக்காலத்து வாங்கவில்லை. நீதிமன்றம் மூலமே அவர்கள் விடுதலை ஆகியிருக்கிறார்கள். இதில் நீதிமன்றத்தையும், அரசையும் சம்பந்தப்படுத்துவது நீதிமன்றத்தை அவமதித்ததாக ஆகிவிடும். நீதிமன்ற தீர்ப்பு பற்றி விமர்சிக்க கூடாது.

ஜெயக்குமார் (காங்கிரஸ்): விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் மட்டும் தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல. பல்வேறு நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் புண்ணியத்தால் 1 லட்சம் தமிழர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அமிர்தலிங்கம், பொன்னம்பலம் உள்பட 60 பெரும் தலைவர்களும் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

முதல்வர் கருணாநிதி: வரலாற்றை தவறாக சொல்லக் கூடாது. பொன்னம்பலம் அந்த பட்டியலில் இல்லை.

ஜெயக்குமார்: ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களை ஆதரிக்க யாரையும் அனுமதிக்க கூடாது. ராஜீவ் காந்தி இறந்து 17 ஆண்டுகள் அல்ல. 17,000 ஆண்டுகள் ஆனாலும் அதை மறக்க முடியாது.

செல்வம் (விடுதலை சிறுத்தைகள் கட்சி): இந்திய இறையாண்மை மீது நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம். காங்கிரசையும் மதிக்கிறோம். ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டதை நாங்கள் ஏற்றுக் கொண்டது போல் பேசுவது தவறு. கருத்துரிமையைதான் பேசினோம்.

இவ்வாறு செல்வம் பேசியதற்கு காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களும் எழுந்து நின்று திருமாவளவனுக்கு எதிராக கோஷமிட்டனர்.

கருணாநிதி: காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் உணர்வை நான் அறியாமல் இல்லை. ஒரு வாரமாக சென்னையிலும் மற்ற இடங்களிலும் நடைபெறும் நிகழ்ச்சிகள் அரசு அனுமதியுடன் நடப்பது போல கருதிக் கொண்டு அரசு மீது தங்களுக்குள்ள வருத்தத்தை தெரிவித்திருக்கிறார்கள்.

திருமாவளவனையும் விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் மற்ற இயக்கங்களைச் சேர்ந்தவர்களையும் சட்ட ரீதியாகத்தான் சந்திக்க வேண்டியுள்ளது.

பொடா சட்டம் குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்து பேசுவது குற்றமாகாது என்று கூறப்பட்டுள்ளது. அதற்காக முன்னாள் முதல்வரை (ஜெயலலிதா) விமர்சித்தோ, விடுதலைப் புலிகளை ஆதரித்தோ பேசலாம் என்று பொருள் அல்ல. இதை நான் அறியாதவனும் அல்ல, ஆதரிப்பவனும் அல்ல. காங்கிரசும் தோழமை கட்சிகளும் இந்த பிரச்சனையில் அரசுக்கு உள்ள தர்மசங்கடங்களையும் புரிந்து கொள்ள வேண்டும்.

விடுதலைப் புலிகளை பொறுத்தவரை ராஜீவ் காந்தி கொலைக்கு முன், அவரது கொலைக்கு பின் என்று தான் இந்த பிரச்சினையை அணுக வேண்டும் என்று கூறி இருக்கிறேன். எந்த நிலையிலும் அந்த கருத்தை மாற்றிக் கொள்ள போவதில்லை.

காங்கிரஸ் நண்பர்கள் ஒன்றை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். காங்கிரசாரோ, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமை கட்சிகளோ இது போன்ற செய்திகள் வராமல் நடந்து கொள்வது உங்களுக்கும் நல்லது. எங்களுக்கும் நல்லது. அரசை காப்பாற்றுவதற்காக இதை சொல்வதாக கருதி விடக் கூடாது. தமிழகத்தின் அமைதிக்கு எந்த ஒரு ஊனமும் வந்து விடக்கூடாது என்பதற்காக இதைச் சொல்கிறேன்.

ராஜீவ்காந்தி அன்றும் இன்றும் மதிக்கப்பட கூடிய இளம் தலைவர், பெரிய தலைவர், அவர் சரித்திரமாகி விட்டார். அவருக்காக தொடர்ந்து கண்ணீர் வடிப்பதா என்று பேசுவது தவறு. நிலைமை வக்கிரமாக மாறி விடக்கூடாது.

விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்களை கைது செய்ய வேண்டும் என்று ஞானசேகரன் கூறினார். தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்க தற்போது உள்ள சூழ்நிலையில் எந்த வழியும் இல்லை.

அவ்வாறு கைது செய்ய சட்டத்தில் இடம் இருக்கிறதா என்பதை சட்ட நிபுணர்களுடன் ஆராய்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரிப்பது குற்றமாக கருதி நடவடிக்கை எடுக்கும் வகையில் வழக்கறிஞர் குழு ஒன்றை அமைத்து அவர்கள் மூலம் ஆராய்ந்து இதை தடுப்பதற்கு சட்டம் கொண்டு வரவும் அரசு தயாராக இருக்கிறது.

இத்துடன் இந்த பிரச்சினையை சுமூகமாக முடிப்பது நமக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது என்றார் கருணாநிதி.

ஆனாலும் கருணாநிதியின் பதில் திருப்தயளிக்கவில்லை என்று கூறி முதலில் அதிமுகவும் பின்னர் காங்கிரஸ் கட்சியினரும் வெளிநடப்பு செய்துவிட்டனர்.

வழக்கமாக எல்லாவற்றிலும் அதிமுகவை பாலோ செய்யும் மதிமுக இம்முறை அமைதி காத்தது குறுப்பிடத்தக்கது.

Please Click here to login / register to post your comments.