மணலாற்றில் என்ன செய்கின்றன சிறிலங்கா படை அணிகள்?

ஆக்கம்: நிலவன்

    4ம் கட்ட ஈழ யுத்தத்தில் முக்கியத்துவம் பெற்றுவரும் மற்றொரு களமுனையாக மணலாற்றுக் களமுனையும் மாற்றம் பெற்று வருகின்றது.

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிக சிரத்தை எடுத்து போர் நடவடிக்கைகளைத் திட்டமிட்டுவருகின்ற ஒரு களமுனையாகவும் மணலாற்றுக் களமுனை தற்பொழுது தோற்றமெடுக்க ஆரம்பித்து வருகின்றது.

இன்றும் உன்னிப்பாகப் பார்த்தால், மணலாற்றில் தனது இருப்பை உறுதிப்படுத்த சிறிலங்காப் படைகள் அதிக வளத்தை அங்கு குவித்து வருவதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. பிரகடனப்படுத்தப்படாத 4ம் கட்ட ஈழ யுத்தம் ஆரம்பமான கால கட்டத்தில் மணலாறு பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவத்தின் வெறும் 2 பிரிகேட் படை அணியினர் மாத்திரமே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 22-3, 22-4 போன்ற பிரிகேட்டுக்கள் மாத்திரமே மணலாற்றுப் பிரதேசத்தில் நிலைகொண்டிருந்தன. திருகோணமலையில் தலைமையகத்தைக் கொண்டு செயற்பட்டு வரும் சிறிலங்கா இராணுவத்தின் 22வது டிவிசன் படையணியின் பிரிகேட்டுக்களே இவைகள். ஆனால் தற்பொழுது நிலமை அப்படி அல்ல. பிரகடனப்படுத்தப்படாத 4ம் கட்ட ஈழப் போர் ஆரம்பமான காலகட்டத்தில் இருந்த அந்த 2 பிரிகேட் படையினருடன் மேலதிகமாக ஒரு முழு டிவிசன் படை அணியினர் தற்பொழுது மணலாற்றில் களமிறங்கியிருக்கின்றார்கள்.

சிறிலங்கா இராணுவத்தில் மிகக் கடைசியாக உருவாக்கப்பட்டுள்ள 59வது டிவிசன் சிறப்புப் படை அணியினர் (3 பிரிகேட்டுக்கள்) படையினரும் தற்பொழுது மணலாற்றில் நிலைகொண்டிருக்கின்றார்கள். பிரிகேடியர் நந்தா உடவத்த தலைமையான இந்த சிறப்பு தாக்குதல் படைப் பிரிவு, காடுகள் வழியான முன்னேறித் தாக்குதலை மேற்கொள்ளுவதற்கான சிறப்பு பயிற்சிகளைப் பெற்ற ஒரு படை அணி என்று கூறப்படுகின்றது. கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கஜபாபுர, என ஒரு முக்கோண அமைப்பில் சங்கிலித் தொடர்போன்ற தொடர் முகாம்களையும், தளங்களையும், மண் அணைகளையும் அமைத்து, ஒரு பலமான நிலையில் சிறிலங்கா இராணுவம் தன்னை அங்கு நிலை நிறுத்தி வைத்துள்ளது.

மணலாறு வழியாக ஒரு பாரிய தாக்குதல் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுக்கப்போகின்றது என்று பல்வேறு ஆய்வாளர்களும் கூறுவதற்கு, இவை மாத்திரம் காரணம் அல்ல.

ஈரூடகப் படை அணி:
சிறிலங்கா கடற்படையில் அண்மையில் ஒரு முக்கிய படை அணி ஒன்று சேர்த்துக்கொள்ளப்பட்டது. விசேட படகுத் தாக்குதல் அணி (Special Boat Squadron (SBS)) என்று அழைக்கப்படும், ஈரூடகப் படை அணி அண்மையில் சிறிலங்கா கடற்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

1993ம் ஆண்டளவில் இதுபோன்ற ஒரு கொமாண்டோ அணி சிறிலங்கா கடற்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தாலும், பலமடங்கு அதிகரிக்கப்பட்ட பலத்துடனும், பலவிதமான சிறப்புப் பயிற்சிகளுடனும் தற்பொழுது இந்த தாக்குதல் அணி உருவாக்கப்பட்டுள்ளது. கடல் வழியான அதிரடித் தரையிறக்கம் மேற்கொண்டு, முக்கிய இலக்குகள் மீது திடீர் தாக்குதலை மேற்கொண்டு எதிரியைத் திக்குமுக்காட வைக்கும் நோக்கத்தில் இந்த அணி பயிற்றப்பட்டு வருகின்றது. அமெரிக்க கடற்படையின் மரைன்ஸ் என்று கூறப்படுகின்ற S.E.A.L. அணி மற்றும் பிரித்தானியக் கடற்படையின் Special Boat Service of the Royal Navy கொமாண்டோக்களுக்கு நிகரான பயிற்சிகளை சிறிலங்காவின் இந்த கடற் கொமண்டோக்கள் பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.

    90 களின் ஆரம்பத்தில் மணலாறு மீதான தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் சூட்டியிருந்த அந்தப் பெயர்தான், அந்தத் தாக்குதல் இடம்பெற்று சுமார் 15 வருடங்கள் கடந்துவிட்ட பொழுதும், மணலாறு தொடர்பான ஒருவித அச்சத்துடன் இருக்கும்படி சிறிலங்காப் படைத்துறைத் தலைமையை நிர்பந்தித்து வருகின்றது.

இந்தப் பிரிவினர் சிறிலங்கா கடற்படையின் நேரடி ஆணையின் கீழ் செயற்பட்டாலும், பெரும்பாலும் இவர்களுடைய நடவடிக்கைகள் தரைப் படையின் கட்டளைகளின் கீழ்தான் வருவது வழக்கம். இந்தப் பிரிவினருடைய மிக அண்மைய தாக்குதலாக, திருகோணமலையின் மூதூர் பிரதேசத்தின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதலை மேற்கொண்ட போது, புலிகளின் அணிகளுக்கு எதிராக தாக்குதலுக்காக இந்த Special Boat Squadron அணியினரே களமிறக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.இப்படிப்பட்ட சிறிலங்கா கடற்படையின் இந்த Special Boat Squadron அணியினர் தற்பொழுது மணலாற்றுக்கு நகர்த்தப்பட்டுள்ளார்கள்.

சிறப்பு படை அணி:
சிறிலங்கா இராணுவத்தின் சிறப்பு படை அணி (Sri Lanka Army Special Forces) என்பது, ஒரு விசேட தாக்குதல் தகமைகளைக் கொண்ட ஒரு அணி. கடல் தரையிறக்கம் மேற்கொள்ளவும், வான் வழித்தரையிறக்கம் மேற்கொள்ளவும், காடுகள் வழியான நகர்வுகள் மேற்கொள்ளவும் இந்தப் படை அணியினர் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். முன்னர் “Combat Tracker Team” என்று அழைக்கப்பட்டு வந்த இந்த பிரிவினர் தற்பொழுது Rapid Deployment Force (RDF) (Special Force) என்று பொதுவாக அழைக்கப்பட்டு வருகின்றார்கள். தற்பொழுது 3 ரெஜிமென்டுகளைக் கொண்டதாக வளர்சி அடைந்துள்ள இந்த பிரிவினர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்திரசிறி என்ற அதிகாரியின் கீழ் செயற்பட்டு வருகின்றார்கள்.இந்தப் பிரிவின் சில அணிகளும் தற்பொழுது மணலாற்றுப் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. (“சிலோன் தியேட்டர் பகுதி வழியாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற சிறிலங்காப் படையினர் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டார்கள்…” “நெடுங்கேணி, நைனாமடு பிரதேசங்களில் ஊடுருவும் சிறிலங்காவின் ஆழ ஊடுருவும் படை அணியினர் கிளைமோர் தாக்குதல்கள் நடாத்தியுள்ளார்கள்..” என்று தமிழ் இணையத் தளங்களில் அடிக்கடி செய்திகள் வெளியாகுகின்றன அல்லவா. அவை இந்தப் படையணியினர் பற்றிய செய்திகள்தான்)

ஆக, மணலாற்றுப் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டு சிறிலங்கா இராணுவம் கட்டியெழுப்பி வருகின்ற படைப்பலத்தை நோக்குகின்ற பொழுது, ஒரு விடயம் தெளிவாகத் தெரிகின்றது. அதாவது, மணலாறு என்பது எதிர்வரும் போர் அரங்கில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கப் போகின்றது என்பது மட்டும் உறுதியாகத் தெரிகின்றது.

ஏன் மணலாறு?

இப்பொழுது ஒரு கேள்வி எழுகின்றது. எதற்காக மணலாறு பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவம் இத்தனை அக்கறை வெளிப்படுத்துகின்றது. மணலாறு வழியான சிறிலங்கா இராணுவத்தின் கடந்த கால படை நடவடிக்கைகள் அனைத்துமே மண்ணைக் கௌவிய வரலாறு இருக்கையில், எதற்காக மணலாறு வழியான பாதையையே சிறிலங்காப் படைத்துறைத் தலைமை மறுபடியும் தேர்ந்தெடுத்துள்ளது.இந்தக் கேள்விக்கு இரண்டு பதில்கள் உள்ளன.

  • முதலாவது பதில், “ஈழ யுத்தங்களில் மணலாறு பிரதேசம் வகித்து வரும் பிரதான பாத்திரம்.”
  • இரண்டாவது பதில், “இதனை விட சிறிலங்காப் படைத்துறைத் தலைமைக்கு வேறு வழி எதுவும் கிடையாது.”

90களின் ஆரம்பத்தில் மணலாறு மண்கிண்டிமலைப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் ஒரு பாரிய தாக்குதலை மேற்கொண்டிருந்தார்கள். தளபதி பால்ராஜ் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அந்தத் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தின் மண்கிண்டிமலை முகாம் முற்றாக கைப்பற்றப்பட்டது. அங்கிருந்த ஏராளமான ஆயுதங்கள் புலிகளால் அள்ளப்பட்டன. 2ம் கட்ட ஈழ யுத்த காலகட்டத்தில் மிகப் பெரிய வெற்றியை விடுதலைப் புலிகளுக்குப் பெற்றுக்கொடுத்த ஒரு தாக்குதலாக அந்த தாக்குதல் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.

இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், மணலாறு மீதான அந்தத் தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் சூட்டியிருந்த பெயர்.மணலாறு, மண்கிண்டிமலை முகாம் தாக்குதலுக்கு அந்த நேரத்தில் விடுதலைப் புலிகள் சூட்டியிருந்த பெயர்: "இதயபூமி -1".90 களின் ஆரம்பத்தில் மணலாறு மீதான தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் சூட்டியிருந்த அந்தப் பெயர்தான், அந்தத் தாக்குதல் இடம்பெற்று சுமார் 15 வருடங்கள் கடந்துவிட்ட பொழுதும், மணலாறு தொடர்பான ஒருவித அச்சத்துடன் இருக்கும்படி சிறிலங்காப் படைத்துறைத் தலைமையை நிர்பந்தித்து வருகின்றது.மணலாறு பிரதேசம் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட அந்தத் தாக்குதலுக்கு அவர்கள் சூடியிருந்த பெயரில் இரண்டு அம்சங்கள் உள்ளன.

முதலாவது "இதயபூமி" என்ற பெயர். அதாவது, மணலாறு என்ற பிரதேசத்தை விடுதலைப் புலிகள் தங்களது இதயமாகப் பார்க்கின்றார்கள் என்ற ஒரு உண்மை இந்தப் பெயர் மூலமாக சிறிலங்காப் படைகளுக்கு உணர்தப்பட்டுள்ளது. அடுத்ததாக, விடுதலைப் புலிகளின் அன்றைய தாக்குதலுக்கு "இதயபூமி -1" என்று இலக்கமிட்டு, மணலாறு மீதான முதலாவது மீட்புத் தாக்குதலாக அதனை அடையாளப்படுத்தியிருந்ததால், மணலாறை மீட்கும் தாக்குதல் தொடரும் என்கின்ற செய்தியையும் விடுதலைப் புலிகள் கூறிச் சென்றிருந்தார்கள்.

அதாவது, மணலாற்றை மீட்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு "இதயபூமி -2" என்ற பெயரில் மற்றொரு தாக்குதலை நாங்கள் மேற்கொள்ளுவோம் என்ற மறைமுக அறைகூவலையும் விடுதலைப் புலிகள் விடுத்திருந்தார்கள்.மணலாறு பற்றிய அச்சம் சிறிலங்காப் படைத்துறைத் தலைமையைப் பிடித்துக்கொள்ள இதுதான் பிரதான காரணம்.

இதனை விட, 1985ம் வருடத்தில், விடுதலைப் புலிகள் தமது பலம் அனைத்தையும் ஒன்று குவித்து, கொக்குளாய் இராணுவ முகாம் மீது ஒரு பாரிய தாக்குதலை மேற்கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் சிறு கெரில்லா அணியாக இருந்த விடுதலைப் புலிகள், மணலாற்றை மீட்கும் தமது நோக்கத்தை, தமது சக்திக்கு மீறி வெளிப்படுத்திய சந்தர்பமாக அது பார்க்கப்பட்டது.

அதாவது, மணலாற்றை மீட்பதென்பது ஆரம்பகாலம் முதற்கொண்டே விடுதலைப் புலிகளின் ஒரு இலட்சியமாக இருந்து வருகின்றது என்பதை விடுதலைப் புலிகளின் அந்த முதலாவது முகாம் மீதான தாக்குதல் வெளிப்படுத்தியிருந்தது.1995ம் வருடத்தில், சிறிலங்கா இராணுவத்தின் முன்னேறிப் பாய்தல்(Operation leap Forward) நடவடிக்கைக்கு எதிரான புலிகளின் புலிப்பாய்சல் (Operation Tiger leap) நடவடிக்கை இடம்பெற்று சில நாட்களில், மணலாற்றை மீட்கும்படியான ஒரு பாரிய தாக்குதலை விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருந்தார்கள். ஆனால், அந்த நேரத்தில் அந்தத் தாக்குதல் திட்டங்கள் எதிரிக்கு தெரிய வந்திருந்ததால், சிறிலங்கா இரணுவ அதிகாரி ஜானக பெரேரா தலைமையில் எதிர்த்தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு, இந்த நடவடிக்கை முறியடிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, ஜெயசிக்குறு எதிர்சமர் காலத்திலும் கூட, கேணல் சங்கர் தலைமையில் மணலாற்றின் பெரும் பகுதிகள் விடுதலைப் புலிகளால் மீட்கும் ஒரு நிலை உருவாகியிருந்தது.

ஓயாத அலைகள் -3 என்ற பெயரில் மணலாற்றின் பெரும் பகுதிகளை விடுதலைப் புலிகள் விடுவித்திருந்தார்கள். ஆணையிறவை மீட்கும் நடவடிக்கைக்கு அந்த நேரத்தில் முக்கியத்துவம் வழங்கவேண்டிய ஒரு சூழ்நிலை இருந்ததால், மணலாறை முற்றாக மீட்கும் நடவடிக்கை அந்தச் சந்தர்பத்தில் பிற்போடப்பட்டிருந்தது.

மீண்டும் மணலாறு

ஆனால், இன்றைய காலகட்டத்தில், மணலாறு மீது விடுதலைப் புலிகளின் பார்வை சற்று உக்கிரமாகத் திரும்பி வருவதாக சிறிலங்காப் படைத்துறை திடமாக நம்புகின்றது. அதனால் பாரிய அச்சமும் கொண்டுள்ளது.சிறிலங்காப் படைத்துறை இன்று மணலாறு பிரதேசத்தில் அதிக அளவு படையினரைக் குவித்து வருவதற்கும், விடுதலைப் புலிகள் திரள்வதைத் தடுக்கும் வகையிலான தொல்லைகளைக் கொடுக்கும் நடவடிக்கைகளில் அது ஈடுபட்டு வருவதற்கும் இதுவே பிரதான காரணம். இன்றும் தெளிவாகக் கூறுவதானால், மணலாற்றில் சிறிலங்கா படையினர் தமது அதிக வளம்களைக் குவிப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, புலிகளின் தலைமைக்கு நெருக்கடி கொடுப்பது. இரண்டாவது புலிகள் தாக்கிவிடுவார்கள் என்ற அச்சம்.

Please Click here to login / register to post your comments.