இலங்கையின் முதலாவது தேசிய இயக்கத்தை உருவாக்கிய சேர் பொன். அருணாசலம்

ஆக்கம்: சி.அ.யோதிலிங்கம்
இன்று இலங்கையின் 60 ஆவது சுதந்திர தினம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இச்சுதந்திரத்திற்கு ஆரம்ப வித்தாக இருந்தவர் சேர் பொன். அருணாசலம். அவர் ஒரு தமிழர் என்பதால் பெரியளவிற்கு இன்று முக்கியத்தவப்படுத்தப்படுவதில்லை.

இலங்கைக்கான அனைத்து சமூகங்களையும் இணைத்து ஒரு தேசிய இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு சேர் பொன். அருணாசலம் மேற்கொண்ட முயற்சிகள் பாரியவை.

1913 ஆம் ஆண்டு அரசாங்க சேவையில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அரசியலில் அருணாசலம் ஈடுபடத் தொடங்கினார்.

அவர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து உருவாக்கிய முதல் அமைப்பு "சமூக சேவைச் சங்கம்" இச்சங்கத்தினூடாக அடி நிலை மக்களின் மேம்பாட்டிற்கு உழைத்தார். சமூகசேவைச் சங்கம் `1915 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் திகதி' உருவாக்கப்பட்டது.

1917 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 திகதி கொழும்பு விக்டோரியா மொ.சோனிக் மண்டபத்தில் சமரவிக்கிரம தலைமையில் நடைபெற்ற ஈ.ஜே. இலங்கைத் தேசிய சங்கத்தின் வருடாந்த மாநாட்டில், "எங்கள் அரசியற் தேவைகள்" என்ற தலையங்கத்தில் பேசுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த அழைப்பினை விடுத்தவர் லேக்கவுஸ் பத்திரிகை நிறுவனத்தின் ஸ்தாபகரும் இலங்கைத் தேசிய சங்கத்தின் செயலாளருமான டி.ஆர்.விஜயவர்த்தனா ஆவார்.

இலங்கைத் தேசிய சங்கம் 1988 இல் சிங்கள கரவா சமூகத்தினால் உருவாக்கப்பட்ட சங்கமாகும். ஜேம்ஸ்பீரிஸ், எல்.ஆர்.சேனநாயக்கா (டீ.ரு.சேனநாயக்காவின் சகோதரர்) போன்றவர்கள் இச்சங்கத்தினை அமைப்பதில் முன்நின்றனர்.

அருணாசலம் இக்கூட்டத்தில் பேசும்போது, "பணிக்குழு ஆட்சியாளரின் சங்கிலித் தலைகளால் பிணிப்புற்று நாங்கள் எங்கள் அதிகாரம், பொறுப்பு என்பன அற்றவர்களாய் எங்கள் இயல்பு, திறமை ஆகியன குறைக்கப்பட்டவர்களாய் தற்குறை உணர்வினால் ஏற்பட்ட விரக்தியினால் நலிந்து வாழுகின்றோம். எங்கள் சொந்த இயல்பில் நாங்கள் பூரணமாய் வளருவதற்கு விடாமல் எங்களைப் பணிக்குழு ஆட்சியாளரின் பரிபாலனம் தடை செய்கின்றது. குடியேற்ற நாட்டு முறையின் கீழ் இலங்கையில் நிலவுகின்ற ஆட்சி எங்கள் கழுத்தை நெரிக்கின்றது" என்றார். (பணிக்குழு ஆட்சி நிர்வாக அதிகாரிகளின் ஆட்சி) சுதந்திர வேட்கை உருவாகும் வகையில் பேசிய தனது உரைக்கு ஆதாரமாக பல்வேறு புள்ளி விபரங்களையும் பயன்படுத்தினார். இவரது இந்தப் பேச்சை மெச்சிய தேசியச் சங்கத் தலைவர்களுள் ஒருவரான ஜேம்ஸ் பீரிஸ், "சேர் அருணாசலம் பேசிய பின்னரே, இலங்கையர் தன் நம்பிக்கையுடன் விடாக் கண்டர்களாக அரசியற் கிளர்ச்சி செய்தல் வேண்டும் என உறுதி கொண்டனர்" என்றார்.

இவ்வுரையின் உந்துதலினாலேயே 1917 மே மாதத்தில் சட்டத்தரணிகள் சங்க நிலையத்தில் சட்டத்தரணிகள் பலரைக் கொண்டு "இலங்கைச் சீர்திருத்தக் கழகம்" உருவாக்கப்பட்டது.

இவ் அமைப்பினூடாக, அரசியற் சீர்திருத்தத்திற்கான கோரிக்கைகளை அருணாசலம் வற்புறுத்தினார். அவரது முழு இலக்கும் சுயராச்சியக் கோரிக்கையாகவே இருந்தது.

1918 ஆம் ஆண்டு இலங்கை டெய்லி நியூஸ் பத்திரிகை தனது முதலாவது இதழை வெளியிட்டபோது, அதில் அவர் பின்வருமாறு எழுதினார். "அரசியற் சீர்திருத்தத்தை கோரும் ஆர்வத்தில் அதனையே நம் இறுதி இலக்காக கருதிவிடாது. எச்சரிக்கையாக இருக்கவேண்டும். எங்கள் இலக்கை அடைவதற்கு ஒரு கருவியாகவே அரசியற் சீர்திருத்தத்தில் நாம் நாட்டம் கொள்ளவேண்டும்"

இலங்கையில் இக்காலப் பகுதியில் ஐந்து அரசியல் இயக்கங்கள் பிரதானமாக செயற்பட்டன. இலங்கைத் தேசிய சங்கம், இலங்கை சீர்திருத்தச் சங்கம், இளம் இலங்கையர் கழகம், சிலாபச் சங்கம், யாழ்ப்பாணச் சங்கம் என்பனவே அந்த ஐந்துமாகும். இந்த ஐந்தையும் இணைத்து ஒரு தேசிய இயக்கத்தினை உருவாக்குவதிலேயே அருணாசலம் கவனம் செலுத்தினார். இதைவிட, முஸ்லிம் சங்கம், பறங்கியர் சங்கம் என்பனவும் நடைமுறையில் செயற்பட்டன. ஆனால், அவை சேதிய இயக்கம் ஒன்று உருவாவதற்கான செயற்பாடுகளை பகிஷ்கரித்திருந்தன.

இந்த ஐந்து அரசியல் இயக்கங்களில் இலங்கைத் தேசிய சங்கத்தையும் யாழ்ப்பாணச் சங்கத்தையும் பொது உடன்பாட்டுக்கு கொண்டு வருவதில் சிரமங்கள் ஏற்பட்டன.

தேசியச் சங்கம் இனவாரிப் பிரதிநிதித்துவத்தை அகற்றி, பிரதேசவாரிப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டு வருதல், சட்டசபையில் உத்தியோகப் பற்றற்றவர்களின் பெரும்பான்மையை அதிகரித்தல், சட்டசபையின் அதிகாரங்களை அதிகரித்தல் என்பனவற்றையே இலக்காகக் கொண்டிருந்தது.

யாழ்ப்பாணச் சங்கத்திற்கு இவ் விடயங்களில் உடன்பாடு இருக்கவில்லை. இனவாரிப் பிரதிநிதித்துவ முறையை நீக்குவதினூடாக சமபல பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் என அச்சமுற்றிருந்தது. இதனால் அம்முறை தொடர்ந்து இருக்கவேண்டும் என்பதையே அது வற்புறுத்தியது.

ஐக்கியப்பட்ட இலங்கைத் தேசிய இயக்கமான இலங்கைத் தேசிய காங்கிரஸை உருவாக்குவதற்கான முதலாவது கூட்டம் 1917 டிசம்பர் 15 இல் நடைபெற்றது. 144 பேர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இவர்களில் 17 பேர் தமிழர்கள், யாழ்ப்பாணச் சங்கத்தின் சார்பில் இரு பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் தமிழ்த் தலைவர்கள் பின்வரும் இரு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

1. இனரீதியான பிரதிநிதித்துவம் அகற்றப்படக்கூடாது.

2. உத்தியோகப்பற்றற்ற உறுப்பினர் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே சமபிரதிநிதித்துவம் இருக்கவேண்டும்.

இக்கோரிக்கைகளை அவர்கள் குடியேற்ற நாட்டுக்காரியதரிசிக்கும் அனுப்பிவைத்தனர். இலங்கைத் தேசிய சங்கம் இனவாரிப் பிரதிநிதித்துவம் அகற்றப்பட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தது. ஜேம்ஸ் பீரிஸ், ஈ.ஜெ.சமரவிக்கிரம, எவ்.ஆர்.சேனநாயக்கா போன்ற தேசியச் சங்கத்தின் தலைவர்கள் இனவாரிப் பிரதிநிதித்துவத்தை கடுமையாக எதிர்த்தனர். அருணாசலம் தொடர்ந்தும், இரு தரப்பினரையும் பொதுக் கருத்திற்கு கொண்டுவர முயற்சி செய்தார். அவரைப் பொறுத்தவரை, அக்காலத்தில் சிங்களத் தலைவர்கள் மீதுள்ள நம்பிக்கையால் நியாயமானளவு பிரதிநிதித்துவத்தை ஏற்றுக்கொள்ளலாம் என்ற கருத்தே மேலோங்கியிருந்தது.

தமிழர்களுக்கு நியாயமான பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கான ஒழுங்கு முறைகள் பற்றி சிங்களத் தலைவர்களுடன் கலந்துரையாடினார். வடமாகாணத்தில் மூன்றும் கிழக்கு மாகாணத்தில் இரண்டும் மேல்மாகாணத்தில் ஒன்றும் வரக்கூடிய வகையில் தேர்தல் தொகுதிகளை ஒழுங்கு செய்வதற்கு சிங்களத் தலைவர்கள் சம்மதித்தனர்.

இதற்கான உறுதிமொழிகளை வழங்கும் கடிதத்தினை சிங்களத் தலைவர்கள் சார்பில் ஜேம்ஸ் பீரிஸும், ஈ.ஜே.சமரவிக்கிரமவும் கையொப்பமிட்டு அருணாசலத்திடம் வழங்கினர். இக்கடிதத்தின் அடிப்படையிலேயே யாழ்ப்பாணச் சங்கத்தலைவர் ஏ.சபாபதியுடன் அருணாசலம் பேசி, தேசிய காங்கிரஸில் இணைவதற்கு யாழ்ப்பாணச் சங்கத்தை சம்மதிக்கச் செய்தார்.

1919 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி கொழும்பு நகரமண்டபத்தில் வைத்து இலங்கைத் தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது. யாழ்ப்பாணச் சங்கத்தின் சார்பில் ஏ.சபாபதியும் ஏ.கனகசபையும் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அருணாசலம் இலங்கைத் தேசிய காங்கிரஸின் தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். இலங்கை மக்கள் அனைவருக்கும் தலைவராக இவர் தெரிவு செய்யப்பட்டதையிட்டு யாழ்ப்பாண சங்கத்தினர் மட்டுமல்ல, முழு இலங்கைத் தமிழர்களுமே அகமகிழ்ந்தனர்.

இலங்கைத் தேசிய காங்கிரஸ் அமைப்பது தொடர்பாக அருணாசலம் மேற்கொண்ட முயற்சிகள் பற்றி சி.ஈ.கொரயா பின்வருமாறு குறிப்பிட்டார்.

"கடந்த சில வருடங்களாக சகல முயற்சிகளுக்கும் மத்தியஸ்தானமாகிய கொழும்பில், ஒரு பெரியார் ஆங்காங்கு பரந்து கிடந்த தனிப்பட்ட ஆர்வப் பொறிகள், தனித்தனியாகக் கிடந்து பிரகாசமிழந்து அணைந்து போகும் தறுவாயில் இருப்பதை கண்ணாரக் கண்டார். அப்பெருமகனார் எழுந்து விரைந்து சென்று, அப்பொறிகளை ஒன்று சேர்த்து கொழுந்துவிட்டெரியும் தமது தேசபிமான உணர்ச்சியால் அவற்றிக்கு சக்தியூட்டி, தேசிய முயற்சி எனும் பெருந்தீயாக மாற்றினார். இப்பெருந்தீயில் புடமிட்டு உருவாக்கியதே இலங்கைத் தேசிய காங்கிரஸ் ஆகும்" என்றார்.

இவ்வாறு முதலாவது தேசிய இயக்கத்தை உருவாக்கக் காரணமாக இருந்தவர் தான் பின்னர் இன அரசியலின் தோற்றத்திற்கும் காரணமாக இருந்தார் என்பது வரலாறு.

அவர் ஒரு தமிழர் என்பதால் வரலாறு அங்கு நோக்கித்தான் அவரை நகர்த்தியிருக்கின்றது.

Please Click here to login / register to post your comments.