புலிகள் விஷயத்தில் கலைஞரின் உள்ளம் வேறு, நிலை வேறு - சுப.வீரபாண்டியன்

ஆக்கம்: தேனி கண்ணன்
இலங்கையின் போர் பதற்றம் தமிழக அரசியலில் தடதடத்து எதிரொலிக்கிறது. இந்த முறை கொஞ்சம் அழுத்தமாகவே காங்கிரஸார் புலி எதிர்ப்புக் குரல் கொடுக்க, திடீர் நண்பனாய் வந்து ஒட்டிக்கொண்ட அ.தி.மு.க.வும் அவர்களோடு சேர்ந்து சட்டசபையிலிருந்து வெளிநடப்புச் செய்திருக்கிறது.

ஆனால் எந்தவித பதற்றமுமின்றி கூட்டணிக் கட்சிகளைச் சமாளித்து சாமர்த்தியமாக காய் நகர்த்தி வருகிறார் முதல்வர் கருணாநிதி. இந்நிலையில் தி.மு.க.வின் தீவிர விசுவாசியும், ஈழத்தமிழர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவருமான ‘திராவிட இயக்கத் தமிழர் பேரவை’யைச் சேர்ந்த சுப.வீரபாண்டியனைச் சந்தித்தோம்.

எப்போதும் இல்லாத வகையில் புலிகளுக்கு எதிராக காங்கிரஸ் இப்போது தன் எதிர்ப்பை உரக்கத் தெரிவித்திருக்கிறது. சட்டசபையில் கூட திருமாவளவனின் புலிகள் ஆதரவுப் பேச்சிற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்திருக்கிறது. முதல்வர் கருணாநிதியும் இரண்டு முகத்தோடு நடந்து கொள்கிறாரா?

‘‘இதில் முதலமைச்சரின் நிலை இரண்டு நிலையாக இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை. அவருடைய உள்ளம் வேறு, நிலை வேறாக இருக்கிறது. இதை அன்று திருமாவளவன் அவர்கள் மேடையிலே அறிஞர் அண்ணா சொன்ன உதாரணத்தைச் சொல்லி, ‘வெறும் கரண்டி வைத்திருப்பவர்கள் கையை எவ்வளவு வேண்டுமானாலும் வீசி வீசிப் பேசலாம். கரண்டியிலே எண்ணெய் வைத்திருப்பவர்கள் கொஞ்சம் அளவோடுதான் பேசமுடியும்’ என்றார். கலைஞர் கையிலே ஆட்சி என்கிற எண்ணெய் இருக்கிறது. எனவே அவர் பக்குவமாகத்தான் பேச முடியும். ஒரு முதலமைச்சருக்கென்று சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இந்த நிலையில் இருந்து கொண்டு தமிழ் ஈழ மக்களுக்கு உளப்பூர்வமாக என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து கொண்டுதான் இருக்கிறார் என்று நான் கருதுகிறேன். அதே சமயம் புலிகளுக்கு ஆதரவாக தி.மு.க. ஒரு போதும் இருந்தது கிடையாது. தமிழ் ஈழ மக்களுக்கு ஆதரவாகத்தான் இருந்திருக்கிறார்கள். இது அவர்களின் விருப்பம்.’’

தடைசெய்யப்பட்ட இயக்கத்தை ஆதரிப்பது என்பது சட்ட விரோதமல்லவா?

‘‘தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கேட்பது எங்கள் ஜனநாயக உரிமை இல்லையா? ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடைசெய்யப்பட்ட போது அதை நீக்க வேண்டும் என்று யாரும் சொல்லவில்லையா? எங்களுக்கு ஏன் அந்த உரிமை மறுக்கப்படுகிறது. அடுத்து நான் பொடாவில் சிறையிலிருந்த போது ‘வாய்மொழி ஆதரவு குற்றம் ஆகாது’ என்றுதான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எங்களை பிணையில் விட்டார்கள். இதே கருத்தைத் தான் அன்று மத்திய அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் சோலி சொராப்ஜி நீதிமன்றத்தில் சொன்னார். மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் ஏற்றுக் கொண்ட செய்தியை இங்கே இருப்பவர்கள் திரும்பத் திரும்ப ஏற்றுக்கொள்ள மறுப்பதும், குற்றம் என்று சொல்வதும் எங்களை அவமதிப்பதாக இல்லை. நீதிமன்றத்தைத்தான் அவமதிக்கிறார்கள். எனவே ‘வாய்மொழி ஆதரவு குற்றம்’ என்று சொன்னால் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கே தொடுக்கலாம்.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை ஆதரிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்கவே இல்லை. எதிர்த்து கூட கருத்துச் சொல்லலாம். புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம் என்று கருதுகிறவர்கள் அதைச் சொல்லவும் உரிமை உண்டு. நாங்கள் கேட்பது ஒன்றே ஒன்றுதான்...‘புலிகளைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம். ஈழ மக்களுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கிறோம்’ என்று பலர் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். மகிழ்ச்சி. ஆனால் ஈழ மக்களுக்காக என்ன செய்தீர்கள்? ஒரு அறிக்கை தந்ததுண்டா? கூட்டம், மாநாடு நடத்தியதுண்டா? எதையும் செய்யாமல் எந்த ஒரு துரும்பையும் கிள்ளிப் போடாமல் தமிழ் ஈழ மக்களை ஆதரிக்கிறோம் என்றால் அது ஏமாற்று வேலை இல்லையா.?

விடுதலைப் புலிகளை எதிர்த்து கூட குரல் கொடுங்கள். ஆனால் தமிழ் ஈழ மக்களுக்காக உங்களால் முடிந்த ஏதாவது ஒன்றைச செய்து விட்டு பிறகு பேசுங்கள்.

ராஜீவ் கொலையை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு இனத்தின் எதிர்காலத்தை நாம் பார்க்க முடியாது. அதை நாங்கள் நியாயப்படுத்தவில்லை. சரி என்று சொல்லவில்லை. 1945ல் அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா மீது குண்டு போட்டது. அதில் எத்தனை ஆயிரம் மக்கள் பலியானார்கள். இன்றைக்கு அமெரிக்கா_ ஜப்பான் இடையே உறவு இல்லையா?’’

போர் மேகம் சூழ்ந்திருக்கும் இந்த வேளையில் அரசுத் தரப்பில் புலிகள் தலைவரை வீழ்த்தி விட்டோம் என்கிற ரீதியில் தொடர்ந்து செய்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது. புலிகளின் கனத்த மௌனம் பல்வேறு யூகங்களைக் கிளப்புகின்றனவே..

‘‘இப்போது இரண்டு வித நோக்கத்திற்காக பிரபாகரன் காயம் பட்டதாகவோ, இறந்து விட்டதாகவோ செய்தி வெளியிடுகிறது இலங்கை அரசு. தமிழ் ஈழப் போராளிகளில் மத்தியிலும், ஈழ மக்களிடமும், அவர்கள் போராட்டத்தில் உள்ள நியாயத்தை ஆதரிக்கின்ற ஆதரவாளர்களிடமும் சோர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்கள் முதல் எதிர்பார்ப்பு. ஆளில்லாத உளவு விமானங்களை வாங்கி வைத்திருக்கும் ராணுவம், தொடர்ந்து வரும் இந்தச் செய்தியால் பிரபாகரன் வெளியே வருவார், அவரைத் தாக்கலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.’’

கர்ணா கொடுத்த உளவுத் தகவல்களால்தான் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார் என்றும், இப்போதும் அவர் கொடுத்த தகவலில்தான் பிரபாகரன் முகாம் மீது தாக்குதல் நடத்தினோம். ஆகவே பிரபாகரன் காயப்பட்டது உண்மை என்றும் இலங்கை அரசுத் தரப்பில் கூறப்படுவதாக செய்தி உள்ளதே..

‘‘கர்ணா கொடுக்கிற தகவல்கள் ஒரு பக்கம் இருக்கட்டும், கர்ணாவைப் பற்றிய தகவல்களே ஸ்ரீலங்காவிடம் சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்க்கட்டும். கர்ணா இப்போது இங்கிலாந்து அரசால் தண்டிக்கப்பட்டு ஒன்பது மாத சிறைவாசத்தில் இருக்கிறார். அதுவும் என்ன குற்றச்சாட்டு தெரியுமா? ‘போலி பாஸ்போர்ட்’ குற்றத்தில் தண்டிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் கர்ணா இலங்கை அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் பிரதிநிதியாக வந்திருப்பதாகத்தான் அவர் பாஸ் போர்ட்டில் உள்ளது. தனி நபர்கள் பாஸ்போர்ட் மோசடி செய்வதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒரு அரசாங்கமே மோசடி செய்திருப்பது உலக வரலாற்றில் இது தான் முதல் முறை. மேலும் ராணுவ பலமும், ஆயுத பலமும் கொண்ட ஒரு அரசு, கர்ணா கொடுக்கும் தகவலால் குண்டு போட்டோம் என்பது அந்த அரசாங்கத்திற்கு அவமானம். தமிழ்ச்செல்வன் இருந்த இடம் ரகசியமான இடம் அல்ல. சர்வதேச பத்திரிகையாளர்களுக்கே தெரிந்த இடம். அங்கும் விடாமல் சரமாரியாக குண்டு போட்டதால்தான் தமிழ்ச் செல்வன் இறந்தார்.’’

புலிகளின் இந்த அயராத போரும், அரசின் தொடர்ந்த தாக்குதலும் அப்பாவி ஈழ மக்களை நிறையவே பாதித்திருக்கிறது. இந்த சலிப்பை தமிழகம் வரும் அகதியின் முகத்தில் நிறையவே பார்க்க முடிகிறதே...

‘‘நீண்ட நெடிய போராட்டத்தில் இந்த சலிப்பு வருவது என்பது இயற்கைதான். சிங்கள மக்களும் இந்தப் போரை விரும்பி நடத்துகிறார்களா? இல்லை. அங்கே இருக்கிற சிங்கள ஆதிக்க வெறியர்கள், பௌத்த பிட்சுகள் நடத்துகிறார்கள். இப்படி தமிழ் ஈழ மக்கள் மீது திணிக்கப்பட்ட போரை எதிர்கொண்டு நடத்தவேண்டிய தேவை அந்த மக்களுக்கு வருகிறது. போரை யாரும் வரவேற்க முடியாது. ஆனால் திணிக்கப்பட்ட போரை நடத்தித் தீர வேண்டியிருக்கிறது. இதில் சின்னச் சின்ன சலிப்புகள் வரலாம். ஆனால் போரின் இறுதி முடிவு வருகிற போது இந்த சலிப்புகளெல்லாம் மறைந்து விடும்.’’.

Please Click here to login / register to post your comments.