ஜெயலலிதாவைத்தான் கைது செய்யவேண்டும் வேண்டும் - வெற்றி கொண்டான்

ஆக்கம்: திருவேங்கிமலை சரவணன்
தி.மு.க.வின் அனல் மனிதர் வெற்றிகொண்டான். பேசத் துவங்கினால் கனல் வந்து விழுகிறது. ஆவேசமாய்ப் பேசினாலும் ஆதாரங்களுடன் பேசுகிறார், குத்தல், நக்கல், கிண்டல், கேலி கலந்து. தமிழக அரசியலில் நிலவும் ஒரு பரபரப்பான சூழலில் அவரைச் சந்தித்தோம்.

விடுதலைப்புலிகள் தமிழகத்தில் ஊடுருவியிருக்கிறார்கள் என்றும், அவர்களைக் கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறிவிட்டது என்றும் குற்றச்சாட்டுகள் பலமாக எழுந்திருக்கிறதே?

‘‘தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் நாட்டிற்குள் ஊடுருவ முயன்றாலும் சரி, ஊடுருவினாலும் சரி, அதை உடனே தனது உளவுத்துறை மூலம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டியது மத்தியஅரசு. அவர்களையும் மீறி யாரும் இந்தியாவில் நுழைந்துவிட முடியாது. மத்திய உளவுத்துறை தமிழ்நாட்டில் ஏதாவது விடுதலைப் புலிகளைக் கைது செய்திருக்கிறதா? அல்லது விடுதலைப்புலிகள் இருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறதா? அப்படி ஏதாவது நடந்திருந்தால், இப்படி குற்றம் சாட்டலாம்.

இப்படிச் சொல்பவர்கள் கற்பனைகளிலும் கனவுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இவர்கள்தான் விடுதலைப்புலிகளை ஆதரித்தவர்கள். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு கொடுப்பவர்களைத் தங்கள் கூட்டணியில் வைத்திருப்பவர்கள்.’’

திருமாவளவன் விடுதலைப்புலிகளைப் பற்றிப் பேசியதற்குத்தானே இத்தனை எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது?

‘‘ஒருவனைப் போட்டு, அடித்து நொறுக்கிக்கொண்டு இருக்கிறார்கள். கீழே விழுந்து கிடப்பவனைப் பார்த்து, ‘பாவம் அவனை அடிக்காதீங்கய்யா, ஏற்கெனவே காயப்பட்டு விழுந்து கிடக்கிறான்’ என்று அனுதாப வார்த்தை சொல்வோம் அல்லவா? அதுபோலத்தான் திருமாவளவன் தனது அனுதாபத்தைச் சொன்னார். உடனே ‘அவரைக் கைது செய். பத்து ஆண்டுகள் சிறையில் அடை’ என்கிறார்கள். சட்டசபைக்கு கைது செய்யும் அதிகாரம் இருக் கிறதா என்பதுகூட தெரியாமல் இருக்கிறார் இந்த அம்மா. திருமாவளவனை சிறையில் அடைக்க ஜெயலலிதா விரும்பியிருந்தால் நீதிமன்றத்திற்குச் சென்று அவர் மீது வழக்குத் தொடுக்க வேண்டியதுதானே?

இன்னொரு விஷயமும் சொல்லவேண்டும். ‘பிரபாகரனுக்கு ஏதாவது ஒன்று என்றால் தமிழகம் கொந்தளிக்கும்’ என்று ஆதரவு சொன்னவர் ஜெயலலிதா. அதற்காக ஜெயலலிதாவைக் கைது செய்யவேண்டும்! அனுதாபம் சொன்னவருக்கு பத்தாண்டு ஜெயில் என்றால், ஆதரவு சொன்ன இவருக்கு எத்தனை ஆண்டு சிறைத்தண்டனை கொடுப்பது.’’

எம்.ஜி.ஆர். வாரிசு யார் என்பதில் பிரச்னை எழுந்திருக்கிறதே?

‘‘இதைக் கேட்டால் சிரிப்புத்தான் வருகிறது. இப்படித்தான் ஒருத்தர் சின்ன எம்.ஜி.ஆர்னு சொல்லிக்கிட்டு கலர்கலரா டிரெஸ் மாட்டிக்கிட்டு சுத்திக்கிட்டு இருந்தார். கூலிங்கிளாஸ் மாட்டுனா மட்டும் எம்.ஜி.ஆர் ஆகிட முடியுமா? இப்போ இருக்கிற இடம் தெரியாம இருக்கிறார். இப்போ இன்னொருத்தர் கறுப்பு எம்.ஜி.ஆர்னு சுத்திக்கிட்டு இருக்கார். இதைத் தாங்கிக்க முடியாம இந்தம்மா நான்தான் எம்.ஜி.ஆர். வாரிசுனு கத்துறாங்க. நல்ல காமெடி.

இப்படி எம்.ஜி.ஆர் காமெடி ஒண்ணு நடக்குதுனா இன்னொரு பக்கம் காமராஜர் காமெடி நடந்துகிட்டு இருக்கு. காமராஜர் எப்படி இருப்பார்னு கூட தெரியாதவங்க காமராஜர் ஆட்சி அமைப்போம்னு சொல்லிக்கிட்டுத் திரியறாங்க. இன்னைக்கு காங்கிரஸ்காரங்கலாம் காமராஜர் ஆட்சி அமைப்போம்னு சொல்றாங்க. அவங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமானு தெரியல. காமராஜரை ஆட்சிக்குக் கொண்டு வந்ததே பெரியாரும் அண்ணாவும்தான்.’’

அப்படியா! அது என்ன சம்பவம்?

‘‘1953_ம் வருடம் குடியாத்தம் இடைத்தேர்தல் வந்தது. காமராஜரைத் தேர்தலில் நிற்கச் சொல்லி பெரியார் சொன்னார். ஆனால் காமராஜருக்கு தயக்கம். ‘விருதுநகர் என்றால் எங்கள் மக்கள் இருப்பார்கள், ஜெயிப்பது சுலபம்’ என்று சொல்லியிருக்கிறார். ஆனால் பெரியாரும் அண்ணாவும்தான் ஒரு பச்சைத் தமிழர் வரவேண்டுமென்று விரும்பி காமராஜரை வற்புறுத்தி தேர்தலில் நிற்க வைத்து பிரச்சாரம் செய்து வெற்றி பெற வைத்தார்கள். பின்பு காமராஜர் தமிழக முதல்வரானார்.

முதல்வரானதும் தான் எந்தக் கோப்பில் முதல் கையெழுத்தைப் போடவேண்டும் என்பதை பெரியாரிடம்தான் கேட்டார் காமராஜர். தாழ்த்தப்பட்டவரை இந்து அறநிலையத்துறை அமைச்சராக்குங்கள் என்று பெரியார் சொல்ல, அதன்படியே ‘பரமேஸ்வரன்’ என்பவரை இந்து அறநிலையத்துறை அமைச்சராக்கினார் காமராஜர். இதில் அம்பேத்கருக்கு ரொம்ப மகிழ்ச்சி. ‘எங்கள் இனத்தவரை குளத்தில்கூட இறங்கவிடாத காலத்தில் கோயிலுக்குள்ளேயே கொண்டு போய்விட்டனவே திராவிட இயக்கங்கள்’ என்று பாராட்டினார். இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் காமராஜர் பேரைச் சொல்லிக்கொண்டிருக்கும் இன்றைய தலைவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது.’’

அன்பழகனை உதவிப் பேராசிரியர் என்று கிண்டல் செய்திருக்கிறார்களே?

‘‘பண்பால், அறிவால், ஆற்றலால் உயர்ந்த பேராசிரியரைப் பார்த்து இப்படிச் சொல்லியிருக் கிறார்கள். உண்மையில் அவர் துணைப் பேராசிரியர்தான், உதவிப்பேராசிரியர்தான். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியவர்களுக்கு உதவியாக இருந்த பேராசிரியர். இந்த நாட்டிற்கு, இந்த மொழிக்கு, இந்த மக்களுக்குத் துணையாக இருந்த பேராசிரியர்.’’

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சென்னை வந்து போயிருக்கிறாரே. பா.ஜ.க. _ அ.தி.மு.க. கூட்டணி ஏற்படுமா?

‘‘குஜராத்தில் மோடி ஆட்சியில் இஸ்லாமிய சமுதாயமே பலி கொடுக்கப்பட்டு அங்கு ரத்த ஆறே ஓடியது. அப்பேர்ப்பட்ட நரேந்திரமோடி ஏதோ ஒரு விபத்தின் காரணமாக மீண்டும் குஜராத்தில் முதலமைச்சராகியிருக்கிறார். அந்த மோடி தமிழகம் வந்ததில் ஒரு பெரிய மர்மம் அடங்கியிருக்கு. இங்கே இன்னொரு விஷயத்தைச் சொல்லவேண்டும். தி.மு.க.வைத்தான் இந்து விரோதக் கட்சி என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த அம்மாதான் இந்துமத விரோதச் செயல்களில் ஈடுபட்டவர். பழுத்த அரசியல் அனுபவம் பெற்ற வாஜ்பாயின் ஆட்சியைக் கவிழ்த்தவர் இந்த அம்மாதான். சங்கராச்சாரியாரைக் கைது செய்ததும் இந்த அம்மாதான்.

கண்முன்னே நின்ற மசூதியை இடிக்கிறார்கள். ஆனால், காண முடியாத ராமர் பாலத்தைப் பாதுகாக்கிறேன் என்கிறார்கள். இவர்கள் கூட்டணி அமைத்து ஒன்றும் ஆகிவிடாது.’’

டெல்லியிலிருந்து வந்திருந்த காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர், விஜயகாந்த்துடன் அரசியல் பேசியதாக கூறியிருக்கிறாரே. விஜயகாந்த் _ காங்கிரஸ் கூட்டணி அமையுமா?

‘‘தமிழக காங்கிரஸ்காரர்கள் பூசாரிகள் மாதிரி. ஆண்டவன் அப்படியே இருப்பான். பூசாரிகள் மாறிக்கொண்டேயிருப்பார்கள். நான் இங்கே ஆண்டவன் என்று சொல்வது சோனியாகாந்தியை. அவர்கள் ஆதரவு தி.மு.க.வுக்கு எப்போதும் உண்டு.’’.

Please Click here to login / register to post your comments.