உலகத் தமிழரின் பண்பாட்டுக் காப்பாளர் இராசாராம்

ஆக்கம்: மறவன்புலவு க. சச்சிதானந்தன்
**மறவன்புலவு க. சச்சிதானந்தன் (ஐ.நா. முன்னாள் ஆலோசகர்; சென்னை, யாழ்ப்பாணம் காந்தளகம் பதிப்பாளர்)

கிழக்கு ஆபிரிக்கக் கரையோர நாடு சீசெல்சு. அந்நாட்டு ஆவணக் காப்பகத்தில் கடந்த 200 ஆண்டுகளாகத் தமிழர் அங்கு வாழ்ந்து வருவதற்கான பதிவுகள் உள. வருகை, பிறப்பு, இறப்பு, திருமணம், வாக்காளர் பட்டியல் என அங்கிங்கெனாதபடி எங்கும் தமிழர் பற்றிய பதிவுகள். ஒவ்வொன்றாகப் பிரித்துக் காட்டுகிறேன். பார்த்துப் பார்த்துப் பரவசமடைகிறார் இராசாராம். காரை நான் ஓட்ட, என் பக்கத்தில் அவர் அமர்ந்து அந்தக் காப்பகத்துக்கு வரும் பொழுதே அவருக்கு வியப்பு. எப்படி இந்தச் சந்து பொந்துகளையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறாய்? எனக் கேட்டவர், ஆவணக் காப்பகத்தில் தமிழர் பற்றிய குறிப்புகள் உள்ள ஆவணங்களைத் தேர்ந்து காட்டியதும் வியந்து, விடாமல் பார்த்து, விவரக் குறிப்பு எடுத்துக்கொண்டே வந்தார். தெருக்களையும் திருப்பங்களையும் மட்டுமல்ல, தமிழர் வரலாற்றுத் தடங்களையும், திருப்புமுனை நிகழ்வுகளையும் அல்லவா காட்டுகிறாய் என்றார்.

சீசெல்சுத் தமிழர் அனைவரும் இணைந்து, தமது 200 ஆண்டுக் கால வரலாற்றுப் பின்னணியில், அங்கு முதன்முதலாகக் கட்டிய பிள்ளையார் கோயிலின் குடமுழுக்கு விழாவுக்கு 1992 வைகாசியில் இராசாராம் வந்திருந்தார். தமிழர்களுக்கான சங்கம் ஒன்றை 1984இல் அங்கு நிறுவினேன்; கோவில் ஒன்றை அமைக்கச் சீசெல்சுத் தமிழரைத் தூண்டினேன்; எனவே என்னையும் விழாவுக்குச் சங்கத்தினர் அழைத்திருந்தனர்.

தந்தை பெரியாரின் தனிச் செயலர், அறிஞர் அண்ணா காலத்தில் தில்லியில் நாடாளுமன்ற உறுப்பினர், தமிழகச் சட்டப் பேரவைத் தலைவர், தமிழக அமைச்சர் என அரசியல் களத்தில் ஆழங்கால் பட்டவரின் அருகில் இருக்கிறேன் என்பதை உணர்ந்திருந்தேன். அவரோ சிறு குழந்தை போல், புதிதாக எதையும் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் என்னோடு அந்த ஆவணக் காப்பகத்தைச் சுற்றிச் சுற்றி வந்தார். தகவலைத் தேடினார், மாணவனாய்க் குறிப்பெடுத்தார். களைப்பின்றித் துருவித் துருவி உசாவினார்.

இந்தத் தகவல் சுரங்கம், தமிழ்நாட்டில் உள்ளவருக்குத் தெரியவில்லையே என வருந்தினார். தமிழகம் திரும்பியதும் ஆய்வாளர்களின் கவனத்தைச் சீசெல்சுத் தமிழர் வரலாறுபால் திருப்புவேன் என உறுதிகொண்டார்.

உலகத் தமிழர் மீது மாறாத பற்றும் பாசமும் கொண்டவர் இராசாராம். சட்டப் பேரவைத் தலைவராக இருந்த காலத்தில் மொரிசியசு சென்றவர், திரும்பியதும் அந்த நாட்டுத் தமிழ் மாணவருக்குப் பாடப் புத்தகங்களைத் தமிழக அரசு வழங்க ஏற்பாடு செய்தார்.

ஈழத்து வவுனியாவில் பண்டார வன்னியனுக்குச் சிலை எழுப்பியதும் திறப்பு விழாவுக்குச் சென்றார். தமிழகத்தில் பண்டார வன்னியனை அறிமுகம் செய்தார்.

அமெரிக்காவில் தமிழ் அமைப்புகள் அனைத்தும் இணைந்து ஆண்டுதோறும் நடத்தும் தமிழ் விழாவுக்குத் தமிழக இணைப்பாளராகப் பல்லாண்டு பணிபுரிந்து அமெரிக்கத் தமிழர் தமிழ்ப் பண்பாடு பேணுபவராகத் தொடர வழிசெய்தார்.

மலேசியாவுக்கு முதன் முதலாகத் தந்தை பெரியாருடன் சென்றவர், பின்னரும் எழுந்த தலைமுறையினருடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். டத்தோ சாமிவேலுவும் இராசாராமும் இணைபிரியா நண்பர்கள்.

திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய இருவரும் பதிகம் பாடிப் பரவிய கோயில் ஈழத்தின் திருக்கேதீச்சரம். பின்னர் இராஜராஜ சோழன் அங்கு திருப்பணி செய்தான். அங்கு இராஜராஜப் பெருந்தெரு இருந்ததாகக் கலவெட்டுச் சான்று. இக்காலத்தில் அக்கோயில் திருப்பணிக்கு நிதி உதவியும் கருங்கல் சிலைவடிவங்கள் அமைத்தும் தமிழக அரசு பேருதவி புரிந்தது. திருக்கேதீச்சரத் திருப்பணிச் சபையின் தலைவர் இ. நமசிவாயமும் இராசாராமும் இணைபிரியா நண்பர்கள் ஆயினர். தமிழக அரசு மட்டுமல்ல, திருப்பதித் தேவத்தானமும் திருக்கேதீச்சரத் திருப்பணிக்கு உதவ இராசாராம் இணைப்பாளர் ஆனார்.

எம். ஜி. ஆர். முதலமைச்சரான காலத்தில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கும் எம். ஜி. ஆருக்கும் இடையே நட்புறவு ஆழமாக இராசாராமும் காரணமாயினார். வேறு எந்தப் போரளிக் குழுவையும் திரும்பிப் பார்க்காத எம். ஜி. ஆர்., விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவியும் தார்மீக ஆதரவும் வழங்கினார். எம். ஜி. ஆர். பெற்ற ஆலோசனைகளில் முக்கியமானவை இராசராம் வழங்கியவையே.

குஜரால் இந்தியப் பிரதமர். கொழும்பு செல்லும் வழியில் சென்னையில் தங்குகிறார். ஈழத்து நண்பர்களுடன் சென்று இராசாராமைப் பார்க்கிறேன். குஜரால் சென்னையில் உள்ளார், கொழும்பு செல்கிறார், ஈழத் தமிழர் கண்ணீரைத் துடைக்கக் குஜரால் உதவவேண்டும் என்கிறோம். உடனே புறப்படுகிறார். எப்படியோ குஜராலைச் சந்திக்கிறார். ஈழத் தமிழர் நன்மையைப் பேணுமாறு கொழும்பை வலியுறுத்த வேண்டும் எனக் குஜராலிடம் எடுத்துக் கூறுகிறார்.

சிங்கப்பூர், பிஜி, தென் ஆபிரிக்கா நாடுகளின் தமிழர்கள் தத்தம் நாடுகளில் எழும் சிக்கல்களுக்குத் தமிழக மக்களின் துணைவேண்டின் இராசாராமையே தொடர்புகொள்வர். அவரும் சலிக்காது தனக்குத் தெரிந்தவர்களைத் தொடர்பு கொண்டு அவ்வவ்வூர்த் தமிழரின் சிக்கல்களுக்கு அரசு மட்டத்திலோ, பிற இடங்களிலோ உதவிகள் பெற்றுக் கொடுப்பார்.

1986இல் முதன் முதலாக இராசாராமைச் சந்தித்தேன். என் தனிப்பட்ட தேவை ஒன்றிற்காக அவரைத் தேடித் தலைமைச் செயலகம் சென்றேன். அப்பொழுது அவர் அந்தத் துறை சார்ந்த அமைச்சர். மதிய நேரம். அவர் அலுவலக்துக்குப் போக மின் தூக்கிக்காகக் காத்திருக்கிறேன். மின்தூக்கி வருகிறது, அதிலிருந்து அவரே வெளியே வருகிறார். எனக்கு வியப்பு. என்ன செய்வது எனத் தோன்றவில்லை. வணக்கம் சொல்கிறேன். முன்பின் அறிமுகமில்லாத என்னிடம், வணக்கம் என்றவர் என்ன? என்கிறார். நாலு வரிகளில் என் சிக்கலைக் கூறுகிறேன். பக்கத்தில் வந்த உதவியாளரிடம் பேசினார். உரிய அதிகாரிக்கு என்னை அறிமுகம் செய்யச் சொன்னார். மறுநாள் அந்த அதிகாரியிடம் போனேன். என் சிக்கல் எளிதாகத் தீர்ந்தது. சாந்தோமில் உள்ள அவர் வீட்டுக்கு அடுத்த நாள் சென்றேன். நன்றி தெரிவித்தேன். தான் கடமையைச் செய்ததாகக் கூறினார். அன்று தொடங்கிய நட்பு. அவர் வீட்டில் காலையில் இட்லி சாப்பிட அழைப்பார். திரைப்படத்துக்கு அழைத்துச் செல்வார். என் வீட்டுக்கு வருவார். எங்கு பார்த்தாலும் என் தோளில் கை போட்டு நட்புரிமை பேணுவார்.

எனக்கு மட்டுமல்ல, எத்தனையோ நாடுகளின் தமிழர் அவரின் தனிப்பட்ட உதவிகளைப் பெற்றனர். சீசெல்சுக் கே. தி. பிள்ளையின் மகனுக்குச் சேலத்தில் பெண் பார்த்துக் கொடுத்திருக்கிறார். மொரிசியசுச் செட்டியாருக்குச் சென்னையில் அவரே விருந்தோம்புபவர். ஆஸ்திரேலியச் சிட்னியின் கலாநிதி கந்தையாவைச் சேலத்துக்கு அழைத்துச் சென்று பொற்கிழி வழங்கினார். அமெரிக்காவின் சோக்கிரட்டீசுக்குச் சென்னையில் மட்டுமல்ல; தமிழகத்தில் அவரே காப்பாளர். மகளைக் காணவில்லை என ஈழவேந்தன் துடித்தபொழுது மீட்டுக் கொடுத்தவர் இராசாராம். எடுத்துக் காட்டுக்காகச் சில பெயர்களையும் நிகழ்வுகளையும் இங்கு குறிப்பிட்டேனே அன்றி, இவை முழுமையான பட்டியல் அன்று.

கல்விக்காக, தொழிலுக்காக, வேலை தேட, வீடு வாங்க, திருமணமாக, நோய்நீக்க, பொழுதுபோக்க, சுற்றுலாவுக்காக என எந்தத் தனிப்பட்ட தேவைக்காகவும் உலகத் தமிழர் எங்கிருந்து வந்தாலும் இராசாராமின் வீடு திறந்திருக்கும், அவரின் மகிழுந்து பயணிக்கும், அவருக்காக எதையும் செய்கின்ற எண்ணற்ற நண்பர்கள் உதவுவர்.

உலகத் தமிழரைத் தொகுப்பாகப் பார்த்தார்; நாடுநாடுகளாகப் பார்த்தார்; ஒவ்வொருவராகவும் பார்த்தார். கையளவு இதயம் வைத்திருந்தவர், உலகளவு உள்ளத்தை விரித்துப் பரப்பினார். சேலத்தில் மரவள்ளியிலிருந்து சேகு தயாரிக்கும் சிறுதொழில் பண்ணை தொடக்கம் சீசெல்சுத் தமிழரின் திருமணம் வரை இராசாராம் தொடாத துறை இல்லை, கைவைக்காத திணை இல்லை, கட்டியெழுப்ப முயலாத வளர்ச்சிப் பட்டறை இல்லை. தமிழரின் வாழ்வுத் துறை ஒவ்வொன்றிலும் அவர் தடம் பதித்தார்.

அன்பு, அறன், அருள் இவை வாழ்வுக் குறிக்கோள். இனிமை, செம்மை, எளிமை இவை இயல்புகள். தளராத நெஞ்சம். சலியாத உழைப்பு, முகம் கோணாத கண்ணோட்டம் என்பன அடித்தளம். இவை கொண்டு தமிழகத்துக்கு வரலாற்றுத் திருப்பு முனைகளைத் தந்தவர், உலகத் தமிழரின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் அயராது உழைத்தவர். அவரே க. இராசாரம். அவர் 08.02.2008இல் தன் 82ஆவது வயதில் காலமானார்.

Please Click here to login / register to post your comments.