இலங்கைப் பிரச்சினையில் தி.மு.க.வின் அணுகுமுறையில் தெளிவில்லை என்ற குற்றச்சாட்டில் நியாயம் இல்லாமலில்லை

* இலங்கையை அதட்டிக் கேட்க வேண்டிய நேரத்தில் அடக்கியே வாசிப்பது ஏன்? கச்சதீவு அருகே இம் மாதம் 5 ஆம் திகதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிந்த இந்திய மீனவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டதையும் அதில் கிறிஸ்டி என்பவர் இறந்ததையும் சுட்டிக்காட்டி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியிருக்கிறார் தமிழக முதல்வர் கருணாநிதி.

இதுபோல அடிக்கடி நிகழ்த்தப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் தமிழக மீனவர்கள் அச்சப்படுவதையும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதையும் அதில் தவறாமல் குறிப்பிட்டிருக்கிறார்.

அதே கடிதத்தில், 62 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்துச்சென்றதையும் மறக்காமல் நினைவு படுத்தியிருக்கிறார்.

இந்தியாவின் மேற்கில்தான் நிரந்தர வைரியான பாகிஸ்தான் இருக்கிறது. குஜராத் மாநில மீனவர்கள்தான் அடிக்கடி கடலில் எல்லை எது என்று தெரியாமல் பாகிஸ்தான் பகுதிக்குச் சென்று பிடிபடுகிறார்கள். அவர்களைக் கூட பாகிஸ்தான் இப்படி சுட்டு பிணமாகவோ, குற்றுயிரும் குலை உயிருமாகவோ அனுப்புவதில்லை.

கடல் எல்லையை மீறுகிறவர்களைக் கைது செய்யவும் தண்டிக்கவும் சர்வதேச சட்டங்களின் படி வழிகள் இருக்கும்போது இலங்கை கடற்படையினர் அல்லது அவர்களுடைய ஆசியைப் பெற்றவர்கள் இப்படி அக்கிரமமாக நடக்கும்போது இந்திய அரசு மெத்தனமாக இருப்பது வேதனையைத் தருகிறது.

சர்வதேச விவகாரங்களில் கூட சட்டப்படியும் நியாயப்படியும் நடந்துகொள்ள நமது அரசு தயங்குவது ஏன்? தமிழ்நாட்டு மீனவர்களைவிட இலங்கை அரசின் உறவு பெரிதாகப் போய்விட்டதா? என்ற கேள்விகள் நமக்குள் எழுகின்றன.

நம்முடைய ஆதங்கம் எல்லாம் ஆசியாவிலேயே மிகப்பெரிய நாடு, வளர்ந்துவரும் பொருளாதாரப் புலி என்றெல்லாம் நம்மை நாமே பாராட்டிக் கொள்கிறோமே, நம்மை ஒரு நாடாகக் கூட இலங்கை மதித்ததைப் போலத் தெரியவில்லையே என்பதுதான்.

தமிழக முதல்வர் நாளொரு கவிதை, பொழுதொரு கடிதம் என்று எழுதி தன்னுடைய பேனா வலிமையைக் காட்டுகிறாரே தவிர, இத்தனை ஆண்டுகள் அரசியலில் இருந்ததற்கான அனுபவ முதிர்ச்சியையும் மத்திய அரசியலில் தனக்கிருக்கும் செல்வாக்கையும் இலங்கைப் பிரச்சினையில் தமிழினத்துக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமைகளையும் இந்திய அரசின் பார்வையில் தமிழகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு முக்கியத்துவத்தையும் பெற்றுத்தருவதில் காட்டுவதில்லையே என்பதுதான் நமது ஆதங்கம்.

காவிரி, பாலாறு, முல்லைப்பெரியாறு விவகாரங்களில்தான் நாட்டின் ஒற்றுமை சிதைந்துவிடும் என்று நிதானமாக அணுக நினைக்கிறோம் என்று சமாதானம் செய்து கொண்டாலும் இலங்கையை அதட்டிக் கேட்க வேண்டிய நேரத்தில் கூட அடக்கியே வாசிக்க நினைப்பது ஏன்?

இலங்கைப் பிரச்சினையைப் பொறுத்தவரை, தி.மு.க.வின் அணுகுமுறை ஆரம்பம்முதலே தெளிவாக இல்லாமல் இருப்பதுதான் இன்றைய நிலைமைக்குக் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதில் நியாயமில்லாமலில்லை. இந்தியா திரும்பும் அமைதிப் படையை வரவேற்கப் போகமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தது முதல், இப்போது இலங்கைப் பிரச்சினையில் பட்டும்படாமலும் இருப்பதுவரை தி.மு.க.வின் அணுகுமுறை மற்றவர்கள் குறைகூறும்படி இருப்பதற்கு முக்கியமான காரணம் தெளிவின்மையோ என்கிற சந்தேகம் எழுகிறது.

தமிழீழப் போராளிகளை ஆதரிப்பது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருப்பது போன்றவைதான் தெளிவு என்று சொல்லவில்லை. இலங்கை சம்பந்தப்பட்ட விடயங்களில் இந்திய அரசின் வெளிநாட்டுக் கொள்கையை வழிநடத்தும் தார்மிக உரிமையும் தமிழக முதல்வர் என்ற முறையில் கடமையும் அவருக்கு உண்டு. மத்திய அரசின் கொள்கைதான் எங்கள் கொள்கை என்று சொல்வதை விட்டுவிட்டு, மத்திய அரசு இந்த விடயத்தில் எத்தகைய கொள்கையை வகுக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் பொறுப்பை அவர் ஏற்க வேண்டும்.

ராஜராஜசோழனைப் போலவே இலக்கியமும் வரலாறும் ஏடும் நாடும் தன்னை ஏற்றிப் புகழ வேண்டும் என்று எதிர்பார்க்கும் தமிழக முதல்வர் கருணாநிதி மீனவர்களின் துயரம் துடைக்கப்படாமலேயே தொடர்வதற்கு தானும் ஒரு முக்கிய காரணம் என்பதை வரலாறு பதிவு செய்யும் என்பதை மறந்துவிடக்கூடாது.

வங்காள விரிகுடாவில் உள்ள கடல், மீனவர் குருதியால் முழுவதும் `செங்கடலாக' மாறிய பிறகுதான் சர்வதேச கவனம் இதன்பால் திருப்பப்படும்போலத் தெரிகிறது!

Please Click here to login / register to post your comments.