திருகோணமலை கடற்படைத்தளம்,சீனன்குடா விமானப்படைத்தளம் புலிகளின் பார்வையில்?

ஆக்கம்: மகிழினி
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களுடன் தமது சந்தேகம் குறித்து இராணுவ உயர்மட்டத்திற்கு கடந்த வாரம் புலனாய்வுத் துறையினர் எச்சரிக்கை ஒன்றை வழங்கியிருக்கின்றனர். திருகோணமலை காட்டுப் பகுதிகளில் புலிகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பது குறித்த ஆதாரங்களுடனான எச்சரிக்கை ஒன்றே அதுவாகும்.

கிழக்கில் விடுதலைப் புலிகள் தமது செயற்பாடுகளை மீளவும் உறுதியானதொரு பின்புலத்துடன் ஒருங்கிணைத்து விட்டார்களா என்ற சந்தேகம் இராணுவப் புலனாய்வுத் துறையினருக்கு வலுத்திருக்கிறது.

கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பரப்பை படையினர் கைப்பற்றியபோதும் அங்கு புலிகளின் நடவடிக்கைகளை அவர்களால் முற்றாகக் கட்டுப்படுத்திவிட முடியவில்லை. கிழக்குக் காடுகளில் இன்னமும் செயற்படு நிலையில் இருக்கும் புலிகளே தென்னிலங்கையின் ஆழமான பகுதிகள்வரை ஊடுருவி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக அம்பாந்தோட்டை மாவட்டம், மொனராகல மாவட்டம், மாத்தளை மாவட்டம், பதுளை மாவட்டம் ஆகிய தென்னிலங்கையின் ஆழமான பகுதிகளில் இடம்பெறும் தாக்குதல்களின் பின்னணியில் கிழக்குக் காடுகளில் இருந்தவாறு செயற்படும் கேணல் ராம் தலைமையிலான புலிகளே உள்ளனர் என்று இராணுவப் புலனாய்வுத்துறை தெரிவித்து வருகிறது.

வடக்கில் தாக்குதல்கள் உக்கிரமடைந்துள்ள இன்றைய நிலையில் வடக்கு மற்றும் கிழக்கிற்கு வெளியே விடுதலைப் புலிகள் தாக்குதல்களை விரிவுபடுத்துவதானது படையினருக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கும் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. அத்தகைய தாக்குதல்கள்தான் தற்போது தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.

அதாவது வன்னிக்குள் படையினரின் புலனாய்வுப் பிரிவினர் ஆழஊருவும் தாக்குதல்களை நடத்தும் பாணியில் புலிகளும் தமது ஆழஊடுருவும் அணிகளைப் பயன்படுத்தி தென்னிலங்கையில் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியுள்ளனர். “அவலத்தைக் கொடுத்தவனுக்கே அதை திருப்பிக்கொடு” என்பது போலவே புலிகளின் இத்தகைய சில தாக்குதல்கள் அமைந்துள்ளன.

இத்தகைய தாக்குதல்கள் இடம்பெறும் பின்னணியை ஆராய்ந்தால் புலிகள் சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துவிட்டு மீண்டும் தளம் திரும்புவது வெளிப்படையாகியிருக்கிறது.

குறிப்பாக யால பிரதேசத்திலோ அல்லது மொனராகல பகுதிகளிலோ தாக்குதல் நடத்தும் புலிகளைத் தேடுவதற்கென பெரும் எண்ணிக்கையிலான படையினர் குவிக்கப்பட்டு காடுகள் சல்லடையிடப்பட்டாலும் தாக்குதல் நடத்திய புலிகளைப் பிடிக்க முடியாதிருப்பது படைத்தரப்பை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

தாக்குதல் நடத்திவிட்டு புலிகள் எப்படித் தலைமறைவாகின்றனர் அல்லது எந்தப் பகுதிக்குள் அவர்கள் சென்றுவிடுகின்றனர் என்ற கேள்விக்கு நீண்டநாட்களாக பதிலின்றி படைத்தரப்பு தவித்து வருகிறது.

இந்நிலையில்தான் தென்னிலங்கையின் ஆழமான பகுதிக்குள் ஊடுருவும் புலிகள் மீண்டும் ஒன்றுகூடும் பகுதி எனக் கருதப்படும் இடம் குறித்த புலனாய்வுத் தகவல்கள் இராணுவ புலனாய்வுத் துறையினருக்கு ஆதாரத்துடன் கிடைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆதராப+ர்வமான தகவல்களையே புலனாய்வுப்பிரிவினர் இராணுவ உயர்மட்டத்திடம் கையளித்து கூடவே எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளனர்.

திருகோணமலை பேராறு காட்டுப்பகுதியில் இருந்து கிழக்குப் பக்கமாக சுமார் 5 கிலோமீற்றர் தூரத்தில் வடரிக்குளம் அமைந்துள்ளது. இங்குள்ள முஸ்லிம் குடியேற்றத்திட்ட பகுதியில் கடந்த 12 ஆம் திகதி 16 பேரைக்கொண்ட புலிகளின் குழு ஒன்று உழவு இயந்திரம் ஒன்றில் ஆயுதங்கள் சகிதம் சுதந்திரமாக நடமாடியிருக்கிறது.

அன்றுமாலை 7.20 மணிமுதல் சுமார் 15 நிமிடநேரம் அந்தப் பகுதியிலுள்ள பல்வேறு பலசரக்குக் கடைகளுக்குச் சென்று உலர் உணவுப் பொருட்களை அதிகளவாகச் சேகரித்துக்கொண்டு அங்கிருந்து பேராறு காட்டுப்பகுதி நோக்கி மீண்டும் சென்றுள்ளனர்.

வடரிக்குளம் பகுதியில் உள்ள மூன்று பலசரக்கு கடைகளில் புலிகள் தமக்குத் தேவையான உலர்உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்துள்ளனர். வரடிக்குளம் பகுதிக்குச் சென்றதும் மூன்று குழுக்களாகப் பிரிந்த இவர்களில் முதலாவது குழுவில் 10 பேரும் இரண்டாவது குழுவில் 4 பேரும் மூன்றாவது குழுவில் 2 பேரும் இருந்துள்ளனர்.

முதலாவது குழுவினர் ஒரு கடையில் 15 ஆயிரம் ரூபாவுக்கும் இரண்டாவது குழுவினர் பிறிதொரு கடையில் 10 ஆயிரம் ரூபாவுக்கும் மூன்றாவது குழுவினர் மற்றொரு கடையில் ஆயிரம் ரூபாவுக்குமென மொத்தமாக 26 ஆயிரம் ரூபாவுக்கு பொருட் கொள்வனைவைச் செய்துள்ளனர். நீண்டகாலத்திற்கு வைத்திருந்து பயன்படுத்தக்கூடிய உலர்உணவுப் பொருட்களையே இவர்கள் கொள்வனவு செய்ததாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பொருட் கொள்வனவு முடிந்ததும் அங்கிருந்து அகலும்போது புலிகள் தமது உழவு இயந்திரத்தின் வெளிச்சத்தை அணைத்துவிட்டே அதில் பயணித்ததனர் என்று அப்பகுதி முஸ்லிம் மக்கள் தெரிவித்துள்ளனர்.

மறுநாள் இந்தச் சம்பவம் குறித்து கடற்படையினரிடம் அவர்கள் முறையிட்டபோதும் கடற்படையினர் தமது குடியேற்றத்திட்டத்தை அண்மித்த பகுதிகளில் மட்டும் சிறிய தேடுதலை நடத்திவிட்டு அங்கிருந்து அகன்றுள்ளனர் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடற்படையின் கவனயீனமே இதுவென இராணுவ உயர்மட்டத்திற்கு சுட்டிக் காட்டியிருக்கும் புலனாய்வுத் துறையினர் புலிகள் பேராறு காட்டுப்பகுதியில் இருந்தவாறு திருகோணமலையில் மிகமுக்கியமான இலக்கு ஒன்றின்மீது தாக்குதல் நடத்த திட்டமிடலாம் என்றும் எச்சரித்துள்ளனர்.

அத்துடன் பேராறு காட்டுப் பகுதியில் புலிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக குச்சவெளிப் பொலிஸாருக்கும் ஏற்கனவே பொதுமக்களால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பொலிஸாரும் இது விடயத்தில் அலட்சியம் காட்டுவதாக புலனாய்வுத்துறை இராணுவ உயர்மட்டத்திற்கு சுட்டிக் காட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பேராறு காட்டுப் பகுதிக்குச் செல்லும் பிரதான வீதிகளில் கடற்படையினர் காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரையே கடமையாற்றுகின்றனர். அதன்பின்னர் புலிகள் சுதந்திரமாக வீதிக்கு வருவதை அங்குள்ள மக்கள் அடிக்கடி கண்டிருக்கின்றனர்.

அவர்கள் தெரிவிக்கும் தகவல்களின் அடிப்படையில் பேராறு காட்டுப் பகுதியில் சுமார் 70 ற்கும் மேற்பட்ட புலிகள் இருக்கலாம் என்று இராணுவப் புலனாய்வுத்துறை சுட்டிக் காட்டியிருக்கிறது. ஆக ஒட்டுமொத்தத்தில் பேராறுப் பகுதியில் இருந்தவாறு புலிகள் தமது நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது படைத்தரப்பிற்கு தற்போது ஓரளவுக்கு பொறி தட்டியிருக்கிறது.

அத்துடன் வடரிக்குளம் பகுதிக்கு புலிகள் வாகனம் ஒன்றில் வந்து சென்றிருப்பதானது அவர்கள் பலமானதொரு பின்புலத்தை பேராறுப் பகுதியில் அமைத்திருக்கின்றனர் என்பதையே காட்டுகிறது.

திரியாய் மற்றும் குச்சவெளி எல்லைப் பகுதியிலேயே வடரிக்குளம் அமைந்திருக்கிறது. வடரிக்குளம் பகுதிக்கு புலிகள் சுதந்திரமாக வந்து செல்வதால் வடரிக்குளத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள குச்சவெளி படை முகாம்கள் மற்றும் காவலரண்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியிருக்கிறது.

அதேநேரம் வீதி வழியாகப் பார்த்தால் குச்சவெளியில் இருந்து சுமார் 30 கிலோமீற்றர் தூரத்தில் திருகோணமலை கடற்படைத்தளம் அமைந்திருக்கிறது. அதனை அண்மித்து சீனன்குடா விமானப்படைத்தளம் அமைந்திருக்கிறது. ஆனால் காட்டுப்பகுதிகள் ஊடாக நகரும்பட்சத்தில் இதைவிடக் குறைவான தூரத்தைக் கடந்தாலே திருகோணமலையின் கேந்திர முக்கியத்தும் வாய்ந்த பகுதிகளுக்கு வந்துவிடலாம்.

அந்தவகையில் பார்த்தால் திருகோணமலை கடற்படைத்தளம் மற்றும் சீனன்குடா விமானப்படைத்தளம் ஆகியவற்றின் பாதுகாப்பு குறித்தும் மேலதிக கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு படைத்தரப்பு தள்ளப்பட்டிருக்கிறது.

திருகோணமலை உட்பட கிழக்கின் பாதுகாப்பைக் கவனிக்கும் பொறுப்பை கடந்த வருட இறுதியில் கடற்படையினரிடமும், இராணுவத்தினரிடமும் இருந்து பிடுங்கிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, அந்தப் பொறுப்பை அதிரடிப் படையிடம் கையளித்திருந்தார்.

கிழக்கில் புலிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப் படுத்துவதற்குரிய அனைத்து அதிகாரங்களும் அன்றுமுதல் இன்றுவரை அதிரடிப் படையினருக்கே வழங்கப்பட்டுள்ளன.

எனினும், கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் நிலைகொண்டிருக்கும் புலிகளின் அணியை இந்த அதிரடிப்படையால் நெருங்க முடியாமல் இருப்பது குறித்து இராணுவ உயர்மட்டத்தில் கடும் விமர்சனமும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையிலேயே பேராறு காட்டுப் பகுதியிலும் 70 பேரடங்கிய புலிகளின் அணியொன்று தமது செயற்பாடுகளைச் சுதந்திரமாக மேற்கொண்டு வருவது படைத்தரப்பிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

குறிப்பாக கஞ்சிக்குடிச்சாறிலுள்ள புலிகளை அகற்றுவதில் தோல்விகண்ட அதிரடிப்படையினருக்கு போராறுப் பகுதியில் செயற்படும் புலிகள் புதிய தலைவலியாக உருவெடுத்துள்ளனர்.

குடும்பிமலையைப் படையினர் கைப்பற்றியபோது பேராறுப் பகுதியிலும் கஞ்சிக்குடிச்சாறு பகுதியிலும் இன்றுள்ள அதேயளவான புலிகள் இருக்கவில்லை. தற்போதுதான் அப்பகுதிக்கு புலிகளின் வருகை இடம்பெற்றுள்ளதாக இராணுவப் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளளது. அப்படினால் கிழக்கிற்கு தமது படையணிகளை புலிகள் மீண்டும் படிப்படியாக அனுப்பத் தொடங்கிவிட்டனரா என்ற வலுவான சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

இல்லையேல் கிழக்கில் மட்டுமின்றி தென்னிலங்கையின் ஆழமான பகுதிகளிலும் தாக்குதல்கள் தொடர்வதைத் தடுப்பது அல்லது கட்டுப்படுத்துவது கடினமானதாகலாம்.

கிழக்கில் காட்டுப் பகுதிகளில் பலமான பின்தளங்களை அமைத்துச் செயற்பட ஆரம்பித்திருக்கும் புலிகள் உடனடியாக பாரிய தாக்குதல்களை மேற்கொள்ளும் சாத்தியங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. எனினும் கெரில்லாப் பாணியிலான அதிக சேதங்களை விளைவிக்கக்கூடிய தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம்.

குறிப்பாக தென்னிலங்கையின் ஆழமான பகுதிகளுக்குள் சிறிய சிறிய குழுக்களாக ஊடுருவி அங்கு தாக்குதல்களை நடத்தி, பௌதிக ரீதியான சேதங்களை விளைவிப்பது, விநியோகங்களைச் சீர்குலைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் படைத்தரப்பின் கவனத்தைப் பிரதான சமர் அரங்குகளில் இருந்து திசை திருப்பி படைவலுச் செறிவைப் பரவலாக்குவது போன்ற இலக்குகளை நிறைவேற்றுதல்தான் கிழக்கில் நிலைகொண்டிருக்கும் புலிகளின் முக்கிய பணியாக இருக்கும்.

அதனால் திருகோணமலை கடற்படைத்தளம் மற்றும் சீனன்குடா விமானப்படைத்தளம் ஆகியவை கிழக்கிலுள்ள புலிகளின் பார்வையில் இருந்து தப்பிவிடும் என்று கருதிவிட முடியாது.

குறிப்பாக அனுராதபுரம் விமானத்தளம் தாக்கி அழிக்கப்பட்ட பாணியிலான தாக்குதல்கள் திருகோணமலையிலும் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்திருக்கின்றன. இதற்கான தயார்படுத்தல்களை பேராறு மற்றும் கஞ்சிக்குடிச்சாறு பகுதிகளிலுள்ள புலிகளின் அணிகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளலாம்.

கடந்தவாரம் புத்தளம் மற்றும் சிலாபம் பகுதிகளில் இருந்தும் அதற்கு முதல்வாரம் கற்பிட்டியில் இருந்தும் கிளைமோர்கள் உட்பட தாக்குதல் உபகரணங்களை படைத்தரப்பு கைப்பற்றியிருந்தது. இலங்கையின் தென்மேற்குப் பக்கத்தில் அண்மைக் காலமாக தாக்குதல்களை தீவிரப்படுத்திய புலிகள் தற்போது தென்கிழக்கு திசையில் புத்தளம், கற்பிட்டி, சிலாபம் ஆகிய இடங்கள் மீதும் தமது பார்வையைத் திருப்பி விட்டுள்ளனரா என்ற சந்தேகமும் இதன்மூலம் எழுந்திருக்கிறது.

இத்தகையதொரு நிலையிலேயே கஞ்சிக்குடிச்சாறு மற்றும் பேராறு காடுகளில் நிலைகொண்டிருக்கும் புலிகளால் நாட்டிற்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக இராணுவ புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இந்த எச்சரிக்கையை அலட்சியம் செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் படைத்தரப்பு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் கிழக்கு நோக்கி மீண்டும் படையினரை நகர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டுள்ளது. இத்தகையதொரு நிலையானது வடக்கு இராணுவ நடவடிக்கையிலும் தென்பகுதியின் பாதுகாப்பிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Please Click here to login / register to post your comments.