புலிகளின் வான்படையினரின் களமுனை நான்காம் கட்ட ஈழப்போரில் எண்ணற்ற தாக்குதல் களங்களைத் திறந்திருக்கும்

ஆக்கம்: மகிழினி

இராணுவ வெற்றி பற்றிய தம்பட்டத்தை நிறுத்தியிருக்கும் படைத்தரப்பு தமது தரப்பு இழப்புகளை வெளியிட ஆரம்பித்திருப்பதானது வன்னியைச் சூழவுள்ள சமர்க்களங்கள் வித்தியாசமான இராணுவ பரிமாணத்தில் சென்று கொண்டிருப்பதையே வெளிக்காட்டி நிற்கிறது. மணலாறு கொக்குத்தெடுவாயில் இருந்து மன்னார் திருக்கேதீஸ்வரம்வரை ஒரு சங்கிலித் தொடராக வன்னிக் களமுனையில் எண்ணற்ற தாக்குதல் களங்களைத் திறந்திருக்கும் படைத்தரப்பின் தாக்குதல்கள் ஒப்பீட்டளவில் மன்னாரிலேயே தீவிரமடைந்துள்ளன.

வன்னிக் களமுனையில் மணலாற்றுக்களம், வவுனியாக் களம், மன்னார்க் களம் என்று மூன்று பிரதான சமர்க்களங்களைத் திறந்திருக்கும் படைத்தரப்பு, வன்னிக்குள் நுழைவதற்கு மன்னார் களமே இலகுவானது என்று கணிப்பிட்டு கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக வன்னிக்குள் உள்நுழைவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மன்னாரில் ஒப்பீட்டளவில் தாக்குதல்கள் அதிகமாகக் காணப்படுவதற்கும் இதுவே காரணமாகும்.

ஆனால், மன்னார் களத்தில் இதுவரை இடம்பெற்ற படைநடவடிக்கைகளின் பலாபலன்கள், பிரதிகூலங்கள் மிகப்பெரும் வரலாற்றுச் சமர்க்களமாக - திருப்புமுனையை ஏற்படுத்தவிருக்கும் சமர்க்களமாக – மன்னார்க்களம் விளங்கப் போவதை கட்டியம்கூறி நிற்கின்றன.

அதாவது ஜெயசிக்குறு படை நகர்வு எப்படி ஒரு வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்தியதோ அதேபோல் மன்னார் களத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் பெயர் சூட்டப்படாத படை நடவடிக்கையும் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையை ஏற்படுத்தும் கட்டத்தில் வந்துநிற்கிறது. மன்னார் களமுனையில் நிலைகொண்டிருக்கும் 58 ஆவது படையணி டிவிசன்களுக்கும் கனரக ஆயுதங்களுக்கும் இணையாக புலிகளின் படையணிகளும் அவர்களது தாக்குதல் ஆயுதங்களும் இருப்பது படைத்தரப்புக்கு பெரும் தலைவலியாக இன்று மாறியிருக்கிறது. பல்வேறு நாடுகளின் பயிற்சி பெற்ற களமுனைத் தளபதிகளையும் பல்வேறு நாட்டு இராணுவ வல்லுனர்களால் தேர்வு செய்யப்பட்ட பயிற்சிகளைப் பெற்றவர்களையும் கொண்டதான படைத்தரப்புக்கு இணையாக நின்று புலிகளின் தளபதிகளும் போராளிகளும் மன்னார் களமுனையில் எதிர்ச்சமராடுகின்றனர். மன்னாரில் நிலைகொண்டிருக்கும் படையணிகள் குறித்தும் அவற்றை வழிநடத்தும் படைத்தளபதிகள் குறித்தும் அந்த படையணிகளின் நகர்வுப் பாதைகள் குறித்தும் முதலில் பார்க்கலாம்.

மன்னாரில் 58 ஆவது படையணியே ஆரம்பத்தில் நிறுத்தப்பட்டிருப்பினும் அண்மைக்காலமாக வவுனியாவில் இரணை இலுப்பைக்குளத்தில் தனது பிரதான தளத்தை அமைத்திருக்கும் 57 ஆவது படையணியின் உதவியையும் 58 ஆவது படையணி பெற்றுவருகிறது. அதாவது மன்னாரில் தீவிரமடைந்துள்ள தாக்குதல்களைக் கருத்திற்கொண்டு மன்னார் களமுனையில் 57 ஆவது படையணியும் 58 ஆவது படையணியும் இணைந்த ஒரு படை நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் இவ்விரு படையணிகளும் குறித்தும் பார்க்கலாம்.

57 ஆவது படையணி கடந்த வருட ஆரம்பத்தில் பிரிகேடியர் மானவடுகேயைத் தளபதியாகக் கொண்டு தொடங்கியது. இந்த படையணியின் பிரதிக் கட்டளைத் தளபதியாக கேணல் பிரசன்ன சில்வா இருந்தார். வவுனியா தம்பனைப் பகுதியிலும் விளாத்திக்குளம் பகுதியிலும் கடந்தவருட பிற்பகுதிகளில் இந்தப் படையணி புலிகளின் கடும் தாக்குதல்களை சந்தித்ததுடன் புலிகளிடம் தமது இராணுவத் தளபாடங்களையும் பறிகொடுத்தது.

பெரிதும் எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த படையணி எதிர்பாராத அடி வாங்கியதால் படையணியின் தலைமைப் பதவிகள் கடந்தவருட இறுதியில் மாற்றப்பட்டன. தலைமைப் பதவியில் இருந்து பிரிகேடியர் மானவடுகே நீக்கப்பட்டு புதிய தளபதியாக பிரிகேடியர் ஜெகத் டயஸ் நியமிக்கப்பட்டார். அதேபோல் பிரதிக்கட்டளைத் தளபதியாகவிருந்த கேணல் பிரசன்ன சில்வா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கேணல் நிர்மல தர்மரட்ண நியமிக்கப்பட்டார்.

57 ஆவது படையணியின் கீழ் 3 பிரிகேட்கள் அடக்கப்பட்டுள்ளன. 57 ஆவது படையணியின் முதலாவது பிரிகேட்டுக்கு கேணல் ரவிப்பிரிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பிரிகேட்டின்கீழ் 12 ஆவது சிங்க றெஜிமென்ட், 9 ஆவது கஜபா றெஜிமென்ட், 8 ஆவதும் 11 ஆவதும் காலாற்படைப் பிரிவுகள் என மொத்தம் நான்கு பற்றாலியன்கள் அடக்கப்பட்டுள்ளன.

இரணை இலுப்பைக்குளத்தில் இருந்து தனது படைநகர்வை ஆரம்பித்திருக்கும் இந்த பிரிகேட்டைச் சேர்ந்த நான்கு பற்றாலியன்களும் தற்போது முள்ளிக்குளம் பகுதியில் நிலைகொண்டுள்ளன. மன்னாரின் பாலம்பிட்டியைக் கைப்பற்றுவதே இந்த பற்றாலியன்களின் தற்போதைய இலக்காகும். எனினும் முள்ளிக்குளத்தில் இருந்து இந்த பற்றாலியன்கள் மேலும் முன்னேறமுடியாத வகையில் புலிகள் எதிர்ச்சமரை நடத்திவருவதால் கடந்த சில மாதங்களாக முள்ளிக்குளம் பகுதியிலேயே இந்த நான்கு பற்றாலியன்களைச் சேர்ந்த மூவாயிரத்திற்கும் அதிகமான படையினரும் முடக்கப்பட்டுள்ளனர். (தலா ஒரு பற்றாலியனில் ஆயிரம் படையினர் இருப்பது வழக்கம். ஆனால் சிறிலங்கா இராணுவத்தில் ஒரு பற்றாலியனில் 800 படையினரே உள்ளனர்)

57 ஆவது படையணியின் 2ஆவது பிரிகேட்டுக்கு லெப்.கேணல் கீத்சிறி லியனகே தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பிரிகேட்டின்கீழ் 7ஆவது சிங்க றெஜிமென்ட், 10 ஆவது இலகு காலாற்படை, 7 ஆவது இலகு காலாற்படை ஆகிய மூன்று பற்றாலியன்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

வவுனியா வடக்கு கன்னையடி என்ற பகுதியில் தளம் அமைத்துள்ள இந்த பிரிகேட்டிலுள்ள பற்றாலியன்கள் மடு தேவாலயப் பகுதியைக் குறிவைத்து படை நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றன. பெரியதம்பனை மற்றும் மருதங்குளம் ஆகிய பகுதிகளில் இந்த பற்றாலின்கள் தற்போது நிலைகொண்டிருந்தவாறு தாக்குதல்களை நடத்தி வருகின்றன. மடுத்தேவாலயப் பகுதியை தாக்குதல்கள் இன்றி சுற்றிவளைக்கும் நோக்கில் ஒரு முனையூடான நகர்வை இந்த பற்றாலியன்கள் மேற்கொள்ள மறுமுனையூடாக 57 ஆவது படையணியின் மூன்றாவது பிரிகேட் படைநகர்வை மேற்கொள்கிறது.

57 ஆவது படையணியின் 3 ஆவது பிரிகேட்டுக்கு கேணல் லால் கமகே தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். விளாத்திக்குளம் பகுதியில் பின்தளம் அமைத்துச் செயற்படும் இந்த பிரிகேட்டில் 4 ஆவது சிங்க றெஜிமென்ட், 8 ஆவது கஜபா றெஜிமென்ட், 4 ஆவது மற்றும் 6 ஆவது இலகு காலாற்படை ஆகிய நான்கு பற்றாலியன்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 57 -2 ஆவது பிரிகேட்டும் 57-3 ஆவது பிரிகேட்டும் மடுத்தேவாலயத்தை சுற்றி அரைவட்ட வடிவில் நகர்வை மேற்கொண்டு வருகின்றன.

அந்தவகையில் 57 ஆவது படையணி வவுனியாவிலேயே நிறுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும் அந்த படையணியின் நகர்வுகள் மன்னாரைக் குறிவைத்தே இடம்பெறுகின்றன.

அடுத்து 58 ஆவது படையணி. 58 ஆவது படையணிக்கு பிரிகேடியர் சவீந்திர சில்வா கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 58 ஆவது படையணி கடந்த வருடம் செப்ரெம்பர் 22 ஆம் திகதி தனது படைநகர்வை உயிலங்குளத்தில் இருந்து ஆரம்பித்தது. தற்போது இந்த படையணி பரப்பங்கண்டல் பகுதிவரை முன்னேறி அங்கு நிலைகொண்டிருக்கிறது.

58 ஆவது படையணியிலும் 3 பிரிகேட்கள் அடக்கப்பட்டுள்ளன. 58 ஆவது படையணியின் முதலாவது பிரிகேட்டுக்கு கேணல் சுஜீவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பிரிகேட்டின் கீழ் 10 ஆவது கஜபா றெஜிமென்ட், 8 ஆவது கெமுனுவோச், முதலாவது கொமாண்டோ றெஜிமென்ட் ஆகிய பற்றாலியன்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கேணல் சுஜீவ தலைமையிலான பிரிகேட்டே பரப்பாங்கண்டல்வரை முன்னேறியிருப்பதால் அவரது செயற்பாடுகள் மீது இராணுவத்தளபதி அதிக நம்பிக்கை வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் பரப்பாங்கண்டாலில் இருந்து மேலும் முன்னேற முடியாத வகையில் புலிகள் வியூகம் அமைத்திருக்கின்றனர் என்றும் புலிகள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் பரப்பாங்கண்டல் பகுதியில் நிலைகொண்டுள்ள இந்த பற்றாலியன்கள் அடுத்தகட்டமாக கட்டுக்கரைக்குளம் நோக்கி முன்னேறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

58 ஆவது படையணியின் 2ஆவது பிரிகேட்டுக்கு கேணல் சஞ்சய வணிகசிங்க தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பிரிகேட்டின் கீழ் 2ஆவது 3ஆவது கொமாண்டோ றெஜிமென்ட், 9 ஆவது கெமுனுவோச் ஆகிய மூன்று பற்றாலியன்கள் உள்ளன. 58 -2 ஆவது பிரிகேட்டின் தலைமைப் பதவி கடந்த மாதம்தான் மாற்றப்பட்டது. இந்த பிரிகேட்டிற்கு தளபதியாக நியமிக்கப்பட்ட கேணல் ஹசன் சில்வா புலிகளின் எதிர்த்தாக்குதலை வெற்றிகரமாக முறியடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டில் இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகாவால் பதவி நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாகவே கேணல் சஞ்சய வணிகசிங்க நியமிக்கப்பட்;டார். இந்த பிரிகேட் பாலைக்குழியில் இருந்து மேலும் முன்னேறும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக பாலைக்குழியில் இருந்து ஆட்காட்டிவெளி நோக்கி இந்த பற்றாலியன்கள் நகர்வை மேற்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன.

58 ஆவது படையணியின் 3 ஆவது பிரிகேட்டுக்கு கேணல் சுராஜ் பன்ஜய தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த பிரிகேட்டின் கீழ் 12 ஆவது கஜபா றெஜிமென்ட், 6ஆவது கெமுனுவோச் பற்றாலியன்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பாலைக்குழிக்கு கிழக்காக இருக்கும் மூங்கில்மறிச்சான் என்ற பகுதிவரை கடந்தவாரம் இந்த பற்றாலியன்கள் முன்னேறியிருக்கின்றன. மூங்கில்மறிச்சான் பகுதியில் இருந்து ஆண்டான்குளம் நோக்கி முன்னேறுவதே இந்த பற்றாலியன்களின் திட்டம். எனினும் பற்றைக்காடுகள் அற்ற தென்னந்தோப்புகளைக் கொண்ட மூங்கில்மறிச்சான் பகுதியை படையினர் தக்கவைப்பது எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பது கேள்விக்குறியே.

ஆக, ஒட்டுமொத்தத்தில் பார்த்தால் 57, 58 ஆவது படையணிகளின் முதற்கட்ட இலக்கு மடுத்தேவாலயமும் விடத்தல்தீவும்தான். இந்த இலக்கை அடைந்து கொள்வதற்கு வழக்கத்திற்கு மாறான வித்தியாசமான இராணுவ பரிமாண உத்திகளை படைத்தரப்பு பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

படைத்தரப்பின் இந்த முன்னேற்ற முயற்சியில் ஆரம்பத்தில் விமானப்படையினர் பங்கெடுக்காத போதும் தற்போது வன்னிக்களமுனைகளில் விமானப்படையினரின் தாக்குதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மிகையொலி குண்டுவீச்சு விமானங்களைப் பயன்படுத்தி சமர்க்களங்களில் தாக்குதல் நடத்துவது சாத்தியமற்றது. ஏனெனில் சமர்க்களங்கள் ஒரு நகர்வுப் பாதையில் இருப்பதால் மிகையொலி விமானங்கள் மூலம் குறித்த இலக்கை குறிவைப்பது மிகவும் கடினம். அதையும்மீறி குறிவைத்தால் படையினரும் அதில் பாதிக்கப்படலாம்.

எனவே தாழ்வாகப் பதிந்து குறித்த இலக்கை துல்லியமாக தாக்கக்கூடிய விமானங்களையே சமர்க்களங்களில் பயன்படுத்த முடியும். குறிப்பாக எம்.ஐ.24 மற்றும் எம்.35 ரக தாக்குதல் உலங்கு வானூர்திகளை இத்தகைய தாக்குதல்களுக்கு பயன்படுத்தலாம். கடந்தவாரம் பரப்பாங்கண்டல் பகுதியை படைத்தரப்பு கைப்பற்றிய தாக்குதல்களில் எம்.ஐ 24 ரக தாக்குதல் உலங்கு வானூர்திகளின் பங்களிப்பு இருந்ததாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. மன்னார் களமுனையில் எம்.24 ரக உலங்கு வானூர்திகள் தாக்குதல்களை இதற்கு முன்னர் மேற்கொண்டிருந்த போதும் கடந்தவாரத் தாக்குதல்களின் தீவிரம் அதிகமாகவிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக எம். ஐ .24 ரக தாக்குதல் உலங்கு வானூர்திகள் தாக்குதல்களை பயன்படுத்தியே படையினர் பரப்பாங்கண்டல் பகுதிவரை முன்னேறியதாக படைத்தரப்பே பெருமிதமாகக் கூறியிருக்கிறது. அதாவது எம். ஐ .24 ரக உலங்கு வானூர்திகளை மன்னார்க் களமுனையில் பயன்படுத்தும் தமது உத்தி வெற்றியளித்திருப்பதாகவே படைத்தரப்பு கருதுகிறது. எனவே எதிர்வரும் நாட்களிலும் எம். ஐ .24 ரக தாக்குதல் உலங்கு வானூர்திகளை சமர்க்களங்களில் பயன்படுத்தப்படலாம்.

எனினும் எம். ஐ .24 ரக உலங்கு வானூர்திகளுக்கான பாதுகாப்பை சமர்க்களங்களில் உறுதிப்படுத்துவதன்பது மிகவும் கடினமாகும். மிகவும் தாழ்வாகப் பறந்து தாக்குதல் நடத்தும் போது தரையில் இருந்து மேற்கொள்ளப்படும் சாதாரண ஏ.கே. ரக துப்பாக்கிகளின் குண்டுகள்கூட இவற்றை தாக்கி அழித்துவிடலாம். அத்துடன் புலிகளிடம் சாம் -7 ரக துப்பாக்கிகளும் ஸ்ரிங்கர் ரக ஏவுகணைகளும் தாராளமாக இருப்பது ஒன்றும் புதிய விடயமல்ல. மூன்றாம் கட்ட ஈழப்போரின்போது இத்தகைய ஆயுதங்களை புலிகள் பயன்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது மேலதிகமான விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் புலிகள் கொள்வனவு செய்திருக்கின்றனர். இது எப்படிச் சாத்தியமானது என்ற கேள்வி எழலாம். விமானங்களைக்கூட எதிரியின் கண்களில் மண்ணைத்தூவிவிட்டு வன்னிக்கு கொண்டுவந்த புலிகளுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகளைக் கொண்டுவருவது கடினமான காரியமா என்ன ?

எனவே மன்னார் களமுனையில் விமானப்படையின் தாக்குதல் முயற்சியானது அவர்களுக்குப் பாதகமாக விளைவுகளை விரைவில் ஏற்படுத்தலாம். இதுகுறித்து இராணுவப் புலனாய்வுப் பிரிவும் எச்சரித்திருப்பதால் தாழ்வாகப் பறந்து தாக்குதல்களை நடத்தக்கூடியதும் அத்துடன் ஏவுகணை எதிர்ப்பு வசதி கொண்டதுமான எப்-7 ஜி விமானங்களை விமானப்படை கொள்வனவு செய்திருக்கிறது.

சீனாவின் விமானத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட இந்த ஆறு விமானங்களும் விமானப்படையின் 5 ஆவது ஸ்குவார்டன் பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இத்தகைய விமானங்கள் மிக விரைவில் தாக்குதல் களமுனைகளுக்கு அனுப்படலாம் என்றும் குறிப்பாக புலிகளின் வான்படையினரின் அச்சுறுத்தலை இந்த விமானங்கள் எதிர்கொண்டு முறியடிப்பதுடன் களமுனைப் படையினருக்கும் ஆதரவான பீரங்கித் தாக்குதல்களை நடத்துவதற்கும் இத்தகைய விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

படைத்தரப்பு வகுத்திருக்கும் இந்த உத்திக்கு எதிராக விடுதலைப்புலிகளும் தமது உத்திகளை வகுத்துள்ளனர். இதுவரை காலமும் 80 மி.மீ, 120 மி.மீ மோட்டார் குண்டுகளைப் பயன்படுத்திய புலிகள் தற்போது இந்த களமுனைக்கு 152 மி.மீ பீரங்கிகள் உட்பட மேலும் பல கனரக ஆயுதங்களை நகத்தியிருக்கின்றனர்.

மன்னார் களமுனைய+டாக படைத்தரப்பு முன்னேறுவதை புலிகள் விரும்பவில்லை என்பதையே இத்தகைய ஆயுத நகர்வுகள் காட்டுகின்றன. அத்துடன் புலிகள் சில இடங்களில் திடீரென விட்டுக் கொடுப்புகளைச் செய்வதால் பதுங்கிப் பாயும் உத்தியும் புலிகளிடம் இருக்கலாம் என்று அச்சமும் படைத்தரப்பில் உள்ளது.

அந்தவகையில் வன்னிக்களமுனை அதிலும் குறிப்பாக மன்னார் களமுனை படைத்தரப்பு எதிர்பார்த்தது போல் அவ்வளவு இலகுவாக இருக்கப் போவதில்லை என்பது தற்போது நிரூபிக்கப்பட்டிருப்பினும் நான்காம்கட்ட ஈழப்போரில் மிகப்பெரும் வரலாற்றுச் சமர்க்களமாக - திருப்புமுனையை ஏற்படுத்தவிருக்கும் சமர்க்களமாக – மன்னார்க்களம் விளங்கப்போகும் சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகரித்திருக்கின்றன என்பதே இன்றைய யதார்த்தமாகும்.

Please Click here to login / register to post your comments.