வன்னி முன்னேற்றம் இயலாத காரியம் - உணரத் தொடங்கியுள்ள இராணுவம்

ஆக்கம்: மகிழினி
வன்னியைக் கைப்பற்றும் நோக்கில் நாலாபுறமும் திறக்கப்பட்டுள்ள களமுனைகளில் கடந்த இருவாரங்களாக கொட்டும் மழையால் மோதல்களின் தீவிரம் குறைவடைந்திருந்த போதும் கடந்த 22 ஆம் திகதி சனிக்கிழமை முதல் மழை ஓரளவுக்கு தணியத் தொடங்கியதும் மீண்டும் குண்டுச் சத்தங்கள் தீவிரமடைந்துள்ளன. மன்னாரில் 58 ஆவது டிவிசன் நிலைகொண்டுள்ள பகுதிகளிலேயே மோதல்கள் மீண்டும் தீவிரம் பெற்றுள்ளன. விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை மன்னார் களமுனையில் இராணுவத்தினரின் முன்னேற்ற முயற்சியை சுமார் ஒரு வருடகாலமாகப் புலிகள் முடக்கியுள்ளனர். இந்தக் களமுனையில் அவர்கள் வலிந்த தாக்குதல் எதனையும் மேற்கொள்ளாமல் தற்காப்பு தாக்குதல் நிலையிலேயே இன்னமும் உள்ளனர். புலிகளின் இந்த உத்தியானது போரை நீண்டகாலத்திற்கு இழுத்துச் செல்லும் வகையிலும் அதேநேரம் தமது இழப்புக்களைக் குறைத்து எதிரியின் இழப்புக்களை அதிகரிக்கச் செய்யும் நோக்கிலும் அமைந்திருக்கிறது.

இந்த நிலை நீடிப்பது இராணுவத்தினருக்குப் பாதகமாகவே அமையலாம். பூகோள அடிப்படையில் மன்னார் களமுனையின் ஊடாகவே இராணுவத்தினர் வன்னிக்குள் நுழைவது சாத்தியமாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாகத்தான் மன்னார் களமுனையில் மீண்டும் மீண்டும் இராணுவத்தினர் மிகப்பெருமெடுப்பில் முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகையதொரு முன்னேற்ற முயற்சியை தடுத்து நிறுத்தாத பட்சத்தில் ஜெயசிக்குறு சமர்க் காலத்தில் ஏற்பட்டதைப் போன்று இராணுவத்தினர் வெகு விரைவாக வன்னிக்குள் முன்னேறிச் சென்றிருப்பர்.

ஆனால், ஜெயசிக்குறு சமர்க் காலத்தில் நடந்தது போன்று இராணுவத்தினர் அகலக் கால் பதித்த பின்னர் அவர்களை நிலைகுலைய வைக்கும் தாக்குதல் திட்டங்களைக் கையில் தூக்காமல் ஆரம்பத்திலேயே இராணுவத்தின் முன்னேற்ற முயற்சியைத் தடுத்துநிறுத்தி முளையிலேயே கிள்ளி எறியும் வகையிலான தற்காப்புத் தாக்குதல் திட்டம் ஒன்றையே புலிகள் கைக்கொண்டு வருகின்றனர்.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் நீண்ட நாட்களுக்கு இழுபடும் சமரின் மூலம் குறித்த இலக்கை அடைந்துவிட முடியாது என்பது போரியல் நூல்களில் தெட்டத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகையதொரு நிலை ஏற்படும் பட்சத்தில் எதிர்த்தரப்பு தன்னை சுதாகரித்துக் கொள்வதுடன் வலுவான பாதுகாப்பு அரண்களையும் ஏற்படுத்திக் கொள்ளும். அதற்குப் பின்னர் அந்தப் பாதுகாப்பு அரண்களை உடைத்து முன்னேறுவதென்பது அவ்வளவு இலகுவான காரியமாக இருக்காது என்று போரியல் நூல்கள் கூறுகின்றன.

மன்னாரிலும் இதேநிலைதான் இன்றுள்ளது. இராணுவத்தினர் ஆரம்பத்தில் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சிகளைப் புலிகள் கடுமையான தற்காப்பு தாக்குதல்கள் மூலம் தடுத்து நிறுத்தியதாலேயே சுமார் ஒருவருடமாகியும் இன்னும் மன்னார் களமுனையில் இராணுவத்தினரால் கணிசமானளவு நிலப்பரப்பைக் கைப்பற்றவோ அல்லது குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறவோ முடியவில்லை.

தற்காப்புத் தாக்குதல்களை நடத்தியவாறே புலிகள் அப்பகுதியில் வலுவான தற்காப்பு காப்பரண்களை அமைத்துவிட்டனர். எந்தளவுக்கு அடித்தாலும் விட்டுக்கொடுக்காத நிலை என்று கூட இதனைச் சொல்லலாம். மன்னார் களமுனைய+டாக சாதரணமாக முன்னேறிச் செல்லலாம் என்று ஆரம்பத்தில் கணக்குப் போட்ட இராணுவத்தினர், தற்போது புலிகளின் இத்தகைய தற்காப்பு காப்பரண்களை உடைப்பதற்கே திணறுகின்றனர்.

இராணுவத்தினர் இனிமேல் சடுதியான முன்னேற்றம் எதனையும் மேற்கொள்ள முடியாததொரு நிலை இன்று மன்னாரில் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இந்தவொரு நிலை ஏற்படுவதற்கு இராணுவத்தினர் ஆரம்பத்தில் வகுத்த விய+கங்களில் குறைபாடு இருந்திருக்கலாம் அல்லது புலிகளின் எதிர்த்தாக்குதல் இராணுவத்தினரைத் திணறடித்திருக்கலாம். இவற்றில் ஒன்றையேனும் இன்று ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு இராணுவத்தரப்பு தள்ளப்பட்டுள்ளது. இதில் எந்தத் தெரிவை இராணுவத்தினர் எடுத்தாலும் அது அவர்களது இயலாமையைத்தான் வெளிப்படுத்தும்.

மன்னாரக்கான களமுனையைப் பொறுத்தவரை பெண்புலிகளே அதிகளவில் சமரில் ஈடுபட்டுள்ளனர். மணலாறிலும் பெண்புலிகளின் பங்குதான் அதிகமாகக் காணப்படுவதாக இராணுவப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன. அதேநேரம் கிளாலி முதல் நாகர்கோவில் வரையான பகுதிகளில் கடந்தசில மாதங்களாக மிகப்பெருமெடுப்பிலான இராணுவ முன்னகர்வுகள் நிகழாத போதும் அப்பகுதிகளில் சிறு சிறு முன்னேற்ற முயற்சிகளும் முறியடிப்புத் தாக்குதல்களும் இடம்பெற்ற வண்ணமே உள்ளன.

அப்படிப் பார்க்கும் போது புலிகளின் பிரதான தாக்குதல் அணிகள் பின்தளத்தில் நிலைகொண்டிருப்பது தெளிவாகிறது. தற்காப்பு மற்றும் முறியடிப்புத் தாக்குதல்களை புலிகளின் மோட்டார் மற்றும் கண்ணிவெடி பிரிவுடன் இணைந்து பெண்புலிகள் நடத்திக் கொண்டிருக்க – புலிகளின் பிரதான தாக்குதல் அணிகள் வலிந்த தாக்குதல்களுக்கு தம்மை ஒருங்கிணைத்து தயார்படுத்தி வருகின்றனவா என்ற கேள்வியும் இராணுவப் புலனாய்வுப் பிரிவிடம் எழுந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில்தான் கடந்த இருவாரங்களாக வடக்கு கிழக்கில் அடை மழை பெய்தது. வன்னிக் களமுனையிலும் வடபோர்முனையிலும் இந்த மழையின் தாக்கம் கடுமையானதாகவே இருந்தது. குறிப்பாக மன்னாரிலும் நாகர்கோவிலிலும் மழையால் ஏற்பட்ட தாக்கம் அதிகமாகவிருந்தது.

இராணுவத்தினரின் அண்மைக்கால இராணுவ நடவடிக்கைகள் அனைத்துமே கவச வாகனங்களையும், டாங்கிகளையும், காலாற்படை சண்டை வாகனங்களையும், பின்தள எறிகணைத் தாக்குதல் ஆதரவையும் நம்பியே இடம்பெற்றன. மழையின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டதால் இராணுவ நடவடிக்கைகளுக்கு கவச வாகனங்களையும், டாங்கிகளையும், புல்டோசர்களையும் பின்தள எறிகணைத் தாக்குதல்களையும் நடத்த முடியாத ஒரு சூழ்நிலையில் கடந்த இருவாரங்களாக மேற்படி களமுனைகள் குண்டுச் சத்தங்கள் இன்றி அமைதியாகவே காணப்பட்டன.

அண்மைக்கால இராணுவ நடவடிக்கைகளின்போது கவச வாகனங்களையும், டாங்கிகளையும், காலாற்படை சண்டை வாகனங்களையும், பின்தள எறிகணைத் தாக்குதல் ஆதரவையும் பயன்படுத்தி தமக்கு இழப்பின்றி எதிரிக்கு கணிசமானளவு இழப்பு ஏற்படுத்த இராணுவத்தினர் முனைகின்றனர். இதனால்தான் மழை சற்று ஓய்ந்த மறுகணமே அதாவது கடந்த 22 ஆம் திகதி சனிக்கிழமை பாலைக்குழி, இலந்தைவான், இத்திக்கண்டல் ஆகிய இடங்களூடாக மிகப்பெருமெடுப்பில் இராணுவ முன்னகர்வு மேற்கொள்ளப்பட்டது.

அதிகாலை 4.45 மணிக்கு ஆரம்பமான இந்த முன்னகர்வில் இராணுவத்தினர் சில நூறு மீற்றர் தூரம் வரை முன்னேறினர். தமது முன்னரங்க நிலைகளை விட்டு இராணுவத்தினரை முன்னேறவிட்ட பின்னரே புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர். புலிகளின் முறியடிப்புத் தாக்குதல் அண்மைக்கலமாக இதேபாணியில்தான் இடம்பெற்று வருகிறது.

சுமார் 12 மணிநேர முறியடிப்புத் தாக்குதலின் பின்னர் இராணுவத்தினர் மீண்டும் பழைய நிலைகளுக்கு கடும் இழப்புகளுடன் பின்வாங்கிச் சென்றனர். இந்த முறியடிப்புத் தாக்குதலில் 55 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர், 120 இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர் என்று விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். வழக்கமாகவே தமது தரப்பு இழப்புக்களை மறைக்கும் இராணுவத்தினர் இந்த மோதலில் கொல்லப்பட்ட இராணுவத்தினர் குறித்தோ அல்லது படுகாயமடைந்த இராணுவத்தினர் குறித்தோ எதுவும் தெரிவிக்கவில்லை என்பதுடன் புலிகள் அறிவித்த தகவலையும் நிராகரிக்கவில்லை.

கொல்லப்படும் இராணுவத்தினரின் எண்ணிக்கையை மறைக்க முற்பட்டாலும் அந்த இராணுவத்தினரது சடலங்களை மறைப்பதில் தொடர்ந்தும் இரசகியம் காப்பதென்பது சாத்தியப்படப் போவதில்லை. அத்துடன் மன்னார்க் களமுனைய+டாகவும் வன்னிக்குள் முன்னேறுவதென்பது இயலாத காரியம் என்பதை இராணுவத்தரப்பு மெல்ல மெல்ல உணரத் தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில் இந்த வருட இறுதிக்குள் புலிகளை வடக்கிலும் ஒடுக்குவேன் என்று செய்தியாளர்களிடம் சாவல்விட்ட இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, இப்போது தான் அப்படிச் சொல்லவில்லை என்று நா கூசாமல் கூறுகிறார்.

அதுமட்டுமின்றி வழக்கமாக களமுனைகளில் தங்களால் முடியாதென்ற நிலைவரும்போது இந்தியாவின் காலில் போய்விழும் சிறிலங்கா, இந்தத் தடவையும் சரத் பொன்சேகாவை டில்லிக்கு அனுப்பி இந்தியாவின் அனுசரணையைப் பெற்றுள்ளது. இந்தியா புலிகளுக்கு எதிராகச் செயற்படுவது ஒன்றும் இரகசியமல்ல. ஆனாலும் ஒரு முக்கிய திருப்புமுனை ஒன்று ஏற்படவிருக்கும் சந்தர்ப்பத்தில் இந்தியா தனது குள்ள நரி வேலையைக் காட்டி சிறிலங்கா இராணுவத்தினரை அழிவிலிருந்து காப்பாற்றிவிடுவதை வழக்கமாவே கொண்டுள்ளது.

ஆனையிறவைப் புலிகள் அழித்து யாழ் .குடாநாடு வரை முன்னேறியபோது இந்தியா தலையிட்டு இராணுவத்தினரைக் காப்பாற்றியதை எவரும் மறக்க மாட்டார்கள். அதுபோலவே இன்றும் தற்காப்பு நிலையில் இருந்தவாறு தம்மைச் சுதாகரித்துக் கொண்டு தாக்குதல் நிலைக்குப் புலிகள் வந்துள்ள இந்தக் கட்டத்தில் நிலமையின் விபரீதத்தை உணர்ந்து மீண்டும் ஒரு தடவை இராணுவ உதவிகளை – ஒத்துழைப்புகளை – நாடி இந்தியாவின் காலடியில் விழுந்திருக்கிறது சிறி லங்கா இராணுவம்.

ஆனால் இந்தத் தடவை இந்தியாவின் “பாச்சா” பலிக்குமா என்பது சந்தேகமே. ஏனெனில், இதுவரை காலமும் இந்தியாவை நேரடியாகக் கண்டிப்பதற்கு முன்வராத புலிகளின் தலைமை இம்முறை சரத் பொன்சேகாவை அழைத்து இராணுவ உதவிகளை வழங்குவதை இட்டு வழக்கத்திற்கு மாறாக நேரடியாகவே சீறிப் பாய்ந்திருக்கின்றனர். புலிகளின் இந்தச் சீற்றம் ஒருவித எச்சரிக்கையும் கூட.

டில்லியில் இருந்து திரும்பிய கையோடு சரத் பொன்சேகா யாலவிலுள்ள கூட்டுப்படைத் தலைமையகத்திற்குச் சென்றார். பின்னர் வவுனியாவிலுள்ள வன்னிப் படைத்தலைமையகத்திற்குச் சென்றார். அதன்பின்னர் பலாலிக்கும் சென்றார். இந்த விஜயங்களின்போது யாலவில் அப்பிராந்தியத்தில் பணியிலுள்ள இராணுவக் கட்டளை அதிகாரியையும், பொலிஸ் அதிகாரிகளையும், வவுனியாவில் 56, 57, 58, 59 ஆவது படையணிகளின் தளபதிகளையும், பலாலியில் 51, 52, 53, 55 ஆவது படையணிகளின் தளபதிகளையும் சந்தித்து டில்லி விஜயத்தின் பின்னரான தனது புதிய யுக்திகள் குறித்து சரத் பொன்சேகா விளக்கியிருக்கிறார்.

இந்தச் சந்திப்புகளின் போது, கடும் மழை காரணமாக டாங்கிகளைப் பயன்படுத்துவதிலுள்ள சிரமங்கள் குறித்து சரத் பொன்சேகாவுக்கு வன்னிக் களமுனைத் தளபதிகள் எடுத்துக் கூறியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், வடபோர்முனையில் நாகர்கோவில் பகுதியில் புலிகள் பாரிய பொறிக்கிடங்குகளை வெட்டி வைத்துவிட்டு இராணுவத்தினரின் கவச டாங்கிகளைக் கைப்பற்றுவதற்காகக் காத்திருக்கின்றனர் என்ற புலனாய்வுத் தகவலும் சரத் பொன்சேகாவிற்கு தெரியப் படுத்தப்பட்டுள்ளது.

அதாவது இந்தப் பகுதிகளில் முன்னேறும் இராணுவ டாங்கிகள் வீழ்ந்துவிடும் வகையில் புலிகளால் மிகப்பெரிய குழிகள் நீளத்திற்கு வெட்டப் பட்டுள்ளனவாம். அதுவும் முன்னணி நிலையை அடுத்துள்ள இரண்டாவது நிலைப் பகுதியிலேயே இத்தகைய பொறிக் கிடங்குகள் வெட்டப் பட்டுள்ளனவாம். முன்னேறும் டாங்கிகளைக் கைப்பற்றி இராணுவத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஒன்றை ஏற்படுத்துவதே புலிகளின் திட்டம் என்று சரத் பொன்சேகாவிடம் பலாலியில் வைத்து தெரிவிக்கப் பட்டுள்ளது.

வடபோர்முனை நோக்கி இராணுவத்தின் கனரக கவச வாகனங்களும், டாங்கிகளும் அதிகளவில் நகர்த்தப்பட்டுள்ள நிலையில் இத்தகைய பொறிக் கிடங்குகளால் இராணுவத்தின் திட்டம் அடியோடு பிசகிவிட்டதுடன் டாங்கிகளின் உதவியற்ற புதிய தாக்குதல் திட்டத்தை வகுக்க வேண்டிய நிலைக்கு இராணுவத் தரப்பு தள்ளப் பட்டிருக்கிறது. வட போர்முனையில் நிலைகொண்டுள்ள இராணுவத்திற்கு உதவுவதற்கென கவசத் தாக்குதல் டாங்கிப் படையணி கடந்த ஜனவரியில் பலாலியிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் பயிற்சியளிக்கப்பட்டு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு நடந்து கொண்டிருந்தபோதுதான் புலிகள் பலாலி மீது ஆட்லறித் தாக்குதல் நடத்தினர்.

இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கொழும்பிலிருந்து சென்ற கோத்தபாய, சரத் பொன்சேகா ஆகியோரடங்கிய உயர்மட்டக் குழு மயிரிழையில் உயிர்தப்பி நிகழ்வில் பங்குபற்றாமலேயே கொழும்பு திரும்பியது. எனினும், திட்டமிட்டதற்கு மாறாக மிகவும் எளிமையாக காலதாமதாகி இந்தப் படையின் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ் மாவட்ட இராணுவத் தளபதி தலைமையில் நடைபெற வேண்டியேற்பட்டது. வடபோர் முனையில் இந்தப் படையணி முக்கிய பங்காற்றும் என்று அப்போது கூறப்பட்டது.

எனினும் அப்போது கூறிய விடயம் இன்று கேள்விக் குறியாகி விட்டது. கவசப் படையணியிலுள்ள டாங்கிகளையும் கவச வாகனங்களையும் இராணுவத்தினரிடம் இருந்து கைப்பற்றும் பாரிய திட்டத்தைப் புலிகள் கொண்டுள்ளனர் எனப் புலனாய்வுத்துறை எச்சரித்திருப்பதால் வடபோர் முனையில் தனது அடுத்த இராணுவ நடவடிக்கையை மிகவும் அச்சத்திற்கு மத்தியிலேயே மேற்கொள்ள வேண்டியதொரு நிலை இராணுவத்திற்கு ஏற்பட்டுள்ளது. 2006 ஒக்ரோபர் மாதமும் இராணுவத்தினரின் இரண்டு டாங்கிகள் புலிகளின் தாக்குதலில் சிக்கி அழிவடைந்தமைக்கு இத்தகைய பொறிக் கிடங்குகளே காரணம் என்றும் கூறப்படுகிறது.

அந்தவகையில் வட போர்முனையில் கவசத் தாக்குதல் படையணியிலுள்ள டாங்கிகளின் முன்னேற்றத்ததை முடக்கும் திட்டத்தையும், மன்னாரில் நேரடி மோதல்களை இயன்றவரை தவிர்த்து பொறிவெடிகள், மிதி வெடிகள், சினைப்பர் தாக்குதல்கள், ஆட்லறி மற்றும் பீரங்கித் தாக்குதல் உத்தியையும் கையிலெடுத்துள்ளமை இராணுவத்தினருக்குப் பெரும் தலைவலியைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அத்துடன் பலமுனைகளில் சமரை நடத்தி புலிகளைச் செறிவாக்கி அவர்களது பலத்தைச் சிதைத்து விடலாம் என்று போட்ட திட்டத்தைக் குழப்பும் வகையில் தமது திட்டத்தை மாற்றியமைத்து தமது வளங்களையும் போரிடும் ஆற்றலையும் புலிகள் தக்க வைத்திருப்பது இராணுவத்தினருக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்திருக்கிறது.

Please Click here to login / register to post your comments.