முகமாலை தரும் பாடம்

ஆக்கம்: ஆசிரியர் தலையங்கம்
எதிர்பாராத வேளையில், எதிர்பாராத இடத்தில், சிறந்த திட்டமிடலுடன், உச்சபலத்தைப் பிரயோகித்துத் தாக்குவதே விடுதலைப் புலிகளின் வழக்கமான உத்தி. அது முகமாலைக் களமுனையா, வவுனியாக் களமுனையா, மன்னார்க் களமுனையா, மணலாறுக் களமுனையா, திருமலையா, மட்டக்களப்பா, அம்பாறையா, கொழும்பா, தென்பகுதி மாவட்டமா அல்லது கடந்த அக்டோபரில் அநுராதபுரம் தாக்கப்பட்டதைப் போன்று எதிர்பாராத ஒரு இலக்கா என்பது அடுத்த ஓரிரு வாரங்களில் தெரியவரும் என, வன்னிக் களமுனை மாறுமா? என்ற தலைப்பில் கடந்த இதழில் ஒரு கட்டுரையை வடித்திருந்தோம்.

எதிர்வு கூறப்பட்டதைப் போன்றே தற்காப்பு யுத்தத்தில் மட்டுமே ஈடுபட்டு வந்த விடுதலைப் புலிகள் தற்காப்பு யுத்தத்துடன் சிறிய அளவிலான முன்னேறித் தாக்குதல் முயற்சிகளிலும் ஈடுபட்டதாக மன்னார்க் களமுனையில் இருந்து கடந்த வாரம் வெளிவந்த சேதிகள் தெரிவிக்கின்றன. ஆக மொத்தம், களமுனையில் பொறி பறக்கும் சண்டைகள் அடுத்து வரும் நாட்களில் காத்திருக்கின்றன என்பது மட்டும் நிச்சயம்.

இதேவேளை, முகமாலைக் களமுனையின் தளபதியாக விடுதலைப் புலிகள் அமைப்பில் மிக நீண்டகால படை நடத்தல் அனுபவத்தைக் கொண்ட தளபதியான கேணல் தீபன் நியமிக்கப் பட்டுள்ளதாக சேதிகள் வெளியான ஒரு சில நாட்களிலேயே ஒரு யுத்த தாங்கி அழிக்கப்பட்டதான செய்தியும், பின்னரங்க நிலைகளிலே எறிகணை நிலைகள் தீப்பிடித்த செய்தியும் வெளியாகியிருந்தது. சகல களமுனைகளிலும் முன்னேற்ற முயற்சி தடைப்பட்டுள்ள நிலையில் மீண்டுமொருமுறை முகமாலைக் களத்தில் முயற்சியொன்றைச் செய்து பார்க்க இராணுவம் முயன்றது.

2006 அக்டோபரில் இதே களமுனையில் நிகழ்ந்த மோதலில் 190 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 600 பேர் காயப்பட்ட அனுபவம் இருந்த போதிலும், முன்கூட்டியே தயாரிப்புகள் செய்யப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட கவசப்படை அணியின் உதவியுடன் தாக்குதல்களை நடாத்த முடிவு செய்யப்பட்டது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை சிறிலங்கா முறித்துக் கொள்வதாக தன்னிச்சையாக அறிவித்துள்ள போதிலும், அதிலிருந்து உத்தியோக பூர்வமாக வெளியேறி விடாது விடுதலைப் புலிகள் தற்காப்புத் தாக்குதல்களிலேயே ஈடுபட்டு வந்த போதிலும், ~எதிரிக்குத் தாக்குதலை நிதானமாகத் திட்டமிட்டு நடாத்த அவகாசம் வழங்காது தயாரிப்பு வேலைகளில் ஈடுபடும் போதே அதனை முடிந்தவரை சீர்குலைத்து விட வேண்டும்| என்ற இராணுவ உத்திக்கு ஏற்ப நடாத்திய தாக்குதலாகவே 22 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை நடாத்தப்பட்ட தாக்குதலைக் கருத வேண்டும். இத்தாக்குதல் ஏற்படுத்திய பாதிப்பே எதிரியை நிதானமிழக்கச் செய்து புதன்கிழமை அதிகாலையில் அவசர அவசரமாக ஒரு தாக்குதலைச் செய்யத் தூண்டியது.

இதனை எதிர்பார்த்து வலைவிரித்துக் காத்திருந்த புலிகள் நடாத்திய துணிகரத் தாக்குதலில் 40 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 375 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக படைத்தரப்பே ஒத்துக் கொள்ளும் அளவிற்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இதேவேளை, இராணுவத்தினரின் 104 உடல்கள் மீட்கப் பட்டுள்ளதாகவும், 400 பேர் வரையானோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத ராணுவ அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.

விடுதலைப் புலிகளின் தரவுகளின் படி இராணுவத்தினரின் 30 உடல்களைக் கண்டெடுத்து இருப்பதாகவும் அவற்றில் 19 கிளிநொச்சி கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

மொத்தத்தில் 150 பேர் வரையான இராணுவத்தினர் கொல்லப்பட்டு 500 பேர் வரையானோர் காயம் அடைந்திருக்கலாம் என ஊகிக்க முடிகிறது.

பலாலி விமானப்படைத் தளத்தில் இருந்து வருகை தந்த விமானப் பயணிகளின் தகவலின் படி 12 பேரூந்துகளின் உடல்களும், காயப்பட்டோரும் கொண்டு வரப்பட்டதாகத் தெரிகின்றது. களமுனைச் சேதங்கள் தொடர்பாக சிறி லங்காத் தரப்பு உண்மையை மறைத்தே தகவல்களை வெளியிடுவதால் இது தொடர்பான உண்மை வெளிவராமலும் கூடப் போகலாம்.

யுத்தத்துடன் சேர்ந்து அறிக்கைப் போரையும் நடாத்திவரும் சிறிலங்கா இராணுவத் தளபதிகள் காலம் நிர்ணயித்துத் தொடங்கிய படை நடவடிக்கைகள் யாவும் முன்னேற முடியாமல் முக்கி முனகிக் கொண்டிருக்கும் வேளையிலே, புதிதாக ஒரு களமுனை திறக்கப்படும் என வாழ் மாவாட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி தன் பங்குக்கும் அறிவித்திருந்தார். படை நடவடிக்கைகளைத் தொடங்குவது இரகசியமாக வைத்திருக்கப்பட வேண்டிய ஒரு விடயம் என்ற அடிப்படை இராணுவ மரபைக் கூடப் புறக்கணித்து தம்பட்டம் அடித்த சிறிலங்கா இராணுவத் தலைமையின் கனவு முகமாலைக் களமுனையில் நொறுங்கிப் போயுள்ளது.

கூலிக்காக சண்டை பிடிப்பவர்களுக்கும் வாழ்வுக்காகச் சண்டை பிடிப்பவர்களுக்கும் இடையிலான வித்தியாசம் என்ன என்பது முகமாலைக் களமுனையில் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப் பட்டுள்ளது.

மக்களின் நலவாழ்வுக்காக, தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஒரு தரப்பு போராடிக் கொண்டிருக்கையில், பேரினவாதச் சிந்தனையுடன் செயற்படும் ஒரு சில மனநோயாளிகளின் குரூர இலட்சியங்களை நிறைவேற்ற ஏதுமறியா அப்பாவிச் சிங்கள உயிர்கள் பலிகொடுக்கப்படுவது மனச் சங்கடத்தை ஏற்படுத்துகின்றது.

அதேவேளை, முகமாலைக் களமுனையில் சிதறிக் கிடப்பது சிங்கள இராணுவத்தின் உடல்கள் மட்டுமல்ல. சிங்களப் பேரினவாதத்தின் தமிழர் விரோத அபிலாசையும் தான் என்பதையும் கூறித்தான் ஆக வேண்டும்.

Please Click here to login / register to post your comments.