இலங்கை அரசு ஆயுதங்கள் வாங்குவதற்காக இந்தியா 400 கோடி ரூபாய் கடன் வழங்க முடிவு

போர் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் வாங்குவதற்காக, இலங்கை அரசுக்கு 400 கோடி ரூபாய் கடன் வழங்க இந்தியா முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் வாங்குவதற்காக இலங்கை அரசின் பாதுகாப்புதுறைக்கு எளிய வட்டியில் 400 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக குறைந்த வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இலங்கை அரசுக்கு, போர்ப்படை ஆயுதங்கள் வாங்குவதற்கு 400 கோடி ரூபாயும், அந்நாட்டில் ரயில்வே போக்குவரத்து திட்டங்களை நிறைவேற்றுவதற்காக, மேலும், 400 கோடி ரூபாய் கடனுதவியையும் வழங்க இந்தியா முன்வந்திருப்பதாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிராக போராடுவதற்காக இந்த கடனுதவியை இலங்கை பயன்படுத்தும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், அண்டைநாடுகளான, இலங்கை மற்றும் நேபாள நாடுகள் போர்ப்படை உதவி கோரும்போது, இந்தியாதான் முதலில் உதவ முன்வரவேண்டும் என்றும், அவ்வாறு தவறும் பட்சத்தில், சீனா மற்றும் அமெரிக்க நாடுகள் அந்த இடத்தைப் பிடித்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

Please Click here to login / register to post your comments.