தமிழாய்ந்த மூத்த தமிழறிஞரின் தலைமையில் ஆட்சி நடக்கும் தமிழ் நாட்டில் தமிழுக்கு நேருகிற அவமதிப்பு

ஆக்கம்: நெல்லை கண்ணன்
"தமிழ்த் திருநாடு தனைப் பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா அமிழ்தின் இனியதடி பாப்பா நம் -ஆன்றோர்கள் தேசமடி பாப்பா"

முழுமையாகப் பாரதி தமிழனாகவே இருந்தான். அதனால் தான் தமிழச்சியைவிட வேறொரு பெண் அழகாயிருத்தலைக்கூட அவன் ஒத்துக் கொள்ளவில்லை.

தமிழைக்கூடச் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் தமிழ் வாழ்க என்று குரல் கொடுத்தவன் இல்லை பாரதி. எட்டு மொழிகளைப் பழுதறக் கற்ற பின்னரே தமிழை, "வானமளந்தனைத்தும் அளந்திட்ட வண்மொழி வாழியவே' என்று போற்றித் துதிக்கிறான். அதனால் தான் யான் படித்த மொழிகளிலே என்று அவன் பாடவில்லை. "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்' என்றான்.

யாம் என்று பன்மையிலே சொல்லுகின்ற உரிமை மன்னர்களுக்கும் மடாதிபதிகளுக்குமே உரியது. ஆனால் பாரதியோ தன்னைப் பன்மையிலே, தானே அழைத்துக் கொள்கிறான்.

ஆமாம், பாரதியின் இறுமாப்பு இனிமையானது. அவன் தமிழாய்ந்த தமிழறிந்த புலவன் என்பதாலும், மன்னர்களும் மடாதிபதிகளும் தமிழ் வளர்த்து மட்டுமன்றி தமிழால்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்பதாலும் அவர்களுக்கு இணையென்று கூட அல்ல. அவர்களுக்கு மேலே ஒரு படி என்று தன்னைக் கருதிய பெருமையிலும் தன்னை யாம் என்று அழைத்துக் கொள்கிறான்.

யாமறிந்த என்று பாடும்பொழுதே அவனது தெளிவு நம்மை மகிழ வைக்கிறது. ஆமாம், படித்தல் வேறு; அறிதல் வேறு என்பதை எத்தனை அழகாகச் சொல்லி விடுகிறான்.

தமிழர் நாட்டில் தமிழிலே இசை நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை என்பதிலே அவனுக்கு ஏற்பட்ட கோபம் தமிழர்களிலே வேறு யாருக்கும் ஏற்பட்டிருக்குமா என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும். பாரதியின் கவிதைகளை மட்டும் படித்துவிட்டு பலர் அவனைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் விமர்சிக்கத் தலைப்படுகின்றனர். அவன் கட்டுரைகளில் குறிப்பிடுகிறான் தமிழ்நாட்டில் தமிழிசை இல்லையென்று. இதோ அவனது வரிகள் கோபம் கொப்பளிக்கிறது அவனுக்கு.

ஆமாம், தமிழ்நாட்டின் எந்த ஜில்லாவுக்குப் போ, தாலுகாவுக்குப் போ, புரியாத மொழியிலே பாடுவதும், அதற்கு எல்லோரும் உட்கார்ந்து தலையாட்டுவதும்தான் நடந்து கொண்டிருக்கிறது. அட, பாடுகிறவருக்காவது அந்த மொழி தெரியுமா என்றால் அது வெட்கக் கேடு.

தமிழனுக்கு இரும்புக் காது, தமிழ் நாட்டில் தாய்மொழியில் பாடுவதில் இவர்களுக்கு என்ன சங்கடம்?

அவனது தந்தை அவனை நெல்லை ம.தி.தா. இந்துக் கலாசாலையிலே சேர்த்து விடுகிறார். ஆங்கிலவழிக் கல்வி கற்க அந்தத் தமிழனால் முடியவில்லை.

"செலவு தந்தைக்கோர் ஆயிரம் சென்றது தீதெனக்குப் பல்லாயிரம் சேர்ந்தது நலமோர் எத்துணையும் கண்டிலன் இதை நாற்பதாயிரம் கோயிலில் சொல்லுவேன்' என்கிறான்.

"கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும் காளிதாசன் கவிதை புனைந்ததும் உம்பர் வானத்து மீனையும் கோளையும் ஒர்ந்தளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும் சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும் தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும் பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள் பாரளித்ததும் தர்மம் வளர்த்ததும் பேரருட் சுடர்வாள் கொண்டு அசோகனார் பிழைபடாது புவித்தலம் காத்தலும் அன்ன யாவும் உணர்ந்திலர் பாரதத்து ஆங்கிலம் பயில் பள்ளியுட் போகுநர்'

இன்று தமிழ்நாட்டில் நடக்கிற கொடுமைகள் செவிப்பறைகளிலே வந்து அறையும் நேரம் பாரதி இல்லையே என்ற ஏக்கம் ஏற்படுகிறது.

அந்த மகாகவிஞன்தான் தெளிவாகச் சொல்லிச் சென்றானே. ?என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்' என்று.

1967க்குப் பிறகுதான் ஆங்கிலவழிப் பள்ளிகள் தமிழ்நாட்டில் பெருகின என்பதைக் கல்வியாளர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வர். அரசின் கைகளிலே கல்வி இருக்கும்வரை இங்கே தமிழ் முதலிடத்தில் இருந்து வந்தது.

இன்றோ ஆங்கிலவழிக் கல்விக் கூடங்கள் தீப்பெட்டித் தொழிற்சாலையைவிட அதிகமாகிவிட்டன. அங்கேயும் குழந்தைகளே துன்பப்படுகின்றனர். இங்கேயும் குழந்தைகளே துன்பப்படுகின்றனர்.

ஆமாம், விருத்தாசலத்தில் ஓர் ஆங்கிலப் பள்ளியில் தமிழிலே பேசினான் என்பதற்காக ஒரு குழந்தையின் கழுத்திலே தமிழிலே பேசியவன் என்பதை ஆங்கிலத்தில் எழுதித் தொங்கவிட்டு மண்டியிடச் சொல்லித் தண்டனை வழங்கியிருக்கின்றனர். அந்தக் குழந்தை மயங்கி விழுந்திருக்கிறது.

தமிழிலே நல்ல தொலைக்காட்சி நடத்திவரும் மருத்துவர் ராமதாஸ் செல்வாக்காக இருக்கும் மாவட்டம். தமிழ்ப் போராளி திருமாவளவன் இருக்கும் பகுதி. இவர்களுக்கு தெரியுமா என்பது தெரியவில்லை. தெரிந்திருந்தால் அந்தப் பள்ளியின் நிர்வாகத்திற்கு எதிராக இவர்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பதும் தெரியவில்லை.

உடனே வேற்று மொழிக் கல்வி கூடாது என்று கூறுவதாகக் கூப்பாடு போட்டுவிடாதீர்கள். அப்படிப் பாரதி சொல்லவில்லை. "சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்'என்கிற அவனேதான் சொல்லுகிறான். "தமிழ் இளைஞனை வையத் தலைமை கொள்' என்று. வையத் தலைமை கொள்ள பன் மொழிப்புலமை அவசியம்.

ஆனால், தமிழ்நாட்டிற்கு?ள்ளே நடத்தப்படும் ஒரு பள்ளியிலே ஒரு தமிழ்க் குழந்தை தமிழிலே பேசினால் தண்டிக்கப்படுகிறான். தண்டமும் கட்ட வேண்டுமென்றால் நாம் தமிழர் என்று சொல்லிக்கொள்வதிலே நீதி இருக்கிறதா எனத் தமிழகத் தலைவர்கள் சிந்திக்க வேண்டாமா?

தமிழருக்காகப் பாடுபட வந்திருக்கும் விஜயகாந்த் அந்தத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர். அவர் இந்தத் தாய்மொழி அவமதிப்பிற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்?

விருத்தாசலம் ஓர் உதாரணத்திற்குத்தான். தமிழகம் முழுவதும் இதுதான் நிலைமை. தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில் கேட்கவே வேண்டாம்.

அரசை மட்டும் குறை சொல்வதிலே நியாயமில்லை. இந்தப் பெற்றோர்கள் தமிழர்கள் தானே? எல்லா மொழியிலும் தங்கள் பிள்ளைகளை இவர்கள் படிக்க வைக்கட்டும். அது சரியும்கூட. ஆனால், இவர்கள் பிள்ளையை பள்ளிகளில் தமிழே பேசக்கூடாது என்று ஆணையிட்டு அலைக்கழிக்கும் போதேனும் இந்தத் தமிழர்களுக்கு உணர்வு வரவேண்டாமா?

"மம்மி என்று பிள்ளை அழைக்கும்போது மகிழ்கின்ற தாய்மார்களுக்கு ஒன்று தெரியுமா? "மம்மி' என்றால் எகிப்தில் பதப்படுத்தி வைத்திருப்பார்களே அந்தப் பிணங்களையும் மம்மி என்றுதான் அழைக்கின்றனர்.

வாரியார் சுவாமிகள் சொல்வார்: உலகம் முழுவதும் பசு மாடுகள் அம்மா என்று தமிழ் மொழிலேதான் அழைக்கின்றன என்று.

தமிழால் வளர்ந்த ஓர் இயக்கம், தமிழால் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஓர் இயக்கம். தமிழாய்ந்த மூத்த தமிழறிஞரின் தலைமையில் ஆட்சி நடந்துகொண்டிருக்கின்ற தமிழ்நாட்டில் இந்த அவமதிப்பு தமிழுக்கு நேரலாமா?

ஆங்கிலப் பள்ளிக் கூடங்களில் தமிழுக்கு நேர்கின்ற அவமதிப்பிற்காக அந்தப் பள்ளி நிர்வாகங்களின் மீது தமிழக அரசு உடன் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பாரதி சொன்னான் :"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே அதைத் தொழுது படித்திடடி பாப்பா' என்று.

Please Click here to login / register to post your comments.