திருமாவுடன் தொடர்பு படுத்த முயன்றார்கள் - கைதான விடுதலைப்புலி பகீர் வாக்குமூலம்

ஆக்கம்: ஸீ ஆ. விஜயானந்த்

புலிகளின் முக்கிய தளபதி தமிழகத்தில் கைது!' என்ற செய்தி, கடந்த ஒரு வாரமாக பயங்கர பரபரப்பை எழுப்பி வருகிறது. `கடந்த 30-ம்தேதி தமிழக கியூ பிராஞ்ச் போலீஸால் கைது செய்யப்பட்ட அந்த விடுதலைப்புலி தளபதிக்கு `தம்பியண்ணா', `டேனியல்', `இளங்கதிர்' என்று பல்வேறு நாமகரணங்கள் உள்ளன. கடற்புலிகள் அமைப்பின் தலைவர் சூசைக்கு இவர் மிக நெருங்கிய நண்பர். புலிகளின் ஆயுதக்கடத்தல் பிரிவின் தலைவர் இவர். புலிகளுக்கு குண்டுகள் செய்வதற்கு வசதியாக சைக்கிள் பால்ரஸ்கள், இரண்டாயிரம் கிலோ அலுமினியக் கட்டிகள், வெடிகுண்டு மூலப் பொருட்கள் ஆகியவற்றை புதுக்கோட்டை கடற்கரைப் பகுதியில் இருந்து கடத்த முயன்றவர் இவர்' என்று பல்வேறு தகவல்கள் பரபரத்தன.

சென்னை வளசரவாக்கத்தில் கடந்த 29-ம்தேதி அவரைக் கைது செய்ததாக கியூ பிரிவு போலீஸார் மார் தட்டி வரும் நிலையில், `யார் இந்த தம்பியண்ணா? தமிழ்நாட்டில் அவர் சிக்கியது எப்படி?' என்பது போன்ற கேள்விகளுடன் அவரைச் சந்திக்க முயன்றோம். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தம்பியண்ணாவிடம் நமது கேள்விகளைத் தந்து, அவரது பதில்களை வாங்கித் தந்தார் தம்பியண்ணாவின் வக்கீல் மனோகரன். இனி நமது கேள்விகளும், தம்பியண்ணாவின் பதில்களும்.

உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

"யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள நாகர்கோயில்தான் என் சொந்த ஊர். அந்தப் பகுதி சிங்கள ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்ததால் மக்களுடன் மக்களாக எனது குடும்பமும் கிளிநொச்சி மாவட்டம் பரந்தனுக்கு இடம்பெயர்ந்தது. என் அப்பா பெயர் ஏரண்ணா. அவர் விவசாயக் கூலி. என்னுடன் பிறந்தவர்கள் ஒன்பது பேர். நான்கு ஆண்கள். ஐந்து பெண்கள். எங்கள் வீட்டில் நான் மட்டும்தான் மீன்பிடித் தொழில் செய்து வந்தேன். எனக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்''.

தம்பியண்ணா எனப்படும் நீங்கள் புலிகளின் ஆயுதக் கடத்தல் பிரிவின் தலைவராமே?

"முதலில் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். என் பெயர் டேனியல்தான். புலிகள் அமைப்பில் என்னை இளங்கதிர் என்று அழைப்பார்கள். மற்றபடி தம்பியண்ணா என்பது என் பெயர் கிடையாது. அதேபோல புலிகள் அமைப்பில் நான் மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பாளராக மட்டும்தான் இருந்தேன். நீங்கள் சொல்வது போல புலிகள் அமைப்பில் ஆயுதக் கடத்தலுக்கு என்று பிரிவே கிடையாது.''

அப்படியானால் தம்பியண்ணா என்பவர்...?

``போலீஸார் கூறும் தம்பியண்ணா என்பவர் ஏற்கெனவே புலிகள் அமைப்பில் இருந்தவர். தவறான செயல்பாடுகள் காரணமாக இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட அவர், தமிழகம் வந்து சேலை வியாபாரம் செய்தவர். திருச்சியில் கடை வைத்திருந்ததாகவும் கேள்விப்பட்டேன். அவரை நினைத்துக்கொண்டு என்னை தம்பியண்ணா ஆக்கிவிட்டார்கள்.''

எப்படி தமிழகம் வந்தீர்கள்?

"என் குடும்பத்தில் இரண்டு தங்கைகளுக்கு இன்னும் திருமணமாகவில்லை. புலிகள் இயக்கத்தில் இருந்தால் தங்கைகளுக்குத் திருமணம் செய்து வைப்பது சிரமம் என்பதால், இயக்கத்தில் இருந்து கடந்த ஆண்டே விலகிவிட்டேன். பிறகு மீன்பிடித் தொழில் செய்தேன். அதிலும் போதிய வருமானம் கிடைக்கவில்லை. `தமிழ்நாட்டுக்குப் போனால் ஏதாவது தொழில் செய்து பிழைக்கலாம்' என நண்பர்கள் அறிவுறுத்தியதால், கடந்த ஜூலை மாதம் 1-ம்தேதி இலங்கை நண்பர் ஒருவரது படகில், தமிழக கடலோர எல்லைப் பகுதிக்கு வந்தேன். பிறகு தமிழக மீனவர் ஒருவரின் படகில் `அகதி' என்று சொல்லி தமிழகத்துக்கு வந்தேன். நான் தமிழகம் வருவது இதுவே முதல்முறை.

அதன் பிறகு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நண்பர் வீட்டில் தங்கினேன். தொழில் தொடங்கும் முன்பு வேளாங்கண்ணி கோயிலுக்குச் சென்று மொட்டை போட்டேன். அங்கிருந்து ஊருக்குத் திரும்பும் வழியில் திருவாரூர் பஸ் ஸ்டாண்டில் கியூ பிராஞ்ச் போலீஸார் கடந்த ஜூலை 24-ம்தேதி காலை எட்டு மணிக்குக் கைது செய்தனர். அதன்பின் 30-ம்தேதிதான் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். போலீஸ் கஸ்டடியில் இருக்கும்போது, ஒருநாள் மட்டும் இரவு மூன்று மணி வரை அடித்தனர். பிறகு அடிக்கவில்லை. நல்ல சாப்பாடு கொடுத்தார்கள். `திருமாவளவனைத் தெரியுமா? அவரை எப்போது பார்த்தாய்?' என்று விசாரித்தனர். `நான் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். பார்த்ததில்லை' என்றேன். பிறகு, `சாகுல்அமீது என்பவர் பெயரைச் சொல்லி, அவருக்கும், ஆயுதக் கடத்தலுக்கும் தொடர்புண்டு' என்று சொல்லச் சொன்னார்கள். `நான் அவர் பெயரைக் கேள்விப்பட்டதுகூட கிடையாது' என்று சொல்லிவிட்டேன்.''

கடந்த ஆண்டு தமிழகத்தில் கைதான ஜேம்ஸ், ஜெயக்குமார், ராகுலன், வில்லாயுதம் ஆகியோர் உங்களின் நெருங்கிய கூட்டாளிகளாமே?

"இல்லை. இவர்களில் ஜேம்ஸ் தவிர வேறு யாரையும் எனக்குத் தெரியாது. நான் மீன்பிடித் தொழில் செய்த பகுதியில்தான் ஜேம்ஸ் மூன்று படகுகள் வைத்திருந்தார். அதனால், அவர் எனக்கு நல்ல அறிமுகம். அவர் விடுதலைப் புலி அல்ல. சர்க்கரை நோய் முற்றிப் போனதால், மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற முறையான விசாவில்தான் கடந்த ஆண்டு வந்தார். அவரைக் கைது செய்து விட்டார்கள். போலீஸ் விசாரணையில் இவர்களோடு சேர்ந்து, நான் ஆயுதக் கடத்தலுக்கு வந்ததாகவும், தொடர்பிருப்பதாகவும் சொல்லச் சொல்லி போலீஸார் வீடியோ எடுத்தனர். இல்லாவிட்டால் சுட்டுவிடுவதாகவும் மிரட்டினர்.''

படகைக் கடத்தியது, அலுமினியக் கட்டி, பால்ரஸ் குண்டுகளை புலிகளுக்கு அனுப்பியது என மூன்று வழக்குகள் உங்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதே?

"இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள விவரமே நீங்கள் சொல்லித்தான் தெரியும். தமிழகத்தில் கால் வைத்த 23 நாட்களிலேயே கைது செய்யப்பட்டுவிட்டேன். நான் கைதான விவரம்கூட என் பெற்றோர், மனைவிக்குத் தெரியாது. நான் வெடிபொருட்களைக் கடத்தினேன் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. நான் பிழைப்புக்காக மட்டும்தான் சென்னை வந்தேன். இனி என் எதிர்காலம் என்னாகும் என்று தெரியவில்லை. தங்கைகள் திருமணம் பற்றி நினைத்தாலே கண்ணீர் வருகிறது. நடப்பது நடக்கட்டும். கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டேன்'' என்றதோடு முடித்துக் கொண்டார் டேனியல்.

டேனியலின் கைது தொடர்பாக அவரது வழக்கறிஞர் மனோகரனிடம் பேசினோம். "தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் யாரைப் பிடித்தாலும், போலீஸார் உடனே, அவர்களைப் புலிகள் பிரிவில் ஏதாவது ஓர் அமைப்புக்குத் தளபதிகளாக ஆக்கிவிடுகிறார்கள். மக்கள் மத்தியில் இவர்களைப் பற்றித் தகவல்களைத் திரித்து பரபரப்பாக செய்திகளை வெளியிடுகிறார்கள். 24-ம் தேதியே பிடிக்கப்பட்ட டேனியலை 30-ம்தேதி வரை போலீஸார் கஸ்டடியில் வைத்திருந்தது சட்டத்தை மீறிய செயல். டேனியல் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்பதை சட்டப்படி போராடி நிரூபிப்போம்'' என்றார் அவர்.

படங்கள் : ஞானமணி

Please Click here to login / register to post your comments.